பின்பற்றுபவர்கள்

புதன், 29 ஜூலை, 2015

"தங்கமே! வைரமே!!"

 புள்ளி வச்சி படிக்கனும். !!

நண்பர்களே,

பொதுவாக, பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை கொஞ்சும்போது, முத்தே மணியே, தங்கமே , வைரமே என்று கொஞ்சுவதை கேட்டு இருப்போம்.
அதேபோல மனதிற்கு பிடித்தவர்களையும் கூட இதுபோன்று உயர்வு நவிற்சியோடு விளிப்பதையும் நாம் கேட்டிருப்போம்.

ஏன் இப்படிப்பட்ட  பொருட்களால் உருவகபடுத்தி அழைக்கின்றார்கள்?

ஏனென்றால், அவற்றின் மதிப்பும் அதற்கான செல்வாக்கும் சொல்லில் அடங்காது என்பாதால் தான்.

என் காதலி, என் காதலன், என் மனைவி, என் குழந்தை,....என் கணவன்....எனக்கு வேண்டியவர்கள் எல்லோரும் என்னை பொறுத்த வரையில் மதிப்புமிக்கவர்கள் என்பதன் வெளிப்பாடாகவே இப்படிப்பட்ட உயரிய மதிப்புமிக்க பொருட்களை உவமானபடுத்தி அழைக்கின்றார்கள்.  

அதனால்தான் விலை மதிக்க முடியாத பொருட்களின் முதல் வரிசையில் இருக்கும் "தங்கத்தை", "வைரத்தை" எல்லோரும் விரும்பி வாங்கவும் அணிந்துகொள்ளவும், வாங்கி அணிய முடியாதவர்கள்  அதற்காக ஏங்குவதும் நாம் கண்கூடாக பார்க்கும் ஒன்றுதான்.

கடைக்கு சென்று எந்த ஒரு பொருளை வாங்கும்போது கடைகாரர் சொல்லும் விலையை கேட்டவுடன் அல்லது அவர் காராராக துல்லியமாக ஒரு மில்லி கிராம் கூட அதிகமாக கொடுக்காதபடி எடைபோடும்போதும் , " என்ன கடைக்காரரே தங்கம் போல் விலை சொல்கின்றீர்கள், கொஞ்சம் கூடுதலாக சேர்த்துகொடுத்தால் என்ன , என்னமோ தங்கம்போல் எடைபோடுகின்றீரே கொஞ்சம் "கொசுறு" போட்டு கொடுங்க"? என கேட்பதையும் நாம் அவ்வப்போது கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். 

நாம் ஊரு ரேஷன் கடையில் எடை குறைத்து கொடுத்தாலும்  கேட்கமுடியாது என்பது வேறு கதை....  

ஆனால் சமீபத்தில் "இரண்டுக்கு பணம் கொடுத்து மூன்று வாங்கிகொள்ளலாம்" (Three for the price of Two) என்ற ஒரு விளம்பர பலகையை , துணி மணிகள்,  அழகு சாதனங்கள், மனை துணை பொருட்கள், தங்க, வைர நகைகள், மின் அணு சாதனங்கள், உலர்ந்த மற்றும் புதிய பழங்கள் , காய்கறிகள்,பதபடுத்தபட்ட உணவு வகைகள், மாமிசங்கள், மீன்கள் போன்ற மனிதனின் ஏறக்குறைய எல்லா தேவையான பொருட்களும் ஒரே கூரையின் கீழ்  விற்கப்படும் ஒரு பெரிய அங்காடியில் காண நேர்ந்தது.

இரண்டுக்கு பணம் கொடுத்து மூன்று வாங்கிக்கொள்ளலாம் என்ற விளம்பரம் மக்கள் கூட்டத்தை அலை மோத செய்தது. பின்னே இருக்காதா?

அதாவது, நீங்கள் மூன்று பொருட்களை தேர்ந்தெடுத்து அவற்றில் எந்தபொருளின் விலை மற்ற இரண்டு பொருட்களின் விலைகளைவிட குறைவாக இருக்கின்றதோ அந்த பொருளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுபோன்ற வாய்ப்பை பெரும்பாலும்  மக்கள் இழக்க விரும்ப மாட்டார்கள்.  "கடன உடன"  வாங்கியாவது "உடனே" வாங்கி விடுவார்களா?

இதில் நான் மட்டும் என்ன விதி விலக்கா?

