பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

குழந்தையை காணவில்லை.

மாயமென்ன?

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அங்காடிக்கு சென்றிருந்தேன்.

அந்த அங்காடி சுமார் 5 அடுக்குகள் கொண்ட ஒரு பிரமாண்டமான - அங்காடி.

மால் போன்று இல்லாமல் ஒரு தனியான நிறுவனத்தை சார்ந்த அங்காடி அது.

ஏற்கனவே நாம் அறிந்தபடி, இப்போது விழா காலம் என்பதால், கூட்டம் அலை மோதிகொண்டிருந்தது.


பல மாடிகளை  கொண்ட அந்த அங்காடியின் பல்வேறு தளங்களுக்கு சென்று வர, மின் தூக்கி, எஸ்கலேடர், மற்றும் படிகட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு தளத்திற்கும் சென்றுவர கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.  அந்த அளவிற்கு கூட்டம் அலை மோதிகொண்டிருந்தது.

அதிலும் அந்த அங்காடி ஒரு அதிக விலை அங்காடியாகும்.

உதாரணத்திற்கு வெளியில் 100 ரூபாய்க்கு கிடைக்கும் பொருளின் விலை இங்கே இவர்களின் கடையின் பெயரால் விற்கப்படும்போது அது 300 ரூபாயாக விற்கப்படும், தரம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்ற நம்பிக்கைதான்.

வாங்கவில்லை என்றாலும் சில நேரங்களில் இதுபோன்ற அங்காடிகளை சுற்றிபார்க்க வரும் கூட்டமும் உண்டு.

பிறந்து ஒரு சில நாட்களே ( மகப்பேறு ஆஸ்பத்திரியில் இருந்து தாயும் சேயும் அவர்களின் மணிக்கட்டில் கட்டப்பட்ட பேண்டுடன் கடைகளுக்கு வருவது இங்கே சர்வ சாதாரணம் ) ஆன குழந்தைகள் முதல் 80 வயதை கடந்த முதியவர்கள் வரை இதுபோன்று அங்காடிகளில் பார்க்கலாம்.

இப்போது நான் அங்காடியின் மூன்றாம் தளத்தில் உள்ள விழாக்கால ஜோடனை பொருட்களும், பரிசு பொருட்களும் அடுக்கி  வைக்கபட்டிருந்த தளத்தை சுற்றி பார்த்துகொண்டிருந்தேன்.

அங்கே ஒரு அப்பா அம்மா , புதிதாக பிறந்த தன் குழந்தையுடனும் தமது சுற்றத்தாருடனும் அங்கே இருப்பதை பார்த்தேன்.

அங்காடியில் வேலை செய்யும் ஒரு வெள்ளைக்கார பெண்மணி அந்த குழந்தையை தொடுவதும்  தூக்கி கொஞ்சுவதாகவுமாக இருந்தார் பெற்றோர் சம்பந்தத்துடன் தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

விழித்துகொண்டிருந்த அந்த குழந்தையின் கள்ளம் கபடற்ற முகத்தை கண்டு ஒரு புன் சிரிப்பை உதிர்த்துவிட்டு அந்த இடம் விட்டு வேறு பக்கம் சென்றுவிட்டேன்.

ஆனால் இன்னும் அதே தளத்தில்தான் இருந்தேன்.

சாதாரண நாட்களிலே விஸ்த்தாரனமான  ஒவ்வொரு தளத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை செல்லவே கொஞ்சம் நேரம் ஆகும் அதுவும் இந்த பண்டிகை காலங்களில் சொல்லவே தேவையில்லை.

அழகான கண்கவர் அலங்கார பொருட்களின் அழகில் மெய்மறந்து லயித்துகொண்டிருந்த நேரத்தில் அங்கே ஒரு பரபரப்பான சூழ் நிலை உருவாவதை உணர முடிந்தது.

வேலை ஆட்களும் அந்த தளத்தின் கண்காணிப்பாளரும் காவல் அலுவலரும் இங்குமங்கும் வேகமாக போய்கொண்டிருந்ததையும் ஒருவருக்கொருவர் ஏதோ பதட்டத்துடன் பேசிகொள்வதையும் பார்க்க முடிந்தது. 

என்ன வென்று விசாரித்ததில், நான் சற்று நேரத்திற்குமுன் பார்த்து புன்னகித்த அந்த பச்சிளம் குழந்தையை காணவில்லை என்று தெரிந்தது.

பதறிவிட்டேன்.

இப்போதெல்லாம் குழந்தை திருட்டும் கடத்தலும் உலகம் முழுவதும் பெருகிவிட்ட இந்த சூழ் நிலையில் பட்டப்பகலில் இத்தனை ஆட்கள் , இத்தனை செக்க்யூரிட்டிகள், இத்தனை கண்காணிப்பு  கேமராக்கள் உள்ள இந்த நவீன கட்டிடத்தில் இருக்கும் இந்த தளத்தில் இருந்து எப்படி ஒரு குழந்தை காணாமல் போகக்கூடும்?

அந்த குழந்தையை நான் கடைசியாக பார்த்த, அந்த, வீட்டு அலங்கார பொருட்களும் பரிசுபொருட்களும் இருந்த  இடத்திற்கு சென்றேன், அங்கே அந்த குழந்தை இல்லாமல் அதன் பெற்றோர்கள் மட்டுமே செய்வதறியாது பித்துபிடித்தவர்களைபோல நின்றுகொண்டிருந்தார்கள்.

அதே சமயத்தில் நான் பார்க்கும்போது அங்கே இருந்த அந்த கடை ஊழியர்- அந்த வெள்ளைக்கார பெண் மணி இல்லை.  மாறாக வேறொரு  பெண் ஊழியர்  பதற்றத்துடன் இங்குமங்குமாக அந்த குழந்தையை தேடிகொண்டிருந்தார்.

நான் அந்த பெண்மணியிடம் சென்று, குழந்தையின் பெற்றோருக்கு கேட்காதவண்ணம், இங்கே உங்களுக்கு முன் இருந்த அந்த பெண் எங்கே என கேட்டேன்.

எனக்கு தெரியாது, என்னுடைய சூபர்வைசர் என்னை இங்கே வந்திருக்கும்படி என்னுடைய வாக்கி டாக்கியில் கட்டளை இட்டார் அதனால்தான் நான் இங்கு வந்தேன் , ஏன் கேட்கின்றீர்கள்?

இல்லை, நான் பார்க்கும்போது உங்களுக்கு முன் இங்கே இருந்த வேறொரு பெண்மணிதான் அந்த குழந்தையை தூக்கி கொஞ்சிகொண்டிருந்ததை நான் ஒரு 10 நிமிடங்களுக்கு முன் பார்த்தேன்.

ஒருவேளை அவர்களிடத்தில் விசாரித்தால் காணாமல் போன குழந்தையை குறித்த தகவல் கிடைக்கும் என்றேன்.

உடனே அந்த பெண்  தமது வாக்கி டாக்கியில் தமது சூப்பர்வைசரை தொடர்புகொண்டு அவருக்கு முன் அங்கே இருந்த பெண்ணை குறித்து விசாரித்தார்.

நானும் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.

பேசி முடித்த அந்த பெண்ணிடம் கேட்டேன், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அந்த பெண் எங்கே என நான் தெரிந்துகொள்ளலாமா?

அவரை அவசரமாக நான்காம் தளத்திற்கு ஒரு வேலையாக அனுப்பி இருப்பதாகவும் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் எனவும் சொன்னதாக அந்த பெண் எனக்கு சொன்னார்.

சரி  கூட்டத்தோடு நானும் அங்கேயே  நின்றுகொண்டிருந்தேன் குழந்தையை காணாமல் துக்கித்துகொண்டிருந்த அந்த பெற்றோரை பார்க்க மனமின்றி.

சிறிது நேரத்தில் நான்காம் தளத்தில் இருந்து எஸ்க்கலேடர் மூலம் மூன்றாம் தளம் நோக்கி வந்துகொண்டிருந்த அந்த பெண்மணியை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று, " இங்கே அந்த பெற்றோருடன் இருந்த குழந்தையை நீங்கள் தானே எடுத்து கொஞ்சிகொண்டிருந்தீர்களாம்,   எங்கே அந்த குழந்தை என பதட்டத்துடன் கேட்டார்  தற்காலிக பெண் ஊழியர். 

வந்த  பெண்மணியோ  சர்வ சாதாரணமாக அவரை   ஏறெடுத்து பார்த்துவிட்டு , நேராக அந்த குழந்தை இருந்த இடத்திற்கு வந்து பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அலமாரிக்கு கீழே இருந்த பெட்டியை காட்டி குழந்தை அதில் இருக்கின்றது என  சொல்ல எனக்கும் என்னைப்போல் அங்கே கூடி இருந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இப்போதும் அந்த பெற்றோர்கள் திக் பிரமையோடு மெளனமாக செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர்.

பேசிக்கொண்டே அந்த பெண்மணி பெட்டியை திறந்து அதில் இருந்த குழந்தையை எடுத்து எல்லோருக்கும் காண்பித்தார்.

அப்போதும் அந்த குழந்தை கள்ளம் கபடில்லாமல் பால் வடியும் முகத்துடன் காட்சி அளித்தது.

அந்த கடை ஊழியர் பெண்மணி அந்த குழந்தையை  மீண்டும் பெட்டியில் வைக்க முற்படும்போதும் அவரிடம் கேட்டேன் ஏன் நீங்கள் இந்த குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரித்து பெட்டிக்குள் வைத்தீர்கள்?

நீங்கள் செய்ததும் செய்வதும் கொஞ்சம் கூட நல்லா இல்லை என என் ஆதங்கத்தை வெளி படுத்த, அவர் சொன்னார்,

நண்பரே,  இந்த குழந்தை மிக மிக விலை உயர்ந்தது, அதுவும் எடுப்பதற்கும் மறைப்பதற்கும் மிகவும் எளிமையானது, கடந்த சில வருடங்களாக இதுபோன்று பல குழந்தைகள் காணாமல் போய் இருக்கின்றன.

எனவேதான் இதை தனியாக பெட்டியிலேயே வைத்திருக்கிறேன்.

இவ்வளவு களேபரங்கள் நடந்தபோதும் அது ஒரு முடிவிற்கு வந்தபின்னும் குழந்தையின் பெற்றோர் எந்த சலனமும் இன்றி முன்புபோலவே நின்றுகொண்டிருந்தனர்.

அதிலும் இப்போது டிசம்பர்  மாதம் 15 ஆம் தேதிதான்.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும்போது இன்னும் பிறக்காத குழந்தையை எப்படி அவர்களின் பெற்றோருடன் சேர்த்து வைக்க முடியும்?

குழந்தை பிறந்த தினமான டிசம்பர் 25க்கு முன் பெற்றோருடன் இருப்பதாக காட்சி படுத்த கூடாது என்று உங்களைபோன்ற ஒரு கஸ்டமர் சொன்னதால் இப்படி வைத்திருக்கின்றேன்.

வாங்குபவர்கள் தங்கள் வீட்டுக்கு எடுத்து சென்று  குழந்தையை அதன் பெற்றோருடன் சேர்த்து வைத்துக்கொள்ளட்டும்.

ஆமாம் இவ்வளவு நேரம் எதை பற்றி பேசிகொண்டிருந்தோம்?

அது வேற ஒன்னும் இல்லைங்க. 

கிறிஸ்மஸ் அலங்கார பொருட்களில் ஒன்றான, குழந்தை இயேசு பிறந்த அந்த குடிலில் (MANGER) இயேசுவின்  தாயும் தகப்பனும் , இடையர்களும், ஞானியரும் இருந்த இடத்தில் குழந்தை இயேசுவை மட்டும் காணவில்லை.  விசாரித்ததில் மேற்சொன்ன தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


Image result for picture of manger scenes without baby jesus.


அந்த மொத்த  குடிலும் நம்ம ஊர் காசுக்கு சுமார் 30,000 ரூபாய் 20% டிஸ்கவுன்ட் போக.

நண்பர்களே, மேலே சொன்ன அத்தனையும் உண்மையிலேயே நடந்த ஒன்றுதான் என்பதை நீங்க நம்பித்தான் ஆகவேண்டும்.

என்ன ஒன்று, இதில் நம்ம கைவண்ணம் கொஞ்சம் இருக்கும், அவ்வளவுதான்

பின் குறிப்பு:  குழந்தைகளுடன் கடைகளுக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துகொள்வது மிக அவசியம். 

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


10 கருத்துகள்:

 1. என்ன நண்பரே இப்படி பயமுறுத்தி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரந்தையார் அவர்களுக்கு,

   நான் என்னங்க பண்றது, நடந்ததை நடந்தமாதிரியே(!!) சொல்றதுதானே தர்மம்?

   வருகைக்கு மிக்க நன்றி .

   கோ

   நீக்கு
 2. நம்பிட்டோம்...பின்ன நம்பாமல் இருக்க முடியுமா என்ன? (முதலிலேயே இதில் ஏதோ என்று கண்டுபிடித்துவிட்டதால்...அது பொம்மைதான் என்று..(உங்க ஊர் வழக்கம் எல்லாம் கொஞ்சம் தெரியுமே அதனால்தான்..) இங்கிலாந்தின் கோ சொன்னால் நம்பாமல் இருக்க முடியுமா?!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கு மிக்க நன்றி.

   அதானே பார்த்தேன், உங்ககிட்ட நம்ம பாச்சா பலிக்குமா என்ன?

   இருந்தாலும் என்னையும் நம்பும் உங்களை போன்ற இரண்டு உள்ளங்கள் இருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே.

   கோ

   நீக்கு
 3. வணக்கம் அரசே,

  அய்யோ நான் கூட மனம் பதறிவிட்டேன். என்ன இப்படி பன்னிட்டீங்க. நானே எங்கு சென்றாலும் என் குழந்தைகள் என்னை விட்டு அகலாதபடி இருப்பேன். பயம் தான்.

  நல்ல அருமையான பகிர்வு. குழந்தை யேசு உங்களுக்கு நல்லது செய்யட்டும்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியர் அவர்களுக்கு,

   நான் என்னங்க பண்ணிட்டேன்?

   என்னைப்போல் உள்ளத உள்ளபடியே(!!!) சொல்றவங்களுக்கு இப்போ காலமே இல்லங்க.

   சும்மா சுத்தி வளைச்சி, சஸ்பென்சோட, கொஞ்சம் கற்பனையும் கலந்து சொல்றவங்களுக்குத்தான் காலம் போல இருக்கு.

   ம்ம்ம்... நாம எப்பவுமே , நேர்மை, ஞாயம், தர்மம்னு சிந்திக்கிறதால உங்களுக்கு இலக்காரமாபோச்சு.

   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 4. பதில்கள்
  1. தளிர்,

   வருகைக்கும் பதிவினை உங்கள் பாணியில் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 5. பிள்ளைவாள் ஒரு முடிவோடத்தான் இருக்காரு. படிச்சு முடிக்கருதுக்குள்ள கதி கலங்கிப்போச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரபு,

   வருகைக்கு மிக்க நன்றி.

   பிள்ளையிடம் வாள் இல்லை , கொஞ்சம் வால் மட்டுமே.

   பதிவோடு ஒன்றி விட்டீர்கள் போல் தெரிகிறது..

   கோ

   நீக்கு