வரலாற்று உண்மை!!
நண்பர்களே,
எத்தனைதான், மாவீரனாக இருந்தாலும் , மனவலிமை பொருந்திய படைத்தலைவனாககூட இருந்தாலும், நாட்டின் உயர்ந்த நிலையில் , அதிகார பலம் பொருந்தி இருந்தாலும் , உலகம் போற்றும் ஒப்பற்ற மக்கள் தலைவனாக இருந்தாலும், உலக ஞானம் அனைத்தையும் கற்று தேர்ந்த
ஞானியாக இருந்தாலும்,பாகுபாடற்று அனைத்து மனிதருக்கும், அனைத்து
உயிருக்கும் , வேதனை, வலி, வருத்தம்,இழப்பு,துக்கம், சந்தோஷம் என தமது உணர்வுகளின் வெளிப்பாடாக தன்னையும் அறியாமல், கட்டுப்படுத்த முடியாமால் கண்கள் உகுக்கும் கண்ணீர் என்பது எல்லோருக்கும் பொதுவானது.
நெப்போலியன் தமது வாழ்நாளில் எத்தனையோ குருக்களிடத்தில் கணிதம், வரலாறு, புவி இயல், மற்றும் மொழிப்பாடங்களை கற்று முதன்மை நிலையில் இருந்திருக்கிறா(ர்)ன்.
அதே சமயத்தில் நெப்போலியனை குருவாக ஏற்று அவரிடத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல பாட வித்தைகளை கற்று தேர்ந்த மாணவர்களும் ஏராளம்.
இத்தகு மாணவர்கள் காலப்போக்கில், பிரான்ஸ், ஆஸ்திரியா,இங்கிலாந்து,இத்தாலி,ஜெர்மனி , சுவிட்சர்லாந்து போன்ற தேசங்களில் தமது குருவான நெப்போலியனின் புகழுக்கும் அவரது அறிவாற்றலுக்கும் சான்றாக வாழ்ந்துவரும் சூழலில் தமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த குருவான நெப்போலியனை சந்தித்து தமது நன்றியினையும் மரியாதையையும் சமர்ப்பிக்க நினைத்தான் ஒரு மாணவன் பல பத்து ஆண்டுகளுக்கு பின்.
இதற்காக அவன் வாழ்ந்துவரும் நாட்டிலிருந்து பல ஆயிரம் மையில்களை கடந்து , பல மலைகள்,பல ஆறுகள், ஓடைகள், காடுகள், கடல்கள் என பல தடைகளை கடந்து , பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு வழியாக குருவின் மாளிகை முகப்பில் இருந்த அழைப்பு மணியின் ஓசையை எழுப்புகிறான்.
மாளிகை வாசல் திறக்கப்படுகிறது, உள்ளிருந்து ஒரு பெண்மணி யார் என்ன வேண்டும் என்று விசாரிக்கிறார்.
விவரத்தை சொல்கின்றான் மாணவன்.
அவர் அருகிலுள்ள தேவாலயத்தின் வழிபாட்டில் கலந்துகொள்ள சென்றிருக்கின்றார், இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார், உள்ளே வந்து அமருங்கள் என சொல்லிவிட்டு பழ ரசம், கனிகளையும் சில வகை பிஸ்கட்டுகளையும் கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெரிய வெண்கல தட்டில் வைத்து கொண்டுவந்து கொடுத்து உபசரிகின்றார்.
தன்னைப்பற்றி மேலும் சில விவரங்களை சொல்லிக்கொண்டே நீங்கள் ……?
நான் அவரது மனைவி என்று சொன்னவர் அருகில் நின்றிருந்த மற்றோரு பெண்ணை சுட்டிக்காட்டி இவர் என் கணவரின் தங்கை என்றும் அறிமுகம் செய்து வைக்கின்றார்..
இருவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பழ ரசத்தை பருகிக்கொண்டே வரவேற்பறையின் சுற்று சுவரெங்கும் மாட்டப்பட்டிருந்த குருவின் புகழ்ப்பாடும் பட்டமேற்பு விழாவை நினைவுப்படுத்தும் ஓவியங்களை , குடும்ப புகை படங்களை பார்த்துக்கொண்டிருந்தார் அந்த மாணவர்.
சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு மணி ஓசை எழுப்ப கதவை திறக்க ஓடிச்சென்றார் குருவின் சகோதரி.
அவர்தான் என நினைக்கின்றேன் என சொல்லிவிட்டு அவரது மனைவியும் கதவருகே சென்று கதவை திறக்கின்றனர் இருவருமாக.
கம்பீரத்துடன் உள்ளே நுழைந்தவரிடம் அவரது மனைவி ஏதோ சொல்ல தமக்கே உரித்தான வீர நடையுடன் வேகமாக நுழைகிறார் நெப்போலியன்.
