பின்பற்றுபவர்கள்

சனி, 28 நவம்பர், 2015

மழைக்குள் குடை

மனசுக்குள் அடை

நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக அடாது பெய்துகொண்டிருக்கும்  மழையின் காரணமாக பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும், தாங்கொண்ணா துயரங்களுக்கும் ஆளான தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இதே போன்று பல ஆண்டுகளுக்கு முன் பெரு மழை பெய்த அந்த நாட்களில் நான் ஏழாம்  வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.

எட்டாம் வகுப்பு போகும் வரை பள்ளிக்கு நடந்துதான் செல்வேன்.

அதுவும் இதே போன்றதொரு நவம்பர்/டிசம்பர் மாதம்தான்.

வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் ஒரு  இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

பள்ளிக்கூடம் செல்ல பல பாதைகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பாதை வழியாகத்தான் தினமும் செல்வது வழக்கம், ஏனென்றால் அந்த பாதையில்தான் வாகன போக்கு வரத்து குறைவு.

அப்படி நான் போகும் பாதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வலதுபக்கம் ஒரு கோவிலும் அதை சுற்றி வனாந்திரமான இடமும், இடது புறத்தில் சாலையை ஒட்டியபடி பல குடிசை  வீடுகளும் இருந்தன.

பெரும்பாலும் அந்த வீடுகளில் யார் குடியிருக்கின்றனர், என்னும் எண்ணமோ கேள்வியோ அவர்களைப்பற்றிய எந்த சிந்தனையும் எனக்கு இல்லாமல் இருந்தது.

வழக்கமாக காலை 9.00 மணிக்கு இரண்டாம் மணி அடித்ததும் அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்புகளுக்கு நிர்ணயித்திருக்கும் இடங்களில், திறந்த வெளியில் இருக்கும் மேடைக்கு முன் (அசம்பிளி) வரிசையாக நிற்கவேண்டும்.

பிறகு தலைமை ஆசிரியர், மறை நூல் வாக்கியங்களை படிப்பார்.

தொடர்ந்து   பள்ளிக்கென பிரத்தியேகமாக இயற்றபட்டிருக்கும்  பாடல்களை பாடி இறைவணக்கம் சொல்லி, தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்து முடித்து அன்றைக்கான அறிவிப்புகள் முடிந்த பின்னர், இசைத்தட்டின் ஒலி முழங்க  அவரவர் வரிசையாக தத்தம் வகுப்புகளுக்கு சீராக அணி வகுத்து செல்வது வழக்கம்.

முதல் நாள்,ஞாயிறு, இரவு கனத்த மழை பெய்திருந்தது, அடுத்த நாள் காலையும் மிதமான மழை பெய்து கொண்டுதான் இருந்தது.

எனினும் பள்ளிக்கு கட்டாயம் போய்தான் ஆகவேண்டும், குடை பிடித்துகொண்டு பள்ளிக்கூடம் சென்று விட்டேன். 

(பன்னிரெண்டாம் வகுப்புவரை 
பட்டாளத்து கட்டுப்பாட்டில்
என்னிரெண்டு இமைகள் கூட - தானாய்
இயங்கிடவே தயங்கிடும் நல்
பாதிரிமார் பள்ளி வேதம் -என்
பாதை எல்லாம் பாரிஜாதம்.)

கவிதை  நினைவிருக்கின்றதா? அதே பள்ளிதான் 

அன்று வழக்கத்திற்கு மாறாக பள்ளி நிர்வாகம், அனைத்து மாணவர்களையும் அசம்பிளிக்கு செல்லாமல் நேரடியாக வகுப்புகளுக்கு செல்லும்படி அறிவிப்பு பலகையில் ஒரு அறிவிப்பு செய்திருந்தனர்.

அதன்படி அனைவரும் வகுப்புகளுக்கு சென்றுவிட்டோம்.

சிறிது நேரத்தில் இரண்டாம் மணி அடித்ததும் முதல் வகுப்பான "நல்லொழுக்கம்" பாடத்திற்கான ஆசிரியர் வந்திருந்தார்.

வணக்கத்திற்கு பிறகு எங்களை அமரசொல்லிவிட்டு, அமைதியாக இருங்கள் இன்னும் சிறிது நேரத்தில் தலைமை ஆசிரியர் ஒலி பெருக்கியில் பேச  போகிறார் என்றார்.

எங்கள் பள்ளியில் அனைத்து வகுப்புகளும் இன்டெர் காம் ஸ்பீக்கர்களால் இணைக்கபட்டிருக்கும்.

அறிவிப்புகளை தலைமை ஆசிரியரின் அறையில் இருந்தே அனைத்து வகுப்புகளுக்கும் தெரிவிக்கலாம்.

இதோ இப்போது தலைமை ஆசிரியர் பேசுகின்றார்.

" மாணவர்களே, காலைவணக்கம், இன்று  வானிலை மோசமாக இருப்பதாலும் பலத்த மழை குறித்த எச்சரிக்கை விடபட்டிருப்பதாலும் இன்றும் நாளையும் பள்ளிக்கு விடுமுறை விட சொல்லி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின்  ஆணை ஒன்று வந்து இருக்கின்றது. எனவே இன்று வருகைபதிவு முடிந்த பிறகு , உங்கள் யாவருக்கும் அதிகார பூர்வமான அறிவிப்பு எழுத்து மூலம் தரப்படும் அதை உங்கள் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுக்க வேண்டும்."

"இன்னும் 15 நிமிடங்களில் மணி அடிக்கப்படும் அப்போது மாணவர்கள் அனைவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் முந்தாமல், பத்திரமாக , கூடுமானாவரை சீக்கிரமாக - எங்கும் நிற்காமல் , குறிப்பாக மரத்தடிகளில் நிற்காமல் - தேங்கி நிற்கும் தண்ணீர் மற்றும் அறுந்து கீழே இருக்கும் மின் கம்பிகளில் கால் வைக்காமல் ,நேராக வீட்டிற்கு செல்லவும்,

விடுமுறை நீடிக்குமானால், அதை பள்ளி விளம்பர பலகையில் வெளிஇடுவோம், அல்லது அலுவலகத்திற்கு தொடர்புகொண்டும்  அறிந்துகொள்ளலாம்".

அறிவிப்பு முடிந்ததும் எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, அச்சிடப்பட்ட அறிவிப்பு தாளை வாங்கி, கணக்கு வீட்டுபாட புத்தகத்தில் வைத்து கொண்டு குடை பிடித்துகொண்டு வீட்டை  நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இப்போது மழையோடு  காற்றும் வீச ஆரம்பித்திருந்தது.

பிறகு என்ன நடந்து .....

கொஞ்சம் பொறுங்கள் , காற்று பலமாக அடிப்பதால், குடை மேல்  புறமாக மடங்கி விட்டது அதை சரி செய்துவிட்டு மீண்டும் தொடர்கிறேன்.

Image result for pictures of broken umbrellas in a rainy day


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

 1. வணக்கம் அரசே

  மலரும் நினைவுகள்.....
  அருமையாக இருக்கு சரி சரி காற்று நின்ற பின் தொடருங்கள்.

  அப்பவே கணக்கு பாடமா......

  காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியரே,

   வருகைக்கு மிக்க நன்றி.

   ஆமாங்க அப்பவே நான் நல்லா கணக்கு போடுவேன்.

   கோ

   நீக்கு
 2. மனதிற்குள் நல்ல மழை!! அப்புறம் என்ன நடந்தது? தொடர்கின்றோம்...எங்களிடம் குடை இல்லை....அந்தக் குடையில் எங்களுக்கும் இடம் கொஞ்சம் கொடுங்கள்....தொடர்கின்றோமே அதனால்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கு மிக்க நன்றி.

   என் மடங்கிய குடையில் இடமா? என் மன குடையில் தான் நீங்கள் ஏற்கனவே இடம் பிடித்துவிட்டீர்களே.
   சரி வாருங்கள் சேர்ந்தே நனைந்துகொண்டு பயணிப்போம்.

   கோ

   நீக்கு