பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 10 நவம்பர், 2015

"அப்பாவின் காலணிகள்".

இன்னும் வரவில்லை!!

நண்பர்களே,

காலையில் எழுந்து குளித்து முடித்து , காலை உணவு முடித்துவிட்டு, ஒன்றாம் வகுப்பு பள்ளிக்கூட பையை எடுத்துகொண்டு , அப்பாவிற்கும் அம்மாவிற்கும் டாட்டா சொல்லிவிட்டு வாசல் இறங்கி நடக்கும் போதும்  பலமுறை திரும்பி திரும்பி அப்பாவையும் அம்மாவையும் பார்த்து,


பார்வையில் இருந்து அவர்களின் உருவங்கள் மறையும் வரை மீண்டும் மீண்டும் கையசைத்து காட்டிவிட்டு, தெருவில் நடந்து பள்ளி செல்லும் பாதையை அடைந்து , அதே பாதையில் பள்ளிக்கூடம் செல்லும் (வீட்டுக்கு பக்கத்திலே ஒரு பத்து  நிமிட நடைதூரம்தான் பள்ளிக்கூடம்) மற்ற பிள்ளைகளுடன் இணைந்து பேசிக்கொண்டே போனதையும்,

மத்திய உணவிற்காக வீட்டுக்கு வரும்போது அம்மா மட்டும் வீட்டில் இருப்பதையும் அப்பா இல்லாதிருப்பதையும் கண்டு "அப்பா எங்கே" என கேட்டதையும்,

அப்பா பள்ளிக்கூடம் போய் இருக்கின்றார் என அம்மா சொன்னதையும், "இல்லையே அப்பா பள்ளிக்கூடம் வரவில்லையே" என நான் சொன்னதையும், இல்லப்பா அப்பா பள்ளிக்கூடம்தான் போய் இருக்கின்றார் பள்ளிக்கூடத்தில் இருந்து இன்னும் வரவில்லை என அம்மா மீண்டும் சொன்னதையும் புரியாமல், மனம் ஏற்காமல், 

ஒன்றும் விளங்காமலே சரி என தலை ஆட்டிவிட்டு மத்திய உணவை அவசர அவசரமாக அருந்தி விட்டு மீண்டும் இப்போது அம்மாவிற்கு மட்டுமே டாட்டா சொல்லிவிட்டு பள்ளிக்கு சென்றாலும் கவனமும் சிந்தனையும் அப்பாவையே நினைத்துகொண்டிருந்ததையும் , 

பள்ளி முழுவதும் இங்குமங்கும் சென்று தேடியும் காணாமால் மாலை வீடு திரும்பியதும் வாசலில் இருக்கும் அப்பாவின் காலணியை பார்த்ததும் ஏற்பட்ட ஆனந்தமும் , மகிழ்ச்சியும் உள்ளத்தை ஆட்கொள்ள,

உள்ளே ஓடிச்சென்று அப்பாவின் கால்களை அணைத்துக்கொண்டு கொஞ்சம் நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்த என்னை அம்மா வந்து அழைக்கும் வரை தலையை தடவி கொடுக்கும் அப்பாவிடம் , 

நீங்கள் பள்ளிக்கூடம் போய் இருந்ததாக அம்மா சொன்னார்கள்  ஆனால் உங்களை நான் பள்ளியில் பார்க்க வில்லையே  , எந்த இடத்தில் இருந்தீர்கள்? என கேட்டதையும்,

அவரும், தான் பள்ளிக்குத்தான் சென்றிருந்ததாகவும் அது வேறு பள்ளி என்றும் தான் அங்கு ஆசிரியராக வேலைசெய்வதாகவும் சொன்ன பிறகே ,பள்ளிக்கூடம் என்றால் நான் படிக்கும் பள்ளி மட்டுமல்லாமல் ஊரில் வேறு பள்ளிகளும் இருப்பதையும்,

பள்ளிக்கு செல்வதென்றால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களையும் சேர்த்துதான் சொல்லுகின்றனர் என்பதும் புரிந்ததையும்,(உடன்பிறப்புகள் விடுதில் (அப்படினா என்ன???) படித்துகொண்டிருந்தனர்))

அன்று துவங்கி  கல்லூரி படிக்கும் காலங்கள் வரை , நான் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது வாசலில் இருக்கும் அப்பாவின் காலணிகளை பார்த்ததும் உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடிய  ஆனந்த வெள்ளம் ஏற்படுத்திய  இனிய தடம்களில் ஒரு பெருங்கல்  தடங்கலாய் வந்து முளைத்ததும் ஆண்டுகள் பல கடந்தும் மீண்டும், இன்று,  என் நினைவில் முட்டி முகிழ்த்தன: 

அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.00 மணியளவில் லேசாக ஆரம்பித்த மழை சற்று பலம் கூடிக்கொண்டிருக்க, திடீரென சுகவீனமான அப்பாவை, மருத்துவ மனை கொண்டு சென்றோம்.

முடியாமல், பேச்சு கூட இல்லாமல், ஸ்ட்ரெச்சரில்  இருந்த அப்பாவை முடிந்தவரை எல்லா பரிசோதனைகளுக்கும் ஆட்படுத்தி,பின்னர் ஒரு தனி அறைக்குள் அழைத்து சென்றனர், அப்போது மணி இரவு 10.30.

வெளியில் இருந்த நானும் என் அம்மாவும்  சகோதர சகோதரிகளும் அப்பாவிற்கு ஒன்றுமில்லை, சரியாகிவிடும் என்று நினைத்து மனதிற்குள் இறைவனிடம் வேண்டி கொண்டிருந்தவேளையில் , அந்த தனி அறையில் இருந்த ஒரு மருத்துவ உதவியாளர், அப்பாவை மேற்கொண்டு பரிசோதிக்க வசதியாக அவரது, ஆடைகளை கழற்றி விட்டு மருத்துவமனை ஆடை அணிவித்திருப்பதாக  சொல்லி அப்பாவின் ஆடைகளை  சுருட்டி கொடுக்க அதை அம்மா வாங்க, வேறொரு கையில்  பிடித்திருந்த அப்பாவின் காலணிகளை  என்னிடம் கொடுத்தார்.

எப்போதும் வீட்டு வாசலில், பார்த்தவுடன் நெஞ்சிலே பரவசமும் ஆனந்தமும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் அந்த காலணிகள் இன்று என் கைகளில் இருந்தும் ஏனோ எனக்குள் எந்த மகிழ்ச்சியும் ஏற்படுத்தவில்லை.

இருந்தாலும் அப்பாவின் காலணிகளை மார்போடு  அணைத்து கொண்டிருந்தேன், உள்ளே என்னுடைய அப்பாவின் ஆத்தும ஒளி விளக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணைந்துகொண்டிருந்த விவரம் அறியாதவனாக.

சற்று நேரத்தில், பதினோரு மணி அளவில், உள்ளே இருந்த  கதவை திறந்துகொண்டு வெளியில் வந்த மருத்துவர்களின் முகத்தில் எந்த சலனமும் இன்றி, அம்மாவின் கையை பிடித்து, மன்னிக்கணும்  எங்களால் காப்பாற்ற முடியவில்லை, என்று ஒரு பெரும் பாறாங்கல்லை எங்கள் எல்லோரது தலைகளிலும் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

சற்றும் எதிர்பார்க்காத  இந்த செய்தியை கேட்டதும் குடியில் இடி விழுந்ததாக எல்லோரும் அதிர்ந்துவிட்டோம், அப்போது வானத்தின் இடியுடன் பெரும் மழையும் சேர்ந்து எங்களோடு அழுதது. 

செய்வதறியாது அழுது புலம்பிக்கொண்டே, அப்பா கிடத்தி வைக்கபட்டிருந்த அந்த அறைக்குள் சென்று, அம்மா அவரது உடலை கட்டிக்கொண்டு அழ என் சகோதரனும் என் சகோதரிகளும் அவரது உடலையும் கால்களையும் கட்டிக்கொண்டு அழ, நான் செருப்பு இல்லாமல் இருந்த அப்பாவின் பாதங்களில் அவரது காலணிகளை அணிவித்துவிட்டு இரு பாதங்களையும் பிடித்து முத்தமிட்டு அழுத அந்த நாளின் முப்பத்தி ஓராவது நினைவு நாள் இன்று, அதாவது பதினோராம் மாதம் பதினோராம் தேதி இரவு பதினோரு மணி  (11/11-11.00 மணி). 

அதன் பிறகு, அப்பாவின் காலணிகள் இல்லாமல்  இருக்கும் வீட்டு வாசலை பார்க்கும்போதெல்லாம் அப்பா இன்னும் பள்ளிக்கூடத்தில் இருந்து வரவில்லை என்று  அம்மா அன்று சொன்னதையே இன்றும்  மனதுக்குள் நினைத்து என்னை நானே சமாதனம் படுத்தி பழகிக்கொண்டேன்.

இன்னமும் எங்கள் வீட்டில் ,ஒரு நினைவு சின்னமாக - பொக்கிஷமாக போற்றி, அம்மாவின் அரவணைப்பில், பாதுகாக்கப்பட்டு வருகிற அந்த காலணிகள் அணிந்த எங்கள்  அப்பாவின் பாதங்களுக்கு, இந்த பதிவினை நினைவஞ்சலியாக கண்ணீரோடு ஏறெடுடுக்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ19 கருத்துகள்:

 1. அருமையான தந்தை. தங்கள் வளர்ப்பில் இருந்தே தெரிகின்றது. மேலோகத்தில் இருக்கும் அவரின் புன்சிரிப்பை என்னால் தெளிவாக உணரமுடிகின்றது .

  பதிலளிநீக்கு
 2. நண்ப்ர் கோ அவர்களுக்கு தங்கள் அப்பாவின் நினைவுநாள் பற்றி முன்பு ஒரு பதிவு படித்த நினைவு. 11.11. 11 மணி என்று ....

  இன்று அவரது நினைவு நாள்..நெகிழ்ந்துவிட்டது மனது. வாசிக்கும் போது அதில் லயித்து மனதில் காட்சிகளாய் விரிய, கண்ணில் நீர் நிறைந்தது.

  எங்கள் அஞ்சலிகளும் அவரது பாதத்திற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கும் தங்களின் அஞ்சலிக்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 3. தந்தைப் பாசம் உணர முடிகிறது! அவரது ஆசிகள் எங்கிருந்தாலும் உங்களுக்கு கிடைக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தளிர்,
   வருகைக்கும் உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்

   நட்புடன்

   கோ

   நீக்கு
 4. கதை என்று நினைத்து படிக்கத் தொடங்கினேன் முடிவில் தங்களது சொந்த நிகழ்வு அறிந்து மனம் கணத்து விட்டது நண்பரே...
  மனம் அமைதி கொள்க...

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கு மிக்க நன்றி நண்பா.

  கோ

  பதிலளிநீக்கு
 6. கில்லர்ஜி போலவே நானும் கதை என்றே நினைத்தேன். பின்னர்தான் அது உண்மையான நிகழ்வு என்று தெரிந்தேன். அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கு மிக்க நன்றி, செந்தில்குமார்.

  கோ

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் அரசே,
  தங்கள் பழய பதிவுகளில் படித்துள்ளேன். அவரின் ஆன்மா இளைப்பாற வேண்டுகிறேன்.
  சில காரணங்களால் உடன் வர இயலவில்லை.

  பதிலளிநீக்கு
 9. நெகிழ்ச்சி ..........

  காலம் .............

  பதிலளிநீக்கு
 10. அப்பாவின் நினைவுகள் எப்போதும் கண்ணீர் வர வைக்கும்....பதினைந்து வருடங்களாக நான் என் கல்யாண வீடியோவைப்பார்ப்பதில்லை....அதற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் அப்பாவின் நடமாடும் உருவம் வருவதைப்பார்க்க முடியாமல் போவது தான்...
  எரியூட்டும் முன்னே அவரின் முடி ஒன்றை பிடுங்கி வைத்திருந்தேன்....காணாமல் போய்விட்டது...அப்பா பற்றிய உங்கள் பதிவு என்னையும் ஆழ்த்தியிருக்கிறது...அதை எப்படி துக்கம் என்று சொல்வது...நான் அழுதால் அவர் தாங்கமாட்டாரே....அப்பா...அப்பா....
  இரு பிள்ளைகளின் அப்பனாய் உங்கள் அருமை தெரிகிறது....

  நன்றி....அப்பா ..
  மன்னிக்கவும்
  கோயில்பிள்ளை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   பதிவு உங்கள் மனதில் ஒரு உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியதை உணர்கிறேன்.
   தந்தையை நினைத்து எப்போதும் நான் கலங்குவது உண்டு. சில வேளைகளில், வானத்தை அண்ணாந்து பார்த்து என் தந்தை என்னை பார்த்துகொண்டிருப்பதாக எண்ணி அவரோடு மானசீகமாக நான் , "ஏனப்பா எங்களை விட்டு அத்தனை சீக்கிரம் மறைந்து விட்டீர்கள்" என்று பேசுவதுண்டு.

   பல நாட்கள் என் தலையணை என் கண்ணீரால் ஈரமாவதும் உண்டு, இன்னமும்.

   அம்மாவிற்கு இணையாக யாரையும் கருதமுடியாது என்று சொல்வார்கள், அந்த கூற்று அப்பாவிற்கும் பொருந்துமே.

   அவர்களின் நினைவாய் நாம் எடுத்து வைத்திருந்த விலை மதிக்க முடியாத ஞாபக பொருட்கள், காணாமல் போனாலும் , நம் நினைவு நம்மை விட்டு போகும்வரை ,அவர்களின் நினைவு நம்மில் என்றும் நிலைத்திருக்கும் என்று என்னுடைய கவிதை பதிவு - " பெற்றோர் போற்றல்" எனும் தலைப்பில் சொல்லி இருப்பேன் .

   வருத்தபடாதீர்கள், நம் அன்பும், உணர்வும் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் பாசமும், மரியாதையையும் அவர்கள் அறிவார்கள், நம்மை ஆசீர்வதித்துகொண்டிருப்பார்கள்.

   நட்புடன்.

   கோ

   நீக்கு
 11. Brother,

  I remain speechless after reading your soulful, emotional feelings.

  ko.

  பதிலளிநீக்கு