எட்டிப்பிடி --எப்படி?
நண்பர்களே,
வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்குண்டான சிமன்ட்டு, மணல், செங்கல், மர சாமான்கள், பலகைகள் மற்றும் பெயிண்ட் போன்ற பொருட்கள் வீட்டின் பின் பக்கம் அடுக்கி வைக்கபட்டிருந்தன்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை வேலை ஆட்களின் வருகையும் போகையுமாக இருந்த வீட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் அமைதி நிலவியது.
வேலைகள் செய்துகொண்டிருந்த வீட்டின் பின் புறம் நாளா பக்கங்களிலும் சிதறி இருந்த மர துண்டுகளையும் மற்ற சிதறல்களையும் ஒழுங்கு செய்யும் முகமாக அவற்றை ஒன்று திரட்டி ஒரு பக்கமாக போட்டு வைத்து இடத்தை சுத்தம் செய்ய சென்ற அம்மாவின் கண்ணில் ஒரு சதுர வடிவான கொஞ்சம் கனத்த மரத்துண்டு தென்பட்டது.
பார்க்க ஒரு அம்மிக்கல் போல தெரிந்த அந்த மர துண்டை சிரமப்பட்டு தூக்கி வந்து கழுவி சுத்தம் செய்து சமையல் அறையில் அம்மி உரலுக்கு அடுத்து வைத்து விட்டார்கள்.
ஏன் இங்கே இதை வைக்கின்றீர்கள் என கேட்டவர்களுக்கு, இது நல்லா கறி கிறி( கறி சரி அதென்ன கிறி?) வெட்ட சௌகரியமாக இருக்கும்.
கறிதான் கடைக்காரரே வெட்டி கொடுத்துவிடுவாரே பின்னே இது நமக்கெதற்கு?
இல்லை சில வேலை நம் வீட்டில் வைத்து வெட்டவேண்டுமானால் இதுபோன்ற ஒரு கட்டை இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையேல் நம் வீட்டில் உள்ள அந்த சிறிய மனைபோன்ற கட்டை யில் தான் வைத்து வெட்ட வேண்டி இருக்கும் அதுவும் இப்போ ரொம்ப பழசாயிடுச்சு.
ஒ ...சரி நல்லது.
முதல் போணியாக அன்றைக்கு மத்திய சாப்பாட்டிற்கான சமையல் கோழி குழம்பு.
பக்கத்து சந்தையில் இருந்து தாத்தா வாங்கிவந்த சேவலை தாத்தவே அதன் கழுத்தை வெட்டி(அப்போது சின்ன பசங்க பார்ர்க்ககூடாதாம்) சுடுதண்ணீரில் முக்கி எடுத்து அதன் முடிகளை களைந்து அம்மாவிடம் கொடுக்க அம்மாவும் அந்த கோழியின் உடம்பெல்லாம் மஞ்சள் தடவி அதை குளிர்ந்த தண்ணீரில் கழுவி, சமையல் அறையின் புதிய வரவான அந்த சதுர கட்டையின் மேல் வைத்து துண்டு துண்டுகளாக வெட்டுகையில் தாத்தா சொன்னார்,
பார்த்துமா, அந்த "பிச்சி" (பித்தப்பை) ய பக்குவமா பிச்சி எடுத்துடுமா இல்லனா அதன் திரவம் கறியில கலந்துடுச்சினா கறி முழுதும் கசப்பாயிடும்.
அம்மாவும் அந்த பிச்சி எனப்படும் கசப்பு திரவம் நிறைந்த அந்த பையை எந்த சேதாரமும் இல்லாமல் களைந்துவிட்டு கோழியை தேவையான அளவில் துண்டங்களாக வெட்டி, வேகவைத்துவிட்டார்.
பின்னர் இஞ்சி,பூண்டு, மிளகு, சீரகம், பட்டை ஏலக்காய், கிராம்பு,தக்காளி ,கருவேப்பிலை, தேங்காய் என ஒவ்வொன்றாக அம்மியில் வைத்து பக்குவமாக அரைத்தெடுத்த மசாலாக்களை கலந்து கமகம மனத்துடன் அடுப்பில் வெந்துகொண்டிருந்தது சந்தையில் சிந்துப்பாடிக்கொண்டிருந்த அந்த பொந்தகோழி.
எந்த சமையல் என்றாலும் சமைக்கும்போது ருசி பார்க்காமலேயே தகுந்த சுவையுடன் சமைப்பதில் நல்ல அனுபவம் மிக்கவர் அம்மா.
சமையல் முடிந்தது.
வீட்டு வேலைக்கான சில பொருட்களை வாங்க கடைக்கு சென்றிருந்த அப்பாவும் வந்து விட்டார்.
மத்தியம் சுமார் ஒரு மணியளவில் எல்லோரும் வரிசையாக தரையில் பாய்போட்டு அமர எல்லோருக்கும் வாழை இலை விரிக்கக் பட்டு (அப்பாவுக்கு வாழை இலையில் சாப்பிடவே பிடிக்கும் அதுவும் ஞாயிற்றுக்கிழமை மத்திய உணவை எல்லோரோடும் சேர்ந்து சாப்பிடும் போது வாழை இலையில் பரிமாறப்பட்டு சாப்பிடுவதையே அவர் விரும்புவார் (அதே பழக்கமும் விருப்பமும்தான் இன்றளவும் எனதும்)
முதலில் தயிர் பச்சடி, எண்ணெய் கத்தரிக்காய்,பின்னர் வேகவைத்த முட்டை தொடர்ந்து சாதம் பின்னர் கம கமக்கும் கோழி குருமா, எனக்கு கோழியைவிட குழம்புதான் ரொம்ப பிடிக்கும்.
அந்த காலத்தில் வீட்டில் செய்யும் இதுபோன்ற குழம்புகளின் வாசம் குறைந்தபட்சம் அந்த வீட்டின் முற்றத்தில் இருந்து பின்புற தோட்டம் வரையிலாவது மணம் வீசும், ஆனால் இந்த காலத்தில், சமைக்கப்படும் பாத்திரத்தை திறந்து அதில் தலையை நுழைத்து மூக்கை கொண்டு , டாக்டர்கள் சொல்வதுபோல், மூச்சை இழுத்து பிடித்தாலும் அதன் வாசம் அறிவது அவ்வளவு சுலபமாக முடிவதில்லை.
இப்போதும் கோழி குருமா ஆவி பறக்க பறக்க சுடுசாதத்தோடு- எண்ணெய் கத்தரிக்காயோடு இணைந்து சாப்பிடும்போது இடையிடையே அந்த புதினா துவையலையும் சேர்த்துக்கொண்டால் ..ஆஹா........
எண்ணம் முழுவதும் சாப்பாட்டு ருசியை மெல்லாமலே அசைபோட, வாயிலிருந்து ஜொள்ளு கொஞ்சம் எட்டிப்பார்க்க, கண்களும் அந்த குழம்பு பாத்திரத்தை எட்டிப்பார்க்க......
அப்பாவிற்கு அடுத்து உட்கார்ந்து இருந்த எனக்கும் என் தம்பிக்கும் முதலில் பரிமாறினாலும் அமர்ந்திருக்கும் எல்லோரின் இலைகளிலும் எல்லாமும் பரிமாறி முடித்தபிறகுதான் சாப்பாட்டில் கைவைக்கவேண்டும் என்றதொரு வழக்கம் எங்கள் வீட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்ததால்,அதுவரை பொறுமையாக நாவில் நீர்சொட்ட காத்திருந்தோம்.
இப்போது எல்லோர் இலைகளும் சாதம் , கோழிக்கறி குருமா, முட்டை, தயிர் பச்சடி,புதினா துவையல் அப்பளம் கொண்டு நிரப்பப்பட்டுவிட்டது,
முதலில் தாத்தா ஆரம்பிக்கட்டும் என்று அப்பா கொஞ்சம் நிதானித்தார். தாத்தாவோ சரி எல்லோரும் சாப்பிடுங்கள் என சொல்ல அவசர அவசரமாக முதலில் நான்தான் குழம்போடு பிணைந்த ஒரு பெரிய உருண்டை சாப்பாட்டை முதல் வாயை எடுத்து வாயில் திணித்தேன்.
வைத்த மாத்திரத்திலே நான் அப்படியே அந்த முழுவாய் சோற்றையும் என் இலையிலேயே துப்பிவிட்டு தண்ணீரை குடிக்க ஆரம்பித்தேன் எனினும் நாவில் இருந்த அந்த வித்தியாசமான சுவை மேலும் குமட்ட ஆரம்பிக்க காலையில் சாப்பிட்ட இட்டிலி சட்டினிகூட சட்டென வெளியில் வருவதுபோன்றநிலமை.
மற்றவர்களுக்கும் அதே நிலைமை,
பரிமாறிகொண்டிருந்த அம்மாவைத்தவிர சாப்பிட்ட அனைவருக்கும் இதே நிலைமை.
சாப்பாட்டில் விஷம் கலந்து விட்டதோ, விஷம் எங்கிருந்து வந்திருக்கும், ஒருவேளை சுவற்றில் ஊர்ந்து அவ்வப்போது சத்தம் எழுப்புமே, பேர் சொல்லக்கூடாதது அது ஒருவேளை சாப்பாட்டில் விழுந்து இருக்குமோ?
அப்பா சொன்னார் யாரும் சாப்பிடவேண்டாம் அப்படியே எழுந்திருங்கள்.
மாய்ந்து மாய்ந்து பல மணி நேர உழைப்பிற்கு பின் செய்து முடித்து ஆசை ஆசையாய் தன் குடும்பத்து மக்களுக்கு அன்போடு பரிமாறிய அம்மாவுக்கு கலக்கமும், திகிலும் பயமும் பதற்றமும் சூழ்ந்துகொள்ள செய்வதறியாது சிலையானார்.
தாத்தா சொன்னார் , நான் அப்பவே சொன்னேனே அந்த கோழிய வெட்டும்போது "பிச்சி"ய ஒழுங்கா பிச்சி எடுமானு, ஒருவேளை அந்த கசப்பு குழம்பில் கலந்து விட்டதோ என்னமோ?
சரி சரி அந்த குழம்பை அப்படியே குப்பையில் ஊற்றிவிட்டு, அந்த ரசத்தை எடுத்து ஊற்று என தாத்தா சொல்ல அதுவரை ரசத்தின் மீது கவனம் செலுத்தாதிருந்த அனைவரும் ஏமாற்றத்துடன், ரசம் சாதம் சாப்பிட வேண்டியதாயிற்று.
எனினும் அம்மாவின் குழப்பம் தீரவில்லை. கவனத்துடன்தானே கோழியை வெட்டினோம், கவனத்துடன் பாத்திரத்தை மூடிதானே சமைத்தோம், ஆரம்பம் முதல் சமையல் முடியும் வரை நான் கிட்டவே தானே இருந்தேன், அப்படி இருந்தும் குழம்பில் ஏதேனும் விழ எப்படி சாத்தியமாகும்?
ஆமாம் எப்பவும் சமைக்கிற மாதிரிதானே இன்றைக்கும் சமைத்தாய், புதிதாக ஏதேனும் சேர்த்தாயா?
அம்மாவும் தான் செய்த ஒவ்வொன்றாக் நினைவு படுத்தி பார்க்கின்றார்.
கவனக்குறைவால், குழம்பில் உருளைக்கிழங்குகளோடு, பாகற்காயையும் சேர்த்து போட்டு விட்டேனா ? இல்லையே.
பட்டை இலவங்கம் ஏலக்காயை அதிகம் சேர்த்து விட்டேனா? இல்லையே.
கோழி குழம்பிற்கு வெந்தயத்தையும் தெரியாமல் அரைத்து கலந்து விட்டேனா? இல்லையே.
மீண்டும் தான் செய்த , பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் இன்னும் ஒருமுறை தனது மனத்திரையில் நகர்த்தி பார்த்தவருக்கு, இன்று தான் புதிதாக சமையல் அறையில் பயன்படுத்திய அந்த புதிய கட்டை நினைவுக்கு வர சமையல் அறைக்கு ஓடிச்சென்று அந்த கட்டையை விரல் நகத்தால் கீறி நாக்கில் வைத்து பார்த்தவர் , பதறிவிட்டார்.
உடனே அதை தாத்தாவிடம் சொல்ல அவரும் அப்படியே தன் நகத்தால் கீறி சுவைத்து பார்த்து , அடடா..... இன்னாமா, (இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா?) இந்த கட்டையையா பயன்படுத்தி கோழிய வெட்டின?
என்ன பேசுகின்றனர் என நானும் என் தம்பியும் எட்டிப்பார்க்க , தாத்தா சொன்னார் இது "எட்டி" மர கட்டை அதில் வைத்து நீ கோழி வெட்டி இருக்கின்றாய் அதனால் தான் மொத்த குழம்பும் கசப்பாயிடுச்சு, இந்த மரம் அதிக கசப்பு தன்மை உடையது, ஆமாம் இது எப்படி நம் வீட்டுக்கு வந்தது.
அடுத்த நாள் வேலைக்கு வந்த ஆசாரியிடம் கேட்டதற்கு, மரம் வாங்க தொட்டிக்கு போனப்போ இத பார்த்து உட்கார்ந்து வேலை செய்ய சௌகரியமாக இருக்குமே என்று நான் தான் கொண்டு வந்தேன், ஏன் என்ன ஆச்சு?
நடந்ததை சொல்ல ஆசாரி சிரித்து விட்டார்.
எனக்கோ, கண்ணுக்கு எட்டியது, கைக்கு எட்டியது, வாய்க்கும் எட்டியது, வயிற்றுக்கும் எட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் இந்த எட்டி, ருசியை கெடுத்து நமக்கு எட்டிடாமல் செய்து விட்டதே என எண்ணி வருத்தமாக இருந்தது.
இது நடந்து பல வருடங்கள் ஆகி இருந்தாலும் இன்னமும் எங்கள் வீட்டில் "எட்டி" என்ற பெயர் யார் சொல்ல கேட்டாலும் அந்த கோழி குருமா நிகழ்ச்சிதான் எங்கள் நினைவுகளில் "எட்டி"ப்பார்க்கும்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
மொத பாதி பதிவு வாசிக்கும்போது, வாயிலிருந்து ஜொள்ளு வராததுதான் மிச்சம்...
பதிலளிநீக்குஅதுவும் காலையில் எழுந்ததும்... அவ்...
மர கட்டை தான் பிரச்சனைக்கு காரணம் யூகித்துவிட்டாலும்,
சமயல் செய்யும்போது சூட்டின் காரணமாக அதன் கசப்பு
போகாட்டி எவ்வளவு கசப்பு தன்மை உடையது புரிஞ்சிக்க முடியுது சார்.
நல்ல பதிவு.
மகேஷ், முதல்ல கொஞ்சம் வாயை துடையுங்கள் என் பதிவு முழுவதும் உங்க "ஜொள்ளு".
நீக்குஅதே போல பதிவை பாராட்டிய உங்கள் "சொல்"லும் அருமை.
எட்டி மிக மிக கசப்பானது என்று உணர்ந்திருக்கின்றேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
அடடா...! இப்படி ஆகி விட்டதே... இப்போது "எட்டி" மர கட்டை உட்கார பயன்படுகிறதா...?
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி தனப்பால். எந்த ஒருபொருளும் பயனற்றதல்ல. அவற்றின் தன்மை அறிந்து யார் எப்படி எதற்க்காக பயன்படுத்துகின்றோம் என்பதை பொறுத்தே அதன் பயன்பாடு விளங்கும்.
நீக்குகோ
எட்டி மர கரி கறிக்கு உதவாது போல இருக்கே...
பதிலளிநீக்குகறிக்கு உதவாது;
நீக்குவருகைக்கு மிக்க நன்றி நண்பா.
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குஎன்ன ஆனாலும் தன் குடும்பத்திற்கு பார்த்து பார்த்து செய்த உணவை சாப்பிட முடியாமல் போன நிகழ்வு எவ்வளவி வேதனை தந்து இருக்கும் அவர்களுக்கு,
ஆனா முதலில் வாய்க்குள் போட்ட அவசரம்,,,,, இல்ல ஆசை ,,,
தாங்கள் சமையல் குறிப்பு எழுதலாம் போல
இலையில் சாப்பாடு சூப்பர்,
வாருங்கள் வாழை இலைத் தயார்,,,,,,,,,,,
நன்றி.
வாழை இலை விரித்து வைத்து வருகைக்காக காத்திருப்பது குறித்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குசமையல் குறிப்பு கொடுக்கும் அளவிற்கு தெரியாவிட்டாலும் , பசிக்கு சாப்பிடும் வகையில் சமைக்க தெரியும்.
கோ
கோ,
நீக்குஒரு வெளை தங்களுக்கு நினைவில் இருந்து வந்தால் அப்ப என்று சோன்னேன்,
நன்றி.
நினைவில் இருக்கும் ஆனால் வருவேனா என்பது தெரியவில்லை.
நீக்குகோ
கோ,
பதிலளிநீக்குஎனக்கே ஒரு விருந்தை தவற விட்டதுபோல இருந்தது. அடட! என்ன ஒரு அருமையான பதிவு!
காரிகன்,
நீக்குவிருந்தை தவறவிட்ட வருத்தம் உங்களுக்கும் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கின்றது.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
கோ
அது சரி அப்ப இப்ப "எட்டி" அப்ப்டின்ற பெயரை கேட்டாலே எட்டிக் கூடப் பார்க்காம எட்ட நின்னுருவீங்க போல....!!
பதிலளிநீக்குவிவரணம் சூப்பர்
பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇப்ப பார்த்து ரொம்ப நாளாச்சு.
கோ