பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 டிசம்பர், 2015

"கழுதையும் கால்கட்டும்"

"நினைவு!! நாள்"

நண்பர்களே,

திருமண வயதை அடைந்தும் திருமணமாகாத அதே  சமயத்தில் சண்டித்தனம் செய்துகொண்டு, பொறுப்பற்று சுற்றித்திரியும் ஆண்களை பார்க்கும் பெரியவர்கள் "ஒரு கால்கட்டு" போட்டுவிட்டால் எல்லாம்  சரியாகிவிடும் என்று சொல்லும் வழக்கமான பேச்சை கேட்டிருப்போம்.


அப்படி கால் கட்டு என்று அவர்கள் சொல்லும் அதன் அர்த்தம் , அவனுக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்தால் தானாக திருந்தி பிறகு, குடும்பம் குழந்தைகள் என ஒரு பொறுப்புள்ள மனிதனாக மாறிவிடுவான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்தான்.

சரி அதை நேரடியாக திருமணம் என்று சொல்லாமல் "கால்கட்டு" என ஏன் சொன்னார்கள் நம் பெரியவர்கள்?

பெரியவர்கள் சொல்லி இருந்தால் கண்டிப்பாக அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.

பொறுப்பற்று திரியும் ஆண்களுக்கு நடத்தப்படும் திருமணங்கள்   கால்கட்டு என்றால், பொறுப்புள்ள (என்னைபோன்று!!!) ஆண்களுக்கு செய்து வைக்கப்படும் திருமணங்களுக்கு என்ன பெயர்?

கால்கட்டு என்றால், இனி இவன் தன் விருப்பபடி, தன்னிச்சையாக பொறுப்பு இல்லாமல் நடந்துகொள்ள முடியாது, இனி இவனை கட்டுக்குள்(??) வைத்திருக்க ஒருத்தி வந்துவிட்டாள்.

எது செய்தாலும் இவன் இனி தன்னை மட்டுமே மனதில் நிறுத்தி செய்யாமல்  
தன் துணைவியையும் நினைத்து , எல்லா காரியங்களில் , இனி இவனுக்காக  மட்டுமல்லாமல், அவளுக்காகவும் சம்பாதிக்கவும் செலவிடவும் வேண்டும்.

வீட்டிற்கு நேரத்தோடு  வர வேண்டும், நண்பர்களோடு அதிக நேரம் செலவிட கூடாது, ஊதாரியாக செலவு செய்ய கூடாது, சேமிப்பும் சிக்கனமும் கடைபிடிக்கவேண்டும் போன்ற நிர்பந்தங்கள் அடங்கிய எழுதபடாத சட்டங்களால் போடப்படும் கால் விலங்குதானோ  இந்த கால்கட்டு என்பது?

திருமண வாழ்க்கை என்பது ஓரளவிற்கு(!!??) சந்தோஷமான வாழ்க்கைதான் என்றாலும் முன்பு இருந்ததுபோல் ஒரு முழுமையான சந்தோசஷம் எங்கோ ஓடிபோய் மறைந்து கொண்டது என்பதை அவ்வப்போது நம்மில்(!!) பலர் உணருவதும் உண்மைதான்.

அப்படி என்றால், இந்த கால்கட்டு என்பது மனிதன் தனியாக இருந்தபோது அவன் அனுபவித்த சுதந்திரம், சந்தோஷம், மகிழ்ச்சி, நண்பர்கள், தன்னிச்சையான முடிவெடுத்தல், நினைத்தை நினைத்தவண்ணம் செய்தல், விரும்பிய உணவு உண்ணுதல் போன்ற தன் எல்லா இன்பங்களுக்கும் ஒரு வேகத்தடையாக  போடபடுவதுதானோ இந்த திருமணம் எனும் கால்கட்டு?

சரி, பெரும்பாலும் நம்மை சில நிர்பந்தங்கள்  சூழும்போது நம்மால் எதையும் செய்ய  முடியாது போகும்போது , "என் கைகள் கட்டப்பட்டுவிட்டன" என்றுதானே சொல்லுவது வழக்கம்.

அதேபோல திருமணத்திற்கு பின்னால் இவனால் தன் விருப்பத்திற்கு எதையும் செய்ய விடாமல் ஒரு நிர்பந்தமாக - ஒரு வேகதடையாக அமைவதாக சிலர் கருதும் இந்த திருமணத்திற்கும் "கை கட்டு" என்றே சொல்லாமல் ஏன் கால்கட்டு என்று சொல்லபடுகிறது என்பதை யோசிக்கும்போது சின்ன வயசில் பார்த்த ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது.

ஆற்றங்கரை ஓரமாக அமைந்திருந்த எங்கள் வீட்டை தாண்டி, விடியற் காலை நேரத்திலும்  சூரியன் மறைய ஆயத்தமாகும் மாலை வேளைகளிலும் எங்கள் ஊர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் சலவை தொழிலாளிகள் அழுக்கு துணி பொதிகளை தங்களின் கழுதைகளின் மீது சுமத்தி அவற்றை ஆற்றுக்கு கொண்டு செல்வதும் , துணிகளை துவைத்து அங்கேயே காய வைத்து மடித்து பின்னர் மூட்டைகளாக கட்டி அதே கழுதைகள் மீது சுமத்தி கொண்டு போவதையும் பார்த்திருக்கின்றேன்.

பொதி சுமக்கும் இந்த கழுதைகளை பார்க்கும்போது பரிதாபமாககூட இருக்கும்.

(ஒரு உப செய்தி:  காலையில் போகும்போது பாரம் தாங்காமல் தள்ளாடி தள்ளாடி நடக்கும் கழுதைகள் மாலை திரும்பும்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக நடந்து வரும், காரணம் போகும்போது துணிகளில் இருந்த மனுஷ பயல்களின்  அழுக்கு போய் இப்போது தூய்மையான- பாரம் குறைந்த  துணிகள்  என்பதால்  இருக்குமோ?)

இருந்தாலும் ஆற்றுக்கு போகும் வரைதானே இந்த சுமை , ஆற்றை அடைந்ததும் இந்த சுமை இறக்கப்பட்டு கழுதைகள் சுமை இன்றி - முதுகில் அழுத்தும் பாரமின்றி ஆற்றங்கரையில் சந்தோஷமாக  சுற்றி திரியவும் அங்கே இருக்கும் புள் பூண்டுகளை சுவைத்து மகிழவும் முடியுமே என்று மனதுக்குள் நினைத்திருக்கின்றேன்.

ஆனால் நடந்தது என்ன?

சுமைகளை ஆற்றங்கரைகளில்  இறக்கிவிட்ட பிறகு, அந்த கழுதைகளின் முன்னங்கால்கள் இரண்டையும் ஒரு ஜான் இடைவெளி விட்டு கயிற்றால் கட்டி விடுவார்கள்.

அதன் பின்னர் அந்த கழுதைகளால் , காலையில் பொதி சுமை அழுத்தியபோதும் கால்களை வீசி நடந்ததுபோல் நடக்க முடியாமல் முன்னங் கால்களை எத்தி எத்தி - குதிப்பதுபோல் தான் எடுத்து வைக்க முடியும்.  இது பார்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கும்.

பின்னர் மாலையில் பொதிகளை ஏற்றிய பின்னர் "கால்கட்டை" அவிழ்த்து விடுவார்கள்.

வீட்டை அடைந்ததும் பொதிகளை இறக்கு வைத்துவிட்டு மீண்டும் முன்னங்கால்களை முன்பு சொன்னது போலவே கட்டி விடுவார்கள்.

இப்படி செய்வதால் அந்த கழுதைகள் எஜமானரின் கட்டுப்பாட்டில் இருக்கும்; தன்னைவிட்டு பிரிந்து எங்கேயும் போக முடியாது, அப்படியே போனாலும் அதிக தூரம் இந்த கட்டுடன் நடக்க முடியாது அதற்குள் பிடித்துவிடலாம்.

ஆக கழுதைகள் பாரம் சுமக்கவேண்டும், உரிய இடத்தில் பொதிகளை சேர்க்க வேண்டும் என்றாலும் அவைகள் தன்னிச்சையாக காலாற நடந்து சென்று சுதந்திரமாக கொஞ்சம் நேரம்கூட சுற்றி திரிய முடியாதபடி இந்த கால்கட்டு அமைவதுபோல்,

திருமணம் எனும் "கால்கட்டு" அணிவிக்கபட்டவர்களாய், குடும்ப பாரத்தை சுமந்து உரிய இடத்தில் - உயரிய இடத்தில் குடும்பத்தை கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியில்  ஈடுபட்டாலும் தன் விருப்பபடி தன் ஆசா பாசங்களை அனுபவிக்க முடியாதபடி ஒரு இக்காட்டான - கட்டுக்குள் அடக்கபட்டுபோவதால்தானோ என்னமோ ஆணுக்கு செய்து வைக்கப்படும் திருமணத்தை "கால் கட்டு" என்று  அழைக்கின்றனரோ?

திருமணத்தன்று  கயிறு பெண்ணுக்கு கட்டபட்டாலும் கண்ணுக்கு தெரியாத இந்த கால்கட்டுடன் இருப்பவர் என்னமோ ஆண்கள்தான் என்பதை உணர்ந்துதானோ என்னமோ பெரியவர்கள் இதனை இப்படி விளித்தனர்?

எனவேதான் ஒரு சிலர் மட்டுமல்லாமல், பெரும்பான்மையானோர், தங்களின் திருமண நாளை, தங்களின்  சுதந்தரத்தை தொலைத்த நாள், அல்லது பறிகொடுத்த  நாள் என்று வேடிக்கையாக சொல்வதுபோல் தங்களது உள்ள கிடக்கை - உண்மை நிலையை சொல்லகேட்டுகொண்டிருக்கின்றோம்.

ஆணை கழுதை என்று மறைமுகமாக உருவகபடுத்தும்  இந்த "கால் கட்டு" என்பதை இனி கழுதைகளோடு நிறுத்திவிட்டு , வேறு ஏதேனும் பொருத்தமான பதங்களை இன்று இருக்கும் பெரியவர்கள் கண்டு சொன்னால் பிற்கால சந்ததியினர் கொஞ்சமாவது ஆறுதலடைவர்,குறைதபட்சம் பெயரளவில்.

குடும்ப மகிழ்ச்சிக்காக எத்தனை பாரம் சுமந்தாலும் சுமந்து கொண்டே எத்தனை தூரம் சென்றாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

எது எப்படியோ, எல்லாவற்றிலும் ,கட்டுப்பாடில்லாத சுதந்திரம் அர்த்தமற்ற சுதந்திரம் எனும் தத்துவார்த்தமான வாக்கிற்கிணங்க திருமண வாழ்விலும் ஒரு கட்டுபாடான சுதந்தரமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் அவசியமாகிறது.

எல்லாம் சரி, திடீர்னு ஏன் இந்த "கட்டு"பதிவு?

அது வேற ஒன்னும் இல்லைங்க, இன்று நமக்கு வேண்டியவரின் 20 ஆவது திருமண ஆண்டு நாள் அதாவது "கால்கட்டு (நினைவு!!) நாள் ", அதான் அவரை நினைத்து இந்த "கழுதை" பதிவு. 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

10 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கீரைக்கட்டு, வெளக்கமாத்து கட்டு 80 போல நேரடியாகவே கழுதை கட்டு என்று சொல்லி இருக்கலாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      வருகைக்கும், உங்கள் புதிய யோசனைக்கும் மிக்க நன்றி.

      கழுதைகட்டா அல்லது கழுதையை கட்டா?

      கோ

      நீக்கு
    2. நண்பரே நான் ‘’கழுதை கட்டு’’ என்றே சொன்னேன் தாங்கள் சொன்னதை சொல்லவில்லை.
      நான் அறிவு கெட்ட சிம்பு-அனிருத் வகையறா என்று நினைத்தீரோ....

      நீக்கு
    3. நண்பரே,

      இந்த பதிவு முழுவதிலும் "அந்த" பிராணியை மாப்பிள்ளைக்குதானே உருவாக படுத்தி இருந்தோம். அப்படி இருக்க உங்களை "இந்த" பிராணிகளோடு என்னால் எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்?

      வருகைக்கு மீண்டும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,
    கழுதைக் கட்டா? நல்ல கட்டு தான்.
    வாழ்த்துக்கள். கட்டுப் போட்ட நாளுக்கு,
    நல்ல பகிர்வு, தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      வருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. திருமண மண்டபத்தில் ஐயர் சொன்னாராம்...நல்ல நேரம் முடியப்போகுது மாப்பிள்ளையை வரச்சொல்லுங்கள்...

    நானெல்லாம் என் திருமணம் நடந்த மண்டபத்தை கடக்கும் போதெல்லாம் கண்களை மூடிக்கொள்கிறேன்....திருமணநாளை நினைவுநாளாக்கிய உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. நண்பரே,

    ரொம்ம்ம்ம்ம்ம்........ப..........பாதிக்கபட்டுள்ளீர் என்பது புரிகிறது.

    அதற்காக உங்களுக்கு திருமணம் ஆனா அந்த கல்யாண மண்டபம் வரும்போது கண்ணை மூடிக்கொள்வது பயண பாதிப்பை விளைவிக்க கூடும் -வேண்டாமே.

    அந்த ஐயரை நினைவிருக்கின்றதா?

    பதிவு உங்களுக்கு(ம்) ஆறுதலாக அமைந்ததில் மகிழ்ச்சி.

    கோ

    பதிலளிநீக்கு
  5. கால்கட்டு நல்ல விளக்கம் கோ நண்பரே! எப்படி எல்லாம் ரூம் போடாமலேயே யோகிக்கின்றீர்களே...

    அந்த 20 வாது கால்கட்டு நினைவு நாள் உங்களுடையதா???!!! இல்லை விசுவினுடையதா???!!!

    பதிலளிநீக்கு
  6. அன்பிற்கினிய நண்பர்களே,

    வருகைக்கு மிக்க நன்றிகள் . நீங்கள்தான் 007 ஆச்சே.

    கோ

    பதிலளிநீக்கு