பின்பற்றுபவர்கள்

வியாழன், 10 டிசம்பர், 2015

சிம்பு போய் விஜய் வந்த கதை.



ஒன்னுபோனா இன்னொன்னு

நண்பர்களே ,

பொதுவாக நான் சினிமா பற்றியோ நடிகர் நடிகைகளை பற்றியோ விமரிசனங்களை எழுத விரும்பாதவன்.

இதுவரையில் ஒரே ஒரு முறை மட்டுமே "டார்லிங்" திரைப்படத்தில் கதா நாயகனாக காட்சி படுத்தப்பட்ட ஜி வீ பிரகாஷ் எனும் பிள்ளையாண்டானின் இசை ஞானத்தை வியந்த எனக்கு, அந்த படத்தில் அவர் நடிக்காமல் வெறுமனே வந்துபோனதை பார்த்து நொந்துபோனதால், அவருக்கு கொஞ்சம் அறிவுரையாக ஒரு சில வார்த்தைகளை எழுத வேண்டி இருந்தது.

அது தவிர வேறு எந்த  நடிகர் நடிகைகளையும் நான்  , அவர்கள் குறைவாக நடித்தாலும், குறையே இல்லாதது போல் நடித்தாலும் இனி அவர்களை குறையேதும் சொல்ல கூடாது எனும் மன உறுதியுடன் இருக்கும் நான் இன்றைய பதிவில் இந்த மாபெரும்(!!??) இரு நடிகர்களை தலைப்பு படுத்தும் அவசியம் என்ன வந்தது?

அதை பிறகு சொல்கிறேன்.

அதற்குமுன், என்னுடைய முந்தைய  "பாவம் போக்கும் ஆங்கில மருந்து" பதிவின் இறுதியில் , அந்த ஆங்கில மருந்து என் பாவத்தை போக்கியதா என்பதை பிறகு சொல்கிறேன் என உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தேன்.

உங்களுக்கு நினைவில்லை என்றாலும், வாக்கு மாறகூடாது என்பதால்  பிறகு சொல்கிறேன் என்று "ஒரு முறை முடிவெடுத்துவிட்டபிறகு என் பேச்சை நானே கேட்க்க மாட்டேன்" எனும் கொள்கை  பிடிப்பு உள்ளவன் என்பதாலும் இங்கே கண்டிப்பாக அந்த தொடர் நிகழ்வை உங்களுக்கு சொல்வது என் கடமையாக கருதுகிறேன்.

சரி, அந்த பதிவு எழுதி பல வாரங்கள் ஆகிட்டது, இவ்வளவு கால தாமதமாக சொல்கின்றீர்களே என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது, இருந்தாலும், "யார் முதல்ல சொல்றாங்க என்பது முக்கியமல்ல; முக்கியமானதை  யார் முதல்ல சொல்றாங்க என்பதுதான் முக்கியம்".(என்ன புரிஞ்சதோ??)

அந்த வரிசையில் என்னுடைய பிரச்சினைகளை  குறித்து எழுதுவதை விட வேறு பல நல்ல விஷயங்களை எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு கொஞ்சம் தாமதமாகி விட்டது, அவ்வளவுதான்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

மருத்துவரிடம், சென்று , பல சில்லு(tablets) மருந்துகள், சொட்டு மருந்துகள் போட்டும் காது வலி குணமாகவில்லை என்றதும் , காதுக்குள் ஊடுருவி பார்க்கும் கருவியே கொஞ்சம் திக்கு முக்காட எப்படியோ ஒருவழியாக - யூகத்தின் அடிப்படையில் , அசப்பில் எங்க ஆன்ட்டி போலவே காட்சி அளித்த அந்த மருத்துவ பெண்மணி எனக்கு பரிந்துரை செய்து எழுதி கொடுத்த ஆன்ட்டி பயாடிக் மருந்துதான்  " எறி-த்ரோ -மை -சின்" (ERYTHROMYCIN). 

இந்த மாத்திரை எனக்கு ஏற்புடையது தானா, இந்த "பச்ச புள்ளைக்கு" இந்த சிகப்பு மாத்திரைகளின் வீரியத்தை தாங்கும் உடல் வலிமையையும் மன வலிமையையும் இருக்குமா என்று கூட யோசிக்காமல் ஒரு வேளைக்கு இரண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் என்று இரண்டு வாரங்களுக்கு மொத்தமாக 84 மாத்திரைகளை எழுதி கொடுத்துவிட்டார்.

மருத்துவர் சொன்னபடியே மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டு வந்த எனக்கு, இரண்டாவது நாளே காது வலியுடன் வயிற்று வலியும், நெஞ்சு எரிச்சலும், தலை வலியும், வந்ததோடு, வாந்தி வருவதுபோன்று ஆரம்பித்து பிறகு  நிலைமை மோசமாகிப்போனது.

தாங்க முடியாதபடி அடி வயிற்றிலும் எனது மார்பு பகுதியிலும் பயங்கரமான வலி ஆட்கொண்டது.

இடையிடையே, மூச்சி விடகூட கஷ்ட்டபடவேண்டி இருந்ததால், அவசர கால மருத்துவ உதவியை நாட வேண்டி இருந்தது.

தொலைபேசியில் தொடர்பில் வந்த மருத்துவர் மாறி மாறி கேட்ட பல கேள்விகளுக்கு அடி வயிற்றை பிடித்துக்கொண்டும் கட்டிலில் படுத்து உருண்ட வண்ணம் பதிலளித்தேன்.

என் நிலைமையை புரிந்து கொண்ட மருத்துவர் என்னை இன்னும் பத்து நிமிடங்களில், உடனடியாக, மருத்துவ மனை அவசர பிரிவிற்கு வரும்படி கட்டளை இட்டார்.

அப்போது இரவு சுமார் 11.00 மணி இருக்கும்.

அந்த நேரத்தில் என்னால் கார் ஒட்டிக்கொண்டு வர முடியாது அதே சமயத்தில் இங்கே  வீட்டில் இருக்கும் சூழ் நிலையில் என்னை மருத்துவ மனை அழைத்து செல்லவும் எவரும் இல்லை என என் நிலைமையை சொன்ன பிறகு, ஆம்புலன்சை அனுப்ப ஏற்பாடு செய்வதாக என்னிடம் பேசிக்கொண்டே, வேறொரு தொடர்பில் ஆம்புலன்சையும் ஒழுங்கு செய்து விட்டு , ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கின்றது, கவலை படவேண்டாம் என அவர் பேசிகொண்டிருந்த தருணத்திலேயே, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.

வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள்.

அவர்களிடம் என்  முன் கதை சுருக்கத்தை விவரமாக சொல்ல சொல்ல, அவர்கள் என்னுடைய  உடல் சூடு, இதய துடிப்பு போன்றவற்றை பரிசோதித்துவிட்டு , காது வலிக்கு நான் சாப்பிட்ட மருந்துபற்றி கேட்டார்கள்.

பின்னர் வந்தவர்களுள் ஒருவர் அந்த மருந்தின் பக்க விளைவுகளை அந்த மருந்து டப்பாவில் இருந்த விவரங்கள் அடங்கிய தாளில் இருந்து வாசிக்க வாசிக்க அதில் இருந்த அத்தனை பக்க விளைவுகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு எனக்கு இருந்ததை உணர்ந்தேன்.

அவையாவன:
  • difficulty with swallowing
  • dizziness
  • fast heartbeat
  • hives or welts
  • joint or muscle pain
  • red, irritated eyes
  • sore throat
  • tightness in the chest
  • unusual tiredness or weakness
  • Abdominal or stomach cramps or tenderness
  • bloating
  • chest pain or discomfort
  • fever
  • general tiredness and weakness
  • hearing loss
  • irregular heartbeat recurrent
  • nausea and vomiting
  • pain
  • upper right abdominal or stomach pain.
(ஒரு சின்ன மாத்திரைக்குள் இத்தனை விஷமமா?)

பின்னர் அவர்கள் சொன்னார்கள், இனி அந்த மாத்திரைகளை தொடரவேண்டாம், நாளை காலை மருத்துவரிடம் போகவேண்டும், பயப்பட ஒன்றும் இல்லை.

இந்த மாத்திரைகள் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது, என்று சொல்லி விட்டு கிளம்பி போனார்கள்.

அதை தொடர்ந்து வலி நிவாரண மருந்தை தற்காலிக நிவாரணமாக எடுத்துகொண்டு, கஷ்ட்டப்பட்டு தூங்க போனேன்.

அடுத்த நாள் நான் மருத்துவரிடம் போகுமுன்னே, நேற்று இரவு நடந்த அத்தனை விவரங்களும் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் மூலம் கணணி பதிவில் அறிந்துகொண்டு, என்னை மீண்டும் நன்றாக பரிசோதித்துவிட்டு, அடி வயிற்று வலியும் நெஞ்சு எரிச்சலும், அயர்ச்சியும் சோர்வும் போக இப்போது நான் தரும் இந்த மாத்திரைகளை இரண்டு வாரங்களுக்கு காலையும் மாலையும் சாப்பிட்டு வாருங்கள் என சொல்லி, Omeprazole என்ற மாத்திரையை கொடுத்து அனுப்பினார்கள்.  

நண்பர்களே, இந்த மாத்திரை காதுவலிக்கு கொடுத்த மாத்திரையால் ஏற்பட்ட பக்க விளைவான வயிற்று வலியை சரி படுத்ததானே தவிர காது வலிக்கானதல்ல.

காது வலி பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு அதுவே தானாக சரியாகி விட்டது.

காது வலிக்கென்று போய் இப்போது வயிற்று வலி வந்துவிட்டது.

வாலுபோய் கத்தி வந்தது டும் டும் டும் டும். என்று சொல்லுவார்களே அந்த கதையாகிபோனது.

ஆமாம் தலைப்பில் இரண்டு நடிகர்கள் பெயரை சொன்னீர்களே அது எதற்கு?

அதான் சொன்னேனே.... "வாலு" போய் "கத்தி" வந்தது என்று. 

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. ஆங்கில மருத்துவம் என்றாலே
    சிம்பு போய் விஜய் வந்த கதைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையார் அவர்களுக்கு,

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீண்ட நாட்களாக காணவில்லையே?

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,

    அய்யோ முடியலப்பா,,,,,,

    ஆனாலும் பல நல்ல பயனுள்ள தகவல்கள் மருந்து மாத்திரைக் குறித்து,,, அதையெல்லாம் பார்த்தா நாம் சாப்பிடமுடிகிறது.

    தலைப்பும் அருமை,,

    இப்போ நலம் தானே,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் அவர்களுக்கு,

      வருகைக்கும், நலம் விசாரித்ததற்கும் மிக்க நன்றி.

      நலம், நீங்களும் நலம் தானே?

      கோ

      நீக்கு
  3. அப்போ இறுதியில் எரி த்ரோ மை சின்.....சின்னைக் களைந்துவிட்டதாக பதிவில் படித்த நினைவு சரியா?

    ம்ம் எரித்ரோமைசின்னுடன் வயிற்று உபாதை ஏற்படாமல் இருக்கும் மாத்திரை தந்திருக்க வேண்டுமே...தராததால் இருக்குமோ...

    காதுவலி சரியானதே திருகுவலி வராமல்...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கு மிக்க நன்றி.

      திருகு வலி என்றால் என்ன கழுத்து வலியா?

      வாலு போய் கத்தி வந்தது கத்தி போய் என்ன வந்தது என சூட்ச்சுமமாக கேட்பது புரிகிறது.

      உங்களை போன்ற நல்லுள்ளங்களின் நல்லாசியுடனும் இறையாசியுடனும் நன்றாக இருக்கிறேன்.

      கோ

      நீக்கு