பின்பற்றுபவர்கள்

திங்கள், 20 ஜூலை, 2020

ஞான ஒளி!!

நான் யார்?? 
நண்பர்களே,

யாரும் தவறாக நினைக்கவேண்டாம் , இது என் அறிவீனத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம் எனினும் என் மனதில் தோன்றிய இந்த ஐயத்தை  தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே உங்களை போன்ற அனுபவமிக்க நண்பர்களிடத்தில் என் ஐயத்தை வெளிப்படுத்துகிறேன்..

தமிழில் ஒன்றன்பால்,பலர்பால், பலவின்பால், உயர்திணை , அஃறிணை என்ற இலக்கண சுட்டு பெயர்கள் உள்ளன.

மனிதன் உயர்திணை, அவனைத்தவிர்த்து ஏனையவை அஃறிணை என்றறிந்திருக்கின்றோம்.

மனிதனை சுட்டும்போது, ஒன்றன் பாலாக இருப்பின் அவன், அவள்  என்றும் பலர்பாலாக  இருப்பின்  அவர்கள் என்றும் உயர்திணையாக அழைக்க தமிழிலக்கண வாய்ப்பாட்டு விதி விளம்புகின்றது.

அவ்வாரே அஃறிணை ஒன்றன்பாலாக  இருப்பின்  அது, இது  என்றும், பலவின் பாலாக இருப்பின் அவை  இவை என்றும் விளிக்கப்படவேண்டும் என்று கற்றுத்தரப்பட்டிருக்கின்றோம்.

தொல்காப்பியர் காலம்தொட்டு கடைபிடிக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கண கோட்பாடுகள் தற்போதைய எழுத்துலகில் , பேச்சு வழக்கில் சற்று இடம் மாறி தடம் மாறி  போவதென்பது  வருத்தத்திற்குரியது.

சில திரை பாடல்களில், ஒருமை, பன்மை விதிகள் மீறப்பட்டிருப்பதை பார்க்கிறோம், அவை சிறந்த பாடலுக்கான தேசிய விருதுகள்கூட பெற்றி ருக்கின்றன.  

ஒவ்வொரு பூவுமே .. என்பதற்கு பதிலாக , ஒவ்வொரு பூக்களுமே... என்று வரும் பாடல்கூட ஒரு உதாரணமே. ஒவ்வொரு என்பதற்கு ஆங்கிலத்தில் every   என்று சொல்லும்போது அவை ஒருமையைத்தான் குறிக்கும், பூக்கள் -flowers என்பது பன்மையை குறிக்கும் .. அதேபோல, ஆயிரம் நிலவுகளே  வாருங்கள் என்பதற்குப்பதிலாக  ஆயிரம் நிலவே வா என்று வருவதும் பிழைதானே ?

இவற்றைக்கூட இசைக்காக மெட்டுக்காக - துட்டுக்காக   ஒருமையை பன்மையோடும் - பன்மையை ஒருமையோடும் ஒட்டு போட்டு எழுதி இருக்கின்றனர் என்ற வகையில்  பெரிதாக கருதவேண்டியது இல்லை என்பதோடு நான் உடன்படுகிறேன்.

ஆனால் ஒரு உயர்திணையை அஃறிணையாய் விலாசபடுத்துவது எனக்கு விளங்காத விந்தையாக இருக்கின்றது அதுவும்.

தமிழ்நாட்டுக்கு  வான்  நிகர் புகழை , தமது படைப்பிலக்கியத்தை உலகினுக்கு தந்ததன் மூலம் பெற்று கொடுத்த வள்ளுவ பெருந்தகையின் சில குறள்களிலும்  இப்படி வருவது என்பது , (ஏற்கனவே ஆரம்பத்தில் சொன்னதுபோல், என் அறிவீன வெளிப்பாடாகவே) சரிதானோ  என அறிய விழைகிறேன்.

அரசியல் பற்றி சொல்லும்போது தமது 448 ஆவது குறளாக:  

"இடிப்பாரை  இல்லாத எமரா மன்னன் தன்னைக் 
கெடுப்பா ரிலானுங்கெடும்". என்கிறார்.

 இதன் பொருள் - பரிமேலழகர் உரைபடி:

சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொல்லாமையின் காவலற்ற "அரசன்" பகையாக்கிக் கெடுப்பார் இல்லையாயினும் தானே "கெடும்"

இதில் மன்னன் என்பவன் உயர்திணை , கெடும் என்பது அஃறிணையை சுட்டும் பதம்.  மன்னன் கெடுவான் என்றிருக்கவேண்டுமோ என தோன்றுகின்றது அல்லது  "அரசு" - "கெடும்" என்றிருந்திருக்க வேண்டுமோ?

அதேபோல் 50 ஆவது குறளாக : 

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும்"

இதன் பொருள் - பரிமேலழகர் உரைபடி:

இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன், வையத்தானே என்றாலும்,வானின்கண் உறையும் தேவருள்  ஒருவனாக வைத்து மதிக்கப்படும்.

இதில் வாழ்பவன் என்பது மனிதனாகிய உயர்திணையை குறிப்பதாகவும், வைக்கப்படும் என்பது ஏதோ அஃறிணையை குறிப்பதுபோலவும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒருவேளை வைக்கப்படுவான், என்றிருக்க வேண்டுமோ?


தாம் நினைத்து எழுதிய வார்த்தைகள்  ஒருவேளை, பழுதுற்ற பனைஓலைசுவட்டில் இருந்து பதி/படி விறக்கம் செய்யும்போது ஏற்பட்ட பிழையாக இருக்கக்கூடுமோ?

பலரும் பலவாறு உரை எழுதி இருந்தாலும் திருக்குறளிலேயே இப்படி உயர்திணை அஃறிணை கலப்பு வார்த்தைகள்  இருப்பது கொஞ்சம்  முரணாக உள்ளதாக நான் கருதினாலும் தெய்வ புலவன்  அய்யன் திருவள்ளுவரின் ஞான ஒளியை எடைபோட நான் யார்?


நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.
 
கோ.


  

12 கருத்துகள்:

 1. தொடர்ந்து திருக்குறளைப் படியுங்கள்
  தெளிவு பிறக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. எனினும் தங்கள் கருத்தை சொல்லி இருந்தால் instant தெளிவு கிடைத்திருக்கும்.

   வருவகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையாரே.

   நீக்கு
 2. நல்ல சந்தேகம்! சந்தேகத்தை தீர்த்து வைத்தால் ஆயிரம் பொற்காசுகள் உண்டா? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வெங்கட்,

   இது பரிசுக்கு அப்பாற்பட்ட பதிவு…. அதையும் தண்டி….

   எனது சந்தேகம் நல்ல சந்தேகம்தான் என ஆமோதித்த உங்களுக்கு நன்றிகள்.

   நீக்கு
 3. சிந்திக்க வேண்டிய கருத்து .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்திக்கவேண்டியதென்று அங்கீகரித்தமைக்கும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றிகள்.

   நீக்கு
 4. இதுக்கு பதிலை தமிழ் ிலக்கணம் தெரிந்தவர் தான் சொல்லனும் சார். ஜம்புலிங்கம் ஐய்யா போன்றோர் வரனும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி அரவிந்த். ஐயா வருவார் எமது ஐயத்தை தீர்ப்பார் என எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
 5. சிந்திக்க வைக்கும் பதிவு

  துளசிதரன்

  கோ எனக்கென்னவோ நாம் கொள்ளும் பொருளில்தான் அபப்டித் தெரிகிறதோ? விகுதி முற்றிற்கு இலக்கணும் உண்டு இல்லையா அதன்படி இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. தேட வைத்த பதிவு!!! எனக்கு நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. அதாற்கான விளக்கமும் என் மனதில் இருக்கிறது ஆனால் அதைச் சரியாக இங்கு சொல்ல முடியவில்லை அதாவர்து பொருள்பட.

  http://www.tamilvu.org/ta/courses-degree-c021-c0212-html-c0212661-15873

  https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/Yp4qLAr6gdM

  கீதா

  பதிலளிநீக்கு
 6. அன்பிற்கினிய நண்பர்களே,

  இலக்கண குறிப்புகளை நேரம் செலவழித்து தேடி கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் எனினும் ஐயத்திற்கான விளக்கமோ பதிலோ கிடைக்கவில்லை என்றாலும் எனது கருத்தும் பேரா. பெஞ்சமின் லெபோ அவர்களின் கருத்துக் ஒத்துப்போவது மன நிறைவை தருகின்றது.

  அவருக்கு இப் பதிவை அனுப்பி கேட்டுப்பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 7. இதனை முரண் எனக் கூறமுடியாது. நகலெடுக்கும்போதும் பல விடுபாடுகள் இருக்க வாய்ப்புண்டு. உரையாசிரியர்களைப் பொறுத்துக்கூட சில கருத்துகள் மாறியிருக்கலாம். பல்வேறு காலகட்டத்தில் எழுதும்போதுகூட இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. ஐயா தங்களின் கருத்துதான் என் அனுமானமும், அதாவது, பனை ஓலை சுவடுகளிலிருந்து நகலெடுக்கும்போதேற்பட்ட விடுபாடுகள் அல்லது தெளிவில்லாத வார்த்தைகளை அனுமானத்தின்பேரில் சேர்த்து பதிவேற்றம் செய்தது என்பது.

   மற்றபடி, சாதாரணமாக தமிழிலக்கணத்தில் உயர்திணை அஃறிணை கலப்பு ஏற்புடையதா என்பதை தயவாக கூறவும். தங்களின் கருத்திற்காக ஒட்டுமொத்த பதிவுலகமும் ஆவலுடன் காத்திருக்கின்றது.

   வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா , அநேக நமஸ்காரங்களுடன் - கோ.

   நீக்கு