பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

"நிபந்தனை(கருணை) மனு"

பிடி -வாரன்ட்டு

நண்பர்களே,

இன்றைய உலக  மனிதகுல நாகரீக  பரிணாமவளர்ச்சியில், பல அறிவியல், தொழில் நுட்ப, விவசாய, தகவல் பரிமாற்ற துறைகளில் மா பெரும் வளர்ச்சியினை கண் கூடாக பார்த்து வருகிறோம். இதுபோன்ற அறிவு வளர்ச்சியின் மற்றுமொரு பரிணாமம்தான் சட்டங்களும் அவற்றின் பங்களிப்பும்.


இந்த சட்டங்களில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் சொற்றொடர்களில் நாம் அடிக்கடி கேள்விபடுகின்ற வார்த்தைகளுள், ஜாமீன், முன் ஜாமீன், வாரன்ட்டு, பிடி வாரன்ட்டு, நிபந்தனைஜாமீன், நிபந்தனை மனு போன்றவை.

மனிதனால் உருவாக்கப்பட்டு மனிதனையே கட்டுபடுத்தும் இந்த சட்டம் , இயற்கையை கட்டுபடுத்துமா?

கண்டிப்பாக முடியாது, எனினும் மனிதனின் ஆசை  இந்த உலகை, பிரபஞ்சத்தை , இயற்கையை தன் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே.

அதேபோல காலை ,மாலை, இரவு , உலக சுழற்சி சூரியோதயம் , அஸ்த்தமனம், சந்திரோதயம், வளர்பிறை, தேய் பிறை போன்றவற்றையும் மனிதன் தன் கட்டுக்குள் அடக்க முடியாது, ஆனால் அதே சமயத்தில் இந்த பிரபஞ்ச சுழற்சியை அடிப்படையாக கொண்டு, எண்கணிதம் ,வான சாஸ்த்திரம்,நாள் கிழமை,ஆண்டு, யுகம், மாமாங்கம்  போன்றவற்றை கணக்கிட அவனால் முடியும்.

அப்படி கணக்கிட்டு காலாகாலமாக கடைபிடிக்கும் ஒரு துல்லியமான கணக்குதான் வருடத்தின் 12 மாதங்கள். 

அப்படி 12 மாதங்கள் முடிந்தபின் மீண்டும் துவங்கும் அடுத்தவருடத்தின் முதல் மாதத்தின் முதல் நாள் தான் வருடபிறப்பு எனும் சிறப்பு நாள்.

இப்படி மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த கால கணக்கீட்டின்படி வர இருக்கும் புத்தாண்டிற்கு ஒரு கருணை மனுவாக இல்லாமல் ஒரு நிபந்தனை மனுவை நீட்டினால் எப்படி இருக்கும்?

கடந்த மாதங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளின் தாக்கத்தால் உருபெற்ற ஆக்கம்தான் இந்த பதிவு.

புத்தாண்டு 

"அழையா விருந்தினராய்
ஆண்டுதோறும் வருகின்றாய்
அழியா பெரும்சுவடுகளை -எம்
அடி மனதில் தருகின்றாய்.

நீ மட்டும் வருவதென்றால்
வந்துபோ மகிழ் சூடி
(கடும் மழை வெள்ளம் புயலெனும்)
வீணான  துணை சேர்ந்து
வந்திடாதே எமை தேடி .

செழிப்பளிக்க உனை வேண்டி
செய்திட்ட பிரார்த்தனைகள்
வழிப்பறி கொள்ளையாக
படு குழியில் விழுந்தனவோ?

ஆண்டின் துவக்கம் முதல்
ஆனமட்டு நன்மை செய்தாய்
அவ்வப்போது  ஆசிகளை 
அளவுடனே நீயும் பெய்தாய்   

வருடத்தின் இறுதி மாதம்
வருத்தத்தை கொடுத்து எம்மின் 
வெறுப்பிற்கு ஆளானாய்-எங்கள்
வாழ்வறுக்கும் வாளானாய்.

இன்னும் இரண்டு நாளில்
இங்குவர துடிக்கும் நீ -
உன்னோடு கொண்டுவரும்
பொன் மணிகள் ஏதும் வேண்டாம்

புது வாழ்வும் எமக்குவேண்டாம் -பறி(த்து)
போன வாழ்வை திருப்பித்தந்தால்  .
அதுவே எமக்கு மகிழ்ச்சி பொங்கும் 
அமைதி என்றும் நிலைத்து தங்கும் .

இத்தனை நிபந்தனைகள்-நீ 
ஏற்பதாயின்  இன்றே வா
இல்லையேல் உன் இஷ்டம்போல் 
இரண்டு நாட்கள் கழித்துவா.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ
8 கருத்துகள்:

 1. வணக்கம் அரசே,

  அருமையான வரிகள்,
  இறுதியில் இத்தனை நிபந்தனைகள் ஏற்பதாயின் வா,,, இல்லையேல் இரண்டு நாள் கழித்து வா,,,,,

  தற்குறிப்பேற்றணி,,,,, ம்ம்,,

  அழகான பொருள் பொதிந்த வரிகள்

  புத்தாண்டே அரசரின் ஆணை ஏற்று அப்படியே வா இல்லையேல்,,,

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நண்பரே நல்ல (கணக்கு) பதிவு கவிதை வரிகள் மிகவும் நன்று வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. பேராசிரியரே,

  பதிவினை பாராட்டியமைக்கும் அதிலுள்ள (எனக்கு அதை பற்றி எல்லாம் தெரியாமல்தான் எழுதினேன்) இலக்கண குறிப்போடு நீங்கள் இட்ட பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கின்றது.

  வருகைக்கு மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 4. நண்பரே,

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

  வாழ்த்துக்களுடன்,

  கோ

  பதிலளிநீக்கு
 5. அருமை மிக மிக அருமை கோ நண்பரே! நிபந்தனைக் கவிதை!ம்ம் எப்படி என்றாலும் அது வரத்தான் போகின்றது ஒரு நொடி கூட தாமதிக்காமல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கும் , வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 6. புத்தாண்டு வாழ்த்துக்கள் அரசே

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

  கோ

  பதிலளிநீக்கு