பின்பற்றுபவர்கள்

சனி, 5 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -3



ராசியான  ராமாஞ்சி ஆயா.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 2..சொடுக்கவும்

அம்மா பதட்டத்துடன் அந்த வீட்டுக்காரரிடம் , "என்ன சொல்றீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்தான்.... என்ன ஆனது?"

"இப்பதாங்க அந்த பாட்டி அவங்க  குடிசைக்கு போய் அங்கிருந்து எதையோ எடுக்கணும்னு  போய் இருக்காங்க." என்று சொன்ன பிறகுதான் என் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி தோன்றியது.

நேராக அந்த பாட்டியின் குடிசை இருக்கும் இடத்திற்கு அம்மாவை அழைத்து சென்றேன்.

அங்கே அந்த பாட்டி தமது தட்டு முட்டு சாமான்களை வேறு ஒரு கோணிப்பையில் போட்டுகொண்டிருந்தார் பக்கத்தில் ஒரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சோறு கொதித்துகொண்டிருந்தது,கொதித்துகொண்டிருந்த சோற்றில் பிரிந்துபோன  கூரையில் இருந்து ஒழுகிய மழை நீரும் சொட்டு சொட்டாக சொட்டிக்கொண்டிருந்தது.

"பாட்டி" என நான் அழைப்பதை கேட்டு திரும்பி பார்த்த அவர், "நீ இன்னும் வீட்டுக்கு போகலையா"?

"வீட்டிலிருந்துதான் வருகிறேன், இப்போ என்னோடு என் அம்மாவும் வந்திருக்கிறார் உங்களை பார்க்க" என்றதும் அவர்கள் கண்ணை சுருக்கி புருவம் உயர்த்தி வெளியில் பார்த்தார்.

அவர்களை பார்த்ததும் , அம்மாவிற்கும் ஒரே ஆச்சரியம்.

அம்மா அவர்களிடம் உங்கள் பெயர் " ராமாஞ்சி தானே?" என கேட்டதும் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்ததால், உங்களுக்கு இந்த பாட்டியை தெரியுமா என வினவினேன்.

"ஆமாம் , நீங்க.....யார்ர்...னு....."

" என்னை நினைவில்லையா?... நான்தான் .. என்று அம்மா தமது அப்பாவின் பெயரை சொல்லி, ஒரு ஊர்பேரை சொன்னதும் அந்த பாட்டி, அம்மாவையும் கட்டிபிடித்து முத்தம் கொடுத்து தம் அன்பை தெரிவிக்க , இங்கே என்ன நடக்கிறது என்பதை நானும்  எங்களுடன் வந்த அந்த ரிக்க்ஷா காரரும் புரியாமல் விழித்தோம்.

பிறகு தெரிய வந்தது, அம்மாவின் குடும்பமும்  அந்த பாட்டியின் குடும்பமும் ஒரே ஊரில் அடுத்தடுத்த தெருக்களில் வாழ்ந்தவர்களாம்.

இந்த பாட்டியின் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்தபோது அங்கே இறந்து விட்டாராம், அதை தொடர்ந்து குழந்தைகள் இல்லாத இவரை ஏமாற்றி அவரது கணவரின் சகோதரர்கள் இவரை வெளியில் துறத்தி விட்டனராம், அப்போது எங்கள் தாத்தாவீட்டில்தான் சில நாட்கள் அடைக்கலமாக இருந்தாராம்.

நிற்கதியான இந்த பாட்டி ரொம்ப கஷ்டபட்டு பின்னர் ஊரை விட்டு வேறு எங்கேயோ சென்று விட்டாராம்.

இப்போதுதான் ஒருவரை ஒருவர் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதாம்.

இப்படி அம்மா சொல்ல அந்த பாட்டியும் தலை ஆட்டிக்கொண்டே, வெந்துகொண்டிருந்த  சாதத்திலிருந்து தண்ணீரை வடித்துக்கொண்டே  தன் கண்களிலும் வடிந்துகொண்டிருந்த கண்ணீரை தனது புடவை தலைப்பில் துடைத்துகொண்டார்.

பிறகு அவரை சமாதானபடுத்தியும் கட்டாயபடுத்தியும் எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று எங்களோடு சில நாட்கள் தங்கவைத்திருந்தோம்.

எங்கள் வீடும் அத்தனை பெரிய வீடு இல்லை என்றாலும் அவர்களையும் எங்களோடு ஒடுங்கிகொள்ள சொல்லும் மனது என் பெற்றோரிடத்தில் இருந்தது.

கால்கள் குணமான பிறகு மீண்டு அவர்கள் தான் செய்து கொண்டிருந்த ,மார்கெட்டில் காய் கூறு கட்டி விற்கும் வேலைக்கு போய் அதில்  கிடைத்த வருவாயில் , ராணுவ வீரரின் மனைவி என்பதால் கொடுக்கப்பட்ட அந்த "புறம்போக்கு" நிலத்தில் இருந்த குடிசையை செப்பனிட்டு மீண்டும் அங்கேயே வாழத்துவங்கினார்.

