பின்பற்றுபவர்கள்

வியாழன், 18 ஜூன், 2020

தம்பிக்கு!.









எந்த ஊரு?
நண்பர்களே,
நாம் யார் எப்படிப்பட்டவர், எங்கிருக்கிறோம், படிப்பு, தொழில்  குடும்பம் என எதுவும் நம் ஒருவருக்கொருவர் தெரியாவிட்டாலும்  ஒரே நேர்கோட்டில் நம் எல்லோரையும் இணைப்பது தமிழ், தமிழ் மட்டுமே.

இந்த தமிழ் வெறும்  பேச்சுமொழியாய் மட்டுமே இருந்திருந்தால் நம்மில் பலர் இணைந்திருக்க வாய்ப்பில்லை. இது இலக்கணம் செறிந்த எழுத்து வடிவிலும் இருப்பதால்தான் நம்மால் இப்படி இணைய முடிகிறது என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.


என் தமிழ் ஆற்வம் எப்படி வந்ததென்று ஏற்கனவே" தமிழ் வந்த கதை" என்னும் பதிவில் எழுதி இருந்தேன்.


தமிழாசிரியர்கள் என்பவர் வேட்டி  சட்டை அணிந்து பள்ளிக்கூடங்களுக்கும்  கல்லூரிகளுக்கும் வருவார்கள்  என சொல்லி கேட்டிருப்போம்.  நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் ஒரே ஒரு தமிழாசிரியர் மட்டுமே அப்படி வருவார்.


உடை தவிர்த்து , அவர்களின் பேச்சுக்கள் எல்லாமே முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே இருக்கும்.


ஆனால் கல்லூரி நாட்களில் , நான் தமிழ் படிக்கவில்லை என்றாலும், தமிழாசிரியர்கள் நட்பு கைகூடியது எனது பாக்கியம், அப்படி நான் சந்தித்த தமிழாசிரியர்களுள் சிலர் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.


அவர்களுள் ஒருவர் பின்நாளில் என்னை மிகவும் பாதித்தவர்..



கல்லூரிக்கு வெளியில், (கல்லூரிக்கு சம்பந்தமில்லாத), நடந்த ஒரு கவியரங்கில் பங்குபெற்று பரிசுபெற்றவனை அழைத்து பேசி வாழ்த்துச்சொல்லி பாராட்டியவர்  கவியரங்க தலைவர், பின்னாளில் அவர் எங்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் என அறிந்தேன்.


அவ்வப்போது தமிழ் துறை நிகழ்ச்சிகளைப்பற்றி என்னிடம் பேசுவார்.
இப்படி இருக்க ஒரு நாள் என்னை அழைத்து ஒட்டப்பட்ட ஒரு கடிதம் கொடுத்தார்.


அது  இன்னும் இரண்டு வாரங்களில் (தேதியையும் இடத்தையும் குறிப்பிட்டு)   நடக்கப்போகும் ஒரு கவியரங்க அழைப்பிதழ்  என்றார்.


நன்றியுடன் பெற்றுக்கொண்டவனிடம் அவர் சொன்னது, இதில் நீங்களும் பங்கு பெறப்போகின்றீர்கள், உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் உங்களிடம் கேட்காமலேயே உங்கள் பெயரை போட்டு இருக்கின்றோம்  , கண்டிப்பாக பங்கு பெற  வேண்டும் , தலைப்பு மற்ற விவரங்கள் அழைப்பிதழில் இருக்கின்றது என கூறினார், எனினும் தலைப்பை குறித்து சுருக்கமாக ஒரு முன்னோட்டம் சொன்னார்.


என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை  நினைத்து மகிழ்ந்தாலும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதை நினைத்து  கொஞ்சம் கலக்கமே.
அழைப்பிதழில் முதன்முறையாக அச்சிடப்பட்டிருந்த என் பெயரை பார்க்க பரவசம். அந்த பரவசம் இமைப்பொழுதுகூட  நீடிக்கவில்லை, மற்றவர்களின் பெயர்களையும் அவர்களின் பட்டங்களையும் உத்தியோகங்களையும் பார்த்தபோது.


 மொத்தம் ஆறு  பேர்,என்னோடு சேர்த்து., பங்குகொள்கின்றனர் அனைவரும் வெவ்வேறு கல்லூரி தமிழ் பேராசிரியர்கள், அதிலும் இரண்டு  பெண் பேராசிரியைகள் எல்லோரின்  குறைந்த பட்ச படிப்பு Phd,    தலைவர் பேராசிரியர் கவிஞர் தேவராஜன் எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர்.


என்னது ஐந்துபேர்களும் பேராசிரியர்களா ? அவர்கள் இடையில் முதலாமாண்டு இளங்கலை மாணவன், அதுவும் தமிழ் மொழி பாடமே இல்லாதவன், பால் மனம் மாறாத பச்சிளம் பாலகன், விரல் கொடுத்தாலும் கடிக்கவேண்டும்  என்ற விவரம் கூட தெரியாதவன்….



நாளும் வந்தது,. பிரமாண்டமான அரங்க , மேடையில் 7 இருக்கைகள் podium, மைக் , பொன்னாடைகள் , பூ மாலைகள்…. மக்கள் கூட்டம்.



ஜாம்பகவான்கள்  மத்தியில் ஒரு "ஜாண்" பட்ச்சா சிறுவன்  இருப்பதை  வந்ததிலிருந்தே ஆச்சரியத்துடன் பார்த்த கூட்டமும் பேச்சாளர்களும் இப்போது மேடையில் இவன் என்ன தான் பேசப்போகிறான், கவிதைக்கு எழுத்து கூட்டலாவது (ஸ்பெல்லிங்) இவனுக்கு தெரியமா?….




