பின்பற்றுபவர்கள்

சனி, 30 மே, 2020

இனியும் இனிமை!!







தனிமையிலும்...
நண்பர்களே,

சமீபத்தில் ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம்,மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்ததை நாமறிவோம்.

தற்போது இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு , சில நிபந்தனை  விதிகளுக்கு உட்பட்டு இடம் விட்டு இடம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம்.


எனினும், ஊர் சேர்ந்த ஒரு வாரம் , அல்லது  பதினான்கு  நாட்கள் , அல்லது இருபத்தி எட்டு நாட்கள் தங்களை தனிமை படுத்திக்கொண்டும் முகாம்களில் தங்கி இருந்த பின்னரே தத்தம் வீடுகளுக்கு செல்ல அனுமதித்திருப்பதும் சில நடைமுறை சங்கடங்களை ஏற்படுத்தாமல் இல்லை.


உறவுகளை பிரிந்து வாழ்ந்த  மக்கள் இப்போது குடும்பத்துடன் சேர்த்து வாழும் நிலை கண்டு மனம் மகிழ்கிறது.


இப்படி செல்லும் தாங்கள் முகாம்களில் தங்கவைக்கபட நேர்ந்தபோது எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளும் ஏற்பட்டால் எப்படி இருக்கும்?


கடந்த வாரம்  சனிக்கிழமை பூனாவிலிருந்து புறப்பட்டு மஹாராஷ்ட்ரா  வரை சென்று அங்கே இருந்து தன்  வீட்டுக்கு செல்ல முடியாமல் அருகிலிருந்த ஒரு ஆரம்ப பாடசாலையில் தங்கும்படி ஆனதாம் என் நண்பருக்கு.


இரவுவேளை என்பதாலும் 250  மைல் தூரம்  பயணித்த களைப்பாலும் , கை  கால்களை நீட்டி படுத்தால்  நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், பரிசோதனை  சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு, தன்னை பார்க்க வந்திருந்த தங்கள் குடும்பத்து மக்களை தூரத்தில் இருந்தே - சமூக இடைவெளி அனுசரித்து பார்த்துவிட்டு அவர்கள் கொண்டுவந்திருந்த உணவை அதிகாரிகள் மூலம் பெற்றுக்கொண்டு தமக்கு ஒதுக்க ப்பட்ட இடத்தில் படுத்துக்கொண்டாராம்.


இடம் அசௌகரியமாக இருந்தாலும் எப்படியோ தம் சொந்த ஊருக்கு வந்துவிட்டதையும் தன்  குடும்பத்து மக்களை முகமுகமாய் பார்த்துவிட்டதையும், நீண்ட நாட்களுக்கு பின் அம்மாவின்  சமையலை ருசித்துவிட்டு    மன நிம்மதியுடன் உறங்க சென்றாராம்.


என்னதான் பயண களைப்பாக இருந்தாலும் புதியஇடமென்பதால் உறக்கம் வரவில்லையாம்.


எனவே விடிந்தும் விடியாத காலைப்பொழுதின் வெள்ளி சாமத்தில் கண்திறந்து பார்த்தவருக்கு, கனவா நிஜமா நாம் காண்பது என ஒரு இன்ப அதிர்ச்சிக்குள்ளானாராம்.


அப்படி என்ன இன்ப அதிர்ச்சி…


நாளை சொல்கிறேன் ….. என வழக்கம்போல் வழுக்கி செல்லாமல் அதை  இப்போதே சொல்லிவிடுகிறேன்.


பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அந்த கட்டிடம், -  தான் முதலாம் வகுப்புமுதல் ஏழாம் வகுப்புவரை படித்த அவரது ஆரம்ப கால பள்ளிக்கூடம் என்பதை அறிந்து அந்த பள்ளிக்கூடத்தின் எல்லா வகுப்பறைகளையும்  மகிழ்ச்சியுடன்  சுற்றிபார்த்தவருக்கு மற்றுமொரு ஆனந்த அதிர்ச்சி.


அது என்ன?


ஏழாம் வகுப்பு முடித்து அந்த பள்ளி வளாகம் விட்டு வந்து சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அதே பள்ளிக்கூடத்தில் கடந்த இரவு மட்டுமல்லாது இன்னும் சில நாட்கள் தங்கப்போகிறோம், இதுபோன்ற வாய்ப்பு நமக்கு மீண்டும் நம் வாழ்வில் கிடைப்பது அபூர்வம் என்றெண்ணி  இருந்த அவரின் கண்களில் பட்டது அவரது ஏழாம் வகுப்பின்போது அவர் வரைந்து  பள்ளியின் அசெம்பிளி ஹாலில் இன்னமும் மாட்டி வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் ஓவியமும் அடியில் இருந்த இவரது பெயருமாம்.


பள்ளியின் அன்றைய தலைமை ஆசிரியர்  Miss.Saroj Patil  அவர்கள் ஓவியப்போட்டியில் முதற்பரிசு பெற்ற  அந்த  ஓவியத்தை பள்ளியின் ஆசிரியர்கள்  அறையில் மாட்டப்போவதாக சொன்னார்கள் என்பதும்  அவர் நினைவிற்கு வர  அசெம்பிளி ஹாலில் இருந்த புன்னகிக்கும் மகாத்மாவின் முகம் பார்த்து  கண்ணீர் மல்க அதனடியில் நின்றாராம்.


தாம் தனிமை படுத்தப்பட்டிருந்தாலும் இந்த சூழ்நிலையில் அந்த தனிமை அவருக்கு இனிமையாகவே இருந்ததாம்.

ஆச்சரியம் , மகிழ்சி ,இன்ப அதிர்ச்சி,ஆனந்தம்,புன்னகை, அழகை , மலரும் நினைவுகள், உடன் பயின்ற தோழர்களின் திருமுகங்கள், ஆசிரியர்களின் பெயர்கள், விளையாட்டுக்கள், பாடங்கள், மழை, வெய்யில்,மரம் செடி கொடிகள், கரும் பலகைகள், தண்ணீர் தொட்டிகள் , குடிநீர் குழாய்கள் …. என பல நினைவு கீற்றுக்கள் அவர் நெஞ்சத்தில் நிழலாட முடிந்தவரை ஒவ்வொரு அங்குல நினைவுகளையும் தமது செல்போனில் கிளிக்கிக்கொண்டே  இன்னும் அங்கே தங்கப்போகும்  /தூங்கப்போகும் நாட்களை எதிநோக்கி மகிழ்ந்தாராம்.


"இடுக்கண் வருங்கால் நகுக!" எனும் வள்ளுவனின் தெள்ளிய வரிகளை துல்லியமாய் துணைக்கழைத்து இன்னல் வேளையிலும் இன்புற்றிருக்க பழகிக்கொள்ளும் பக்குவம் பெற்ற நண்பரின் நேர்மறை அனுபவம் பாராட்டத்தக்கது.


பி.கு: பல ஆண்டுகளுக்கு முன் தன்னை உருவாக்கி வாழ்வின்  படியேற வைத்து இன்றும் தன்  மனதில் மகிழ்வை கூட்டிய அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் , குறிப்பாக மாணவியருக்கான நவீன கழிப்பறைகள் கட்ட தமது  ஆறு  மாத சம்பளத்தை முழுமனதுடன் அன்பளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் சொன்னார்.


இந்த இன்பமும் மகிழ்ச்சியும், இனிய நினைவுகளும்  இனியும் அவரது நெஞ்சில் நிலைத்து நிழலாட என் வாழ்த்துக்கள்.
 
நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 
கோ.


7 கருத்துகள்:

  1. படித்த பள்ளியில் தங்க நேர்ந்தது, அங்கே நடந்த விஷயங்கள், செய்ய நினைத்திருக்கும் சிறப்பான பணி என அனைத்துமே நன்று. கஷ்டம் என நினைத்தால் கஷ்டம். அப்படி தனிமைப்படுத்தப்பட்டதாலும் ஒரு நன்மை இருந்திருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,
      படித்தபள்ளியில் படித்த காலத்திலேயே ஒரு பத்து நாட்கள் தங்கி இருந்திருக்கிறேன் "நாட்டு நலப்பணி" திட்ட முகாமில். ஆனால் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு வரம்(இரு வாரம்) தான். அதுவும் அவரது எண்ணம் மிகவும் சிறப்புதான். வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. அவருக்கு நல்ல தொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவீன், வருகைக்கு மிக்க நன்றிகள்.

      ஆம் நல்ல வாய்ப்பு நல்ல அனுபவம் அவருக்கு.

      உங்களுக்கு இதுபோன்ற பள்ளியில் தங்கிய /தூங்கிய அனுபவம் உண்டா?

      நீக்கு
  3. மிக மிக ஆச்சரியமான எதிர்பாராத விஷயம் இல்லையா அவருக்கு. நல்ல அனுபவம் ப்ளஸ் பழைய நினைவுமீட்டல்கள். அவர் வரைந்த படம் அங்கு இருந்தது இன்னமும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கண்டிப்பாக கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கும்.

    அவர் முன்னெடுக்கவிருக்கும் செயல்களும் சிறப்பான ஒன்று. எல்லாம் நல்லதுக்கே இப்படியான தனிமைப்படுத்தல் நன்மை விளைவித்திருக்கிறதே!

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      இக்கட்டிலும் ஒரு இனிய நிகழ்வினையும் அதுவும் ஒரு நல்லதிற்குத்தான் என தாங்கள் சொல்லுவது மிக மிக சரியே.

      நீக்கு
  4. உங்கள் நண்பருக்கு எனது பாராட்டுக்கள் சார்.

    பதிலளிநீக்கு