தன்முன் பளபளக்கும் பட்டாடை அணிந்து திடமான தோள்களும் கூறிய கண்களும் கொண்ட குருவைப்பார்த்த மகிழ்ச்சியும் பிரமிப்பும் இதயத்தில் கைகோர்க்க, எழுந்து நின்ற அந்த மாணவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
கையசைத்து அமர சொல்லிவிட்டு தானும் அமர்ந்தார்.
பின்னர் தாம் எப்படி எப்போதுமுதல் மாணவனானார் , என்று தொடங்கி, அவருக்கும் தனக்கும் மட்டுமே சொந்தமான சில நிகழ்வுகளை சிலாகித்து பகிர்ந்துகொண்டார் அந்த மாணவன்.
அதற்கு ஏற்றாற்போல அந்த மாணவனோடும் அவரது தோழர்களோடும் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை நினைகூர்ந்த நெப்போலியனும் தமக்கே உரித்தான அழகு மொழியாலும் நகைச்சுவை உணர்வோடும் மகிழ்வோடும் பேச துவங்கினர்.
சிறிதுநேரம் போனபிறகு, தான் கொண்டுவந்திருந்த பூங்கொத்து, பழங்கள் இனிப்புவகைகள், கேக் போன்றவற்றை தமக்கு முன்பிருந்த அந்த கலை நுட்பம் ததும்பும் பெரிய தட்டில் அடுக்கி அதனுடன் தம் குருவை பற்றி தாம் எழுதிய சில ஞாபக குறிப்புகள் அடங்கிய வாழ்த்து சுருளையம் அதன் மீது வைத்தார் அந்த மாணவன்.
பிறகு பவ்வியமாக எழுந்து அதை தன் குருவிடம் நீட்ட, எழுந்து நின்று பெற்றுக்கொண்ட குருவின் கால்களை தொட்டு வணங்கினார் அந்த நன்றி மறவா மாணவன்.
உடனே அந்த தட்டை தனது மனைவிடம் கொடுத்துவிட்டு இரண்டு கைகளையும் அந்த மாணவன் தலைமீது வைத்து கடவுளின் ஆசி உன்னுடன் எப்போது இருப்பதாக என கூறி தனது காலடியில் மண்டி இட்டு வணங்கிக்கொண்டிருக்கும் அந்த மாணவனின் இரண்டு தோள்களையும் பிடித்து தூக்கி, இருக்கையில் அமர செய்கின்றார்.
செய்வதறியாது திகைத்துப்போய் நின்றிருக்கும் அவரது மனைவியின் கையிலிருந்த தட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அந்த சுருளை எடுத்து பிரித்துப்பார்க்கின்றார் நெப்போலியன்.
உடனே அந்த சுருளை குருவின் அனுமதியுடன் பெற்று அதில் தாம் எழுதி இருந்த வாக்கியங்களை அந்த மாணவனே நிறுத்தி நிதானமாக, உண்மையான உணர்வுப்பூர்வமாக ஏற்ற இறக்கங்களுடன் வாசித்து முடிக்கிறான்.
வாசித்து முடித்து கண்களை ஏறெடுத்து பார்க்கையில் எதிரில் அமர்ந்திருந்த நெப்போலியன் கலங்கும் கண்களுடன் எழுந்து வந்து தனது மாணவனை கட்டி அணைத்து , எதிர்பாராத அந்த இன்ப நிகழ்வு "கோடி கொடுத்தாலும்" அதற்கு ஈடாகாது என சொல்லி தமது மனைவியையும் தமக்கையையும் பார்க்க அவர்களும் தங்களது கண்களை தங்கள் "புடவை" தலைப்பில் துடைப்பதை பார்க்க முடிந்தது.
இப்படியாக தமது குருவை மெய்சிலிர்க்க செய்த அந்த மாபெரும் மகிழ்ச்சி வெள்ளம் மனதில் நிறைந்தவராய் அந்த மாணவன் மீண்டும் தமது குருவிற்கும் அவரது மனைவி சகோதரிக்கும் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லி அந்த மாளிகைவிட்டு வெளியேறினார், கோடி கொடுத்தாலும் இந்த சந்திப்பிற்கு ஈடாகாது என்று மனதில் நினைத்தவராய்.
நண்பர்களே, இந்த "வரலாற்று சிறப்புமிக்க??!!" சந்திப்பு இத்தாலியில் அல்லது பிரான்சில் ஆகஸ்டு 1769க்கும் மே 1821 க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தது அல்ல .
இந்த சந்திப்பு முழுக்க முழுக்க இந்தியாவில் நடந்தது என்றால் ஆச்சரியப்படும் நீங்கள் அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் நடந்து என்றால் மேலும் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆம், பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் கற்றுக்கொடுத்த குருவான புலவர் நெப்போலியன் அவர்களின் இல்லத்தில், 2020 ல் பிப்ரவரி மாதம் , அவருக்கும் அவரின் மாணவன் இந்த "கோ"விற்கும் இடையில் நடந்தது இந்த சந்திப்பு என்பதை இங்கே பணிவோடு கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த நெப்போலியனை பற்றி மேலும் அறிந்துகொள்ள: தமிழ் வந்த கதை , தமிழ் வந்த கதை-1, தமிழ் வந்த கதை 2 படியுங்கள், உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
கோ..
பதிலளிநீக்குஎன்னத்த சொல்வேன்..?
ஏற்கனவே பிரெஞ்சு நாட்டில் நெப்போலியன் வாழ்ந்த வீழ்ந்த பகுதியை எல்லாம் பார்த்த அனுபவத்தினால் இந்த பதிவை படிக்கையில், அந்த மாளிகைகளை மனதில் லொகேஷனாக படித்து கொண்டு வந்தேன். நடுவில் "புடவை" என்ற வார்த்தை வந்தவுடன், இது வேறு எங்கோ போகின்றதே என்று ஒரு நொடி தயங்கினாலும் மீண்டும் தங்களின் மாயாஜால வார்த்தைகளில் மயங்கி நெப்போலியன் காலத்துக்கே சென்று விட்டேன்.
நல்லதோர் பதிவு.
தமிழ் வந்த கதையையும் படித்தேன். தம்மை தம் தமிழை இங்கே நான் அறிமுகப்படுத்தியது என் பாக்கியம். தங்களின் பதிவில் அடியேனின் பெயரை கண்டு மகிழ்ந்தேன்.
தொடர்ந்து எழுதவும்
விசு,
நீக்குஅந்த புடவை clue வேண்டுமென்றேதான் கொடுத்தேன். பதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.எத்தனை பதிவுகள் எழுதினாலும் அதனை எத்தனைபேர் பாராட்டினாலும் அவை அத்தனையிலும் உமது பங்கு பெரியது/ எல்லா புகழும் ……..
கோ..
பதிலளிநீக்குகொரோனாவில் வந்த பலன்...
ஜூலை மாதத்தில் மட்டும் 18 பதிவுகள். அருமை. கொரோனா கடந்து போனாலும் தங்களின் இந்த பதிவுகள் இதே வேகத்தில் வர வேண்டும்.
விசு,
நீக்குபதினெட்டு என்பதை நீங்கள் செல்லும்போதுதான் உணர்ந்தேன் . கொரோனா கொடுத்த நேரம்தான் காரணம் . பார்க்கலாம் இதே வேகம் தொடருமா என்று. மீண்டும் உங்களின் தொடர் ஊக்கத்திற்கு நன்றிகள்.
வாழ்க தமிழ். வாழ்க குருவந்தனம். செப்டம்பர் ஐந்தாம் தேதி வந்திருக்க வேண்டிய பதிவோ?
பதிலளிநீக்குவாழ்க ,வெல்க தமிழ். ஆசிரியரின் மகன் என்பதால் ஆசிரியர்கள் மீது ஒரு கூடுதல் மரியாதை .
நீக்குஅப்படியெல்லாம் யோசிக்கவில்லை, மனதில் தோன்றிய நினைவுகளை பதிவாக்கவேண்டும் என்ற எண்ணம்தான். வேண்டுமென்றால் , செப்டெம்பர் 5 ஆம் தேதியும் ஒருமுறை வந்து மீண்டும் வாசித்துக்கொள்ளலாம் , அனுமதி இலவசம்.
வருகைக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
நெகிழ்ச்சி...
பதிலளிநீக்குஆமாம் தனபால், நீண்ட வருடங்களுக்கு பிறகு பள்ளிக்கூட ஆசிரியரை சந்தித்து வாழ்த்துபெற்றது நெகிழ்ச்சிதான். வருகைக்கு மிக்க நன்றிகள் தனபால்.
நீக்குபடித்து வரும் போதே மாணவன் நீங்க உங்க குருதான் திரு நெப்போலியன் என்று புரிந்துவிட்டது ஆனா என்ன பாடம் கற்றுக் கொடுத்த குருவாக இருக்கும் என்றுதான் கணிக்க முடியவில்லை ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஉங்கள் வர்ணனையே தனிதான். பதிவை ரசித்தோம் கோ
கீதா
வர்ணனையை ரசித்ததற்கு மிக்க நன்றிகள். நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள் என எனக்கு தெரியும். விசுவால் முடியவில்லை , புடவை என்றொரு CLUE கொடுத்தும்கூட. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே.
நீக்குஎன்னே உங்கள் குருபக்தி! :) உங்கள் ஆசிரியரைச் சந்தித்தது பற்றி சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.
நீக்கு