பின்பற்றுபவர்கள்

புதன், 22 ஜூலை, 2020

கந்துவட்டி கரையான்.

சிற்றின்பம் ??!!
நண்பர்களே,

நம் கண் முன்னே பலமுறை காட்சி  அளிக்கும் பல பொருட்களின் மீது நம் கவனம் திரும்பாது.


அதே போல நமக்கு தேவை படும் பொருட்கள் நம் கண் முன்னே இருந்தாலும் தேவைப்படும்போது  எத்தனை தேடினாலும் நம் கண்ணுக்கு தெரியாது.
அவ்வாறே,எதையோ தேடிப்போக வேறு எதையோ நாம் பார்க்க நேருவதும் உண்டு.

அதுபோல,கடந்த சில நாட்களுக்கு முன் பழைய புகைப்பட ஆல்பத்தில் சில போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு துண்டு சீட்டு ஆல்பத்தின் நடுவில் இருந்தது என் கண்ணில் பட்டது.

அந்த துண்டு சீட்டையும்  அதிலிருந்த வாசகத்தையும்  பார்த்ததும் என் கண்களைவிட என் நினைவு சிறகுகள் அகலமாக விரிந்து பறக்க ஆரம்பித்தது.

அப்படி அந்த துண்டு சீட்டு தூண்டிய நினைவில் நின்று நிழலாடிய அவர் கல்கத்தாவை சார்ந்த பெங்காலி மனிதர். அவரும் நானும் இந்தியாவில் ஒன்றாக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள்.

மொத்த குடும்பமும் நன்றாக தமிழில் பேச கற்றுக்கொண்டனர்.
அவரிடம் அனைத்து நல்ல குணங்களும் குடிகொண்டிருந்தன.

கல்கத்தா சென்று வரும்போதெல்லாம் ரசகுல்லா வாங்கி வருவார் எனக்கென்று தனியாக.
காலங்கள் சுழன்றடிக்க நான் வெளிநாடு சென்றுவிட்டேன். அவர்மட்டும் அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலையில் இருந்தார். ஊருக்கு விடுமுறையில் செல்லும்  நேரத்தில் எப்போதாவது  அவரை பார்த்து பேசுவதுண்டு.

பல ஆண்டுகள் கழித்து அவரது மகள் எனக்கொரு ஈமெயில் அனுப்பி இருந்தார்.

அதில் அப்பாவிற்கு தொண்டையில் புண்  உண்டாகி இருக்கின்றது, தொண்டைக்குழியில் ஓட்டை போட்டு அதனுடன்  ஒரு சிறிய குழாயை பொருத்தி இருக்கின்றனர், அதனால் பேச சிரம படுகிறார்.  உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது, மற்றபடி எழுந்து நடமாடுகிறார் என்று சொல்லி.

தொண்டையில் புண் வர என்ன காரணமாக இருக்கும் என யோசித்தபோது பள்ளி பருவத்திலிருந்தே இருப்பதாக அவர் என்னிடம் சொன்ன அவரது ஒரு கெட்ட  பழக்கம் என் நினைவிற்கு வந்தது.

ஆம் அவர் ஒரு chain smoker, அவரது மனைவி மகள், நண்பர்கள் உடன் பணிபுரிபவர்கள் என பலருக்கும் இவரின் அந்த பழக்கம் கொஞ்சம் கூட பிடிக்காது.

எவ்வளவு சொல்லி பார்த்தும் அவரால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை.

அந்த பெண்ணிடம் ஈமெயில் மூலமாக தொடர்புகொண்டு விசாரித்ததில், புகை பழக்கமே இப்போது இந்த நிலைமைக்கு காரணம் என்றும் இது புற்று நோயின் ஆரம்பம் என்றும் மருத்துவர்கள் சொன்னதாக தகவல் சொன்னார் அந்த பெண்.

அவருக்கு என்னுடைய ஆறுதல் சொல்லி அப்பாவிற்கு பக்க துணையாக இருங்கள் அம்மாவிற்கும் ஆதரவாக இருங்கள் என கூறி ஈமெயிலை  முடித்தாலும்  அந்த நல்ல மனிதரோடு எனக்கிருந்த நட்பின் அலை என் மனதில் அலையலையாய் எழும்பியபடியே இருந்தது.

ஊரில் இருந்த என் நண்பர்களை தொடர்பு கொண்டு அவருக்கான உதவிகளை செய்யும்படி கூறி இருந்தேன்.

அதே வருடம் இரண்டு மாதங்கள் கழித்து விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது அவரது இல்லம் சென்று நலம் விசாரித்து வெகு நேரம் கடந்த கால நினைவுகளை   பேசிக்கொண்டிருந்தோம் , சிரமத்திற்கு மத்தியிலும் அவர் பேசுவதை பார்க்க முடியவில்லை.
 
மன பாரத்தோடு விடை பெற்றுக்கொண்டேன்..

திரும்பி வந்து, காத்து கொண்டிருந்த ஆட்டோவில் ஏற  முனைந்தபோது அங்கே ஓட்டுநர் இல்லாமல் ஆட்டோ மட்டுமே இருந்தது.

ஆட்டோ ஓட்டுநர் சற்று தூரத்தில் மரத்தடியில் நின்றுகொண்டு புகை பிடித்துக்கொண்டிருந்தார்.

என்னை பார்த்ததும் எரிந்துகொண்டிருந்த  சிகரெட்டை அவசர அவசரமாக இழுத்து பின்னர்  தூர எறிந்துவிட்டு வண்டியில்  வந்து அமர்ந்தார்.

அவரிடம் நிதானமாக  யாரை  பார்த்துவிட்டு வருகிறேன், அவருக்கு என்ன பிரச்சனை, எதனால் இப்படி, அவரது வயது,அவரது மனைவி குழந்தைகளின் நிலை போன்றவற்றை சொல்ல சொல்ல , வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தியவர் தமது பாக்கட்டில் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை  என்னிடம் கொடுத்து அதை வீசி எறியுங்கள் இனி இந்த சனியனை கைகளால்கூட நான் தொடமாட்டேன் என கூறி தமது இந்த கெட்ட  பழக்கத்தை எண்ணி மனம் வருந்தினார்.

ஒருவரையேனும் மனம் திருந்த  செய்த மனநிம்மதியோடு  அந்த பாக்கெட்டில் இருந்த அனைத்து சிகரெட்டுகளையம் அருகில் இருந்த கால்வாயில் கொட்டிவிட்டு அந்த காலி பெட்டியின்  ஒரு பகுதியை கிழித்து அதில் இனி நான் புகைக்க மாட்டேன் என்றும்  அன்றைய தேதியையும் அதில் எழுதச்சொல்லி  அவரது ஆட்டோவில் மாட்டி இருந்த  ஒரு சாமி படத்தின்  அருகில் சொருகி வைக்க சொன்னேன். அவரும் அப்படியே செய்தார்.

வீட்டிற்கு வந்த எனக்கு,  நண்பரின் நிலையை எண்ணி வருத்தமாக இருந்தாலும் ஆட்டோக்காரரின் மனமாற்றம் கொஞ்சம் ஆறுதலை தந்தது.
அப்போது சிந்தனையில் துளிர்த்த ஒரு வாசகத்தை ஒரு சிறிய நோட் பேடில்  எழுதி அதை  என் பயண பெட்டியில் பாஸ்போர்ட் டிக்கெட் , பயண அட்டவணை போன்றவை இருந்த சிறிய பைக்குள் வைத்துக்கொண்டேன்.

கால போக்கில் மறந்தும் போனேன் அந்த துண்டு சீட்டையும் அதில் எழுதிய வாசகத்தையும். 

ஊருக்கு திரும்பிய எனக்கு மீண்டும் ஒரு ஈமெயில் அவரது மகளிடமிருந்து, அப்பா உங்களுக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதச்சொன்னார் என்று. அதற்கடுத்து என் நண்பர்களிடமிருந்து வந்த கரும்புகை  தகவல் கிடைத்து கண் கலங்கினேன்.

இத்தனை நினைவுகளையும் என் சிந்தையில் சிலிர்த்தெழ செய்த அந்த துண்டு சீட்டில் எழுதிவைத்திருந்த வாசகம்:


சிகரெட்டே,


"சிற்றின்பம் தருவதாய் பாவ்லா காட்டிவிட்டு 
பேரின்பத்தை பறித்து செல்லும் 
கந்துவட்டி கரையான் நீ ."


நன்றி,


மீண்டும்  ச(சி)ந்திப்போம் ,
கோ.16 கருத்துகள்:

 1. நம்மால் முழு ஊரையும் திருத்த முடியாது.
  முடிந்ததை செவ்வனே செய்திருக்கிறீர்கள்.
  சிறப்பு ஐய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரவிந்த் , வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அருமையான வாசகம். பதிவும் அருமை. நானும் சிலரைத் திருத்த முயர்ச்சித்துப் பார்த்தேன் சார் முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபிநயா , வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி. திருந்தாத உள்ளங்கள் குறித்து வருந்தாதீர்கள், நாம் யாரையும் திருத்த முடியாது அவர்களாக உணர்ந்து திருந்தும்வரை.

   நீக்கு
 3. "சிற்றின்பம் தருவதாய் பாவ்லா காட்டிவிட்டு
  பேரின்பத்தை பறித்து செல்லும்
  கந்துவட்டி கரையான் நீ ."//

  வரிகள் அருமை. கந்துவட்டி கரையான் பொருத்தமான பெயர்..

  எனக்கும் புகைப்பிடிப்பவரைக் கண்டால் நான் தள்ளி நிற்பேன். புகைப்பிடிப்பவரை விட அதை சுவாசிப்பவர்களுக்கு இன்னும் பாதிப்பு. செகண்டரி ஸ்மோக்கிங்க்..

  திருவனந்தபுரத்தில் இருந்த் போது அடிக்கடி சென்னைக்குப் ப்யணம் செய்ய நேரிடும். அப்போதெல்லாம் கேரளத்தில் பொதுஇடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டிருக்கவில்லை. ரயிலில் பலரும் புகைபிடிப்பார்கள். எனக்கா கோவம் வரும். அவர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வேன். கேட்கவில்லை என்றால் திட்டிவிடுவேன்.

  இப்போது பொதுவெளியில் அதிகம் இல்லை. கேரளத்திலும் சரி, இங்கும் சரி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திருமதி கீதா. ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் Passive smoking is all the more dangerous என்று புரியாதவர்கள் பயணத்தின்போது அலட்சியமாக இருப்பது இன்னும் ஆபத்து.

   புகை பிடிப்பவர்கள் தமது ஆரயோக்கியத்தில் அக்கறை இல்லாமல் இருந்தாலும் தங்களை சுற்றி இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறையோடு இருக்க வேண்டும்.

   கவிதை வரிகள் தங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்சி.

   நீக்கு
 4. நான் பல நட்புகளைத் திருத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறென். கல்லூரி படிக்கையில். அப்புறமும்.

  நம்மால் ஒருவர் பழக்கத்தை விடுகிறார் என்றால் எத்தனை சந்தோஷம்! அருமை கோ அந்த ஆட்டோக்காரர் உங்கள் கருத்தை செவிமடுத்துக் கேட்டு புரிந்து கொண்டு விடுகிறேன் என்று சொன்னது.

  உங்கள் நண்பர் பாவம். பிரார்த்திப்போம்
  புற்று நோய் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் போல!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னதான் நாம் அறிவுரை வழங்கினாலும் உணர்ந்து ஏற்பவர்கள் மட்டுமே திருந்துவார்கள். அந்த ஆட்டோகாரர் உடனே செவிமடுப்பார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அப்போதுதான் பார்த்துவந்த அந்த நண்பரை பற்றியும் அவரது குடும்ப நிலையையும் நான் கூறியபோது என் குரலில் இருந்த வேதனையும் பரிதவிப்பும், அக்கறையும் அவரை மாற்றியிருக்கவேண்டும்.

   பதிவில் குறிப்பிட்டிருந்தேனே கவனிக்க வில்லையா ? அந்த நண்பர் இப்போது இல்லை.

   நீக்கு
 5. சிகரெட் குறித்த கவிதை அருமை நண்பரே...

  அரசு நினைத்தால் எல்லா தவறான பழக்கங்களையும் முழுமையாக நிறுத்த முடியாவிட்டாலும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் அரசே மக்களை குடிக்க வைக்கிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே. கவிதையை பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள். சாணியைக்கண்டு அதை மிதிக்காமல் பக்குவமாக கடந்து செல்பவன் ஞானி.

   நீக்கு
 6. ஒரு நல்ல காரியம் செய்துள்ளீர்கள் .ஆட்டோக்காரர் திருந்தியது குறித்து மகிழ்ச்சி .கந்து வட்டியும் அதே மாதிரித்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி அம்மா . எனக்கும் மகிழ்சி உங்கள் வரவு கண்டு.

   நீக்கு
 7. உடனே திருந்தச் சம்மதித்த ஆட்டோக்காரர் பாராட்டப்பட வேண்டியவர்.  நான் என்னவோ சொல்லப்போக திடீரென ஒருநாள் என் மாமா புகைப்பதை நிறுத்தி விட்டார்.  அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.  நண்பரின் நிலை நெகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதிர்பார்க்கவில்லை அந்த instant மன மாற்றத்தை.தங்கள் மாமாவை திருத்திய மன நிறைவு உங்களுக்கும் கிட்டியதில் எனக்கும் மகிழ்ச்சியே. நண்பர் இப்போது இல்லை. வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. உண்மைதான்
  புகை
  கந்துவட்டிக் கரையான்தான்

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.

  பதிலளிநீக்கு