ரொம்ப நாளாகவே தங்க அணிகலன்களை வாங்கி பணத்தை வீணாக்குவதை பார்க்கிலும் தங்க கட்டிகளாக வாங்கி பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று நண்பர்கள் அவ்வப்போது பேசிக்கொள்வது  நினைவில் வந்தது. சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத சில நினைவுகள்கூட சம்பந்தமே இல்லாத நேரங்களில் வருவதுண்டு.

நகைகளாக வாங்கினோம் என்றால் , கடைகாரர் அந்த டிசைனுக்காகவே அந்த நகையை அதிகம் விலைக்கு விற்பார்,அதிலும் சேதாரம், செய்கூலி, "லொட்டு லொசுக்கு", திரை, வரி, வட்டி, கிஸ்த்தி .....  என உலகில் உள்ள எல்லா கட்டணங்களையும் நம் தலையில் கட்டி ஒரு பெரும் தொகையை நம்மிடமிருந்து வாங்கிகொண்டு அந்த "பொன் நகையை" முலாம் பூசிய தன் "புன்னகையுடன்" கொடுப்பார்.

பின்னர் கொஞ்சம் நாளிலே  அந்த டிசைன்,  சலிப்பை ஏற்படுத்தும், பிறகு அதை கொடுத்துவிட்டு வேறு நகை வாங்க அதே கடைக்கோ அல்லது வேறு கடைக்கோ சென்றால், அப்போதும், பழைய நகை,பொடி வைத்துள்ளது, கல்லுக்கு மதிப்பில்லை, இது 916 இல்லை.... கேரட் சரி இல்லை...இன்றைக்கு இதன் மதிப்பு இவ்வளவுதான் என்று சொல்லி, அதிலும் இந்த கால்குலேட்டரில் உள்ள அனைத்து பட்டன்களையும் மின்னல் வேகத்தில் நமக்கு தலை சுற்றும் வரை   அழுத்தி அழுத்தி ..அவருடைய உண்மையான கேரக்டரை புடம்போட்டு காண்பிப்பார், கூடவே ஒரு சின்ன சீட்டில் எல்லா கணித குறிகளோடு கூடிய எண்களை எழுதி ஒரு புள்ளிபோட்டு(estimate) காட்டுவார்.  

கடைக்காரர் நம்மிடம் பொடி வைத்து பேசி அடி மாட்டு விலைக்கு பேரம் பேசுவார். அப்படியே அவரிடம் விற்று விட்டு  மாற்று நகை வாங்கும்போது மீண்டும் , டிசைன், செய்கூலி, சேதாரம், திரை, வரி, வட்டி, கிஸ்த்தி.........தொடரும்.

இதுபோன்ற பண விரயத்தை தடுக்கவும் நமது பணம் நல்ல வகையில் சேமிக்கபடவும், சிலர் நகைகளுக்கு பதில் தங்க கட்டிகளாக வாங்கி வைப்பதும் உண்டு. பின்னாளில் பையனுடைய படிப்புக்கோ அல்லது பெண்ணின் திருமண செலவுகளுக்கு உதவுமே என்று.   

Image result for pictures of gold coins

சரி, அது இருக்கட்டும் உங்க கதைய சொல்லுங்க.....

(மகேஷு... ஏம்ப்பா இவ்வளவு அவசர படுற....சொல்றேன்.....)

நானும், சரி இனிமேல் நகைக்கு பதிலாக இதுபோன்று வாங்கி வைக்கலாம் என்று பல வற்றை பார்த்து பலவிதமான யோசனைகளுக்கு பின்னர் ,20 கிராமில் ஒன்றும் 31 கிராமில்  ஒன்றும் 36 கிராமில் ஒன்றுமாக வாங்கிக்கொண்டு கடைசி இரண்டுக்கு பணம் கொடுத்துவிட்டு முதலாவதை இலவசமாக பெற்றுகொண்டு மகிழ்ச்சியோடு வீடு வந்தேன்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம்  வரும், மூன்று வாங்கினால் இரண்டுக்குமட்டும் பணம் கட்டினால் போதும் என்கின்றபோது, அதிக எடை உள்ளவைகளாக பார்த்து மூன்றையும் ஒரே எடையில் வாங்கி இருந்தால் லாபம் கூடுதலாக இருந்திருக்குமே என்று.

