பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 ஜூன், 2020

இடம்! பொருள்!! ஏலம்!!!

ஒருதரம்…ரெண்ண்டுதரம்...மூணுதரம்.
நண்பர்களே,


மக்கள் தாங்கள்  பயன்படுத்தி பழசாகிபோனாலோ, அல்லது தேவை இல்லை என்றாகிப்போனாலோ, அல்லது உபயோகத்திற்கு தகுதி  இல்லாமல் போனாலோ சில வீட்டு உபயோகப்பொருட்களை, ஓவியங்களை , கலைப்பொருட்களை, இசை கருவிகளை  பல சமயங்களில் விலையின்றி சேவை நிறுவனங்களுக்கு தானமாக கொடுப்பதும்,சில சமயங்களில் மறு  விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு கொடுத்துவிடுவதும்  இங்கே வழக்கம்.

சிலர் தங்களுக்கு தேவை இல்லை என்று நினைக்கும் பொருட்கள் அது எதுவானாலும் நல்ல நிலையில் இருக்குமேயானால் அதை தங்கள் வீட்டுக்கு வெளியில் வைத்துவிடுவார்கள்.


அந்த வழியில் செல்பவர்கள் அந்த பொருட்களை பார்த்து தங்களுக்கு தேவையானால் அதை  எடுத்துக்கொள்ளலாம். இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருக்கின்றேன்.


இது போன்ற பொருட்கள் சிலர் வீடுகளில் அவர்களுக்கே தெரியாமல் காலாகாலமாக பரண்(attic) மீதோ, ஸ்டோர் ரூமிலோ,அல்லது தோட்டத்து ஷெட்டிலோ இருப்பதை கண்டு அவை  சில சமயம் என்ன பொருள் எத்தனை பழைய பொருள் அதன் சிறப்பு என்ன அதன் மதிப்பு என்ன என்பதுகூட தெரியாமல் போவதும் உண்டு.


இப்படி மறைந்திருக்கும் அல்லது கண்ணுக்கு எதிரேயே இருந்தாலும் அதன்மீது அத்தனை கவனமில்லாமல் இருந்து திடீரென அந்த பொருளின்மீது கவனம் செலுத்தி, அதை வெளியில் எடுத்து தூசு தட்டி பார்க்க அது இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்சில் போரில் கலந்துகொண்ட தனது கணவரின்  அப்பா அங்கிருந்து எழுதிய சில கடிதங்கள், அல்லது தங்கள் மாமியார் உபயோகித்த அந்த கால மோதிரங்கள், வளையல்கள்,மூக்குப்பொடி டப்பாக்கள் , அல்லது தனது தாத்தா  சிறுவயதில் விளையாடிய ரயில் பொம்மைகள், ராணுவ மெடல்கள் , அல்லது நீண்ட நெடுங்காலமாக பயன்பாட்டில் இல்லாத பீங்கான் கோப்பைகள்  போன்று எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்.


இவற்றை ஒரு சிலர் குப்பையில்  போடுவார்கள், முன்பே சொன்னதுபோல வெளியில் வைப்பார்கள் அல்லது சேவை நிறுவனங்களுக்கு அளிப்பார்கள்.
வேறு சிலர் , தங்கள் ஊரில்  அல்லது ஊருக்கு அருகில் பழைய கலை பொருட்களை பொருட்களை ஏலம்  இடும் நிறுவனங்களுக்கு எடுத்து  சென்று , முன்னதாக அங்கே இருக்கும் மதிப்பீட்டாளரிடம் அந்த பொருளை காட்டி , அதன் பின்னணியை தெரிந்துகொண்டு அதை ஏலத்திற்கு கொண்டு செல்வார்கள்.


அப்படி கொண்டு செல்லப்படும் பொருட்கள் பெரும்பான்மையான நேரத்தில் யாரும் சிறிது எதிர்பாராத பெரிய தொகைக்கு ஏலம்  எடுக்கப்படும்.
அதுவரை யாரும் கண்டுகொள்ளாத, குப்பைக்கு போக இருந்த அந்த பொருளின் மதிப்புக்கண்டு அதன் உரிமையாளர் வியப்பில் வாய் அடைத்து நிற்பார்.


இன்னும் சிலர்,சேவை நிறுவன கடைகளில்  விற்கும் சில பொருட்களை மிக மிக குறைந்த விலையில் வாங்கி அதையும்  இங்கே ஏலம் விட்டு பெரும் காசு சம்பாதிப்பவர்களும் இருக்கின்றனர்.
இருந்த இடம் யாரும் கண்டுகொள்ளாத  இடமாக இருக்கலாம், பொருளின் மதிப்போ அதன் சிறப்பையோ அறியாமல் இருக்கலாம். அதே பொருள் ஏல நிறுவனத்திற்கு வந்தபோது அதன்  மதிப்பு எதிர்பாராத அளவிற்கு விலைபோகும்போது மலைப்பாக இருக்கும்.


அதை வாங்குபவர்கள் அதை மீண்டும் அருங்காட்சி மற்றும் புராதன பொருட்கள் வாங்கி விற்கும் நிறுவனத்திற்கு மேலும் அதிக விலைக்கு விற்று விடுவார் அல்லது தங்களது வீட்டில் ஒரு பொக்கிஷமாக வைத்துக்கொள்வார்.


இப்படியாக கடந்த 2012 ஒலிம்பிக் இங்கிலாந்தில் நடைபெற்றதை நினைவுகூரும் வண்ணம் ஐம்பது பைசா (50pence )  நாணயங்கள் சில வடிவமைக்கப்பட்டன, அதில் தவறுதலாக வடிவமைக்கப்பட்ட ஒரு நாணயம் ஒலிம்பிக் நீச்சல் போட்டியை குறிக்கும் நாணயம் , இதில் நீந்துபவரின் முகம் தெளிவாகவும் நீரின் அளவு குறைவாகவும் இருந்ததால் அதை உடனே நிறுத்திவிட்டு, திருத்தம் செய்து அச்சிட்டனர்.


அப்படி ஏற்கனவே தவறாக அடிக்கப்பட்ட நாணயத்தில் ஒன்று  (இது எல்லோருக்கும் கிடைக்கவில்லை),  நம்ம  50ரூபாய் (e-bay)   ஏலத்தில் £10,100(ஏறக்குறைய நம்ம ஊரு மதிப்பில் 10 லட்சம் ரூபாய்)க்கு விற்கப்பட்டது.


லாபம் எத்தனை மடங்கு என்று தெரிந்துகொள்ள கணித ஆசிரியர் கரந்தை திரு ஜெயகுமாரிடம் கேளுங்கள்.


விஷயம் அறிந்ததும் பாக்கட்டில் உள்ள சில்லறை நாணயங்களை சில்லறைத்தனமாக உற்று உற்று பார்த்தும் அதிர்ஷ்ட காசு அகப்படவே இல்லை.


நம்ம ஊரிலும் இதுபோன்று  ஏலம்  நடக்கின்றனவா?


நன்றி
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ12 கருத்துகள்:

 1. அட பாவத்த..

  கணக்கு விடைக்கு கரந்தை வாத்தியாரா? அப்ப நம்ம பேராசிரியர் PA டேவிட்,பேராசிரியர் ஆபிரகாம் ஜெயக்குமார்,பேராசிரியர் அருணாசலம்,பேராசிரியர் விஸ்வநாதன் ,பேராசிரியர் S குமார் ,
  பேராசிரியர் அன்பழகன், பேராசிரியர் சுப்ரமணி . சொல்லி கொடுத்ததெல்லாம் என்ன ஆச்சி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசு, நம் பேராசிரியர்களின் பெயரை கேட்டவுடன் அவர்களை குறித்த நினைவு எனக்கு 20200 மடங்கு பெருகியது. பேராசிரியர் ஆப்ரஹாம் ஜெயக்குமார் நமக்கு நண்பராகவும் இருந்தார் என்பதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் . இதில் பேராசிரியர் ஜான் குணசீலனையம் பேராசிரியர் N.பால சுப்ரமணியத்தையும் மறந்துவிட்டீரே. வருகைக்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 2. பழம் பொருட்களின் நினைவுகளும் இனிமையானைவை தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் "UN KNOWN " நண்பரே தாங்கள் சொல்வது சரியே. வருகைக்கு மிக்க நன்றிகள்..

   நீக்கு
 3. பழையதின் மகிமை பலர் அறியவில்லை என்பது வேதனையே. (பழைய சோறு உட்பட)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.
   ஒருவேளை பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்கமுடியாத ஒன்றோ?
   எனக்கும் பழைய சோறு பிடிக்கும் அதிலும் தாயிர் ஊற்றி பிசைந்து பக்கத்தில் கொஞ்சம் சின்ன வெங்காயத்தை வைத்துக்கொண்டு…. ஆஹாஆ... .

   வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 4. அங்கெல்லாம் பொருட்கள் இப்படி வெளியே வைப்பது நடக்கும். இங்கெல்லாம் அப்படி வைக்க முடிவதில்லை. சும்மா கொடுப்பது என்றால் வைத்துவிடலாம்.

  இங்கு ஏலம் விடுவது நடிகை நடிகர்கள், சில பெரிய புள்ளிகளின் உடைகள், பொருட்கள் என்று இருந்தது இப்பவும் இருக்கா என்று தெரியவில்லை. அது பொல சில ஆன்டிக் பொருட்கள் கூட முன்பு ஏலம் விடப்படும் இப்போதெல்லாம் ஆன்லைன் வர்த்தகம் வந்துவிட்டதே!

  ஹப்பா அந்த 50 காசுக்கு இப்படி லாபமா ஏலம் விட்டு!!

  //விஷயம் அறிந்ததும் பாக்கட்டில் உள்ள சில்லறை நாணயங்களை சில்லறைத்தனமாக உற்று உற்று பார்த்தும் அதிர்ஷ்ட காசு அகப்படவே இல்லை.//

  ஹா ஹா ஹா ஹா அதானே!!! அப்படி இருந்திருந்தா கோ எனக்குச் சும்மாவே கொடுத்திருபபர் தானே கோ?!!! கோ "கோ" வாச்சே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வாஸ்த்தவமான நம்பிக்கைதான்; எனக்கு கிடைத்திருந்தால் அந்த நெல்லிக்கனியை உங்களுக்குத்தான் கொடுத்திருப்பேன் அவ்வையே!.

   இங்கே ஒரு பொருட்களை வெளியில் வைக்கும்போது அதன் செயல் திறன் condition பற்றிய ஒரு குறிப்பும் உடன் இருக்கும். அதாவது , working, needs a bit repairing , needs a bit of clean , handle broken, chipped , fragile , sharp ..போன்று. குறிப்பாக மின் மற்றும் மின்னணு சாதனங்களை இப்படி வெளியில் வைக்கும்போது குறிப்புகள் இருந்தால் நல்லது -Health and safety.

   நீக்கு
 5. அருமையான பதிவு. நான் ஏலம் விடுவதைப் படத்தில்தான் பார்த்திருக்கிறேன். எனக்கும் சில பழங்கால பொருட்கள் வாங்க வேண்டும். எங்கு விலைக் குறைவாக இருக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழங்கால பொருட்கள் எனக்கும் பிடிக்கும். இன்றுகூட ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில்(மறு ஒளிபரப்பு) ஒரு ஏலம் நடந்ததை காண்பித்தார்கள் , அதில் நம்ம நாட்டு வெண்கல சிலை ஒன்று ஏலத்திற்கு வந்தது. பெரிதாக விலைபோகும் என்று எதிர்பாத்தேன் ஆனால் வெறும் £40.00 மட்டுமே விலை போனது.
   விலை குறைவாக எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.முதலாவதாக நீங்கள் எந்த நாட்டில்/ எந்த ஊரில் இருக்கின்றீர்கள் என தெரிந்தால் அதற்கேற்ப நமது வாசக கண்மணிகள் உங்களுக்கு தகவல் அளிக்கக்கூடும். All the best அபிநயா.

   நீக்கு
 6. ஏலம் - இதனால் பெரும் பணக்காரர்கள் ஆனவர்களும் உண்டு. இங்கேயும் அப்படி ஏலம் நட்க்கிறது என்றாலும் பெரிதாக லாபம் கிடைப்பதில்லை. நிறைய வீடுகளில் பரணில் கிடக்கும் பொருட்கள் இப்படித்தான் - குப்பை போலவே கிடக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்,

   வீட்டிலிருக்கும் தமக்கு தேவையற்ற , அதே சமயத்தில் புராதனமான பொருளை ஏலத்தில் விற்று பணம் பெறுவதென்பது வேறு, ஆனால் இதே வேலையாக பொருட்களை வாங்கி விற்பதுகூட ஒரு வகையில் சூதாட்டமே.

   ஏலம் என்றாலே unpredictable game நம்ம கிரிக்கெட் மாதிரி தான். அதிர்ஷ்டமும்மிங்கே அவசியம்.

   உங்கள் பரணில் ஏதேனும் அரிய பொக்கிஷம் இருக்கின்றதா பாருங்கள் அதிஷ்டம் எந்த ரூபத்திலும் வந்து கூரையை இல்லையேனும் பரணையையாவது பிய்த்துக்கொண்டு கொட்டலாம் , பரணும் குப்பையின்றி சுத்தமாகும்

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்று.

   நீக்கு