பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 12 ஜூலை, 2020

கோவின் பாகிஸ்தான் பயணம்.

எல்லை(இல்லா)சோதனை??
நண்பர்களே,

இதுவரை  ஆசியா, ஐரோப்பா,அமெரிக்க,ஆப்ரிக்கா போன்ற நான்கு கண்டங்களிலுள்ள பல தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன் என்பதை என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.


அந்தந்த நாடுகளில் சில பல நாட்கள் தங்கியும் அந்ததந்த நாட்டு கலை பண்பாடு நாகரீகம், உணவு போன்றவற்றை  அனுபவித்து  மகிழ்ந்திருந்தாலும், இன்னும் ஓரிரு நாடுகள் என்னுடைய ஆவல் பட்டியலில் (WISH லிஸ்ட்) இருந்தாலும் , பாக்கிஸ்தான் போகவேண்டும் என்ற ஆவலோ, விருப்பமோ கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதிவரை என் மனதில் தோன்றியது இல்லை அதற்கான வாய்ப்பும் அமைந்ததில்லை.

இப்படி இருக்க கடந்த பெப்ருவரிமாதம்  துபாய் சர்வதேச விமான நிலையத்தில்   லண்டனுக்கான எனது அடுத்த விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன்.

இன்னும் BOARDING ஆரம்பிக்கவில்லை என்பதால்  அங்கே இருக்கும் கடைகளை  சுற்றி பார்த்துவிட்டு பயணிகள் அமரும் இடம் வந்தேன்.

அங்கே நான் அமருவதற்கு  ஏற்ற இருக்கை ஏதுமிலை. ஏனென்றால், அங்கே பெரும்பாலோர் இசுலாமியர். குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தனர், அதில் தலையை மூடிய வெள்ளை நிற புர்கா அணிந்த சிறு  பெண்கள் , வேறு  பெரிய பெண்கள்  வெள்ளை நிற வேட்டியும்   வெள்ளை  நிற டவல் போன்ற மெல்லிய துணியை தம் உடம்பை சுற்றியும் அணிந்திருந்த ஆண்கள், சிறு வர்கள் என சிறு சிறு குழுக்களாக அமர்ந்திருந்தனர்.

அவர்கள் மத்தியில் ஓரிரு இருக்கைகள் இருந்தாலும் குழுவாக அமர்ந்திருக்கும் குடும்பத்து மக்கள் மத்தியில் ஒரு அந்நியனான நான் எப்படி அமர்வது என்ற சங்கோஜ நிலையில் வேறு இடம் எங்கேயேனும் இருக்குமா என நான் பார்ப்பதை அறிந்த ஒருவர், இங்கே வந்து அமருங்கள் என என்னிடம் சொல்லிவிட்டு அவரது குடும்பத்தாரிடம் எனக்கு இடம் அளிக்கும்படி அவர்களை அருகருகே  அமர சொன்னார்.

பரவாயில்லை இருக்கட்டு மிக்க நன்றி என்று சொல்லியும் கேட்காமல்.அந்த குடும்பத்து தலைவர் எழுந்துவந்து என் தோளில் கைபோட்டு அழைத்து சென்று அவர்களோடு உட்கார வைத்தார்.

உள்ளபடியே என் உள்ளம் அன்று அவர்களை எண்ணி மகிழ்ந்தது.

அந்த குடும்பத்தில், பதினைந்து வயதுள்ள மகள் , பனிரெண்டு வயதுள்ள அவரது மகன், அவரது மனைவி என மொத்தம் நான்கு பேர்கள்.

அவர் என்னிடம் அவரது குடும்பத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

மனைவி மகள் மகன் என்று எல்லோரும் என்னிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்தனர்.

தாங்கள் பாகிஸ்தானை  சார்த்தவர்கள் என்றும், ரட்சண்ய யாத்திரையாக மெக்கா செல்வதாகவும் அங்கே ஒருமாதம் தங்கி இருந்துவிட்டு பின்னர் பாக்கிஸ்தான் திரும்பப்போவதாகவும் சொன்னார்.

நானும் என்னை பற்றிய தகவல்களை சொன்னேன்.

