பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 ஜூலை, 2020

அப்பா - மகன்!!

 ஆலமரம் !!
நண்பர்களே,

மிருகங்களிடமும் பறவைகளிடமும் இறுதிவரை தொடர்ந்து இருக்குமா என்றால்  பெரும்பாலும் இல்லை என்று சொல்லதக்க குடும்ப உறவுகள் மனிதனிடம் மட்டுமே  மேலோங்கி இருக்கின்றன என்று கண்டிப்பாக சொல்லலாம்.

அப்படிப்பட்ட  உன்னதமான குடும்ப உறவுகளுள் தந்தை - மகன் உறவு என்பது வேறொரு பரிமாணத்தில் ஒரு ஒப்பற்ற உறவே.

கொஞ்சுவதும், தோளில்  தூக்கி சுமப்பதும், தலைமேல் உட்காரவைத்து மகிழ்வதுமான தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு ஒரு பருவத்திற்கு  பிறகு ஒரு தூரம் கடைபிடிக்கப்படவேண்டிய  ஒரு உறவாக கருதப்படுகிறது.

ஏறக்குறைய அதே அளவிற்கு தந்தை மகன் உறவின் வரையறையும் இருந்தாலும் மகளைவிட மகனிடத்தில் கொஞ்சம் கூடுதல் உறவையும் உரசாலையும் அப்பாக்கள் பெறுவது சாத்தியமே.

தோளுக்குமேல் போனால் தோழன் என்று சொல்லுவார்களே அதுபோல், பல தந்தை மகன்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் தோழர்களைப்போல - நண்பர்களைப்போல உறவாடுவதை இந்த காலத்தில் அவ்வளவாக பார்க்க முடியவில்லை என்றாலும் ஆங்காங்கே இந்த தந்தை மகன் பாச பிணைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் "தந்தையர் தினம்" அனுசரிக்கபட்டது.

மேலை நாடுகளில், 18 வயதை கடந்த பெரும்பான்மையான பிள்ளைகள் தங்கள் பெற்றோரை பிரிந்து மேல் படிப்பு, தொழிற்கல்வி, வேலை என்று தூர பிரதேசங்களுக்கு செல்வதும் பிறகு திருமணம் குடும்பம் போன்ற மாற்றங்களால் , பெற்றோரை அடிக்கடி சந்திக்கும் சூழலோ , தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள்மூலம் கூட தொடர்புகொள்ள முடியாத தருணத்தில் இப்படி ஆண்டுக்கொருமுறை தந்தையர் தினம், அன்னையர் தினம் என்ற பேரில் அவர்களோடு தொடர்புகொண்டு பேசுவதும், பரிசுப்பொருட்கள் அனுப்புவதும் வழக்கம்.  (நம்ம ஊருக்கு இது அவசியப்படாது  என்பதே என் கருத்து)

எனக்கு தனிப்பட்ட வகையில் அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம், காதலர்கள் தினம் போன்றவற்றில் உடன்பாடு இல்லை என்றாலும், மற்றவர்களின் உணர்வுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும்  எதிரானவன் அல்ல.

அப்படிப்பட்ட தந்தையர் தின சிறப்பாக, திருமணமான ஒரு மகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு உரையாடலில், தன்  தந்தையை எந்தெந்த விதங்களில் தாம் பெருமையாக கருதுவதாக மகனும் , மகனை எந்தெந்த விதங்களில் தாம் பெருமையாக கருதுவதாக தந்தையும் கூற அந்த தருணம் கொஞ்சம் நெகிழ்ச்சியாக இருந்தது.

பிறகு மகன் கற்றுக்கொடுக்க மகனும் தந்தையும் இணைந்து நடனமாடியதும் கூடுதல் சிறப்பு.

இப்படி தந்தையும் மகனுமாக  எல்லோர் குடும்பங்களிலும் அன்னியோன்யம் தவழ்ந்தால் பிரிவினைகளும் தனி குடித்தனங்களும் முதியோர் இல்லங்களும் குறைய  வாய்பிருக்குமோ?

அப்பா மகன் உறவு என்பது சிறு காற்றுக்கும் முறிந்து விழும்  முருங்கை மரம் போல வலிமை அற்றதாக இல்லாமல், மனம் கமழும் சந்தன மரமாக , வலுவான தேக்கு மரம்போல, முறுக்கேறிய - வைரம் பாய்ந்த -  மதிப்புயர்ந்த செம்மரம்போலவும் , வலுவிழந்த கிளைகளை தாங்கிப்பிடிக்கும் விழுதுகள் ஊன்றும் ஆலமரம்போலவும்  இருப்பது மனித உறவுகளின் மேன்மைக்கும் அதன் மாண்பிற்கும் நல்லது.   

இப்படியான கலந்துரையாடலில்போது,மகன் தன்  தந்தையைப்பார்த்து ஒரு கேள்விகேட்க , கொஞ்சமும் எதிர்பாராத கேள்வியை தன்  மகன் தன்னிடம் கேட்டபோது தந்தை முதலில் கொஞ்சம் சங்கோஜப்பட்டாலும் பின்னர் நிதானமாக, அந்த கேள்விக்கு பதில் அளித்தது கலந்துரையாடலின் உச்சம்.

இங்கே தந்தை : திரைபட இயக்குனர். திரு.கே.பாக்கியராஜ் , மகன்.திரு சாந்தனு.

கேள்வி: முருங்கைக்காய் உண்மையிலேயே ஒரு விவகாரமான காய்தானா ?  

நண்பர்களே, பதில் என்னவாக இருந்திருக்கும்?  நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

பி.கு: தமக்கு ஒரு மகன்(ள்)  இல்லையே என்று ஏங்கும் அப்பாக்களுக்கும்  இந்த நேரத்தில் என் அப்பா என்னோடு இல்லையே என்று ஏங்கும் மகன்(ள் )களுக்கும் இந்த பதிவு அர்ப்பணம்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம். 
கோ 

14 கருத்துகள்:

  1. அப்பா அமைவது ஒரு வரம் "கோ". அதை பெற்றவர்கள் பாக்கியவான்கள்!

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. சரியான கேள்வி சரியான ஆள்கிட்டதான் கேட்கப்பட்டிருக்கு. என்னதான் தன் மகன் தோழனாக இருந்தாலும் இந்தக் கேள்விக்கு வெளிப்படையான பதில் கிடைச்சிருக்காது என்பது என் யூகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதுபோல், என்னதான் தோழனாக இருந்தாலும் பிள்ளைகளும் சில கேள்விகளை அப்பாவிடம் கேட்பது என்பது "சராசரி" அப்பாக்களுக்கு கொஞ்சம் சங்கோஜமே. உங்களின் யூகம் சரிதானா? வருகைக்கு மிக்க நன்றிகள் அபிநயா.

      நீக்கு
  3. பதிலை ஊகத்திற்கு விட்ட பாணி சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் அநேக நமஸ்காரங்களும் ஐயா.

      நீக்கு
  4. அப்பா...    ஆரம்பத்தில் பயத்தால் கொஞ்சம் ஒதுங்கி இருந்தாலும், பின்னாட்களில் அவர் மறையும் வரை கொஞ்சம் மனதுக்குள் என் அப்பாவுடன் நெருக்கமாக உணர்ந்திருக்கிறேன்.  அதுவும் அவர் மறைந்த உடன் மிகவும் இழப்பாக உணர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பானவர், கனிவானவர், என்னிடம் அதிக பாசம் காட்டியவர் அவர் இருந்தவரை; தங்களின் நிலைதான் எனக்கும் அவர் மறைந்தபிறகு ஸ்ரீராம்

      நீக்கு
  5. முருங்கை நல்ல இரும்புச்சத்து கொண்ட காய் தான்.
    இரும்புச்சத்து விவகாரமானது என ஏன் தவறாக நினைக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ...அதானே அரவிந்த், இரும்பு சத்து உடம்புக்கு நல்லதுதானே… பின்னே ஏன்….

      நீக்கு
  6. தந்தை மகன் உரவு மிக சுவாரசியமானது.
    தந்தையின் மகிமையும் அருமையையும் மகன், தான் தந்தையான பின் தான் உணர்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், மகன் தந்தையானபிறகே தன் அப்பாவின் மகிமையும் அருமையும் மகனுக்கு புரிகிறது. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அரவிந்த்.

      நீக்கு
  7. அவ்வப்போது கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது. உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :)

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட், உங்களுக்கு தெரியாத பதிலா என்னிடம் இருந்து எதிர்பார்க்கின்றீர்கள்?

      நீக்கு