பின்பற்றுபவர்கள்

திங்கள், 29 ஜூன், 2020

இணைப்பு - இலவசம்!!

"கொசுறு".
நண்பர்களே,
இணைப்பு என்றவுடன், குடி நீர் குழாய் இணைப்பு, மின்சார இணைப்பு,தொலைபேசி இணைப்பு தொலைக்காட்சி இணைப்பு என்பனநினைவிற்கு வரும்.

அதேபோல  இலவச இணைப்பு என்றவுடன், தினசரி , வார  , மாத பத்திரிக்கைகளுடன் வரும் இலவச இணைப்பையம்  நம் மனம் நினைவுகூரும்.

இப்போதும் அவை நடைமுறையில் இருக்கின்றதா என தெரியவில்லை.

பண்டைய(??) தமிழகத்தில் விலைகொடுத்து வாங்கும் முக்கிய  பொருட்களுடன் கூடுதலாக கொடுக்கப்படும் இந்த இலவசத்தை "கொசுறு" என்று  சொல்வதுண்டு.

கடைகளில் காய்கறி  வாங்கும்போது எடைக்கு மேலே ஒன்றிரெண்டு காய்களை கூடுதலாக போட்டு கொடுப்பதுண்டு.

இல்லையேல் , கறிவேப்பிலை  போன்ற மலிவான பொருட்களை விலை இன்றி கொடுப்பதுண்டு.

சிறுவனாக இருந்தபோது பக்கத்தில் இருந்த கரீம் பாய் கடைக்கு சென்று எது வாங்கினாலும் "கொசுறாக"  உடைத்த கடலையை பழைய செய்தித்தாளை கூம்பு வடிவத்தில் சுருட்டி அதில் நிரப்பி மடித்து கொடுத்தது நினைவிற்கு வருகிறது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, நேராக ஒரு காய்கறி கடைக்கு சென்று ஒரு கொசுறு  கத்தரிக்காய் கொடுங்கள் என்றால் எந்த கடைக்காரராவது கொடுப்பார்களா? கொடுக்க மாட்டார்கள், கத்தரிக்காய் ஒரு அரைகிலோ அல்லது ஒருகிலோ வாங்கினால்தான் கூடுதலாக ஒரு கத்தரிக்காயை கொடுப்பார்கள் அப்படி என்றால் இலவசம் என்பதன் அர்த்தம் என்ன?

இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை, பெற்ற  தாயின் அன்பைத்தவிர.

(அன்னதானம் இங்கே விதி விலக்கு)

இதேபோல, ஒன்று வாங்கினால் மற்றொன்று   இலவசம் என்று சொல்கின்றனர், இதுவும் அப்படித்தான், ஒரு பொருளை விலைகொடுத்து வாங்குபவர்களுக்கே மற்றொன்று  கூடுதலாக வழங்கப்படுகிறது, இங்கும் எதுவும் இலவசம் இல்லை., இலவசம் என்று கொடுக்கபடும் கூடுதல் பொருளுக்கும்  சேர்த்துதான் நாம் பணம் செலுத்துகின்றோம்.

சேலை வாங்கினால் ரவிக்கை துணி இலவசம் என்று இல்லாமல் சேலையுடன் ஒரு இணைப்பு வந்துவிடுகிறது ரவிக்கைக்கு தேவையான கூடுதல் துணியுடன் - attached blouse. இதற்கும் சேர்த்துதான் நாம் கொடுக்கும் விலை.

பெரும்பாலும் இது நம் பெண்களுக்கு ஒரு அனுகூலமான விஷயமாகவே நான் பார்க்கிறேன், இல்லை என்றால் மேட்சிங் ரவிக்கை வாங்க படாத பாடு படவேண்டி இருக்கின்றது. மேட்சிங் ரவிக்கை வாங்க இத்தனை காலம் விரயமாக்குவது தேவையா என்றால் , பட்டிமன்ற பேச்சாளர்கள் சொல்வதுபோல், "சரியா பார்க்காம  போனதால  கட்னதுதான் மேட்ச்சாகல , கட்டிக்கப்போறதாவது மேட்ச்சாகவேண்டாமா? அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்தால்தான் என்ன" என்பார்கள்.

