பின்பற்றுபவர்கள்

சனி, 4 ஜூலை, 2020

காக்கிகளின் கனிவு!!!??

இனிமை!! 
நண்பர்களே,


தலைப்பை பார்த்தவுடன் , உடனே உங்கள் சிந்தையில் காட்சிப்படமாக ஓடியது என்ன? என்று கேட்டால் நீங்கள் என்னத்த சொல்லுவீங்களோ?
சரி அதற்குமுன்னால் என் எண்ணத்தை சொல்லிவிடுகிறேன்.

காக்கி என்ற வார்த்தை பாரசீக மொழியிலிருந்து ஹிந்தி, உருது போன்ற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு பின்னர் இந்திய-பிரிட்டிஷ் ராணுவம் மூலம் ஆங்கிலத்திலும் புழங்கப்படுகிறது இதற்கு மண்ணின் நிறம் என்ற பொருள்படுகிறது.


முதலில் நாம் அறிந்தவண்ணம் ஒருவிதமான துணியின் நிறமாகவே பார்க்கப்படுகிறது.  ஆனால்   இப்பதிவு அந்த துணியின் நிறத்தை குறித்ததல்ல.


மனிதன் காட்டுவாசியாக இருந்த காலம் தொட்டே, தன்னுடைய உணவிற்காக , பச்சை காய்கறிகள், கிழங்குகள், பழங்கள் என சாப்பிட்டு வந்தான் என நாம் அறிவோம். .


இந்த   பழங்களை மட்டுமே சாப்பிடவேண்டும் இந்த  கிழங்கு மற்றும் காய், இலைகளை மட்டும் தான் சாப்பிடவேண்டும் என்று அவன் எப்படி உணர்ந்தான். ஒருவேளை எவையெல்லாம்  சாப்பிட சுவையாக இருந்தனவோ எவையெல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க வில்லையோ அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தான் என்பதே உண்மையாக இருக்கும்.


இப்படி அவன் வாழ்ந்த இடத்தில் என்னென்ன கிடைத்ததோ அவற்றில் உண்ணத்தகுந்த பொருட்களை உண்டு மகிழ்தான். அப்படி அவன் சாப்பிட்டு, விட்டுச்சென்ற பழங்களையே நாமும் இன்றளவும் சாப்பிட்டு வருகிறோம்.


அவ்வகையில் , மா,பலா,வாழை,கொய்யா,மாதுளை, முலாம் , தர்பூசணி நாவல், ஆப்பிள், திராட்சை, பேரீச்சை ,  சாத்துக்குடி, ஆரஞ்சு, பேரிக்காய், சப்போட்டா… அன்னாசி ,  போன்ற பழங்களே  நமது நாட்டில் பெருமளவில்   விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


அதேபோல கிழக்கு ஆசிய நாடுகளில்  ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி  இவை மூன்றின்  தோற்ற கலவையாக அதே சமயத்தில் , தோல் கொஞ்சம்  தடிமனாகவும் விதைகள் பெரியதாக   இல்லாதவையாகவும் , அளவில் ஏறக்குறைய ஒரு பெரிய தக்காளி  போன்றும் தோலோடு சாப்பிடும் மாம் பழம்போலவும் இருக்கும் ஒரு பழத்தின் பெயர்தான் "காக்கி".


இதன் சுவை மிக மிக இனிமையாகவும் இந்த பழம் காம்பு பகுதி தவிர அனைத்தையும் சாப்பிடும் வண்ணம் முழுவதும் சதைப்பற்று மிக்கவையாக இருக்கும்.


இப்போது இந்தப்பழங்கள் வடக்காசியா நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன.


இங்கிலாந்தில் இந்த பழங்கள் கிழக்காசிய நாடுகளில் இருந்து பெருமளவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை  இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கும் சில இடங்களில் வளர்க்கப்படுவதாக  தெரிகிறது, இதற்கு போதுமான சூரிய ஒளி கண்டிப்பாக தேவை என்பதால் இங்கே அதிகம் காணப்படுபவதில்லை எனினும் green house /conservatory  இருப்பவர்கள் அதில் வளர்க்கலாம்.


