பின்பற்றுபவர்கள்

சனி, 13 ஜூன், 2020

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்!!!

யாருக்காக  கொடுத்தான்??!!
நண்பர்களே,
 
நம்  தேவைக்கு போக மீதமிருப்பது அடுத்தவருக்குரியது    எனும் உயரிய வாசகம் எங்கேயோ கேட்ட குரலாக என் காதுகளில் எப்போதும் ஒலிப்பதுண்டு.

ஆனால் நடைமுறையில் அப்படி நம் தேவைக்கு போக உபரியாய்  இருப்பதை வேறொருவருக்குரியது என்று உணர்ந்து அவற்றை இல்லாதவருக்கு கொடுக்கும் வானத்தைப்போல  போல மனம் படைத்தவர்களை பார்ப்பது அரிது. 

அப்படி பெரும்பாலானவர்கள் இருக்கும் பட்சத்தில், வங்கிகளின் தேவை என்ன?

குறைந்தபட்சம், refrigerator களின் தேவைதான் என்ன? 

உபரி மொத்தமும் அடுத்தவருக்கு என்றுகூட இல்லாமல் உபரியின் ஒரு பாகத்தையேனும் மற்றவருக்கு பகிர்ந்தளிக்கும் குணம் சிலரிடம் இருப்பது பாராட்டத்தக்கது.

அப்படி பகிர்ந்தளிக்கும் மக்களில்  "சிலர்(??)"  யாருக்காக கொடுக்கின்றார்கள் என்று கூர்ந்து கவனிக்கும்போது:

ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை "ஊருக்காக" கொடுத்தார்  என்றே தோன்றுகிறது.

உன் வலது கை செய்யும் உதவி உன் இடது கை அறியாமல் இருக்கவேண்டும் என்பது ஆண்டவன்  கட்டளை.

ஆனால், உதவியாக கொடுக்கப்படும் உணவுபொருட்கள் நிவாரண பொருட்கள் கொண்டுவரப்படுமுன், புகைப்பட, வீடியோ கேமராக்கள் செய்தியாளர்கள், பத்திரிகை  நிருபர்கள்  இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர்.

கொடிய தொற்று கிருமி கண்ணுக்கு தெரியாமல் எங்குவேண்டுமானாலும் இருக்க கூடும் அது யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடும், கைகள் மூலம், சளி இரும்பல் தும்மல் மூலம் எளிதில் பரவக்கூடும், இது ஒரு உரிர்க்கொல்லி , எனவே முக கவசம் அவசியம் ; சமூக விலகல் மற்றும்  சுகாதாரம் கண்டிப்பாக பேணபட வேண்டும் என எச்சரிக்கப்படுகிறோம்.

எனினும்,  கொடிய கிருமி என தெரிந்தும் ஊரு கூட்டி, விளம்பரம் செய்து, புகைப்படங்களும் வீடியோ பதிவுகளுக்கும் போஸ் கொடுத்தவண்ணம், அதிலும் உதவி செய்பவரின் முகம் சரியாக தெரியவேண்டும்  என்பதற்காக, அணிந்திருக்கும் முக கவசத்தை கீழே தள்ளிவிட்டு,தன்னை மறைக்கும் கூட்டத்தையும் ஓரம் தள்ளிவிட்டு உதவி பெறுபவரின் முகத்தைக்கூட சரியாக பார்ப்பதுமில்லை  அவர்களின் பக்கம்  திரும்புவதுகூட இல்லை. 

மாறாக உதவி பெற வந்தவர்களை   பிச்சைக்காரர்களைவிட கீழானவர்கள்போல் எண்ணி , இப்படி நில் அப்படி நில் அங்கே பார்.. இங்கே பார் … கேமராவை பார்...என அதட்டியும் அலைக்கழித்தும்    கொண்டுவந்த பொருட்களை விநியோகிக்கும் ஆட்களை பார்க்கும்போது மனதில் தோன்றியது, ஒரு பழைய சினிமாப்பாடலின் கீழ்காணும்  சில வரிகள் வித்தியாச பொருளுடன்.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அவர் யாருக்காக கொடுத்தார்…..
ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை …...இல்லை... இல்லவே... இல்லை …."ஊருக்காக" கொடுத்தார்"…..

சிலர் சொல்லலாம், இப்படி விளம்பரப்படுத்துவது  கொடுக்க நினைப்பவர்களை ஊக்கப்படுத்தவே என.

என்னை  பொறுத்தவரை  உதவி செய்ய யாரையும் ஊக்குவிக்க வேண்டியதில்லை.

உதவும் உள்ளம் கொண்டவர்கள் யாருடைய தூண்டுதலுக்காகவும் காத்திருக்கமாட்டார்கள்.

வேண்டுமென்றால், உதவி பெற்றவர்கள் தங்களுடைய  நன்றியை தெரிவிக்கும்பொருட்டு இவற்றை வெளியில் சொல்லலாமே தவிர "ஊருக்காக" செய்பவர்கள் தங்களை விளம்பர படுத்திக்கொள்வதால் தாங்கள் உதவி என்று நினைத்து செய்த காரியத்தால் புண்ணியபலன்  ஒன்றும் இல்லை என்பதை உணரவேண்டும்.

வழி போக்கர்கள்  அல்லது சம்பந்தமில்லாத யாரோ இது போன்ற செய்திகளை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலின்றி சமூக வலைத்தளங்களில் வெளி இடுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் சம்பந்தப்பட்டவர்களே இப்படி செய்வது அவர்களின் நோக்கத்தை கேள்விக்குறியாக்குவதோடு கொச்சை படுத்தபடவும் நேர்ந்துவிடும்.

ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கின்றான் என்பது மறை வாசகம்.

ஊருக்கே உதவிசெய்தாலும் அதை "ஊருக்காக" செய்யாமல் நம் உள்ள அமைதிக்காகசெய்வோம்.

நம் ஒவ்வொருவரின் ஒவ்வொரு  செயலின் குறிப்பும் சித்திர குப்தனின்(??) ஜீவ புத்தகத்தில் பதிவாகிக்கொண்டிருக்கின்றது என்பதையும்  நினைவில் கொள்ளவேண்டும்..

முகத்தைப்பார்க்கும் மனிதர்களின் பாராட்டிற்காக   செய்யமல் அகத்தை  பார்க்கும் இறைவனின் பாராட்டிற்காக  உள்ளன்போடு உதவி செய்வோம் ,பலன் நிச்சயம் பலமடங்கு.

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
  
22 கருத்துகள்:

 1. மனதைக் தொடும் பதிவு. நன்றி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நவீன்,

   பதிவு மனதை தொட்டதாக நீங்கள் சொல்வது என் மனதை தொட்டு வருடியது.வருகைக்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 2. வணக்கம்

  உண்மையில் பலரை நல்வழிப்படுத்தும் கதை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்...
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனங்களில் நிறைந்தவனே.: எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே சொந்த தமிழில் செந்தமிழ் பாடி அகிலம் வாழும் தமிழர் மனங்களில் நிறைந...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் ரூபன்,

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 3. நல்ல பகிர்வு.

  இங்கே எல்லாமும் விளம்பர மயம் தான் நண்பரே. அடுத்தவருக்கு விளம்பரப்படுத்தி தான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை! ஆனால் அதைப் புரிந்து கொள்பவர்கள் வெகுசிலரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்,

   ஆலயங்களுக்கு விளக்கு நன்கொடையளித்தவரின் பெயர் அந்த விளக்கின் ஒளியை மறைக்குமளவிற்கு எழுதப்பட்டு தமது பெருமையை விளம்பரப்படுத்துவதில் உறுதியாய் இருக்கும் உத்தமர்கள் வாழும் சமூகம் என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 4. அருமை.
  ஏழைக்கு இறங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கின்றான் என்பது மறை வாசகம்....இரங்குகிறவன்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு அநேக நஸ்காரங்கள்.

   தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

   எழுத்துப்பிழையை நாசுக்காக சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள், பிழை திருத்தப்பட்டது.

   நீக்கு
 5. தங்களது ஆதங்கம் உண்மையான உண்மை

  இப்படி விளம்பரப்படுத்தி கொடுத்தவர்கள் அரசியல்வியாதியாளர்களே... அவர்களிடம் பெறுவதே தவறு என்பதே நியாயம் இருப்பினும் நமது இயலாமை அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாய் நாமும்...

  உதவி செய்யும் எண்ணமுள்ளவர்கள் ஆரவாரமின்றி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா,

   வருகைக்கு மிக்க நன்றி.

   நன்மைசெய்பவர்கள் அமைதியாக செய்துகொண்டு இருப்பது சிறப்பு.

   என்ன செய்வது நமது சமூக அமைப்பு அரசியல் சார்ந்ததாகவே இருப்பதால் சில விடயங்கள் தவிர்க்கமுடியாததாகிறது.

   நீக்கு
 6. ஒருபுறம் தவறு என்று தோன்றினாலும் இன்னொருபுறம் பார்க்கும்போது இவரைப் பார்த்து இன்னும் சிலர் அதே விளம்பரத்துக்கு ஆசைப் பட்டே கூட தானங்கள் செய்தால் நல்லதுதானே?  தேவையானவர்களுக்கு கிடைக்குமே...  தகுந்த பாதுகாப்புகளுடன் சமூக இடைவெளி விட்டு உதவி செய்யலாம்.  இல்லை டோர் டு டோர் கொடுத்து விடலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்,வணக்கம்

   வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   உதவும் உள்ளம் உள்ளவர்களுக்கு யாருடைய reference ம் தேவை இல்லை என்பதுதான் என் கருத்து, எனினும் நன்மை பெறுபவர்கள் dignified ஆகா நடத்தப்படுவதும் முக்கியமே.

   நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் வரவு மகிழ்வளிக்கிறது.

   கோ.

   நீக்கு
 7. கோ மிக மிக நல்ல பதிவு.

  வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக்கூடாது.

  அப்படியிருக்க ஊர் கூட்டிச் சொல்ல வேண்டிய தேவையும் இல்லைதான். புண்ணியம் என்ற எதிர்பார்ர்பும் இருக்கக் கூடாது என்பதுதான் என் தனிப்பட்டக் கருத்து. இறைவன் என்பதும் கூட.ஏனென்றால் இபப்டியான எதிர்பார்ப்புகள் இருக்கும் போதுதான் நாம் செய்துவிட்டு, இவ்வளவு புண்ணியம் செய்திருக்கோம் இறைவன் ஏன் நம் கஷ்டத்தில் உதவவில்லை...என்றும் மனிதம் மனம் பித்துப் பிடித்துப் போகிறது. ஸோ கொடுத்ததை, நாம் செய்யும் நல்லதை அடுத்த கணம் மறந்து விட்டு அடுத்த நன்மை என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாமே என்றும் தோன்றும் இதுவும் என் தனிப்பட்டக் கருத்து.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அம்மையீர்,

   தங்கள் மேலான கருத்து ஆமோதிக்கவேண்டிய கருத்தாக நான் ஏற்கிறேன்.

   செய்த உதவிகளை அடுத்தகணம் மறந்துவிட்டு அடுத்தது என்ன என்று செயலை தொடர்வதே நல்லது.

   வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   நீக்கு
 8. உண்மைதான் சார். விளம்பரத்திற்காகவும் அதைக்காட்டி மேலும் பணம் வாங்குவதற்காக மட்டுமே உதவி செய்பவர்கள் இருக்கிறார்கள். புண்ணியம் என்ற வார்த்தைஜாலம். ஒரு சங்கம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாய் தலையனை கொடுத்துவிட்டு, அவர்களை அதில் படுக்கவைத்து உட்காரவைத்துப் புகைப்படம் எடுத்துருக்கிறார்கள். சாப்பிடுவதைப் புகைப்படம் எடுக்கிறார்கள். அவர்கள் அளித்தவை மனதிற்கு ஒப்புமா? ஆனால் இது எதையும் எதிர்பாராமல் செய்பவர்களும் யாரோ ஒரு சிலர் இருக்கிறார்கள். நண்கொடையாளர்களிடம் அந்தப் புகைப்படங்களைக் காட்டி மேலும் நண்கொடைப் பெற்று உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள். இவையனைத்தும் கருத்தல்ல செவி வழிச்செய்தி மற்றும் அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபிநயா,

   எமது தளம் வந்து பதிவினை வாசித்தமைக்கு முதலில் உங்களுக்கு என் நன்றிகளும் நல் வரவும்.

   பார்வையற்றவர்களை வைத்து இப்படி விளம்பரம் தேடுபவர்களுக்கு - அதன்பொருட்டு நன்கொடை என்ற பெயரில் மற்றவர்களை ஏமாற்றுபவர்களே உண்மையில் பார்வையற்றவர்கள், உள்ளம் ஊனமுற்றவர்கள்.

   பாய் தலையணைகளை கொடுத்தவர்கள் அதை புகைபடமெடுத்தபிறகு விட்டு சென்றனரா அல்லது வேறு ஏதெனும் மாற்றுத்திறனாளி விடுதிக்கு எடுத்து சென்றனரா?

   எனக்கு தெரிந்து வெளி நாட்டு நன்கொடையில் பராமரிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் உணவும் உடையும் மிக மிக சிறப்பாக இருக்கும் அந்த வெளி நாட்டு பிரஜைகள் அந்த விடுதிக்கு வரும் நாளன்று.

   அவர்கள் போனபிறகு, அவர்களுக்கு கொடுத்த நல்ல ஆடைகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டதையும் , ஏனைய நாட்களின் உணவு தரத்தையும் (நேரில்) அறிந்தவன்,மனம் கனக்கிறது.

   கருத்திற்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 9. நிதர்சனமான நிஜம் சார். இன்று - இங்கு பலர் ஊருக்காகத்தான் - புகழுக்காகத் தான் கொடுக்கிறார்கள். மனம் வலிக்கிறது. Dignity, அதை உணர்ந்தால்தான் போதுமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபெர்ணாண்டோ,
   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.சுகம்தானே?

   நீக்கு
 10. ஜெ சந்திரமூர்த்தி27 ஜூன், 2020 அன்று 8:22 AM

  நன்றாக இருக்கிறது படிக்க இன்று ஆரம்பித்து இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திர மூர்த்தி,

   நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழைய பதிவுகளையும் வாசியுங்கள் குறிப்பாக.https://koilpillaiyin.blogspot.com/2015/01/blog-post_9.html https://koilpillaiyin.blogspot.com/2015/01/blog-post_13.html

   நன்றி.

   கோ

   நீக்கு
 11. ஜெ சந்திரமூர்த்தி27 ஜூன், 2020 அன்று 8:26 AM

  நன்றாக இருக்கிறது படிக்க இன்று ஆரம்பித்து இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திர மூர்த்தி,

   பதிவினை வாசிக்க துவங்கியமைக்கும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றிகள். தொடருங்கள், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

   நன்றி.

   கோ.

   நீக்கு