என் முறை வந்தது - கூடவே நடுக்கமும் வந்தது, அன்றுதான் பிறந்தது  தெளிவு : பேச்சு மேடைகளில் எதற்காக கால்களை மறைக்குமளவிற்கு உயரமான   podium - lectern வைக்கின்றார்களென.




காலின் நடுக்கம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்கே.




கைதட்டல் வரவேற்புடன் , சின்னப்பையன்.




பேசியவை எல்லாம் நினைவில்லை , அதுவல்ல இன்றைய பதிவின் சாரம், எனினும்...
நடுவர் உள்ளிட்ட அரங்கத்தை  வணங்கிய சொல்லாடல் கவிதை மட்டும் இங்கே.




இறை வணக்கம்:
புவி அரங்க நாயகனே உமது
 பொன்னான பாதங்களை
கவி அரங்கில்  இருந்து கொண்டு - நான்
கனிவுடனே  வணங்குகின்றேன்.





நடுவருக்கு  வணக்கம்:
கவி அரங்க காவலானாய்
கவிபாடும் பாவலனாய்
அவை நடுவே வீற்றிருக்கும்
அன்பு மிக்க ராசரே -தேவ ராசரே
சிங்கக்கூட்டமொன்றில்
சிக்கிக்கொண்ட சிறு  முயல் எந்தன்
பங்க நிலை இப் பாரில்
உமையன்றி யாரறிவார்?
வணங்குகிறேன், வாழ்த்திடுவீர்





உடன் கவிகளுக்கு:
என்னோடு கவி பாடும்
எழில் மிகு கவிஞர்களே
பொன்னான கருத்துக்களை
பொலிவுடனே  வழங்கும் நீங்கள்
என்னைவிட மூத்தவர்கள்
என்று நான் மதித்தும்மின்
பொன்னடியை வணங்குகின்றேன்
பெரியவரே! வாழ்த்திடுவீர்.



(என்னை இந்த இக்கட்டில் இணைத்துவிட்ட ஆசிரியருக்கு)


நில்லையா என்று என்னை
நிறுத்திவிட்டு நிதானமாக
சொல்லையா  ஒரு கவிதையென்று -செல்லமாய்
சொன்னாரே  ஒரு புலவர் - அவர்
செல்லையா என நினைக்கின்றேன்
அரங்கிற்குள் அவர் இல்லையா? (உண்மையிலேயே அவர் பெயர் சொல்லும்போது அங்கே இல்லை என்பதால் அப்போது சேர்த்துக்கொண்டது இது.)
வணங்குகின்றேன் பாதங்களை
வாழ்த்திட நான் வேண்டுகின்றேன்.

நிகழ்ச்சி முடிந்தவுடன், உடன் பாடிய கவிஞர்களும் பார்வையாளருள் பெரும்பான்மையினர் என்னிடம் வந்து கை குலுக்கி, தோளில் தட்டி வாழ்த்து சொல்ல, ஒருசிலர், தம்பிக்கு எந்த ஊரு என்றும் கேட்டனர்.




இப்படியாக நிகழ்ந்த அந்த கவியரங்கில் கலந்துகொண்டு கவிபாடிய ஒரு தமிழாசிரியர் எங்கள் கல்லூரி பேராசிரியர், நான்  அறிந்தவரையில் வித்தியாசமானவர்.


எந்தவகையில்..?




நாளை சொல்கிறேன்.




அதுவரை
நன்றி
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ






































6 கருத்துகள்:

  1. அருமையான மலரும் நினைவுகள் கோ... இவர்களில் பலரை நான் அறிவேன். ஆனால் என் தமிழ் தங்கள் தமிழை போல் இல்லாத காரணத்தினால் அவர்கள் என்னை அறியவில்லை.

    அந்த செல்லையா .. இல்லையா..எப்போது சொன்னாலும் மகிழும் தருணமே ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு,

      தமிழோடு உமக்கிருந்த தொடர்பு ஆங்கில inter- collegate quiz போட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு ,நமது குழுவிலிருந்து, சம்பந்தமில்லாமல் அவ்வையாரின் பெயரை பதிலாக சொன்னதும் அரங்கம் சிரிப்பொலியால் நிறைந்ததும் உறுதி படுத்தியதே...இல்லையா?.

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்ல அனுபவம், அவரைக் காண காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள், வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி, தங்களை காக்கவைப்பதில் விருப்பமில்லைதான் எனினும் பதிவின் நீட்சியை கருதிதான்...

      நீக்கு
  3. சார்,

    இந்த பதிவு எப்படி கண்ணில் படாமல் போச்சுனு தெரியல.
    தம்பிக்கு 2 பார்த்துதான்
    முதல் பகுதியை வாசித்து விட்டு வாசிப்போம்னு பதிவில் கொடுத்திருந்த லிங்க் கிலிக் செய்தால்
    You do not have permission to view this page னு எரர் வருது.

    அதன் பிரகு search ல தம்பிக்கு
    தேடி பார்த்து கண்டு பிடிச்சு இந்த பதிவை வாசிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      முதல் பகுதி கண்ணில் படாமல் போனதற்கு காரணம் schedule செய்யும் போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். இந்த பதிவு ஏற்கனவே எழுதிவைத்து முன்னமே வெளியிட இருந்தேன், சிலதிருத்தங்கள் செய்யவேண்டி இருந்ததால் தாமதமாக வெளிவந்தது.

      எனினும் தேடிப்பிடித்து படித்து முடித்து பின்னூட்டம் இட்டதற்கு மீண்டும் நன்றிகள்.

      நீக்கு