சமீபத்தில் கேட்ட ஒரு செய்தியில் இவை நம்ம தமிழ்நாட்டில் நீலகிரி, குன்னூர்    போன்ற இடங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டு   பயிரிடப்படுவதாக அறிந்து மகிழ்ந்தேன்.


நீங்களும் இந்த பழங்களை தேடி பிடித்து வாங்கி கழுவி கடித்து சாப்பிட்டு மகிழுங்கள்.  இவை சாப்பிட, மாம்பழமும் சப்போட்டாவையும், நுங்கையும்  சேர்த்த சுவைகொண்டவையாக இருக்கும்.


இந்த பழம் மருத்துவ குணம் கொண்டவை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாகவும் கருதப்படுகிறது.


1. புற்று நோயை தடுக்கிறது


2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது


3. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது


4.ஆரோக்கியமான அழகான சருமத்தை கொடுக்கின்றது


5.கண் பார்வையை மேம்படுத்திடுகிறது


 6. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது


7.குளிர்கால நோய்களான, சளி, மற்றும் flu போன்றவை தடுக்கப்படுகிறது


8.சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது


9. எடை குறைப்பிற்கும்  எடையை சமநிலையில் வைப்பதற்கும் உதவுகிறது.


10. சோர்வு, களைப்பிலிருந்து  துரித புத்துணர்ச்சி தருகிறது….


இப்படியாக இன்னும் பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டவை இந்த காக்கிகள்.


இம்புட்டு  செய்யும் இந்த காக்கிகள் கொரானாவிற்கு ஏதேனும் செய்யுமா? ஒருவேளை ஆராய்ச்சிகள் தொடர்ந்தால்  தெரியுமோ என்னமோ.




பாஷா பாஷையில் சொல்லனும்னா .....இதற்கு sharon fruit  மற்றும் Persimmon fruit  என்ற வேறு பெயர்களும் உள்ளன..


Image result for images of persimmon fruits




இந்த காக்கிகளின் இதயமெல்லாம் ஈரமான   இனிமையே!!.




நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ




16 கருத்துகள்:

  1. இந்தப் பழத்தை நிறைய தடவை பஹ்ரைன் சந்தையில் பார்த்திருக்கிறேன். பார்த்த உடனே எனக்கு தக்காளி நினைவுதான் வரும். அதனாலேயே சுவைத்ததே இல்லை. விலை ரொம்ப சல்லிசுதான், ஆனா என்னவோ பார்க்கப் பிடிக்கலை

    இந்த மாதிரி கோயில்பிள்ளை பல வருடங்கள் கழித்துத்தான் இந்தப் பதிவு போடுவார் என்று கண்டேனா? வாய்ப்பு போனதுதான் மிச்சம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஹரைனில் இந்த பழத்தை பார்த்த நீங்கள் இந்த பதிவரை பார்க்காமல் போனது ஏனோ?

      வாய்ப்புக்கிடைத்தல் நீங்கள் இருக்கும் நாட்டில்?? இந்த பழம் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி சாப்பிட்டு பாருங்கள் அத்தனை சுவை. ஒருவேளை பார்க்க பார்க்க பிடிக்குமோ?

      வருகைக்கு மிக்க நன்றி நெல்லை தமிழரே.

      நீக்கு
    2. நான் அப்போ நினைத்தது, இந்த சைனா, தக்காளிப் பழத்தையும் ஏதோ ஒன்றையும் சேர்த்து இந்தப் பழத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றே நினைத்தேன்.

      அவங்க நாட்டுலேர்ந்து வர்ற இஞ்சி, சேம்பு போன்றவை பெரிய அளவில் இருக்கும். சைனா இஞ்சி, உடலுக்கு உபயோகம் இல்லாவிட்டாலும், தோலை எடுப்பதும், சிறிது சிறிதாக கட் செய்வதும் எளிது.

      நீக்கு
    3. மேலதிக தகவலுக்கும் தங்களின் மீள் வருகைக்கும் மிக்க நன்றிங்க திரு நெல்லை தமிழரே.சைனாக்காரன் எது செய்தாலும் தப்புதானோ?

      நீக்கு
  2. காக்கியை பற்றிய செய்திகள் நன்று நண்பரே...

    அடுத்து காக்கி நாடாவைக் குறித்த செய்திகள் விழாக்கமிட்டியார்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடாவை, (காக்கி நாடாவை சொல்கிறேன்) பிடித்தபிறகு நேயர் விருப்பமான பதிவெழுத முயற்சிக்கின்றன் என்று விழாக்கமிட்டியிடம் சொல்லிவிடுங்கள்.

      வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..

      நீக்கு
  3. காக்கி என்றொரு பழம்! தகவல் நன்று. இந்தப் பழத்தினை ஹிந்தியில் ஜப்பானி ஃபல் என அழைக்கிறார்கள். ஹிமாச்சல் பகுதிகளில் இந்தப் பழம் நிறைய விளைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப்பழத்தின் origin ஜப்பான் என்று சொல்கின்றனர்.

      வருகைக்கு மிக்க நன்றிகள் வெங்கட்.

      நீக்கு
  4. இப்படி ஒரு பழம் பார்த்த நினைவு இருக்கிறது ஊட்டிக்கு அருகில் இருப்பதால். ஆனால் சுவைத்ததில்லை.

    துளசிதரன்

    கோ இந்தப் பழம் சாப்பிட்டிருக்கிறேன். இங்கு விளைவிப்பது கிழக்காசிய நாடுகளில் விளைவது போன்ற அதே சுவை இருக்குமா தெரியவில்லை. இது அடையாரில் இருக்கும் ஒரு பழ ரசம் விற்கும் கடையில் இந்தப் பழத்தின் மில்க்ஷேக்/ஸ்மூதி அடித்தும் சாப்பிட்டிருக்கிறேன். தக்காளி போலவே இருக்கும் ஆனால் சுவை வித்தியாசமாய் நன்றாக இருக்கும். ஆனால் எங்கள் ஊரில் விலை கூடுதல்!.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள், கீதா அவர்களுக்கு வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சியே.பார்க்க தக்காளிபோன்று இருந்தாலும் அதன் சுவை சப்போட்டா,மாம்பழம் மற்றும் நுங்கை சேர்த்ததுபோல் இருக்கும் , நன்றாக பழுத்து இருந்தால் அதன் சுவை தேனை ஒத்ததாகவும் இருக்கும்

      நீக்கு
  5. இந்தப் பழம் பற்றி இப்போதுதான் மிக முதல்முறை கேள்விப்படுகிறேன்!  இனிமை என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்டிருக்கிறீர்கள்?  அந்த வார்த்தைக்கான அர்த்தத்தையே மறந்து விட்டோமோ என்று யோசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.இப்போது இந்த பழம் ஊட்டியில் கிடைப்பதாக தகவல். இனிமையையே மறந்து ரொம்ப நாளாச்சு என்ற ஆதங்கம் உங்களின் பின்னூட்டத்தில் பிரதிபலிக்கின்றது. நாட்டு நடப்பையும் மக்களின் சிந்தனை போக்கையும் நினைக்கும்போது அப்படித்தான் தோன்றுகின்றது. வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. காக்கி என்ற பழம். இப்போதுதான் அறிகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.புதிய செய்தி அறிய தந்தமைக்குறித்து எனக்கும் மகிழ்சியே. ஊட்டி பகுதியில் வளர்க்கப்படுவதாக அறிந்தேன், இப்போது தான் அங்கே அதன் சீசன், எனவே தெரிந்தவர்கள் மூலம் தொடர்புகொண்டு வாங்கி சுவைத்து பாருங்கள் ஐயா.

      நீக்கு
  7. காக்கி பழம் - புதிய தகவல்கள் சார்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

    பதிலளிநீக்கு