பின்பற்றுபவர்கள்

புதன், 15 ஜூலை, 2015

"என்ன அவசரம்?"

மடை திறக்கட்டும்!!

நண்பர்களே ,

இளங்கலை முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு என்று நினைக்கின்றேன்,

கல்லூரிக்கு பெரும்பாலான நாட்கள் சைக்கிளிலும் சில நாட்கள் மட்டும் பேருந்திலும் பயணம் செய்துவந்த சமயம்.

பள்ளிகூடத்தில் இருந்து ஒன்றாக படித்துவந்த நாங்கள் ஒரு 6 பேர்மட்டும் எப்போதும் ஒன்றாக செல்வதும் வருவதுமாக இருந்தோம்.

எங்கள் வீட்டை தாண்டித்தான் மற்றவர்கள்  செல்லவேண்டும், எங்கள் ஆறுபேர்களில் குடும்பங்களும் ஒன்றுக்கொன்று தெரிந்த குடும்பங்கள் என்றாலும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவுதான்.

இதில் குறிப்பாக சொல்லவேண்டுமானால், எங்களைவிட ஒரு வயது மூத்த நண்பர் , குடும்பத்தொழில் காரணமாக  பள்ளி படிப்பை தொடர்ந்து உடனே  கல்லூரிக்கு செல்லமுடியாமல், நாங்கள் சேர்ந்த அந்த வருடத்திலிருந்து எங்களோடு வர ஆரம்பித்தார். கணிதம் பயின்றவர் , கனிவானவர்.

அவரை பள்ளியிலேயே எங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும், மிகவும் பிடிக்கும்.

எங்களோடு வயதில் மூத்தவராக இருந்தாலும் எங்களோடு சரி சமமாக பழகுவார்.  நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லித்தான் அழைத்துக்கொள்வோம், அன்பும்  நட்பும் மிகுகின்ற வேளையில், வாடா போடா என்றுகூட அழைத்துக்கொள்வோம், சில நேரங்களில், "மாமா மச்சி" க்கள் கூட உண்டு.  

மத்திய உணவு வேளைகளில் நாங்கள் ஆறுபேரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதும் எங்கள் அன்றாட கல்லூரி வாழ்க்கையின் ஒரு அங்கம்.

நாங்கள் ஆறுபேரும் கல்லூரியின் வளாகத்தில், ஒரு குறிப்பிட்ட பள்ளியின்  மாணவர்கள் என்பது எல்லோராலும் அறியப்பட்ட செய்தி, பள்ளியின் பெயரை முடிந்தவரை காப்பாற்றினோம்  என்று சொன்னாலும் அதில் பிழை இல்லை.

இப்படியான ஒருநாள் என் சக நண்பர்களுள் நானும் அவரையும் தவிர மற்ற நால்வரும் சைக்கிள் அட்வென்ச்சராக, பெங்களூர்வரை 400 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள  வெள்ளிக்கிழமை காலையிலேயே சென்றுவிட்டனர்.

மாலை வகுப்புகள் முடித்து வீட்டிற்கு செல்ல எஞ்சி இருந்தவர் நாங்கள் இருவர் மட்டுமே.

பயணம் சென்ற நண்பர்களை குறித்து பேசிக்கொண்டே சைக்கிளில் வந்துகொண்டிருந்தோம்.

அப்படி வருகின்ற வழியில் ஒரு "அமரர்" ஊர்வலம் எங்களுக்கு எதிரில் வந்துகொண்டிருந்ததை பார்த்த நாங்கள் இருவரும் சைக்கிளை விட்டு இறங்கி அந்த ஊர்வலம் எங்களை கடக்கும் வரை நின்றுவிட்டு மறுபடியும் பயணத்தை தொடர்ந்தோம்.

இப்போது பேச்சு வேறு  பாதையில் பயணித்தது.பேச்சினிடையே, நண்பரிடம் நான் ,என்னுடைய இறுதி ஊர்வலத்தை எப்படி நடத்தவேண்டும் என்று அன்றைய சூழ்நிலையிலும்  அன்றிருந்த அறிவின்அளவின் அடிப்படியிலும் சற்று முன் பார்த்த ஊர்வலத்தின் பாதிப்புகளின் விளைவாகவும் சில பல விஷயங்களை அவரிடம் சொன்னேன்.

மேலும் இது குறித்து நான் வேறு யாரிடமும் சொல்லபோவதில்லை, நீயும் நம் நண்பர்கள் மற்றும் நம் வீட்டார் எவரிடத்திலும் சொல்லவேண்டாம், அதே சமயத்தில் நான் சொல்லிய இந்த விஷயத்தை நீ எனக்காக "அந்த நாளில்" என் உறவினர்களோடு கலந்து   நிறைவேற்றவேண்டும் என நான் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு சொல்ல சொல்ல எனக்கு இடது பக்கமாக சைக்கிளில் வந்துகொண்டிருந்தவர், அவரது வலது கையை சைக்கிள் ஹான்ட் பாரில் இருந்த என் இடது கைமேல் வைத்து , " இப்போ எதுக்கு அதபத்தி பேசணும்" என்றார்.

நானோ , அதென்னமோ உன்கிட்ட சொல்லனும்னு தோணுச்சி அதான் என்றேன்"

"சரி சரி அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம்", என்று சொல்லி பேச்சை மீண்டும் பெங்களூரு சென்றிருக்கும் நண்பர்கள் பக்கமாக திசை திருப்பினார்.

நண்பர்களே,

காலம் வேகமாக சுழல, நாங்கள் ஆளாளுக்கு ஒரு மூலையில் வேலைக்கு அமர்ந்தோம்.

பள்ளிக்காலம் தொட்டு ஒன்றாக இருந்த எங்கள் கும்பலில் முதலில் வெளி நாடு செல்லும் வாய்ப்பை பெற்றவன் என்கின்ற வகையில் மற்றவர்களை விட்டு வெகுதூரம் சென்று விட்டாலும், விடுமுறையில் வரும் ஒவ்வொரு முறையும் அனைவரையும் பார்த்து நலம் விசாரிப்பது வழக்கமாயிருந்தது.

அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவருக்கு நான் எழுதிய கடிதத்தில், இவரை குறித்து சில வரிகளை எழுதி அவருக்கு என் அன்பை சொல்லவும் என எழுதி இருந்தேன், பின்னாளில் அப்படி நான் எழுதிய சில கடித படிவங்களையும் என்னுடைய சில கவிதை படிவங்களையும் தொகுத்து அதே நண்பர்கள் அதை ஒரு புத்தகமாக வெளி இட்டு என்னை மகிழ்கடலில்  ஆழ்த்தியிருந்த அந்த புத்தகத்தில் அவரை பற்றிய சிறு குறிப்பு:

"அதிகம் பேச மாட்டார்
அதிர்ந்தும் பேச மாட்டார்
பசுவைக்காட்டிலும்  
படு சாதுவானவர். 

நட்பிற்கு நல் இலக்கணம்
இருந்ததில்லை என்றும்
தலைக்கனம்.

கடை வைத்து தம்மை
கரை ஏற்றிக்கொண்டவர்
அடைத்து வைக்க முடியாது - யாம்
அவர்பால் கொண்ட அன்புதனை.

அவருக்கென்  வாழ்த்துக்கள்
அவசியம் சொல்லி விடுங்கள்"

அந்த நிகழ்ச்சியை சிரமேற்கொண்டு செயல் வடிவம் கொடுத்தவர்களில் வரும் ஒருவர்.

தன்னை பற்றி இப்படி தன்னோடு இருக்கும் ஒரு நண்பன் எழுதி அதுவும் புத்தகமாக வெளி இட்டதை எண்ணி அவர் மகிழ்ந்ததை எல்லோரும் உணர்ந்தோம்.

காலம் மீண்டும் வேகமாக சுழல, நாங்களும் அந்த காலத்தோடு உழல பல வருடங்கள் கழித்து கடல் தாண்டி வந்ததந்த  "கருந்தேள்  கொடுக்கு" செய்தி..  

ஆம் நண்பர்களே அது அவரின் மரண செய்தி.

"கடல் கடந்து வாழும் எந்தன் 
காதுகளில் அந்த கருப்புச்செய்தி
குடம் நிறைய திராவகத்தை
கொட்டினாற்போல் எட்டியதும்
என் உடல் மட்டுமே வெளி நாட்டில் - முழு 
உள்ளமும் என் நண்பனின் கால்மாட்டில்"

செய்தி அறிந்து துடிக்கும் என் இதயத்தில் நான் அவரோடு பல வருடங்களுக்கு முன் பேசிய பேச்சுக்கள் துடிப்பிநூடே துடுப்புபோட்டு  அந்த பழைய நாட்களுக்குள் பயணித்தது.

எல்லாம் முடிந்தது!!!, "என் அன்பு நண்பனே உன்னிடம் நான் சொல்லி வைத்திருந்த  என் விருப்பத்தை யார் நிறைவேற்றுவார்?"

"இன்னும் கொஞ்ச காலம்  இருந்தாதான் என்ன?  என்ன அவசரம்?"

இன்றுவரை என் மற்ற நண்பர்களுக்கு என் விருப்பம் என்னவென்று என் மூலமோ அல்லது அந்த நண்பர் மூலமோ  தெரியாவிட்டாலும் நான் அந்த நண்பனிடம் எதை பற்றி சொல்லிவைத்திருந்தேன் என்பது தெரிந்திருந்ததே  தவிர முழு  விவரங்கள் தெரியாது, இனி அதைபற்றி யாரிடமும் நான் சொல்லபோவதுமில்லை.

என் நண்பன் என் ஆசையை நிறைவேற்ற மனதின்றி எனக்கு முன்னால் .........

எனினும் என் நண்பன் வாழ்ந்த காலத்தில் அவரை குறித்த என் மகிழ்வை அவர் செவிகள் கேட்கவும் அவரின் கண்களும் பார்க்கும் பொருட்டும் புதினத்தில் பதித்து வைத்ததை எண்ணி என் மனம் கொஞ்சமேனும் அமைதி கொள்கிறது.

நண்பர்களே,

யாரையாவது பாராட்ட அல்லது  யாருடனான அன்பை பகிர்ந்துகொள்ள - வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் காலம் தாழ்த்த வேண்டாம்.

சிலரது நட்பு "கூடா" நட்பாகிபோவதுவும் உண்டு, அதாவது "கை கூடாத" நட்பாக போவதை சொல்கிறேன். ஒருவேளை கை கூடி வந்திருக்கும் நட்பின் மனதை  "பொன்"னாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கூடுமானவரையில் "புண்"ணாக்காமல் பார்த்துக்கொள்வோம்.  

அன்பை அடைத்து வைக்க உள்ளம் ஒன்றும் அடகு கடையல்ல, மடை திறப்போம்,மனம் திறப்போம், நண்பர்களின் நடப்பை வாழும்போதே கொண்டாடுவோம்.

இன்று என் நினைவில் நிழலாடிய என் அன்பு நண்பனுக்கு இந்த பதிவு கசியும் கண்களோடு அஞ்சலியாகிறது.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி தனப்பால்.

   நானும்தான்.

   கோ

   நீக்கு
 2. வணக்கம் அரசே,
  நண்பர்களின் நடப்பை வாழும்போதே கொண்டாடுவோம்.
  நல்லது,,,,,,
  நாங்களும் அஞ்சலியில்,,,,,,,,,,,
  மனம் கனக்கும் பதிவு,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு மிக்க நன்றி.

  மனம் கனக்கத்தான் செய்கிறது.

  உங்களின் அஞ்சலிக்கும் நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு