பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.என்னவென்று நானுரைப்பேன்?

நண்பர்களே,

எமது முந்தைய பதிவான ஒரு கல்லில் மூன்று மாங்கனிகளில் இறுதியில், என்னுடைய கல்லூரி பழைய மாணவர் பேரவையில் இருந்து அழைப்பு வந்ததா என்பதை பிறகு சொல்கிறேன் என்று முடித்திருந்தேன்.

அதை தொடர்ந்து பல நண்பர்களும் வாசகர்களும் உலகம் முழுவதிலுமிருந்து அறிந்துகொள்ள ஆர்வம் காட்டிவருவதன் அழுத்தம் காரணமாக இதோ அதற்கான பதிலை பதிவாக்குவதில் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரே வளாகத்தில் கல்வி பயின்ற வரலாற்று சிறப்பும், முன்னாள் குடியரசு தலைவர் மாண்புமிகு சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் போன்ற சாதனையாளர்கள் பயின்ற பழுத்த பாரம்பரியம் கொண்ட கல்லூரியுமான அந்த வேடந்தாங்கல் விருட்சத்தின் பழைய மாணவர் பேரவையின் செயலாளரும் அதே கல்லூரியின் கணணி துறை பேராசிரியருமான முனைவர் ரசூல் அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு  வந்தது.

அழைப்பில் வந்தவர் என்னை விளித்த பாங்கு என்னை வியப்பில் ஆழ்த்தியதோடு கண்களில் நீர் முட்ட செய்தது.

ஆம், அவர் என்னை "அண்ணன்"  என்று அழைத்தார்.

 அதுவும் சரிதானே அவருக்கு முன் அந்த கல்லூரியில் படித்த அனைவரும் அவருக்கு மூத்தவர்கள் தானே, எனினும் உரிமையுடன் உறவு முறை வைத்து நம்மை யாரேனும் அழைக்கும்போது அதில் ஏற்படும் ஆனந்தத்தை எப்படி வர்ணிப்பது.

மற்ற பழைய மாணவர் அங்கத்தினரோடு சந்திக்க ஒரு ஏற்பாடு செய்துகொண்டிருப்பதாகவும் எனக்கு ஏற்புடைய நாள் எதுவாக இருக்கும் என்றும் அவர் கேட்டதற்குநானும் சொன்னேன் சில தேதிகளை.

சரி உங்களை பிறகு அழைக்கிறேன் என கூறி அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் அழைத்து நான் குறிப்பிட்டிருந்த நாட்களுள் ஒன்றை சொல்லி, அன்று கண்டிப்பாக சந்திக்கலாம், மாலை இரண்டு மணிக்கு கல்லூரிக்கு வந்துவிடுங்கள் என கூற, நானும் என் குடும்ப சகிதம் அன்று என் கல்லூரிக்கு சென்றேன்.

நுழைவு வாயிலிலேயே நின்றுகொண்டிருந்த முனைவர் ரசூல் (அவரை ஏற்கனவே - முன்னரே பார்த்ததினால்) அவர்கள் என்னிடம் வந்து கை குலுக்கி வணக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து முதல்வர் அறைக்கு அழைத்து சென்றார்.

முதல்வரை பார்த்ததும் மட்டில்லா மகிழ்ச்சி, அவர், நாங்கள் முதுகலை முதலாமாண்டு மாணவர்களாக இருந்த சமயத்தில்தான் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தவர்.

சற்று ஏறக்குறைய எங்களோடு வயதில் ஒரு சில ஆண்டுகளே மூத்தவராயிருந்ததினால் அவரை நாங்கள் பெரும்பாலும் அண்ணன் என்றுதான் அழைப்போம்.

அன்றும் அவரை. அப்படித்தான் அழைத்து வணக்கம் சொன்னேன், மிகுந்த உற்சாகத்துடன் எங்களை வரவேற்றவர், பல விஷயங்களை பேசிக்கொண்டே, எங்களுக்கு, பாதாம் பால், மசால் தோசை, முட்டை பப்ஸ், வாழைபழங்கள் போன்றவற்றை வாங்கி வர சொல்லி சாப்பிட வைத்து மகிழ்ந்தார்.

சாப்பிட்டு முடித்தபின்னர், முன்னாள் பேராசிரியர்- முனைவர் இன்ப எழிலன், கல்லூரியின் காசாளர் முனைவர் ஜோன்ஸ், முனைவர் குமார், என்னோடு கல்வி பயின்று இப்போது அதே கல்லூரி பேராசிரியராக இருக்கும் முனைவர் சத்திய பிரசாத், மற்றும் சில முன்னாள் மாணவர்களோடு  முதல்வர் அறையிலேயே உரையாடி மகிழ்ந்தோம். 

அப்போது  வெளியில் சென்றிருந்த பேராசிரியர் ரசூல் முதல்வரின் அறைக்குள் வந்து எல்லாம் தயாராக இருப்பதாக முதல்வரிடம் சொல்ல, முதல்வர், "வாங்க கோ வெளியில் போகலாம்" என்று சொல்லி அவரின் அறையை விட்டு வெளியில் அழைத்துவந்தார்.

அந்த நேரம் முதல்வர் அறையில் என்னோடு பேசிகொண்டிருந்த பேராசிரியர்களும் ,மற்ற சில பழைய மாணவர்களும், எனக்கு கை குலுக்கி, உங்களை சந்தித்ததில் மிக்க சந்தோஷம் , பார்க்கலாம், வாழ்த்துக்கள் என கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அங்கிருந்து பேசிக்கொண்டே கல்லூரியின் கலை அரங்க மண்டபத்திற்கு அழைத்து வந்தார் முதல்வர்.

அந்த மண்டபம், மனிதம் புனிதம் பதிவில் திரு ராஜா தலைமையில்  பட்டி மன்றம்  நடந்ததே அதே மண்டபம்தான்.

அந்த மண்டபம் மாணவ பருவத்தில் எங்கள் எல்லோருக்கும் வசந்த மண்டபம்.

அன்று அந்த மண்டப மேடையில் ஏழு நாற்காலிகள் போடபட்டிருந்தன, உள்ளே, மண்டபம்மாணவ மாணவியர் பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் என நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

 இன்று ஏதேனும் கலை நிகழ்ச்சியோ அல்லது சிறப்பு கூட்டமோ நடைபெற   இருப்பதாக உணர்ந்தேன்.

அரங்கத்திற்குள் முதல்வர் நுழைந்ததும்   மாணவ மாணவியர் மற்றும் கூடி இருந்த அனைவரும் எழுந்து நிற்க மேடை நோக்கி சென்ற முதல்வர் எல்லோரையும் அமர சொன்னார்.

நாங்களும் அங்கிருந்த முன் வரிசையில் அமர்ந்துகொண்டோம்.

நேராக மேடைக்கு சென்ற முதல்வர்  அங்கிருந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லி அனைவரையும் அமர சொல்லிவிட்டு. சில பெயர்களை சொல்லி மேடைக்கு வரும்படி சொல்ல கூடி இருந்தவர்களுள், கல்லூரி பேராசிரியர்களும் ஓரிரு வெளி ஆட்களும் மேடையில் போடபட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.

அவர்கள் அமர்ந்தபின்னர், நண்பர்களே, இந்த "சிறப்பு" விழாவிற்கு நம் அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கும் நமது முன்னாள் மாணவர் திரு "கோ"யில் பிள்ளை அவர்களை உங்கள் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன் என சொல்ல கூடி இருந்த அத்தனை  பேர்களும்  எழுந்து நின்று  கைதட்டி ஆரவாரம் செய்ய மேடையில் இருந்த பெரியவர்கள் அனைவரும் எழுந்து நிற்க , முதல்வர் என்னை கை நீட்டி மேடைக்கு வரும்படி அழைத்த அந்த தருணம், என்னை நான் மறந்தேன்.

எதிர்பாராத இந்த வரவேற்பு என்னை திக்குமுக்காட செய்தது.

மேடையில் இருந்த 7 இருக்கைகைகளுள்  நடு நாயகமாக போடபட்டிருந்த இருக்கையில் என்னை அமர சொல்லி பின்னர் அனைவரும் அமர்ந்த அந்த தருணத்தில் என்னுள் எழுந்த உணர்வுகளை என்னவென்று நானுரைப்பேன்.

நண்பர்களே, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் பிறகு தொடர்கிறேன்.

நன்றி மீண்டும் (சி)ந்திப்போம்.

கோ


12 கருத்துகள்:

 1. அடே டே...கூடவே எங்களையும் அழைத்து சென்று விட்டீரே, இந்த கல்லூரியின் முதல்வர் அறையில் தான் எத்தனை நினைவுகள். அடுத்த பதிவிற்காக காத்து கொண்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா,

   வருகைக்கும் உங்கள ஆவலுக்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
  2. விசு இந்த முதல்வரின் அறையில்தானே அன்று உங்கள் புத்தகவிழாவின்போது சந்தித்தோம் இல்லையா...

   நீக்கு
  3. அன்பிற்கினிய நண்பர்களே,

   நண்பர் விசுவின் புத்தக வெளியீடும் அதே கல்லூரி வளாகத்திலா நடை பெற்றது?...?....

   புதிய தகவலுக்கு மிக்க நன்றி. ஹிஹிஹி.........


   கோ

   நீக்கு
 2. பதில்கள்
  1. தனப்பால்,

   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 3. வணக்கம் அரசே,

  உண்மை தான் உறவு சொல்லி அழைப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனி தான்,,,,,,

  அத்தனை பேர்களும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்ய மேடையில் இருந்த பெரியவர்கள் அனைவரும் எழுந்து நிற்க , முதல்வர் என்னை கை நீட்டி மேடைக்கு வரும்படி அழைத்த அந்த தருணம், என்னை நான் மறந்தேன்.,,,,,,,,,,,,,

  வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன வேண்டும். நாம் படித்த கல்விக் கூடத்தில் நம்மைக் கொளரவிக்கும் போது,,,,,,

  முதலில் என் வாழ்த்துக்களும் உங்களுக்கு,,,

  தாங்கள் எவ்வளவு பெரியவர்,,,
  நான் ஏனோ சிறுப்பிள்ளைத் தனமாக சாரி,,,

  சரி சரி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு வாருங்கள்,,,

  வாழ்த்துக்கள்,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியர் அவர்களுக்கு,

   எந்தன் பதிவோடு பதிந்த உங்கள் உள்ளத்திலிருந்து உதிர்த்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள். நான் இன்னும் சிறியவனே.

   கோ

   நீக்கு
 4. நண்பர்களே, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் பிறகு தொடர்கிறேன்.///

  athu yaaruppaa enakku munnadi avasarappadurathu?:)
  paavam ko sir!
  ninga methuvave ezuthungal sir, ungalukku erpatta santhosham puriyuthu:)  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   வருகைக்கும், எனக்கு தொடர்ந்து எழுத கொடுத்த அவகாசத்திற்கும் மிக்க நன்றிகள்.

   இதோ வருகிறேன்.

   கோ

   நீக்கு
 5. ஆம்! நமது முன்னாள் கல்லூரி, பள்ளிகளில் நாம் நினைவுகூரப்பட்டு அழைக்கப்படும்போது ஏற்படும் மகிழ்வு மட்டற்றது. மெதுவாகவே உள்ளம் மகிழ்விலிருந்து கொஞ்சம் அமைதியானவுடன் எழுதுங்கள்.....அவசரமில்லை...நாங்களும் நிறைய தளங்கள் வாசிக்க வேண்டி உள்ளதே...4 நாட்கள் வர இயலாததால்...ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

   ஆம் மட்டற்ற மகிழ்ச்சி தருணம் தான் அது.

   அவகாசம் கொடுத்ததற்காக மீண்டும் நன்றி.

   நானும் உங்களுக்கு அவகாசம் தருகிறேன்.

   சீக்கிரம் வாங்க.

   கோ

   நீக்கு