 போகப்போக பேச்சு மிக மிக சுவாரசியமாகவும் அந்நியோன்னியமாகவும் போய்க்கொண்டிருந்தது.

நான்  துபாய் ஏர்போர்ட்டில்  வாங்கி வைத்திருந்த SADWICH ஐ அந்த சிறுவனுக்கு கொடுத்தேன் முதலில் வேண்டாம் என்றவன் , அவரின் அப்பா சொன்னவுடன் வாங்கிக்கொண்டான். 

அவரின் பதினைந்து வயது மகள் என்னிடம் இந்தியாவைப்பற்றி பல கேள்விகள் ஆவலுடன் கேட்டாள். தெரிந்தவரை நானும் பதிலளித்தேன்.

அதை தொடர்ந்து அந்த பனிரெண்டு வயது மகன் இங்கிலாந்தை குறித்து  பல கேள்விகள் கேட்டான்.

அந்த குடும்பத்தலைவர், கராச்சியில் தாம் ஒரு மெடிக்கல் ஷாப் வைத்திருப்பதாகவும் தமது மூத்த மகன் ஒரு லாயர் எனவும் கடவுள் கிருபையால் எந்த ஒரு குறையும் இன்றி நன்றாக இருப்பதாகவும் கூறி, கண்டிப்பாக பாகிஸ்தான் வரவேண்டும் என சொல்லி, தனது வீட்டு விலாசம், கடையின் விலாசம், தொலைபேசி எண் முதலியவற்றை கொடுத்தார்.

இவை எல்லாமே எதோ சம்பிரதாய அழைப்பு என்றில்லாமல், உள்ளார்ந்த அன்போடு அவர்கள் சொல்ல சொல்ல என் மனம் நெகிழ்ந்தது.

இதற்கிடையில் வாங்கி வைத்திருந்த காபியையும் நான் குடிக்காமல் அவர்களோடு பேசிக்கொண்டிருந்ததை கவனித்த அவர், மன்னிக்கவும் , காபியை அருந்துங்கள் என சொல்ல,  அவர்களுக்கு  கொடுக்காமல் எப்படி நான் மட்டும் அருந்துவது என நினைத்து , உங்களுக்கும் வாங்கி வருகிறேன் என சொல்ல , வேண்டாம் என்று அன்போடு தடுத்தனர்.

எனினும் என்னுடைய காபியை அவரது மகளுக்கு கொடுத்து பருக சொல்லவும் எனது விமானத்தின் போர்டிங்க்குக்கான அறிவுப்பு வரவும் நான் அவர்களிடமிருந்து விடைபெற்றபோது, அவரும் பிள்ளைகள் இருவரும் கட்டிப்பிடித்து விடைகொடுக்க அவரது மனைவிக்கு என் இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பும் நேரம் எல்லோரும் சேர்ந்து புகைப்படமொன்றை எடுத்துக்கொள்ளலாம் என அவர் கூற,(எனக்கும் தோன்றியது ஆனால் அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்… என நினைத்து நான் கேட்கவில்லை). என்னுடைய   மொபைலில் பல போட்டோக்கள் எடுத்தேன்.

மறக்காமல் அனுப்பி வையுங்கள், ஒரு மாதம் கழித்து நாங்கள் ஊருக்கு செல்வோம் அப்போது தொடர்பு கொள்ளுங்கள், கண்டிப்பாக பாகிஸ்தான் வரவேண்டும். விசா விஷயங்களை என் மூத்த  மகன் ஒழுங்கு செய்வான்.

இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறி என்னை வழி அனுப்பினார்.

நானும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய வேண்டுகிறேன் என சொல்லி விமானம் ஏறினேன், என் உள்ளமெள்ளலாம் அந்த குடும்பத்தின் அன்பு நிரம்பி வழிய வழியெல்லாம் அவர்களின் நினைவுதான்.

நிலத்திற்குத்தானே எல்லைகள்   அன்பிற்கும் மனித நேயத்திற்கும்  இல்லையே.

கண்டிப்பாக பாகிஸ்தான் வரவேண்டும் என அன்புடன் அவர்கள் இட்ட அந்த கட்டளை நிறைவேறுமா, எனக்கும் பாகிஸ்தான் செல்லும் வாய்ப்பு கிடைக்குமா? இறைவன் அருள் இருந்தால் எதுவும் நடக்கலாம்.

இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்.
இன்னல் பட்டு எழும் குரலை கேட்கிறவன் எண்ணங்களை இதயங்களை பார்கின்றவன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.



17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

      எனக்கும் அதே நம்பிக்கைதான் ஐயா.

      நீக்கு
  2. சார்,

    பதிவை வாசிக்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.

    பாகிஸ்தான் பயணம் வாய்ப்பு சீக்கிரம் அமைய
    எனது வாழ்த்துக்கள்.

    ***

    ஆமாம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திர்க்கு
    பயண நேரம் எவ்வல்வு?

    ***

    ட்ரான்சிட் காக துபாய் ஏர்போர்ட்டில் எவ்வல்வு நேரம் காத்திருந்தீர்கள்?

    ***

    மிச்சம் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென் அமேரிக்க கண்டத்தில்உம் கூடிய சீக்கிரம்
    கோவின் கால் பதிக்க வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கு மிக்க நன்றி.

      துபாயில் இரண்டு மணி நேரம் காத்திருந்து அடுத்து 7 மணி நேரம் பயணித்து லண்டன் வந்து சேர்ந்தேன்.

      அடுத்த பயணம் உங்கள் வாழ்த்துப்படி அமையட்டும்.

      நீக்கு
    2. ம்ம்ம்.

      சென்னை-துபாய் பயண நேரம் எப்படியும் ஒரு 4 மணி நேரம் இருக்காதா சார்?
      துபாயில் இரண்டு மணி நேரம் காத்திருப்பு;
      துபாய்-லண்டன் ஒரு 7 மணி நேரம் பயணம்;
      மொத்தம் கூட்டினால் 13 மணி நேரம் வருது.

      இதுவே சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி ஃப்லைட் என்றால் எவ்வல்வு நேரம் பிடிக்கும்?

      நீக்கு
    3. மகேஷ்,

      சென்னையிலிருந்து துபாய்க்கு நேரடி பயணத்தில்(non -stop ) குறைந்த பட்சம் 3 மணிநேரம் அதிக பட்ச நேரம் 4 மணி 30 நிமிடங்கள், ஒரு நிறுத்தம்(one stop ) செய்து சென்றால் 7 மணிநேரம் கூட ஆகலாம்.

      சென்னையில் இருந்து British Airways மூலம் நேரடி பயணத்திற்கு 11:15 மணி நேரம். சென்னையில் இருந்து வேறு விமானங்கள் மூலம் செல்வதால் விமான நிறுவனத்தை பொறுத்து வேறு நாட்டு விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் தங்கி செல்வதால் பயண கட்டணம் கொஞ்சம் குறையும். அவசரம் என்றால் நேரடி விமானம் பிடித்து செல்வது நல்லது. நேரத்தை பொறுத்தவரை பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை சில மணி நேரங்களை தவிர.

      நீக்கு
  3. மனிதநேயம் என்பது ஜாதி, மதம், நாடு, மொழிக்கு அப்பாற்பட்டது.
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  4. நிச்சயம் சீக்கிரம் பாக் போவீர்கள் ஐய்யா.
    பகைமையை உருவாக்கியதும் அதை பராமரிப்பதும் அறசியலே, மக்கள் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த்,

      தங்கள் வாழ்த்து பலிக்கட்டும். வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. பதில்கள்
    1. அரவிந்த்,

      வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம், தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  6. நிறைய பாகிஸ்தானியர்களை நானும் சந்தித்திருக்கிறேன். நல்லவர்களும் உண்டு. நாடு என்ற நோக்கில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள். நாம் மனிதர்களின் நல்ல குணங்களை மட்டும் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நீங்கள் சொல்வதுபோல், குணத்தை மட்டுமே பார்க்கவேண்டும். வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  7. சிறப்பான அனுபவம். நெகிழ்ச்சியானதும் கூட.

    எல்லா இடங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் உண்டு. மனிதம் மேம்படட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள். எல்லா இடங்களிலும் இருவேறு குணமுடையவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

      நீக்கு