காலத்திற்கு ஏற்ப சந்தை படுத்தப்படும் பொருட்களும் அவற்றை விற்பதிலும் புதுமையை புகுத்தும் இந்த நவீன காலத்தில்,இந்த "இலவச" இணைப்புகளை மேலும் இன்றைய சூழலுக்கேற்ப விரிவாக்கம் செய்தால் என்ன என தோன்றியது.

ஆண்களுக்கான சட்டை துணி , அல்லது ரெடி மேட் சட்டைக்குக்கு கூடவே  அதே நிறத்தில் அல்லது கான்ட்ராஸ்ட் நிறத்தில் ஒரு முக கவசமும் , பெண்களுக்கு ரவிக்கை துணியை இணைத்து வழங்குவதுபோல் மேட்சிங் நிறத்தில் ஒரு முகக்கவசமும் கூடுதலாக இணைத்து வழங்கினால் என்ன? 

கை பை , செருப்பு ,குடை  மற்றும் அணிகலன்களை, தாம் அணிந்திருக்கும் புடவை ரவிக்கை, சட்டைக்கு ஏறாற்போல மேட்சிங்காக இருக்கும்படி பார்த்துக்கொள்பவர்களுக்கு இந்த முக கவசமும் மேட்சிங்காக இணைக்கப்பட்டால் வசதியாகவும் முகக்கவசம் அணிந்துகொள்ள ஆர்வமாகவும் இருப்பதுடன், தூய்மை,சுகாதாரம் நோய் தடுப்பிற்கும் வகை செய்யும் என்பது என்  கருத்து. 

தற்போதுள்ள இந்த கொடிய நோய் கிருமி  ஒழிந்தபின்னும்(??!!) தொடர்ந்து முகக்கவசம் அணியும் வழக்கம் மக்களிடையே  பழக்கத்திற்கு  வந்தால் பலவித சுவாசம், சருமம்  சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளலாமே. அதற்கு இந்த "கொசுறும்" ஒரு கூடுதல் காரணியாக இருக்கும் என்பதும்  என் தாழ்மையான கருத்து.

வீட்டை விட்டு  வெளியில் செல்லும் முன் எப்படி செருப்பு அணிய மறப்பதில்லையோ , வாகனத்தை எடுப்பவர்கள் அதன் சாவியை எடுக்க மறப்பதில்லையோ  அதுபோல  முக கவசம் அணிவதும் இன்றியமையாததாக நம் வாழ்வோடு இணையப்போகும் நாள் வெகு தூரம் இல்லை.

இனி கடைகளில் புடவை ரவிக்கை, வேட்டி  சட்டைகளுடன் attached முகக்கவசம் இலவசம் என்று விளம்பரத்தை  செய்யும் நாட்கள் விரைவில் சந்தைகளில் பார்க்கலாமா?

அதற்காக புதிய துணி வாங்கும்வரை முகக்கவசம் இல்லாமல் இருக்கவேண்டாம், மேட்சிங்காக இல்லை என்றாலும் இருப்பதை கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்  எனும் இந்த  கொசுறு இணைப்புடன் பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம் 
கோ. 



23 கருத்துகள்:

  1. துணிகளையும் ஆண் லைனில் மட்டுமே வாங்கும் நாளும் வரும் ஐய்யா. அமேசான், ஃபிள்ப் கார்டு, ரிலையன்ஸ் விதவிதமா ஆஃபர்ஸ் போடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த் (ஹையா...பெயரை சரியாக சொல்லிட்டே)

      நீங்கள் சொல்வது நிச்சயம் நடக்கும், தேங்காய் மாங்காய் கத்தரிக்காய்களையே கார்பொரேட்கள் விற்கும்போது இதை செய்ய மாட்டார்களா? இப்போதே ஆன் லைனில் துணி விற்பனை கொடிகட்டித்தானே பறக்கின்றது.

      நீக்கு
  2. உலகமே சட்டென இப்படி ஒரு நிலைமைக்கு மாறும் என்று எதிர்பார்க்கவே இல்லை.  பழைய நிலை இனி வரவே வராதா?  தெரியவில்லை.  ஏக்கம் மனதைப் பிசைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்,

      யாரும் எதிர்பாராத ஒரு கொடுமை இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது வேதனை.

      நீக்கு
  3. சூழ்நிலைக்கேற்ற பதிவு.

    பதிலளிநீக்கு
  4. கோ ...
    தங்களுக்கு ஒரு கொசுறு செய்தி.

    எங்க ஊரில் சட்டைக்கு பேண்ட்டு கலர் டிசைனில் முக கவசம் விற்பனைக்கு வந்தாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. நீங்க சொல்வதுபோல பண்டிகைகளில் மாஸ்க் இலவசமா கொடுப்பாங்க (வரவேற்கும்போது பன்னீர் தெளித்து வரவேற்று ஒரு மாஸ்கையும் கையில் கொடுப்பது போல).

    ஆனா மாஸ்க் எப்போதும் அணிந்துகொண்டு மூச்சுவிடும்போது நாம் வெளிவிடும் மூச்சையே நாம் சுவாசிக்கும் நிலைமை. அதுமட்டுமல்ல, பொதுவா அடிக்கடி இதனைத் தோய்ப்பதில்லை. இது வேறு பல கெடுதல்களுக்கு வழிவகுக்கும் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்குமே ஒரு எதிர் வினை(Evil effect) இருக்கத்தான் செய்கிறது.

      நீக்கு
  6. சில நேரங்களில் இலவசம் என்பதற்கே அர்த்தம் இல்லாமல் இருக்கு. உதாரணமா ஒரு சில்க்ஸ் ஹவுசில், 1 புடவை வாங்கினால் 3 புடவைகள் இலவசம் என்று சொல்லி விற்கிறாங்க வருடம் பூராவும். இதைவிட ஃப்ராடு இருக்க முடியுமான்னு எனக்குத் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் சொன்னதுபோல், எல்லாவற்றிற்கும் நாம் காசு கொடுத்து விடுகிறோம் என்பதை அறியாமல் இலவசம் என்னும் இனிப்பு வார்த்தையில் சிக்கிய எறும்புகளாகிவிடுகிறோம். என்னத்த சொல்ல… வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  7. இளம் வயதில் நான் மளிகைக்கடையில் பொருள்கள் வாங்கும்போது கொசுறாக கல்கண்டு, திராட்சையை பொட்டலமாக அதில் இடுவதைப் பார்த்துள்ளேன். அந்த நடைமுறையை இன்னும் சில கடைகளில் காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்கரங்கள்.

      தங்களின் இளம் வயது நாட்களை நினைவுகூர்ந்தமை நன்று.

      மளிகை சாமான் வாங்கும்போது கல்கண்டும் சேர்த்து கொசுறாக கொடுத்ததை நானும் பார்த்திருக்கின்றேன்.

      இன்னும் இதுபோன்று சிலர் செய்வது உண்மையிலேயே அபூர்வம் தான்.

      வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  8. இப்போழுதே ஆண்களுக்கான சட்டைகள் மேட்சிங் மாஸ்க் உடன் இணைய வழி வாங்க முடிகிறது கோ. தில்லியில் ஒரு கடையிலும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      அப்படீன்னா உங்ககிட்ட இலவச மாஸ்க் இருக்குனு சொல்லுங்க.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  9. இலவசமாக மாஸ்க் கொடுக்கிறார்களோ இல்லையோ இந்த தொற்று சீக்கிரம் மறைய வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,மாஸ்க் போட்டு முகம் மறைவதுபோல் இந்த தொற்று முழுமையாய் மறையவேண்டும் என்பதே எல்லோரின் பிரார்த்தனை

      நீக்கு
  10. ஆண்களுக்கான சட்டை துணி , அல்லது ரெடி மேட் சட்டைக்குக்கு கூடவே அதே நிறத்தில் அல்லது கான்ட்ராஸ்ட் நிறத்தில் ஒரு முக கவசமும் , பெண்களுக்கு ரவிக்கை துணியை இணைத்து வழங்குவதுபோல் மேட்சிங் நிறத்தில் ஒரு முகக்கவசமும் கூடுதலாக இணைத்து வழங்கினால் என்ன? //

    ஹா ஹா ஹா கோ உங்க ஐடியா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டு!! இங்க் அல்ரெடி மேச்சிங்காத்தான் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது போட்டுக்கறாங்க.

    நான் மட்டும் என்னன்றீங்க? வெள்ளை, கறுப்பு மட்டுமே எல்லாத்துக்கும் பொருந்துமே!! ஹா ஹா ஹா ஆனால் நான் வெளியில் போவது இல்லையே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      எதில்தான் மேட்சிங் என்பதற்கு ஒரு வரையறை இல்லாமல் போகுது என்று ஏளனமாக நினைக்க தோன்றினாலும் இதுவும் ஒருவகையில் மாஸ்க் அணிந்துகொள்ள ஊக்கம் தரும் செயலே. கருப்பு வெள்ளை சரிதான். சிகப்பு வேண்டாம் ஏனென்றால் நமக்கு காட்டப்படும் இந்த கிருமியின் நிறம் சிகப்பாக இருப்பதால் "அது" இந்த நிறத்தை பார்த்து நம்ம இனம் என்று நினைத்து வாய்க்குள் புகுந்துவிட வாய்ப்பிருக்கின்றது.

      ஐடியா லேட்டாக பதிவில் சொல்லி இருந்தேன் ஏற்கனவே அகில உலக புடவை ரவிக்கை மற்றும் சட்டை உற்பத்தியாளர் சம்மேளனத்திற்கு அனுப்பி இருந்தது உங்களுக்கு தெரியாது. ஐயோ… ஐயோ….

      நீக்கு
  11. எனக்கு இப்ப ஒரே வருத்தம் சந்தை இல்லை என்பதே. வீட்டருகில் தான் வாங்குகிறோம் காய் பழம் எல்லாம். சந்தை என்றால் அது தனிதான். எத்தனை வெரைட்டிகள் ரொம்ப நல்லா கிடைக்கும். அங்கு விற்பவர்கள் பாவம் மக்கள். அவர்களிடம் பேரம் பேசாமல் வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் அவங்களே ரொம்ப கம்மியாகத்தான் விலை சொல்லுவார்கள்.

    இலவசம் என்பதே கிடையாது மிகவும் சரியே கோ.

    இருந்தாலும் பாருங்க ஒரு பொருள் வாங்கும் போது இன்னொன்று ஃப்ரீ என்று கொடுக்கும் போது வியாபார சைக்காலஜி எப்படி வொர்க் அவுட் ஆகுது! மக்களுக்கும் அதில் ஒரு அற்ப சந்தோஷம்தானே!

    மீண்டும் சந்தை எலலம் எப்ப தொடங்குமோ என்று ஏக்கமாக இருக்கிறது. உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது இந்த் மாயாவி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      பல ஆண்டுகளுக்கு முன் சந்தைக்கு சென்றிருக்கிறேன், பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பல வண்ணங்களில் பல பொருட்கள். நீங்கள் சொல்வதுபோல் மலிவான விலை என்றாலும் அங்கேயும் பேரம் பேசும் ஆட்கள் உண்டு.

      எனினும் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் எனும் மகுடிக்கு மயங்காத மனித (மன)பாம்புகள் இல்லாத இடம் எது.

      அதிலும் இங்கு சில கடைகள் "closing down " என்ற விளம்பரத்துடன் ஆண்டுமுழுதும் விற்பனை செய்கின்றனர், பொதுவாக closing down என்றவுடன் பொருட்கள் மிக மிக "சல்லீசாக"(கீதா உபாயம்) விற்கப்படும் என்ற எண்ணத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதும் ஆனால் விலை என்னவோ ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.

      வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு