பின்பற்றுபவர்கள்

வியாழன், 19 நவம்பர், 2015

"நூறாண்டுகாலம் வாழ்க"

டும் ...டும் ...டும் 

நண்பர்களே,

எல்லா திருமண விழாக்களில் வாழ்த்தி பேசும் பெரியவர்கள், மணமக்கள், பதினாறும் பெற்று நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதை நாம் கேட்டிருப்போம்.  அதுதான் மரபு ரீதியான திருமண வாழ்த்தும்கூட.


இப்படி பதினாறும் என்று சொல்வது பதினாறு வகை செல்வங்களை குறிப்பதாக ஆன்றோர்கள் கூற நாம் கேட்டிருக்கின்றோம்.  

சரி, நூறாண்டுகள் வாழ்க என்று சொல்லி வாழ்த்துவது என்பது, எனக்கு கொஞ்சம் குழப்பமாக தெளிவில்லாததாக இருக்கின்றது.

அதாவது, திருமணம் ஆன அன்றிலிருந்து இந்த தம்பதிகள் நூறாண்டுகாலம் வாழ வேண்டும் என்று சொல்லுகின்றார்களா?  அல்லது மாப்பிளையின் அறுபதாவது வயதில், அறுபதாம் கல்யாணம் நடத்துவதைபோல், மாப்பிளையின் நூறாவது வயது வரை தம்பதியினர் வாழ வேண்டும் என்று வாழ்த்து கின்றார்களா?  அல்லது மாப்பிளைக்கு நூறு கடந்தும் பெண்ணுக்கு நூறு கடந்தும் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றனரா என்பது எனக்கு புரியவில்லை.

ஒரு பேச்சுக்கு ,நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பெண்ணும் தம்பதியராய் வாழ வேண்டும் என்று சொல்வதாக வைத்துகொள்வோம்.

அப்படியானால், திருமணத்தின்போது மாப்பிளைக்கு வயது 25 என்று இருந்தால் அவர் இன்னும் 100 ஆண்டுகாலம் வாழ வேண்டும் என்று சொல்வதாக வைத்துகொண்டால்  100ஆண்டுகள்  கழித்து அவரின் வயது 125 . அப்போது பெண்ணுக்கு 22 வயது என்றால் 100ஆண்டுகள் கழித்து அந்த பெண்ணுக்கு வயது 122, இப்படி வாழ்த்துவது ஏதொ பேருக்கு வாழ்த்தும் வாழ்த்தாகவே எனக்கு படுகிறது. 

இதேபோலத்தான் இங்கே ஒரு இளைஞரும் நினைத்தார் போலும்.

எனவேதான் இதுபோன்ற அர்த்தமற்ற வாழ்த்திற்கு இடம் கொடுக்ககூடாது என்று எண்ணி இத்தனை நாட்கள் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து நூறு வயதை கடந்தபின்னர் திருமணம் செய்துகொள்வதே அர்த்தமுள்ள திருமணமாக இருக்கும் என்று கருதி, 

கடந்த ஜூன் மாதம் தனது 103 வது வயதில் (மாலை மாற்றி , தாலி கட்டி .... அக்கினி சுற்றி , அம்மி  மிதித்து, அருந்ததி பார்த்து, வேத மந்திரங்கள் நாதஸ்வரம் , மேளம் முழங்க,என்றெல்லாம்  இல்லாமல்) தமது 91 வயது பெண் தோழியின் விரலில் மோதிரம் அணிவித்து ஊரறிய உலகறிய , இவர்கள் இருவருக்கும் இதுவரை(!!!!) பிறந்த 7 பிள்ளைகளும் 15 பேர பிள்ளைகளும்,7 கொள்ளு பேர பிள்ளைகளும் புடை சூழ,

"பதினாறும் பெற்று நூறாண்டுகள் கடந்து பெரு வாழ்வு வாழ்க " என்று எல்லோரும் அர்த்தத்துடன் சொன்ன வாழ்த்தை காதுகுளிர கேட்ட வண்ணம் ,,

தன் 'புது' மனைவியும் 100 ஆண்டுகளை கடந்து தன்னோடு இணைந்து வாழ போகும் அந்த இனிய நாட்கள் குறித்த இன்ப நினைவுகளோடு அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்று திளைக்கும் இந்த பிரிட்டிஷ் தம்பதியினர் "உலகின் அதிக வயதான தம்பதியினர்" எனும் கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கின்றனர். 