சரிதான், ஆனால் நான் போன நேரத்தில் இவை மூன்று மட்டுமே எஞ்சி இருந்தன ,மேலும்   இதுபோன்ற மாற்று எடைகளில் வாங்கினால் தேவையான போது  தேவையான அளவில் உள்ளதை மட்டும் பயன்படுத்தி தேவைக்கு மீறி வீணாக பணம் விரயமாகாமல் பார்த்துகொள்ளமுடியும்.

இப்போது இங்கே பலரும் தங்கள் தங்க மற்றும் வைர நகைகளை பீரோக்களில்வைத்து பூட்டுவதைவிட, பாதுகாப்பு கருதி பொருட்களின் தன்மைக்கேற்ப  வீட்டின் நடு ஹாலில் எல்லோரும் சகஜமாக புழங்கும் இடங்களான,மீன் தொட்டிகளிலோ அல்லது ப்ரிட்ஜ் , ப்ரீசர் போன்ற இடங்களிலோதான் யாருக்கும் சந்தேகம் வராதபடி  வைக்கின்றார்கள், இது கண்டிப்பாக வாங்கும் பொருட்களின் பாதுகாப்பை பலபடுத்துகின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

அதேபோல நானும் அந்த 20,31,36 கிராம்களை தனித்தனியாக  பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி ப்ரிட்ஜில் வைத்துவிட்டேன்.

அவற்றுக்கு நான் கொடுத்த விலை:

20 கிராம் = £199
31 கிராம்  =£199
36 கிராம் = £199

ஒரு பவுண்ட் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்த பட்சம்  100.00 என்பது நாம் அறிந்ததே. 

ஆமாம், அதெப்படிங்க மூன்றும் மூன்று வித்தியாசமான எடை உள்ளதை ஒரே மாதிரியான விலையில் வாங்க முடிந்தது.

அது வேற ஒன்னுமில்லைங்க, சாப்பிடும்போது தூக்கி எறியப்படும் பொருளாக இருந்தாலும் சமைக்கும்போது மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும், கருவேப்பிலையும், கொத்தமல்லியும், புதினாவும் தான் நான் இத்தனை நேரம் உங்களிடம் சொல்லிகொண்டிருந்தது.

வேற நான் என்ன துபாய் ஷேக்கா, அல்லது  ப்ருனல் சுல்தானா, தங்க கட்டிகளை வாங்கி பிரிட்ஜில் வைத்து   அழகு பார்க்க. 

மேலும் உங்களிடம் சொல்ல மறந்த விஷயம், மேலே உள்ள விலையில் புள்ளி வைக்கமறக்ககூடாது என்பதை உபதலைப்பில் சொல்லி இருக்கின்றேன் என்பதை சொல்ல மறந்துவிட்டேன் என்பதும் தான்.

கொஞ்சம் அந்த £199 என்பதை £1.99 என்று புள்ளிவைத்து வாசிக்கவும்.

என்னதான்  மூன்று வாங்கிக்கொண்டு இரண்டுக்கு பணம் கொடுத்தால் போதும் என்று இருந்தாலும் ஒரு 20 கிராம் கருவேப்பிலையின் விலை ஏறக்குறைய ரூபாய் 200.00 என்பது தங்கத்திற்கு நிகரான விலைதானே?  நீங்களே சொல்லுங்க.

இனி நம்ம வீட்டு பிள்ளைகளோடு சேர்த்து  இதுபோன்ற கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினாகளைகூட, " தங்கமே!", "வைரமே" என அழைப்பதுவும் எங்களைபோன்று தூர தேசத்து சாமான்ய மக்களுக்கு ஏற்றுக்கொள்ளகூடியவைத்தானே.

சரி பிறகு பார்க்கலாம்  பதிவுலக தங்கங்களே! வாசக வைரங்களே!!.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

  1. அப்படியில்ல சாமி.. தங்கமே வைரமேன்னு குழந்தைகளைக் கொஞ்சுவது 20,25 வயதில் ஒரு பெரிய திருடன்கிட்டயோ அல்லது ஒரு பெரிய திருடிகிட்டயோ பறிகொடுத்துட்டு 'ங்கே'..ன்னு முழி பிதுங்க வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கில்ல அதான்.

    ஒழுங்கா ஆரம்பத்திலேயே மண்ணாங்கட்டி, மரப்பிண்டம் னு உண்மையைச் சொல்லி கொஞ்சியிருந்தா இந்த நிலை வரதுன்றது தெரிய ஒரு 30, 40 வருசமாகுது..

    இப்ப தெரியுதோ.. இப்ப சொல்லுங்க.. நீங்க உங்க குழந்தைங்களை தங்கமே.. வைரமேன்னு கொஞ்சுவீங்களா..?

    ஆனாலும் கருவேப்பிலைப் பதிவா இருந்தாலும் கடைசிவரை மென்னு முழுங்கினேன்.

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திட்டுவதற்கு இத்தனை பதங்கள் இருக்க தங்கத்தையும் வைரத்தையும் ஏன் கேலி செய்ய வேண்டும் என்கிற உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி., என்னை சொல்ல வில்லை என்று நினைக்கிறேன்.

      கருவேப்பிலை உடம்புக்கு நல்லது என்பதால் முழுமையாக மென்று விழுங்கியமைக்கும் நன்றி.

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,

    தாங்கள் சொல்வது உண்மைதான்


    அதனால்தான் விலை மதிக்க முடியாத பொருட்களின் முதல் வரிசையில் இருக்கும் "தங்கத்தை", "வைரத்தை" எல்லோரும் விரும்பி வாங்கவும் அணிந்துகொள்ளவும், வாங்கி அணிய முடியாதவர்கள் அதற்காக ஏங்குவதும் நாம் கண்கூடாக பார்க்கும் ஒன்றுதான்.

    ஆனாலும் கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா என்ற வகையில் வரிசையில் தங்கம் வைரம் சரி மீதி மிச்சம் இருக்கே,,,,,,,,,,

    தங்கள் பதிவும் தங்கம் வைரம் தான்,

    அரசே,,,,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      நம்ம டி டி எனக்கு எதோ கொடுக்கணும் ஊருக்கு வாங்கன்னு சொல்லி இருக்கின்றார், எனவே இதோ புறபட்டுக்கொண்டே இருக்கிறேன்.
      கோ

      நீக்கு
  3. ஐய்யோ முடியல:-)
    ரொம்ப seriousஆ படிச்சிகிட்டு வந்தா...
    நோ... நோஓ.. நோஓஓஓஓஓ
    ##நேம் யூஸ் செய்தப்பவே சுதாரிச்சிருக்கனுமே!


    முதலும் கடைசியும்
    மொத்தத்தில் பதிவு எழுதிய விதம்
    எங்கலை மொக்க வாங்க வெச்ச விதம் எல்லாம் ஸூப்பர் சார்:-)
    ஹஹஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னப்பா மகேஷ், உனக்கு இதே வேலையாபோச்சி, எனக்கும்தான்.
      உஷாரா இருக்கணும். முதலும் கடைசியும்னு..... நீ .... சொல்லக்கூடாது.

      கோ

      நீக்கு
  4. தங்க அரசே...! வைர அரசே...! தாங்களுக்கு 'எதாவது ஒன்று' தர வேண்டும்... எப்போது இந்தியாவிற்கு வருவீர்கள்...?

    ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பால், எதுவா இருந்தாலும் பேச்சி பேச்சாகத்தான் இருக்கனும்.

      வந்துகொண்டிருக்கிறேன்.

      கோ

      நீக்கு
  5. அதேபோல நானும் அந்த 20,31,36 கிராம்களை தனித்தனியாக பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி ப்ரிட்ஜில் வைத்துவிட்டேன்.//

    இத வாசித்த உடனேயே கோவின் லொள்ளு புரிந்துவிட்டது! தங்கமில்ல என்று...

    அதுசரி...கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா எல்லாவற்றையும் அடித்துவிடும் கோல்ட், இவை இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் ஆனால் இது இல்லாமல் வாழ முடியாது என்ற கோல்ட்...."தண்ணீர்" தான்...அதைக் கூட இன்று நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல்...அதை என்ன சொல்லுவீர்கள்? எங்கள் தாத்தா சொல்லுவார் தண்ணீரைப் பார்த்துச் செலவு செய்யுங்கள். அது தங்கமாகும் நிலை அதிக நாட்களில்லை என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லொள்ளுவது யார்க்கும் எளிய; அரியவாம் லொள்ளுவதை எள்ளுவது(எள்ளி நகையாடுவது) அது உங்களுக்கு எளிதில் வசப்பட்டிருக்கின்றது.

      வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு