பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

கூட்டத்திலே கோயில்புறா!!

ரீங்காரம்.
நண்பர்களே,

ஒவ்வொரு புதன் கிழமையும்  நிறுவனத்தின் எங்கள் கிளை அலுவலர்கள் மத்தியில் காலை 11.00 மணிக்கு  ஒரு மீட்டிங்  நடக்கும்  . இதில் முதன்மை தலைமை அலுவலர் முதல் அனைத்து மேலாளர்களும் கலந்துகொள்ளவேண்டும்.

இதற்கு stand-up மீட்டிங் என்று பெயர், அதாவது அவரவர் இருக்கையை விட்டு மீட்டிங்  நடத்துபவர் இருக்கும் திசை நோக்கி நின்றுகொண்டு மீட்டிங்கில் பங்குபெறுவது. நீண்ட பல வரிசையாக எதிரும் புதிருமாக அமர்ந்திருக்கும்  ஊழியர்கள் அமர்ந்த வண்ணமே மீட்டிங்கில் பங்குபெறுவது சாத்தியமல்ல எனவே பெரும்பாலும் நின்றுகொண்டுதான் பங்குபெறவேண்டியதால் இதற்கு இப்படி பெயர்.

இது தவிர துறை சார்ந்த கூட்டங்களும்  அந்தந்த துறையினரால் அவ்வப்போது நடத்தப்படும்.

கடந்த சுமார்  நான்கு மாதங்களுக்கு மேலாக எங்கள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் அலுவலக வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கின்றோம், உலக நாடுகள்  அனைத்தையும் போல.

எனவே இந்த கால கட்டங்களில் இது போன்ற வழக்கமான கூட்டங்களை முன்புபோல நடத்தமுடியாது என்றாலும் அவற்றை தவிர்கவும் முடியாததால் இப்போதெல்லாம் virtual முறையில் நடத்தவேண்டி உள்ளது. 

கணனியில் சிறு சிறு கட்டங்களில் தெரியும் சக ஊழியர்களை பார்க்கலாம், நமது வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருந்துகொண்டு பங்குபெறலாம். அப்போது சில ஊழியர்களின் நாய், பூனை , குழந்தைகளை, கணவன்  மனைவி, ஆண்  நண்பர், பெண் நண்பர், அப்பா அம்மா  அவ்வப்போது பின்னனியில் கிச்சன் , உலர்த்த போட்டிருக்கும் துணிகள்  போன்றவற்றையும் பார்க்கலாம்.

அவர்களை(அவைகளை) பார்த்ததும் கூட்டத்தினிரைடே ஒரு சில சலப்பும்  சிரிப்பலையும் உண்டாகும் . அந்த சிரிப்பலை அடங்கும்முன் வேறொருவரின் பின்னணியில் மற்றுமொரு காட்சி அரங்கேறும்.

ஆனால் எனக்கென்று வீட்டிலேயே ஒரு சிறு அலுவலகம் அமைத்துக்கொண்டதால் என்னுடைய பின்னணியில் நடந்தது என்ன நடப்பது என்ன என்பதை யாரும் அறியா வண்ணம் மடி கணனியின் கேமரா பொசிஷனை திருப்பி வைத்திருப்பேன்.

சில நாட்களுக்கு முன் மேல் மாடியில் இருந்த என் வீட்டு அலுவலகத்தை தற்காலிகமாக கீழ் தளத்திற்கு மாற்றி இருந்தேன்.

இந்த நேரத்தில் என் துறை சார்ந்த ஒரு மீட்டிங்கை 11.00 மணிக்கு  ஒழுங்கு செய்து சக ஊழியர்களுக்கு அழைப்பும்  விடுத்திருந்தேன்.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே  அனைவரும் ஆஜர்.

அப்போது மணி காலை  10:50. வரவேண்டிய அனைவரும் வந்துவிட்டதால் கூட்டத்தை  உடனே ஆரம்பித்துவிட்டேன்.

அனைவரையும் வரவேற்றுவிட்டு  சம்பிரதாய (??) நலம் விசாரித்துவிட்டு அன்றைய மீட்டிங்கின் பிரதான கலந்துரையாடல்: "நீண்ட நாள்  கடனை(overdue outstanding) வசூலிக்கும் முறைகள், மற்றும் வரா கடனை (Bad debts) பாவிக்கும் வழிமுறைகள்  பற்றியது என்ற முன்னுரையை சொல்லிவிட்டு, இன்றைய தேதியில் நமக்கு வரவேண்டிய தொகை  அதே சமயத்தில் இன்னும் வராமலும், வரவே போவதில்லை என்ற வகையிலும்  எவ்வளவு தொகை இருக்கின்றன என்ற புள்ளி விவரத்தையும் சொல்லிக்கொண்டிருக்க அனைவரும் முழு கவனத்துடன் புள்ளி விவரங்களை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர். 

மிகவும் சீரியஸான கட்டத்தில் ……..

எனக்கு பின்புற சுவற்றில் மாட்டி இருந்த குக்கூ கடிகாரத்தில் இருந்த குருவி  வெளியில் வந்து தன்  கடமையான 11 x 2 முறை கூவ ஆரம்பித்துவிட்டது.

ஹை …."கோயில்" (சாரின்) குக்கூ கூவுகிறது…, ஆஹா  அழகாக இருக்கின்றதே அந்த குக்கூ குருவி….என  சக ஊழியர்கள் சொல்ல   கவன சிதைவு தலை காட்ட ஆரம்பித்தது.

அதை உடனே நிறுத்தவும் முடியாது, என்னுடைய ஸ்பீக்கரை mute ம் பண்ண விரும்பாமல் கொஞ்சம் அசடு வழியும் புன் சிரிப்புடன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்  குக்கூவின் கூக்குரலும் எனது சக ஊழியரின் சிரிப்பொலியும் அடங்கும் வரை.

அதை தொடர்து அனைவரிடமும் சம்பிரதாய மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்து 12.00 மணிக்கு மீண்டும் கூட்டத்தில் இந்த "கோயில்" புறா கூவுவதற்கு முன்  சொல்ல வேண்டிய அனைத்தையும் வேகமாக சொல்லிவிட்டு , வருகைக்கு நன்றி மீண்டும் ச(சி)ந்திப்போம், அடுத்த கூட்டம் இரண்டுவாரங்களுக்கு பிறகு   என  சொல்லி, முடித்தேன்  அப்போது மணி 11:45

இப்படி கூட்டத்தில் கூக்குரலிட்ட  அந்த குருவி கூடாகிய கடிகாரத்தை  கலைப்பது(இடம் மாற்றுவது) சரி இல்லை என்று எண்ணி மீண்டும் எனது அலுவலகத்தை மேல் மாடிக்கே மாற்றிக்கொண்டேன் .

ஆமாம் தலைப்பில் புறா என்றிருக்க  காரணம்?

கூட்டத்திலே  "கோயில்" குருவி என்பதைவிட கூட்டத்திலே கோயில் புறா எனும்  தலைப்பு கொஞ்சம் பரீட்சயமானதாக இருக்கும் என்றெண்ணி வைத்தது, சும்மா இதுபோல கேள்வியெல்லாம் கேட்கப்படாது.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 
"கோயில்"பிள்ளை.

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் தங்களின் (கேள்வி கேட்கமாட்டோம்) கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

      நீக்கு
  2. கோயில் புறாவின் தலையீடு அருமை. இதனைத் தவிர்க்கமுடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகளும் அநேக நமஸ்காரங்களும் ஐயா.

      நீக்கு
  3. ஊழியர்கள் ரசிக்க... கவன சிதைவு ஆகி விட்டதே என நீங்கள் நினைப்பு சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பால்,

      வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள் .

      நீக்கு
  4. கொரானா காலத்தில குடுத்த கடனை எல்லாம் வசூலிக்க முடிகிறதா?
    சூப்பர் சார்.
    எங்கள் வங்கியில் ஒன்றும் செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
    அரசாங்கம் கூட கடன்களை மறு சீராய்வு restructuring செய்ய சொல்லிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த்,

      எல்லா கடனையும் வசூலிக்க முடியும், சில நேரங்களில் சில வாரா கடன்களும் உண்டு ஆனால் அதன் சதவிகிதம் மிகவும்குறைவே. வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு நன்மை என சொல்லுங்கள்.

      வருகைக்கு மிக்க நன்றிகள் அரவிந்த்.

      நீக்கு
  5. கடிகாரக்குருவிக்குத் தெரியுமா, தன்னைப் பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள் என்பது!  பாவம்...   (அட பாவத்த...!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், அந்த அப்பிராணிக்கு ஒன்னும் தெரியாதுதான் பாவம்.

      வருகைக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  6. தலைப்பு அழகான பாடல் தொடக்கம்..ஈர்த்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பை ரசித்தமைக்கு நன்றிகள் அன்பிற்கினிய அம்மையாரே.

      நீக்கு
  7. இந்தச் சூழலில் எப்படிக் கடனை வசூலிக்கிறீர்கள்? இங்கெல்லாம் கட்ட வேண்டாம் என்றும் சிலதுக்குச் சொல்லி இப்ப பல வங்கிகளும் கஷ்டப்படுகிறதாகச் சொல்லபப்டுகிறது.

    துளசிதரன்
    கீதா

    ஜூம் மீட்டிங்கில் அதாவது இணையதள மீட்டிங்கில் அது முக்கியம் இல்லையா அதுவும் அலுவலக சம்பந்தப்பட்ட மீட்டிங்க் என்றால்.

    கூட்டத்திலே கோயில் புறா என்று கோயில் + புறா இணைத்துச் சொன்னதை ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிரு தனியார் நிறுவனங்களை தவிர நாங்கள் தொடர்பில் இருக்கும் பெரும்பான்மையான நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவை என்பதால் கடன் வசூல் அத்தனை சிரமமில்லை.எனினும் சில நேரங்களில் சில disputes எழுவதால் வசூலிப்பது தாமதமாகும். அதேபோல சில தனியார் நிறுவனங்களின் மேலாண்மை வேறு புதிய நிறுவனத்தின் கைக்கு போகும் பட்சத்தில் நீண்ட இழுவைக்கு பிறகு வாரா கடன்களாகிப்போவதுண்டு எனினும் இவற்றின் விகிதாச்சாரம் மிக மிக குறைவே.

      கூட்டம்(மீட்டிங்)+கோயில் +புறா ரசித்தமை மகிழ்ச்சி.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பிற்குரிய நண்பர்களே.

      நீக்கு
  8. ரசிக்கும்படியான சூழல்! :) அந்த மாதிரி கடிகாரங்கள் முதலில் பிடித்தாலும் சமயங்களில் தொல்லையாகவே எனக்கு தோன்றும்.

    வாராக் கடன்கள் - எல்லா ஊரிலும் இந்தப் பிரச்சனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      இந்த குருவி சத்தம் எனக்கு மிகவும் பிடித்தஒன்று. காலையில் தோட்டத்தில் இருந்து குருவிகள் எழுப்பும் ஓசை எனக்கு பிடிக்கும். குறிப்பாக இந்த கடிகாரம் ஜெர்மனியில் கைகளால் (hand made) செய்யப்பட்டு ஸ்விட்சர்லாந்தில் இருந்து நேரடியாக வாங்கி , பத்திரமாக கொண்டுவந்து பயன்படுத்தப்படும் ஒன்று. சின்ன கடிகாரம்தான் அதிலும் அந்த குருவியும் மிக சிறியதே, எனினும் ஒவ்வொருமுறை வெளியில் வந்து சந்தம் எழுப்பும்போதும் அதன் அலகுகள் திறந்து திறந்து மூடுவது அதன் கூடுதல் சிறப்பு. தொழில் என்றாலே வாரா கடன்கள் இல்லாமலா?

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு