பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 ஜூன், 2020

முன்மொழிந்"தேன்"!.



 வழிமொழிக !!.
நண்பர்களே,

ஆதாம் ஏவாள் காலம்தொட்டு மனித சமூகம் தங்கள் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள பரிபாஷைகள் அல்லது பரிவர்த்தனைக்கான ஏதோ ஒரு மொழியை கொண்டிருந்திருக்க வேண்டும்.

அப்படி ஆதி மனிதன் என்ன மொழி பேசினான் என்பது இன்றளவும் ஒரு ஆய்விற்குரிய விடயமாகவே இருக்கின்றது.

மனித குலம் சிறு சிறு குழுக்களாக வாழ ஆரம்பித்த அந்த பரிணாம வளர்ச்சி காலத்தில் தங்களுக்குள் சம்பாஷித்துக்கொள்ள  ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஒலியை பாஷைகளாக பயன்படுத்தி வந்ததாக வரலாறும் சமூக அறிவியலும் சொல்லுகிறது.

மனித அறிவும் நாகரிகமும் துளிர்த்து  பெறுக ஒலிமாற்றங்கள் , ஏற்ற இறக்கங்கள்,அழுத்த மென்மைகள் வித்தியாச உச்சரிப்புகள் என விரிவாக்கம் அடைந்து இருக்கின்றது. 

இவ்வாறு குழுக்களாக இருந்த மனிதர்கள் காலப்போக்கில் இடப்பெயர்ச்சி எனும் இடைச்செறுகளுக்கு ஆளானபோது அவனது மொழியும் சற்று பழுது பார்க்கப்பட்டும் பட்டைதீட்டப்பட்டும் இருக்கின்றது.

அதனடிப்படையில்   இலக்கண, இலக்கியங்கள் வரையறைகள் வாய்ப்பாடுகள் என அந்த ஆதி மனிதனின் சிறு வட்டத்திலிருந்த  ஒலி மொழி இன்று ஒளிவட்டத்திற்குள்(HALO) வைத்து போற்றப்படும்  அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது.

இன்றைய நிலையில் பறந்து விரிந்த இந்த உலகில் பலகோடி மக்கள் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசும் பெரும் குழுக்களாக வாழ்ந்து வருகிறாரகள்.

மனிதர்கள், நிறம்,தோற்றம் போன்ற ஒருசில கூறுகளில் மட்டுமே வித்தியாசமாக இருந்தாலும், அவயவங்கள் , நடை ,உடை ,பாவனைகள்,மானம் அவமானம், பெயர் புகழ் , செல்வம், படிப்பு,வேலை,குடும்பம்,அந்தஸ்த்து  பேராசை,பொய் புரட்டு திருட்டு,கொலை கொள்ளை ஜாதி மதம் இன்னும் இதுபோன்ற பல கூறுகளில் நூற்றுக்கு நூறு எந்தஒரு வித்தியாசமும் இன்றியே இருக்கின்றான்.

அமெரிக்காவானாலும்,ஆப்பிரிக்காவானாலும்,ஆசியாவானாலும்,ஐரோப்பாவானாலும் தூரத்திலிருக்கும் துருவப்பிரதேசமானாலும் மனிதர்கள் எல்லோரும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றார்கள் மேற்சொன்ன ஒருசில வித்தியாசங்கள் தவிர.

இப்படி எல்லாவற்றிலும் ஒரேமாதிரியாக இருக்கும் மனிதரிடையே இத்தனை மொழிகள் இருக்கும்போது , தோற்றத்திலும், குணத்திலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும் விலங்குகளுக்குள்  ஒரே மொழியா இருக்கக்கூடும்?

குரங்கு மொழி  , நாய் பேசாது ,யானையின் மொழி  குதிரை பேசாது   முயலின் மொழி  முள்ளம்பன்றி பேசாது , குயிலின் மொழி  மயில் பேசாது ஆனால் ஒவ்வொரு விலங்கும் அதனதன் மொழியில் அதனதன் இனத்துடன் சம்பாஷணை செய்துகொள்ளும் என விலங்கியல் வித்தகர்கள் விவரிக்கின்றார்.

எதிரும் புதிருமாக வரிசையில் செல்லும் எறும்பும் எறும்பும் தகவல் பரிமாறுவதை பார்த்திருப்போம்.

இப்படி ஒவ்வொரு விலங்கும் அவற்றிற்கான மொழியில் மட்டுமே பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும் என்ற உலகறிந்த உண்மைக்கு மாறாக  ஒரு ஆச்சரியமான விவரம் உணர்ந்து  உறைந்துபோனேன்.

 என்ன ஆச்சரியம்?

ஒரு வகை பறவையின் மொழியும்  ஒரு வகை  பூச்சியின் மொழியும் ஒன்றே என்ற விவரம்தான் .

அதெப்படி ஒரு பறவையின் மொழியும் ஒரு பூச்சியின்  மொழியும் ஒன்றாக இருக்கக்கூடும்?

இந்த இரண்டும்  சிறகை விரித்து பறப்பதில் மட்டுமின்றி அவற்றுக்கு  பிடித்தவிஷயமும் ஒன்றாகவே இருப்பதும் அவற்றின் பெயர்களும் ஏறக்குறைய ஓரே  நேர்கோட்டில் அமைந்திருப்பதும்  கூடுதல் ஆச்சரியங்கள்.

சரி, அது எந்த பறவை எந்த பூச்சி?

பறவை: -   தேன்  சிட்டு. 

பூச்சி:  - தேன்  ஈ (தேனீ)

அப்படியா ,  ஆச்சரியமாக இருக்கின்றதே.

ஆமாம் அவற்றின் மொழி என்ன?

எதையெதையோ உண்டு,குடித்து  களித்து  கள்ளமும்  கபடும் உள்ளத்தில் குடிகொண்டிருந்தாலும் ஒப்பனை வார்த்தைஜாலங்கள் காட்டும் மனிதர்களே தேனொழுக பேசும்போது, உண்பதும் உறவாடுவதும், எண்ணமும் சிந்தனையும்   தேனன்றி வேறில்லை எனும் வாழ்க்கை நெறியை உறுதியுடன் பற்றிக்கொண்டிருக்கும் இவற்றின்  மொழி வேறென்னவாக இருக்கக்கூடும்?

"தேன் மொழி".

நண்பர்களே,

நேற்று மாலை வீட்டு தோட்டத்தில் அமர்ந்திருக்க  அங்கே விருட்டென்று பறந்துவந்து ஒய்யாரமாய் மலரின்மீதமர்ந்து  தேனை பருகிவிட்டு அரை மயக்கத்தில் தடுமாறி பறந்துசென்ற அந்த தேனீ தந்ததிந்த பதிவிற்கான சில துளிகளை.

என் சிந்தை   முன்மொழிந்த துளிகளை தேனுள்ளத்தோடு வழிமொழிவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம் 
கோ.












10 கருத்துகள்:

  1. தங்களின் தேன் பதிவு களைத்து வந்த எனக்கு கிடைத்த தேநீர் போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களைப்புற்று திரும்பிய தங்களின் பார்வை எம் பதிவின்பக்கம் திரும்பியதால் தங்களுக்கு கிடைத்த தேநீர் போன்ற இனிமையை இந்த பதிவு தந்தது குறித்து மகிழ்ந்"தேன்". அடுத்த பதிவு, கூடவே இரண்டு வாழைக்காய் பஜ்ஜியும் கிடைத்த மகிழ்ச்சித்தரும் பதிவு செய்ய முயல்கிறேன்.

      நீக்கு
  2. தேன் மொழி!

    நல்லதொரு சிந்தனை. தேனீக்கும் தேன்சிட்டுக்கும் ஒரே மொழி! பதிவினை ரசித்தேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      பதிவினை ரசித்து அதன் சாரத்தை நுகர்ந்து பருகி பாராட்டும் தங்களுக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  3. அருமை சார் அற்புதமான பதிவு..இயற்கையின் படைப்பில் அனைத்தும் ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவீன், இயற்கையின் விளையாட்டோடு எமது விளையாட்டையும் ரசித்து பாராட்டுவது மனதிற்கு மகிழ்வளிக்கின்றது.

      நீக்கு
  4. நல்ல பதிவு. இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையைச் சொல்லியது சிறப்பு

    துளசிதரன்

    ஆஹா தேன்சிட்டு-சன்பேர்ட் கையடக்க பறவை.

    நான் தினமும் பார்க்கிறேன். குட்டியாக விர் விர்ரென்று சத்தம் எழுப்பிக் கொண்டே பறக்கும். டக் டக்கென்று பறந்துவிடும்...

    தேன்சிட்டு- தேனீ பொருத்தம் ரசித்தேன் கோ

    நல்ல பதிவு.
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,
      தேன் சிட்டு ஒரு அற்புத பறவை சுறு சுறுப்பில் தேனீக்கு இணையானது, பார்க்க பார்க்க பரவசமூட்டும் அந்த பறவையை ஒருவினாடிகூட ஒரே நிலையில் பார்க்க முடியாதபடி இயங்கிக்கொண்டே இருக்கும். எனக்கும் இந்த அழகிய அற்புத பறவையின் மீது ஒரு இனம் "புரிந்த" ஈர்ப்பு.

      தங்கள் வருகையையும் கருதிடலையும் கண்டு உள்ளம் மகிழ்ந்"தேன்".

      மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. தேன் சிட்டு - தேனீ.... நல்லா யோசிச்சிருக்குரீங்க சார்...

    பதிலளிநீக்கு
  6. மகேஷ்,

    வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு