பின்பற்றுபவர்கள்

புதன், 15 ஜூலை, 2020

பாகுபலி!!

பிரமாண்ட தயாரிப்பு!! 
நண்பர்களே,

தலைப்பை கண்டதும் நமக்குள் ஒரு பிரமாண்ட  திரை சீலை விலகுவதும் அதனூடாய் பல கற்பனைக்கு எட்டாத காட்சிகள் விரிவதும் அதனை கண்டு நம் கண்கள் அகல விரிந்து மனம் குதூகலிப்பதும் உள்ளமெல்லாம் பரவசம் பற்றிக்கொள்வதும் வாஸ்தவமே.


எனக்கும் ஒரு பிரமாண்டமான காட்சி மனத்திரையில் பரந்து விரிந்தது, அதற்குமுன்:

காட்டில் கம்பீரமாக சுற்றித்திரியும் புலி யை பார்த்த பூனை தமக்கும் அதேபோல கம்பீரமும் மரியாதையும் கிடைக்கவேண்டும்  என்றெண்ணி அதற்காக என்ன செய்யவது என்று பல நாட்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்ததாம்.

அது என்ன முடிவு என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் இங்கே ஒரு  recapஆகா  நினைவு படுத்துவது நல்லதென்று கருதுகிறேன்.

உருவத்தில் தம்மைவிட பல மடங்கு பெரியதாக  இருக்கின்றது புலி. அதேபோல தாமும் தமது உருவத்தை பெரிதாக்குவது என்பது இயலாது, வேண்டுமென்றால் தாம் ஒரு குட்டிப்புலியாக இருக்கலாமே.

மீசை ,  நான்கு கால்கள் , நீண்ட வால் , உறுமல்  ம்ம்ம் .. நமக்கும் இருக்கின்றது.

 அப்படி என்றால் நமக்கும் இந்த புலிக்கும் உருவ ஒற்றுமை, இரவிலும் ஜொலிக்கும் கூறிய கண்கள், மீசை, பற்கள், நகங்கள், உறுமல் இவை அத்தனையும் இருந்தும் ஏதோ ஒன்று குறைகின்றதே… என்ன அது?

ஆம் புலிக்கு உடலெங்கும்  வரிகள் உள்ளன நமக்கு இல்லை. எனவே நம் உடலெங்கும் வரிகள் வரைந்துகொண்டால் நாமும் புலியாகிவிடலாம் என்றெண்ணி ஒரு அந்தி சாயும் வேளையில் யோசித்தது.

இந்த யோசனையை தமது சக பூனைகளிடம் சொல்ல , இது உனக்கு தேவையில்லாத வேலை , அப்படியே நீ கோடுகள் வரைந்தாலும் அவை சீக்கிரமே அழிந்துவிடுமே, அதன் பிறகு நீ பூனைதான் என தெரிந்துவிடுமே?

அதற்கும் ஒரு வழி இல்லாமலா போகும் பூனை முடிவெடுத்தது.!!!?

நேராக கொல்லன் பட்டறைக்கு போய் அங்கே பழுக்க காய்ச்சி வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை  எடுத்து தனது உடலெங்கும்  கோடுகள்; போட்டுக்கொண்டிருக்கும் போதே , சூடு தாங்காமல் உடலெங்கும் கொப்புளங்களும் தீ காயமும் ஏற்பட்டு கொல்லன் பட்டறையிலேயே தனது புலி கனவிற்கு பலியானது.

எதற்கு இந்த கதை அதான் எல்லோருக்கும் தெரியுமே?

அதை   ஏன் கேட்கின்றீர்கள்?

கடந்த சில வாரங்களாக, நமது பதிவர்களும் , மற்ற உறவினர் நண்பர்களும்  இந்த கொரோனா லாக்டௌன் நேரத்தில் தங்கள் வீட்டில் அந்த பலகாரம் செய்தோம்  இந்த பலகாரம் செய்தோம் , அது அப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று பல பதிவுகளும் அந்த பலகாரங்களின்  புகைப்படங்களையும் பரிவர்த்தனை செய்திருந்ததை  பார்த்து, நாமும் தான் கொரோனா லாஃடௌனில் இருக்கின்றோம் , நமக்குதான் அடுப்பு இருக்கின்றது, நமக்குதான் இரண்டு கைகள் இருக்கின்றன நாமும்தான் செய்தால்  என்ன என்று தோன்றியது.

அதன் விளைவாக , எல்லோரைபோல் அல்லாமல் நாம் கொஞ்சம் வேற லெவல் பலகாரம் செய்வோம் என்றெண்ணி, பலருக்கும் ஒரு சவாலாக இருக்கும் ஒரு பலகாரமான "அதிரசம்" செய்வோம் என முடிவு செய்தேன்.

ஒரு கப் பச்சை அரிசி கழுவி ஒரு மணிநேரம் ஊறவைத்து சிறிது நேரம் ஈரம் போகும்படி உலர்த்தி  மிக்சியில் நைசாக அரைத்து வைத்துக்கொண்டேன்.
அதே கப்பில் முக்கால் அளவிற்கு நாட்டு சர்க்கரை (ஐந்து மாதங்களுக்கு முன் ஊரிலிருந்து வாங்கி  வந்ததை அன்றுதான் பார்த்தேன்) எடுத்து கொஞ்சமாக நீரூற்றி அடுப்பில் வைத்து கரைந்த பிறகு வடி கட்டி வேறொரு பாத்திரத்தில் போட்டு நன்றாக காய்ச்சினேன்.

இந்த நிலையில்தான் அதன் பதம் எப்படி இருக்கவேண்டும் என்ற அரிய தகவலை அறியாமல் கொதிக்கும் வெல்லப்பாகுவை சொட்டு  சொட்டாக தண்ணீரில் விட்டு பார்த்து ஓரளவிற்கு வெல்லப்பாகு கரையாமல் நீருக்கு அடியில் திடமாக தங்கும் நிலையில் அதனுடன் சிறிதளவு உப்பும் ஏலக்காய் தூளையும் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவியபடி போட்டுக்கொண்டே ஒரு தே கரண்டி நெய்யையம் சேர்த்து நன்றாக கிளற ஆரம்பித்தேன்.

கிளறிய அந்த பாகுவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீதும் சிறிதளவு நெய்யை தடவி ஒரு துணி போட்டு மூடி வைத்தேன்.

ஒரு பதினைந்து நிமிடம் கழித்து, வாணலியில் எண்ணையை சூடுபடுத்திவிட்டு  துணிபோட்டு மூடி வைத்திருந்த பாகுவில் கொஞ்சம் எடுத்து திருப்பி போடப்பட்ட ஒரு தட்டில் ஒரு பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது வைத்தேன்.

அய்யகோ….தட்டின்  மீது வைத்த அந்த பாகு வட்டமாக தட்டுவதற்கு முன்னே  இட்டிலி மாவுபோல ஓரிடத்தில் நிற்காமல் நகர்ந்துகொண்டே இருந்தது.

என்னென்ன வித்தைகள் செய்தும் அந்த பாகு கொஞ்சம் கூட திட நிலைக்கு வராமல் , கொரோனா முகக்கவசம் அணையாதவன் சாலையில் இருக்கும் காவலரை கண்டு நைசாக ஒதுங்குவதுபோல் மெதுவாக இடம்விட்டு இடம் பெயர்ந்து நழுவி கொண்டே  இருந்தது.

உடனே காய்ந்துகொண்டிருந்த எண்ணெய்  அடுப்பை அணைத்துவிட்டு. இன்னும் கொஞ்சம் நேரம்  ஆறவைத்து பார்க்கலாம் என்று நினைத்து அந்த பாகுவை அப்படியே வைத்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கும்போதும், அதே, கொரோனா, அதே முக கவசம் அதே காவலர் அதே நழுவல்…..

இப்படியாக புலியை பார்த்து பூனை சூடுபோட்ட கதையாக பதிவுகளையும் படங்களையும் , பதிவர்களின்  - நண்பர்களின் படைப்புகளையும் பார்த்து வேகமாக செயலில் இறங்கி பின்னர் சோகமாக பலிகொடுத்த அந்த பாகுவை எண்ணி கலங்காமல், அடுத்த நாள் மீண்டும் கொஞ்சம் பச்சரிசி மாவை கலந்து கிளறி …… எண்ணையில் பொறித்து இரண்டு சல்லி கரண்டிகள் கொண்டு அழுத்தி   உபரி எண்ணையை வடித்தெடுத்து…..

ஆஹா…. தொழில் ரீதியாக செய்பவர்களின்  அதிரசத்தில்கூட  அத்தனை அதிசிறந்த அதிரசத்தை நான் சுவைத்ததில்லை, அப்படி ஒரு சுவை, மெத்து மெத்து என , அதன் நிறமும் , மனமும் சுவையும்….வடிவமும்…. நானும் பாகுவை பலிகொடுக்காத புலிதான் என்பதாக உணர செய்தது.

பேச்சுவாக்கில் பிரான்சில் இருக்கும் நண்பரிடம் இந்த விஷயத்தை சொன்னதும் அவருக்கும்  அவர் மூலம், சிங்கப்பூர், மலேசியா ,பஹரைன்,அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற  நாடுகளில் இருக்கும் எமது நண்பர்களின் வேண்டுகோளுக்கும்   இணங்க  அதிரசம் செய்ய தேவையான பொருட்கள் செய்முறை விளக்கம் போன்றவற்றை  சொல்லும்படியாகிவிட்டது.

உங்களுக்கும்    தேவைஎன்றால்(செய்முறை விளக்கம்)அணுகவும்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.


பி .கு: பாகுபலிப்பற்றிய யூகத்தை எவரும் சரியாக சொல்லாததால் பரிசு கம்பெனிக்கே, better luck next time.


 

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நீங்க வேற என்னவாக இருக்குமென்று நினைத்தீர்கள்?.. வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. அச்சோ உங்களுக்கு பாகு போச்சு. எங்களுக்கு பரிசு போச்சே சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது, பக்குவம் போதவில்லையே.? வருகைக்கு மிக்க நன்றி அபிநயா

   நீக்கு
 3. பாகுபலி! :)))) நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.

  பதிலளிநீக்கு
 4. நானும் இரு வாரங்களுக்கு முன், வீட்டில் அதிரசம் சாப்பிட்டேன். ருசியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் ஒருமுறை "virtually" ருசிபார்த்தது மகிழ்ச்சி நெல்லை தமிழரே.

   நீக்கு
 5. பாஹு, பலியாகாமல் அதிரசம் கடைசியாக வந்ததில் மகிழ்ச்சி சார்.
  அடுத்தது ப்ரௌணி செய்து பரிசை தன்னுடனே பதுக்கும் கம்பெனியின் அணுபவங்களை போடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கம்பெனி என்ன வேண்டுமென்றா பரிசை பதுக்கியது? முயற்சிக்கிறேன்.

   நீக்கு