பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 14 ஜூலை, 2015

"காலை ஜப்பானில் காபி"

பில்டர் பண்ணி குடிங்கோ.. 


நண்பர்களே,

அமரர் திரு கே பாலச்சந்தர் கைவண்ணத்தில் உருவான திரை காவியம், "நினைத்தாலே இனிக்கும்".


இதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.

அந்த படங்களில் வரும் பாடல்கள் அத்தனையும் இனிமையானவை, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை.

அவற்றுள் ஒன்றுதான்,, இப்பதிவின் தலைப்பை நினைவுபடுத்தும் "எங்கேயும் எப்போதும்...." என ஆரம்பிக்கும் அந்த பாட்டு.

கதைப்படி, கதா நாயகன் தமது சகாக்களோடு ஊர் ஊராக சென்று இசை கச்சேரி நடத்துவதாகவும் ,அவர்களுக்கு இருந்த வரவேற்பு மிக அபாரம் என்பதாலும் ஓய்வு எடுக்க கூட நேரமின்றி, உள்ளூர் மட்டுமன்றி பல வெளி நாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு இசை கச்சேரி நடத்துவதாக அமைய பெற்ற கதை படி அவர்கள் காலையில் தமது சிற்றுண்டியை ஜப்பானில் முடித்துக்கொண்டு, இசை நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு

அன்றே மறுபடியும் விமானம் பிடித்து மாலைக்குள் நியூ யார்க் நகரம் சென்று இசை கச்சேரி முடித்துவிட்டு அங்கே சிற்றுண்டி அருந்திவிட்டு, அடுத்த விமானத்தில், தாய் லாந்து சென்று இரவு கச்சேரி, அதாங்க பாட்டுக்கச்சேரி முடித்துவிட்டு, இரவு அங்கேயே சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அடுத்த பயணத்திற்கு தயாராவது போன்று அவர்களின் ஓய்வு இல்லா பயணத்தை சுட்டிக்காட்டுவது போலவும்

 அதே சமயத்தில் உலகம் என்பது மிகவும் சுருங்கி நமது உள்ளங்கையில் அடங்கி விட்டது; யாரும் எப்போதும் எங்கேயும் மிக விரைவில் சென்று வரலாம் என்கின்ற ஒரு தொலை நோக்கு பார்வையை தமது கற்பனையோடு கலந்து அந்த பாட்டில் சொல்லி இருப்பார் கவிஞர்.

அன்று அந்த பாடலின் வரிகளும் இந்த பாடல் சம்பந்தமான  படத்தின் காட்சிகளும் , எனக்கு மிகவும் சாத்தியமில்லாத ஒன்றாக பல நாட்கள் கருதிகொண்டிருந்தேன். (சின்ன -பச்ச புள்ள பின்ன எப்படி நினைக்கும்...?)

கொஞ்சம் வளர்ந்தபிறகும் (அதாவது ஆளு வளர்ந்தபிறகுதான் நீங்க அறிவு வளர்ந்தபின்னாலன்னு தப்பா நினைக்காதீங்க...)

அந்த பாடலில் குறிப்பிடபட்டிருக்கும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மூலையில் இருக்கின்றன, அதுவும் ஒவ்வொரு நாட்டுக்கும் நேர வித்தியாசங்கள்வேறு இருக்கின்றன, அப்படி இருக்கும்போது , காலையில் ஜப்பானில் காபி குடித்துவிட்டு அங்கிருந்து 10,844 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நியூயார்க் சென்று மாலை கச்சேரியும் மாலை உணவும்  அருந்துவது  எப்படி சாத்தியமாகும்.  

அதுவும் ஜப்பானில் திங்கட்கிழமை காலை  ஆறு மணி என்றால்  நியூ யார்க்கில்  இன்னும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிதானே, அமெரிக்க நேரம் சுமார் 13 மணிநேரம் ஜப்பானைவிட பின் தங்கி அல்லவா பயணிக்கின்றது?

அப்படியானால் நீங்களே கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வருகின்றதா என்று? இதில் பயண நேரம் வேறு 13.5 மணி நேரம்.

இந்த ரெண்டு ஊருக்குமே இத்தனை விழி பிதுங்கும் நேர வித்தியாசங்கள் என்றால் அந்த பாட்டில் நியூ யார்க்கில் இருந்து தாய்லாந்தை  கணக்கில் எடுத்துகொண்டால் , நியூ யார்க்கில் திங்கள் மாலை 3.00 மணி என்றால் தாய்லாந்தில் செவ்வாய்க்கிழமை விடியற்காலை 2.00 மணி.

இப்படித்தான் நமது சிற்றறிவிற்கு ஏற்ப கணக்கு போட்டு இதில் ஒன்றுமே சாத்தியமாகாது  என்று கடந்த வாரம் வரை நினைத்திருந்தேன்.

ஆனால் என் நினைப்பில் ஒரு பெரிய, ஆளில்லாத விமானம் விழுந்து  என் கணக்கை தவறென்று நிறுபித்தது.

கடந்த புதன் கிழமை, காலையில் 8.00 மணிக்கு "லண்டன்" ஹீத்ரூ விமான நிலையத்தில் ஒரு காபி குடித்துவிட்டு பயணத்தை துவங்கினேன்.

சுமார் ஒரு பதினோரு மணியளவில் "பாரீசின்" பிரத்தியேக உணவான "கிரசாண்டும்" ஒரு கிரீன் டீயும். லண்டனில் இருந்து பாரீசு 1.00 மணி நேரம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே சமயத்தில் பாரீசு லண்டனை விட ஒரு மணிநேரம் முன்னதாக பயணிக்கும் கால நேரம் கொண்டது. லண்டனில் மணி 9.00 என்றால் பாரீசில் மணி 10.00.  

அங்கிருந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் "இத்தாலியின்" பிரமாண்டமான உணவு விடுதியில்  பீசாவும் சாலடும். பாரீசில் இருந்து இத்தாலிக்கு இரண்டு மணி நேரம் தான்.  

அப்படியே ஆங்கில  நாளிதழ் வாசித்துகொண்டிருக்கையில்  இல்லை இல்லை சும்மா படம் பார்த்துக்கொண்டிருக்கையில், (நமக்கு படிக்கிறதைவிட படம் பார்க்கவே பிடிக்கும்) நேரம் போனதே தெரியவில்லை அங்கே..... , பயணிகள் கவனத்திற்கு"  இன்னும் சிறிது நேரத்தில்...........என்று பலதரப்பட்ட கடைசி நேர பயணிகளுக்கான அழைப்பு சத்தம்கள்.

இப்போது விமான நிலையம் விட்டு வெளியில் வந்தேன், ஆகா,  சென்னை விமான நிலைய வாசலில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா அசல் நெய் இனிப்பு, பாதுஷா.. எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு.

இன்னும் சாப்பிடவில்லை. 

அங்கிருந்து காரில் ஒரு இரண்டு மணி நேர பயணம்.

பயணத்தில் பசிக்குமே சரி வேலூர் டி வி பி பேக்கரியின் கிரீம் பண்ணும் கொஞ்சம் சால்ட் பிஸ்கட்டும்.

சாப்பிட்டு முடிக்கையில் மணி மாலை 4.00

அதற்குபிறகு சுமார் 6.00 மணியளவில் "சைனா"வின் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில்  வாங்கிய ஒரு  ஜாஸ்மின் டீயும் கொஞ்சம் பிஸ்கட்டும்.

இரவு 8.00 மணிக்கு மீண்டும் பசி ..பயண களைப்பு வேறு.  

பயணம் நல்லபடியாக முடிந்து தங்கும் இடம் அடைந்ததும் , முதலில் பெரிய கண்ணாடி பாத்திரத்தில் பிளாஸ்டிக் மூடி போட்டு இறுக்கமாக கட்டி வைக்கபட்டிருந்த ஆம்பூர்  மட்டன் பிரியாணி.

சூடு  கொஞ்சம் குறைவாக இருந்ததினால் அதை சூடு செய்து , மனம் குணம், மாறாத அதே சுவையுடன் நல்லதொரு சாப்பாடு.

இரவு கண்டிப்பாக ஓய்வுதேவை இருந்தாலும் பழம் ஏதேனும் இருந்தால் நன்றாக  இருக்குமே?

அங்கிருந்து "ருமேனியா"    மாம்பழங்கள்  , அப்படியே நம்ம ஊரு மல்கோவா,காலாபேடு  போன்று இருந்த மற்றவற்றையும் எடுத்துகொண்டு இதற்குமேல் தாங்காது.. என்று எண்ணி மேற்சொன்ன உணவுகளில் பலவற்றை உண்டு உறங்கபோனேன்.

இப்படி ஒரே நாளில் லண்டன்,பாரீசு,இத்தாலி , சைனா,இந்தியா, ருமேனியா...போன்ற நாடுகளின் உணவினை நம்மால் சுவைக்க முடிந்தது என்றால், அந்த பாட்டில் வரும் கற்பனையும் நிஜமாக வாய்ப்புகள் இல்லாமலா போகும்?

சரி இவை அத்தனயும் எப்படிங்க ஒரே நாளில் .....

அது வேற ஒன்னும் இல்லைங்க.

Image result for pictures of croissant

croissant

லண்டன் ஹீத்ரூல காபி குடிச்சிட்டு, லீவ்ல இந்தியாவுக்கு  ஊருக்கு போனவங்கள வரவேற்க காத்திருந்த நேரத்தில, காலையில் வீட்டில் எதுவும் சாப்பிடாததால் விமான நிலையத்தின் உள்ளேயே இருந்த பிரஞ்சு கடையில் அவர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான "கிரசாண்ட்" ம் ஒரு கிரீன் டீயும் குடித்தேன். பிறகு அங்கேயே இருந்த ஒரு இத்தாலியன் ரெஸ்டாரண்டில் ஒரு பீசாவ வாங்கி தின்று விட்டு. கொஞ்சம் நேரம் பேப்பர் படிச்சினு இருந்தேன்.

பிறகு சென்னையில் இருந்து   வந்த நமக்கு வேண்டியவங்களோடு  ஒரு ரெண்டு மணி நேர கார் பயணத்தின் போது வேலூர் டி வி பி பேக்கரில இருந்து வாங்கிவந்த கிரீம் பண்ணும் சால்ட் பிஸ்கட்டும் சாப்பிட்டதையும், பிறகு, போன முறை சைனா போய்(உண்மையா போனதுதான்) இருந்தபோது அங்கிருந்து வாங்கிவந்த ஜாஸ்மின் டீயையும், பிரத்தியேகமாக கைபடாமல் ஆறவைத்து பெரிய கண்ணாடி பாத்திரத்தில் போட்டு காற்று புகாமல்பிளாஸ்டிக் மூடிபோட்டு அடைத்து ப்ரீசரில் பலமணிநேரம் வைத்து பின்னர் பெட்டியில் வைத்து எடுத்து வந்த மட்டன் பிரியாணியையும், 

சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பு கடையில் இருந்து வாங்கி வந்த பாதுஷாவையும்,சேலத்திலிருந்து வாங்கி வந்த ருமேனியா, மல்கோவா மாம்பழங்களையும், (கூடவே கொஞ்சம் பலா பழமும் தான்)  எந்த விமான பயணமும் மேற்கொள்ளாமல் இங்கிலாந்தில் இருந்தபடியே சாப்பிட்டு ஏப்பம் விட்ட கதையைத்தான் இம்ம்ம்ம்ம்மா........நேரம் சொல்லிக்கினு   இருந்தேன்.

சரிங்க  வாங்கி வந்த சீடை முறுக்கு, கடலை  பர்பி, பால்கோவா,நேந்திரம் சிப்ஸ்,கமர்கட்டு,எல்லாம் இன்னமும் பாக்கட் பிரிக்கபடாமலே இருக்கு, அவற்றை எடுத்து அடுக்கி வைக்கனும்.

வரட்டுங்களா?

(இந்தியாவில் செய்து ஏறக்குறைய 24 மணிநேரம் கழித்தும் கெட்டுப்போகாமல் அதே சுவை மனம் ருசியோடு லண்டன் கொண்டு வந்து, ஏர்போர்ட்டில் இருக்கும் காவல் மோப்ப நாய்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு எப்படி வீட்டிற்கு கொண்டுவருவது என்று யாருக்காவது ட்யூஷன் வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள், ஆலோசனை இலவசம்.)


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

 1. ட்யூஷன் சென்டரே ஆரம்பிக்கலாம் போலிருக்கே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தனப்பால். வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 2. வணக்கம் அரசே,
  அப்பாடா எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே,
  சாப்பிட்டு நல்லா தூங்க இப்படி ஒரு பதிவா,,,,,,,
  அது சரி உலகம் சுற்றும் வாலிபர்,,,,,,,, இல்ல இல்ல தாத்தா,,,,,
  எங்க மோடிக்கு நீங்க டாடி போல,,,,,,,,,,
  அது என்ன இன்றைக்கு இத்தனைப் பதிவு ஒரே நாளில்,,,,,,,,
  தமிழ் மணத்தில் மனநிறைவு பார்த்தேன்,
  ஏன் ஏதனும் போட்டியில் பங்குகொண்டுள்ளீரா????
  ஏதேனும் பெட்டிக்கடை வைக்கும் திட்டமா?
  இல்ல ,,,,,,,
  சீடை முறுக்கு, கடலை பர்பி, பால்கோவா,நேந்திரம் சிப்ஸ்,கமர்கட்டு,எல்லாம் இன்னமும் பாக்கட் பிரிக்கபடாமலே இருக்கு, அவற்றை எடுத்து அடுக்கி வைக்கனும்.
  என்றதனால்,,,,,,,,,,
  ட்யூஷனுக்கு வந்தவங்கல பாருங்க,
  நன்றி.

  பதிலளிநீக்கு