எனினும் மாரிக்காலம்  என்றால் வருடத்தில்  இரண்டு அல்லது மூன்று வாரங்கள் எங்கள் வீட்டில் வந்து தங்கும்படி அவர் எங்களின் உறவினராகவே  மாறிபோனார்.,

அதுவும் விழாக்காலங்களில்  அவர்தான் எங்கள் அனைவருக்கும் உணவு பரிமாறுவார், அவர் செய்யும் வடையின் அளவு போல் இன்றுவரை நான் பார்த்ததில்லை, ஆறடி உயரமான  ஆயாவின் உள்ளங்கை அளவிற்கு அந்த வடையின் சுற்றளவு இருக்கும்.

அன்று முதல் நான் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை பெரும்பாலான மாலை நேரங்களில் பள்ளிக்கூடம் விட்டதும் அந்த பாட்டியின் வீட்டுக்கு சென்று அவர்களிடம் பேசிவிட்டுதான் வீட்டிற்கு வருவேன் என்பது எங்கள் வீட்டில் அனைவருக்கும் தெரியும்.

காலை நான்கு மணிக்கெல்லாம் தன் கூடையை சுமந்துகொண்டு மார்கெட்டுக்கு போய் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கொஞ்சம் காய்கறிகளை வாங்கி கூறு கட்டி கூவி கூவி விற்றுவிட்டு மத்தியம் 12 அல்லது ஒரு மணிக்கெல்லாம் வீடு வந்து விடுவார்கள், எனவே பள்ளிக்கு போகும் காலை நேரத்தில்  அவரை பார்க்கமுடியாது எனினும் அவரது அந்த குடிசை வீட்டை பார்த்தபடியே செல்வதுண்டு.

சில நேரங்களில் அந்த பாட்டியுடன் சேர்ந்து அவர் பரிமாறும் சுவை மிகுந்த உணவை சாப்பிட்டு விட்டுதான் வருவேன்.

அந்த பாட்டியை எங்கள் வீட்டில் இருந்த அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்துபோனதற்கான பல காரணங்களுள்   ஒன்று அவர் , நாங்கள் நேரில் பார்க்க கொடுத்து வைக்காமல் போட்டோவில் மட்டுமே பார்த்துகொண்டிருக்கும் எங்கள் அப்பாவின் அம்மாபோலவே இருந்ததினாலும்.

பல வருடங்கள் கழித்து வெளி நாட்டில் தங்கி இருந்த சமயத்தில் அவர்களின் மறைவு செய்தி கேட்டு, அந்த மழை நாட்களின் பழைய நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவருக்காக கண்ணீர் சிந்தினேன் மழை என்றால் என்னவென்றே தெரியாத அந்த உஷ்ண நாட்டில் இருந்துகொண்டு.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர் என் நினைவில் மழையாய் பொழிவதை அந்த பாட்டி நினைத்து மகிழ்வார் என்ற சந்தோஷத்தில் இந்த "மழைக்குள் குடை" தொடரை நிறைவுசெய்கிறேன்.

மீண்டும், மழைவெள்ளத்தால் பேரவதிக்குள்ளாகி இருக்கும் என் தமிழக தாத்தா பாட்டிகள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


13 கருத்துகள்:

  1. பொருத்தமாக கொண்டு வந்து தற்கால நிகழ்வுகளுடன் இணைத்து விட்டீர்கள் நண்பரே அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா,

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. எங்கள் மனதிலும் மறக்க முடியாதபடி தங்கி விட்டார்...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. செந்தில் குமார்,

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. வணக்கம் அரசே,

    நான் நினைத்தது சரியே, நல்ல மனிதர்கள் வாழும் பூமிதான் இது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      நீங்கள் நல்லதையே நினைப்பவர் என்பது உங்கள் பின்னூட்டத்தில் புரிகிறது.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. அந்த மழைக்குள் குடையுள் அந்தப் பாட்டி அடங்கியிருப்பதாகத் தெரிகின்றது...
    உணர்வுபூர்வமான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உங்கள் வருகைக்கும் பதிவில் ஒன்றிய உங்கள் உணர்வுகளுக்கும் என் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  6. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
    சில வேண்டுதல்கள்...

    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

    நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

    உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே சிவம்,

      உதவும் உள்ளங்களுக்கு தங்களின் உள்ளார்ந்த கரிசனையின் வெளிப்பாடான இந்த யோசனைகள் மிகவும் பாராட்ட தக்கது.

      இந்த ஆலோசனைகள் பலருக்கும் உதவும் என்ற எண்ணத்தில் இதை வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.

      கோ

      நீக்கு
  7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு