பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 19 ஜூலை, 2020

முதல் விமான பயணம் -2

மெல்போர்ன் வரை 
நண்பர்களே,

பயணம் தொடர்கிறது..

முதலில் இருந்து வாசிக்க...முதல் விமான பயணம்.

எனக்கு முன்னமே வந்து இருக்கையில்  அமர்ந்து விமானத்தில் கொடுக்கப்பட்டிருந்த போர்வைக்கொண்டு விமான குளிர் தாங்காமல்  தன்னை மொத்தமாக மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தார்.

நானும் எனது இருக்கையில் அமர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் காலை உணவு பரிமாற்றம் நடந்தது. எங்களின் இருக்கைக்கு அருகில் வந்ததும் சீட்டை நேராக நிமிர்த்தி முன்னால்  இருந்த  ட்ரேவை விரித்து காத்திருந்தேன். அப்போதும் அந்த பக்கத்து நபர் தூங்கிக்கொண்டிருந்தார்.

தூங்கிக்கொண்டிருப்பவர்களை சிலசமயம் எழுப்பாமல் அவர்களுக்கு உணவு கொடுக்காமல் சில விமான ஊழியர்கள் கடந்து சென்றுவிடுவார்கள். எனவே என் அருகில் இருந்தவரை  எழுந்திருக்கும்படி "hello , hello" என்று  அழைத்தேன்.

குரலைக்கேட்டு போர்வையை விலக்கியபோதுதான் தெரிந்துகொண்டேன்  
அவர் ஒரு இளம் பெண் என்று.

எழுப்பியதற்கு நன்றி சொல்லிவிட்டு அவருக்கான உணவை வாங்கி கொண்டார், அவருக்கு உணவு வைப்பதற்காண  டிரேவை இழுத்து உதவினேன்.அதற்கும் நன்றி சொன்னவர் இன்னும் சாப்பிடவே இல்லை.

அவர் சாப்பிடாமல் இருப்பதை பார்த்து , சாப்பிடுங்கள் இன்னும் சிறிது நேரத்தில் கழிவுகளை சேகரிக்க வந்துவிடுவார்கள் என்று சொல்லிவிட்டு நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

எனினும் அந்த பெண் தயங்கி தயங்கி சாப்பிட ஆரம்பித்தார்,.

ஏன் என்ன ஆனது சுகமாகத்தான் இருக்கின்றீர்கள் என கேட்டபோது அவர் சொன்னார்:

இதுவரை தான்  உள்ளூர் விமானத்தில் கூட பயணித்தது இல்லை. இதுதான் எனது முதல் விமான பயணம் , சொல்லப்போனால், என் வாழ்க்கையில் இன்றுதான் முதன்முதலில் சென்னைக்கே வந்திருந்தேன், இதுவரை என் பெற்றோரை பிரிந்து சில நாட்கள்கூட இருந்ததில்லை.  

நீங்கள் எப்படி உணவு  பிரித்து அந்த சின்ன ட்ரேவில் வைத்து சாப்பிடுகின்றீர்கள், ஸ்பூன், முள்கரண்டி, கத்தியை எப்படி பயன்படுத்துகின்றீர்கள்    போன்றவற்றை ஓரக்கண்ணில் பார்த்துப்பார்த்து என்னுடைய உணவை சாப்பிடுகிறேன் என்றார் அந்த  சின்னப்பெண்  ஒரு சின்ன புன்னகையுடன்.

கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன் என்பதை அந்த பெண்ணுக்கு சொல்லி தைரியம் கொடுத்து பயணத்தை கொஞ்சம் இலகுவாக்க முயன்றேன்.

அந்த பெண் இந்தியாவிலிருந்து துபாய் வழியாக மெல்போர்ன் செல்வதாகவும் அங்கே தமது பட்ட மேற்படிப்பை தொடரப்போவதாகவும் சொன்னார்கள்.

இறுக்கம் , பயம் நீங்கியபின் சகஜமாக பேச ஆரம்பித்தார்    ஆந்திர மாநிலத்தை சார்ந்த  அந்த ஹைதராபாத்  பெண்.

துபாய் விமான நிலையம் அடைந்ததும் சரி பத்திரமாக சென்று வாருங்கள், நன்றாக படியுங்கள், கவனமாக இருங்கள், வீண் செலவு செய்யாதீர்கள், அப்பா அம்மாவிடம் குறைந்தது வாரம் ஒருமுறையேனும் தொடர்புகொண்டு பேசுங்கள், பல்கலை கழகத்தில் நண்பர்களை அவசரப்பட்டு தேர்ந்தெடுக்காமல் ஓரிரு மாதங்கள் கழித்து அவர்களது நடவடிக்கைகளை பகுத்தாராய்ந்து தேர்ந்தெடுங்கள் , எந்த நாடு சென்றாலும் நாம் இந்தியர்கள் என்கின்ற சிந்தனை மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறி வாழ்த்தி அனுப்பிவிட்டு, ஆண்களுக்கான  ஓய்வறைக்குள் நுழைந்தேன்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த எனக்கு ஒரே ஆச்சரியம்.

அந்த பெண், ஓய்வறைகளுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார்.

அருகில் சென்று ஏன் இங்கே நிற்கின்றீர்கள் என்ன ஆச்சு என்றேன்.

ஒன்றுமில்லை, உங்களுக்காகத்தான் நின்றுகொண்டிருக்கின்றேன்.

உங்களுக்கு சிரமம் இல்லை என்றால் என் விமானத்திற்கான கேட் வரை வரமுடியுமா என கேட்டார்.

என் விமானம் புறப்பட சில மணிநேரம் இருந்ததாலும் முதன் முதலில் இதுபோன்ற சர்வதேச விமானநிலையத்தில் பதற்றத்துடன் இருக்கும் அந்த பெண்ணுக்கு உதவும்  வகையிலும்   அவரோடு சென்று மெல்போர்ன் செல்லும் பயணிகள்  அமர்ந்திருக்கும் இடம் சென்று அவர்களை அமர்த்தினேன்.

அவ்வப்போது சொல்லபட்ட அறிவிப்புகளை விளக்கி சொல்லி, நம்ம ஊர்  ஆட்கள் பலரும் உங்களோடு  மெல்போர்ன் செல்ல இங்கே அமர்ந்திருக்கின்றனர் எனவே   பயப்படாமல் செல்லும்படி மீண்டும் சொல்லி கைகுலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு அவர் பரிசோதனை முடித்து உள்ளே செல்லும் வரை அவரது பார்வையிலேயே இருந்துவிட்டு அவர் கை  அசைத்து விடைபெறும்வரை இருந்துவிட்டு  பின்னர் எனது விமானத்தின் கேட் இருக்கும் பகுதி நோக்கி விரைந்தேன். அங்குதான் "கோவின்  பாக்கிஸ்தான் பயணம்" ஆரம்பித்தது.   

இப்படியாக முதன் முதலில் சென்னை, முதன்முதலில் துபாய், முதன்முதலில் ஆஸ்திரேலியா , முதன்முதலில்  மெல்போர்ன் என்ற முதல் அனுபவ குதூகலத்துடன் பயணித்த  அந்த பெண் சென்று சில நாட்களிலேயே கொரோனா, லாக்டௌன், முக கவசம், சமூக இடைவெளி, ஊரடங்கு, தனிமைப்படுத்துதல்,  உணவுதட்டுப்பாடு, போக்குவரத்து முடக்கம், கல்லூரிகள் மூடல் , கடைகள் அடைப்பு,   போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியதாகிவிட்டதே என நினைக்கும்போது என் மனம் வேதனைப்படுகிறது, எனினும் இறைவன் வழி நடத்துவான் என்ற நம்பிக்கையும் திடமாக இருக்கின்றது.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

12 கருத்துகள்:

 1. அந்த பெண்ணின் நிலையை கண்டால் மனம் வருந்ததான் செய்கிறது...... பாவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வேதனை காலத்தில் மனம் இன்னும் கூடுதலாக சங்கடப்படத்தான் செய்கின்றது.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 2. சார் பதிவை வாசித்து முடிச்சதும் கஷ்டமாக இருக்கு அந்த
  பெண்ணை நினைத்து.

  அவ்வல்வு பயந்த சுபாவம் கொண்ட பெண் எப்படிதான் ஆஸ்திரேலியாவில்
  தனியாக சமாலிப்பாங்கலோ.
  அதுவும் நீங்க சொல்லி இருந்த மாதிரி கொரோனா வந்து நிலமை மாரிடுச்சு..
  பாவம் எப்படிதான்...

  ***

  சென்னையில் இருந்து சிங்கப்பூர் அல்லது பேங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்வார்கள் என்பது தெரியும்.

  இந்த பெண் சென்னை-துபாய்-மெல்போர்ன் செல்வதை பார்க்கும்போது
  இப்படியும் போகலாம் என்பது புதிய தகவல்...
  ***

  2018 அக்டோபர் மாதம் தனியாக நான் சென்னையில் இருந்து பேங்காக்
  தாய் ஏர்வேய்சில் பயணித்த நினைவு நினைவுக்கு வந்து போச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ், அந்த பெண் ஹைதராபாத்தில் இருந்து புறப்படுமுன் உங்களை சந்தித்திருந்தால் இன்னும் தைரியமாக இருந்திருப்பார் என நினைக்கின்றேன். தனியாக அம்புட்டு தூரம் சென்றுவந்த உம்மை மேடைபோட்டு பாராட்டவேண்டும். வருகைக்கும் அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 3. படித்தபோது நம்முடைய மகள் நம்மைவிட்டு செல்வதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா உங்கள் உணர்வு இயல்பான பாசமும் பரிதவிப்புமான கலவையாக மிளிர்கிறது. அநேக நமஸ்காரங்களுடன் நன்றிகள் பல்.

   நீக்கு
 4. அவரின் பயத்துக்கேற்றவாறே அமைகிறதே சம்பவங்கள்...   தைரியமாக இருப்பார் என்று நம்புவோம்.  அல்லது பத்திரமாக ஊர் திரும்பி இருக்கக் கூடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்,

   இங்கிருந்து அங்கே செல்ல முடிவெடுத்தது ஏதோ துரிதமாக எடுத்த முடிவாக தெரியவில்லை, தைரியமும் தன்னம்பிக்கையும் கண்டிப்பாக இருந்திருக்கவேண்டும். ஊர் திரும்பி இருப்பார்களா என தெரியவில்லை. சுகமுடன் தைரியமாக இருப்பார் என நம்புவோம்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 5. முதல் விமானப் பயணம் என்னுள்ளும் பசுமையாய் நினைவில் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் விமான பயண நினைவு தூண்டல் மகிழ்ச்சி அளிக்கின்றது திரு கரந்தையாரே, வருகைக்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 6. விமானப் பயணத்தில் கிடைத்த அனுபவம் நன்று. ஒவ்வொரு பயணத்திலும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் எத்தனை எத்தனை. அந்தப் பெண் நல்லபடியாகவே இருப்பார் என நம்பிக்கை கொள்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான், வீட்டை விட்டு வெளியில் அடி எடுத்து வைத்தாலே பல அனுபவங்களை பெற முடிகிறது. அதிலும் தூரப்பிரதேசங்களுக்கு செல்லும்போது அதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானதும் தனித்துவம் வாய்ந்ததுமாக இருக்கிறது. அந்த பெண் நல்லபடியாக இருப்பார் என நானும் நம்புகிறேன்.

   வருகைக்கு மிக்க நன்றி வெங்கட்.

   நீக்கு