பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2015

நிகழ்ச்சி- புகழ்ச்சி - இகழ்ச்சி !!!

கௌரவ மாலைகள்

நண்பர்களே,

தொலை காட்சியில் சில நேரடி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மனம் மகிழ்வதும் சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மனம் நெகிழ்வதும் இன்னும் சில காட்ச்சிகளை பார்க்கும்போது உள்ளத்தில் வேதனையும் துயரமும் ஏற்படுவதுமுண்டு.


இப்படி நமக்கு இன்பமும் , மகிழ்வும், ஆனந்தமும் கொடுக்ககூடிய அனேக நிகழ்ச்சிகள் இருந்தாலும்  நம்மை துயரத்திற்குள்ளாக்கும் சில நேரடி காட்ச்சிகள் இருப்பதை நாம் தவிர்க்கமுடியாததாகவும் அமைகின்றன.

அவற்றுள், இயற்கை பேரழிவுகள், சாலை, ரயில் விமான விபத்துக்கள் போன்றவற்றை பார்க்கும்போது, உள்ளபடியே உள்ளம் வேதனை அடைகின்றது.

அதே வரிசையில், நமக்கு தெரிந்த , உலகம் அறிந்த சில பிரபலங்கள், மத, மற்றும் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களின் சடலங்கள் கிடத்தி வைத்திருப்பதையும் இறுதி யாத்திரை, ஊர்வலங்களையும், அவை தகனம் செய்ய படுவதையும் பார்க்க நேரிடும்போது  உள்ளமும் நமது உடலும்கூட ஒரு இனம் புரியாத அதிர்ச்சிக்கு உள்ளாவதை  நம்மில் யாரும் மறுக்கமுடியாது.

அதுபோன்று, உயிரற்று வெறும் உடலாக மட்டுமே கிடத்தி வைக்கபட்டிருக்கும் அந்த உடல்கள் நமக்கு உணர்த்தும் ஒரு பேருண்மை:

எத்தனை பெரும் புகழும், செல்வமும், கல்வியும் ஞானமும் அறிவும் , பதவிகளும் பட்டங்களும், படை பலமும், பணபலமும் ஒரு மனிதன் தான் வாழும்போது பெற்றிருந்தாலும்  கடைசியில் அவன் கொண்டுபோவது ஒன்றுமில்லை.

அவனுக்கு என்னதான் வசீகரமான பெயர்களும் , பட்டப்பெயர்களும் கௌரவ பட்டங்களும், அடைமொழி பெயர்களும் கொடுக்கப்பட்டு, அதன்படி அழைக்கபட்டிருந்தாலும் உயிரற்ற அந்த உடலுக்கு எந்த  பாகுபாடுமின்றி  -வித்தியாசமுமின்றி பொதுவாக  அளிக்கப்படும் பெயர் "என்ன" என்பதும் தான்.

இதுபோன்ற ஞான - தத்துவ -  உண்மைகளை மனதில் கொண்டு இனியேனும் நாம் எப்படி தலைகனமும், பணத்திமிரும், ஞான செறுக்கும் , புகழ் விரும்பிகளாகவும் படைபலத்தை பலர் கண்டு பயப்ப்படும்படியாகவும் இல்லாமல் . முடிந்தவரை தாழ்மையையும், அன்பையும், மனித நேயத்தையும் , பிறர்க்கு உதவும் சிந்தையையையும் கொண்டவர்களாகவும் திகழவேண்டும் என்பதையும் இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு புலபடுத்துகின்றன.

இப்படி மரணமுற்ற பிரபலங்களுக்கும் பிரபலமாகாத சாதாரணவர்களுக்கும் இறுதி மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்த செல்லும் வாழும் பிரபலங்கள் அந்த மரண வீட்டிலும் நடந்துகொள்ளும் சில செயல்கள் உண்மையிலேயே எனக்கு  கொஞ்சம் இழிவாகவே தெரிகின்றது.

காரில் வந்து இறங்கும் அவர்கள் தங்கள் கைகளில் மொபைல் போனுடனும், சில வேளைகளில் பேசிக்கொண்டும் வருகின்றனர், ஒருவேளை அவசரமான முக்கியமான தகவல் பரிமாற்றமாககூட இருக்கலாம் , அல்லது அந்த நிகழ்வு தொடர்பான அடுத்த ஆயத்த வேலைகள் தொடர்பான சம்பாஷணைகளாக கூட இருக்கலாம், சரி போகட்டும்.

ஆஜானுபாகுவாக, கட்டு மஸ்த்தாக, ஆரோக்கியமாக, வீர நடை போட்டு நடந்து வரும் சில பிரபலங்கள் உடல் கிடத்தி வைக்கபட்டிருக்கும் ஹால் வரை கை வீசிக்கொண்டு வந்து பிறகு  உடன் வந்தவர் சுமந்து வந்த மாலையை இவர்கள் வாங்கி அந்த அமரர் உடல்மீது சார்த்தி வணங்குவது எனக்கு என்னமோ  கொஞ்சம் இழிவானதாக இருக்கின்றது.  அந்த இடத்தில்கூட இவர்கள் தங்களது கௌரவத்தை , மேட்டிமையை காட்டவேண்டுமா என தோன்றுகின்றது.

காரிலிருந்து வரும்போதே அல்லது சம்பந்தப்பட்ட வீட்டு வளாகத்திலிருந்தே தாங்களே அந்த மாலைகளை சுமந்து வந்தால் என்ன , கௌரவம் குறைந்துவிடுமா?

உண்மையாக வருந்தி, உண்மையாகவே நீங்கள்   உங்களது இறுதி அஞ்சலியை செலுத்துவதாக இருந்தால் , உங்களால் சுமக்க முடியுமானால் தயவாக நீங்களே சுமந்து வந்து அதை அமரருக்கு செலுத்துவீர்களேயானால் அதுவே நீங்கள் மரணித்தவர்களுக்கு செய்யும் உண்மையான - உன்னதமான அஞ்சலியாக அமையும்.

உங்கள் கெளரவம், பிரபலம், அந்தஸ்த்து, பணம், படை, பலம் காட்ட வேறு இடங்களை பயன்படுத்திகொள்ளுங்கள்.

உங்கள் எல்லாவிதமான புகழ் கௌரவம், செல்வ செழிப்பு, அந்தஸ்த்து , மொபைல் போன் எல்லாவற்றையும் உங்கள் காரிலேயே வைத்து கதவை சார்த்திவிட்டு ஒரு சாதாரண மனிதனாக வந்து உங்கள் மரியாதையை  செலுத்துங்கள், உங்கள் மரியாதை இன்னும் உயரும் மக்கள் மனதில்.

அடுத்ததாக புகைபடமெடுப்பவர்கள் செய்யும் ஒழுங்கீனம் என்னை இன்னமும் வேதனைக்குள்ளாக்குகின்றது.

அமைதியாக இருந்து அஞ்சலி செலுத்தப்படவேண்டிய இடத்தில், பெரும் கூச்சலிட்டு, வந்திருக்கும் பிரபலங்களை புகைப்படமெடுக்க , சார்ர்ர்ர்ர்ர் , சார்ர்ர்ர்ர்ர், கொஞ்சம் இங்க பாருங்க, இப்படி திரும்புங்க,,  ஏய்..... டேய்;;;;; கொஞ்சம் ஒத்துடா..... மறைக்காதே....மஞ்சா சட்டை....  தூரம்போடா..... என்று மற்ற புகைப்பட காரர்களை அதட்டி அந்த இடத்தின் தன்மையை அலங்கோல படுத்தி, மரித்தவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அவ மரியாதையாக நடந்துகொள்ளும் அநாகரீக செயலும் என்னை மனம் நோக செய்கிறது.

இனியேனும் இடம் பொருள் ஏவல் பண்பை தங்களிடம் கொண்டு நடந்துகொள்வார்களா?

நண்பர்களே,  மனசில தோன்றியதை உங்களோடு பகிர்ந்துகொண்டேன், அவ்வளவுதான்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

12 கருத்துகள்:

  1. உறைப்பவர்கலுக்கு உறைத்தால் சரி, பதிவிட்டமைக்கு நன்றி சுரேந்திரன் குண்டூர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குண்டூர் சுரேந்திரன்,

      தங்கள் வருகைக்கும் தங்களின் முதல் பின்னூட்ட கருத்திற்கும் மிக்க நன்றிகள்.,, வாருங்கள் எமது தளத்திற்குள் சந்திப்போம்.

      கோ

      நீக்கு
  2. கொண்டுபோவது ஒன்றுமில்லை தெரிந்தும் இங்கு ஆசை யாரை விட்டது.

    ம்ம்ம் பிரபலங்கள் பத்திச் சொல்ல என்ன இருக்கு. அவர்கள் அப்படித்தான்:)

    நண்பர்களே, மனசில தோன்றியதை உங்களோடு பகிர்ந்துகொண்டேன், அவ்வளவுதான்.///
    ம்ம்ம் நல்லா இருக்கு சார் பதிவு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      பதிவின் சாரம் குறித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. மிகச்சரியாக சொன்னீர்கள்! துக்க வீட்டில் இவர்களின் அலும்பல்களும் அட்டகாசமும் ஓவராகத்தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளிர் சுரேஷ்

      வருகைக்கும் தங்கள் கருத்து என்னோடு இசைந்து போவதாக இருப்பதற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  4. விடயம் படிக்க மனதுக்கு நெகிழ்ச்சியாய் இருந்தது நண்பரே

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

    கோ

    பதிலளிநீக்கு
  6. மரண வீட்டில் நடக்கும் அலம்பல்களும், அலப்பறைகளுக்கும் சொல்லி மாளாது. ஊடகங்கள் உட்பட.

    அதனால் தான் சமீபத்தில் நடிகர் விவேக் அவர்கள் தனது மகன் மரணத்தின் போது தங்கள் குடும்பம் பெரும் துயரில் இருப்பதாகவும் ஊடகங்கள் வரவேண்டாம் என்றும் பணிவுடன் அறிக்கை விடுத்திருந்தார். அவர் அனுமதிக்கவில்லை. நல்லதொரு முடிவு எடுத்திருந்தார்.

    நல்லதொரு பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு
  7. நடிகர் விவேக்கின் மகன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
    நல்ல முடிவெடுத்திருக்கின்றார்.
    தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பர்களே.

    கோ

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அரசே,
    நான் பல நாட்கள் இதைப் பற்றி யோசித்தது உண்டு, நிகழ்வைப் பார்க்கும் போதே சற்று கடுமையாக பேசுவேன். ஏன் அந்த மாலையைத் தூக்கி வந்தால் கை உடைந்து விடுமோ அவர்களுக்கு என்று,,,,,
    ஆனால் வயதானவர்கள் எனும் போது சரி,,,,,,,
    மனித மனம் பகட்டுக்கும், வெட்டி பந்தாவுக்கும் ஆசைப் படும் மனம்,,,,,, இதில் என்ன பந்தா எனத் தெரியவில்லை,,,
    நல்ல பகிர்வு ,
    நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் அவர்களுக்கு,

      தேங்க்ஸ் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா.

      இந்த சிந்தனை எனக்கு வெகு நாட்களாகவே இருந்துகொண்டிருந்தது, உங்களை போலவே.

      இப்போதுதான் எழுதும் வாய்ப்பு கிட்டியது.

      வருகைக்கும் தங்களின் கருத்தொருமித்த பின்னூட்டத்திகும் மிக்க நன்றிகள்

      தீபாவளி வாழ்த்துக்கள்.

      நன்றி

      கோ

      நீக்கு