திருமண அனுபவம் பற்றி "புது"மணமகள் சொல்லும்போது, தனக்கு வெட்கத்தைவிட "ஏதோ ..ஏதோ... ஏதோ .... ஒரு மயக்கம்" தான் வந்தது என்கிறார், தன் அன்பு கணவரின் தோள் சாய்ந்தவரே.

எத்தனை பேருக்கு இந்த "பேறு"  கிடைக்கும்?  ஒரு வேளை அடுத்த ஜென்மத்தில்  கிடைக்குமோ என்னமோ?

Image for the news result

மணமகன்: திருநிறைச்செல்வன் ஜார்ஜ் கிர்பி

மணமகள்: சௌபாக்கியவதி டோரியன் லக்கி (உண்மையிலேயே லக்கிதான்) 

"மங்களம் பொங்கி மகிழ்வுறும் இந்நாளில்
சங்கமமாகும் அன்பு சந்தன மலர்களே - நீவீர்
மங்காப்புகழுடனே - இம்மாநிலமீதினிலே
சங்கீதம்  வாழ்வதுபோல் சாதனைகள் பலபடைத்து 
எங்கும் நிறை இறையருளால் இனிதுடனே வாழ்கவென்று 
எழுத்துலக பதிவர் சார்பாய் ஏறெடுத்தேன் எம் வாழ்த்துதனை".

வாழ்க நீவீர் பல்லாண்டு !

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

12 கருத்துகள்:

 1. இவர்களைப் பற்றி எங்கேயோ வாசித்த நினைவு! என்றாலும் இப்போது உங்கள் பதிவிலிருந்து எங்கள் மனதில் மீள் பதிவு போல் பதிந்தது. !! ஆச்சரியம்தான். வாழ்க தம்பதியர்! இந்தப் பேறு கிடைப்பது ரொம்ப ரொம்ப அரிது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்களே,

   ஜூனில் திருமணம் நடந்த இவர்களுக்கு கடந்த வாரம்தான் கின்னஸ் அங்கீகாரம் கிடைத்து.

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 2. அந்தக் காலத்தில் ஒருவேளை சராசரியாக 150 வயது வரை வாழ்ந்தார்களோ என்னவோ...

  Anyways, Happy married life to George & Dorian!

  பதிலளிநீக்கு
 3. இருக்கலாம். அதையே இப்பவும் சொல்லிகொண்டிருப்பது கொஞ்சம் வேடிக்கையாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

  புது மண தம்பதியருக்கு உங்கள் வாழ்த்து போய் சேரட்டும்.

  வருகைக்கு மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 4. இந்த இளம் ஜோடிகள் ? 16-ம் பெற்று பெறுவாழ்வு வாழ்க...
  மீண்டுமா ? என்று கேட்காதீர்கள் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   உங்கள் வா(க்கு)ழ்த்து பலிக்கட்டும்

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 5. பதில்கள்
  1. நண்பரே,

   தனப்பால்,

   மனதார நீங்கள் வாழ்த்தும் இந்த வாழ்த்தொலி அவர்களை சேரட்டும்.

   கோ

   நீக்கு
 6. வணக்கம் அரசே,
  பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாண்டு வாழ்க நீங்கள்,,,,,,
  இது கூட நல்லாத்தான் இருக்கு,
  வாழ்த்துக்கள் அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியரே,

   என்னை வாழ்த்தும் உங்கள் வாழ்த்துகள் உங்களுக்கும் உரித்தாகட்டும்.

   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 7. வித்தியாசமான தம்பதிகள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தளிர்,

   ஆம் வித்தியாசமான தம்பதியினர்தான்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு