கனியெல்லாம் ஹனியானால்..
நண்பர்களே ,
தொடர்கிறது ….
முந்தய பதிவை வாசிக்க... பூவாகி… காயாகி-1
இதற்கிடையில் பனிரெண்டு நாட்கள் வெளி நாட்டு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிதும் முதலில் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மர தரிசனம்.
பெரிய அளவில் சிகப்பும் வெளிர் மஞ்சளும் கலந்த நிறத்தில் மூன்றே மூன்று மட்டுமே மரத்தில் தொங்கிக்கொண்டிருக்க சில பத்து காய்கள் மலர்ந்தும் மலராத …. அதாவது முழுமையாக வளர்ந்தும் வளராமல் .. அடிமரத்தை சுற்றி வீழ்ந்து கிடந்தன.
முதல் வேலையாக மூன்றையும் பக்குவமாக கொய்து வந்து அதில் ஒன்றை அருகிலிருந்த ஆலயத்திற்கு காணிக்கையாக கொடுத்துவிட்டு அடுத்த ஒன்றை பக்கத்து வீட்டு காரருக்கு, (கோ தோட்டத்தில் இருந்து பெருமையுடன்) வழங்கி விட்டு மூன்றாவதை நன்றாக கழுவி துடைத்து எட்டுத்துண்டுகளாக வெட்டி அவற்றில் ஒரு துண்டை எடுத்து கடிக்க …..
ஆஹாஆ ..... மலர்களில் இருந்து எடுத்த தேனை வண்டுகள் இந்த பழத்தில் சேமித்துவிட்டிருக்க வேண்டும் , அப்படி ஒரு சுவை.
இப்படி தேன் சுவை ஆப்பிள் இந்த ஆண்டு மூன்று மட்டுமே முழுமையாய் கிடைத்தது கொஞ்சம் ஏமாற்றமே.
சரி முதல் வருடம் தானே ... போக போக சரியாகிவிடும் என்று மனதை தேற்றிக்கொண்டு , தொடர்ந்து செய்ய வேண்டிய பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டே வந்தேன்.
ஒவ்வொரு ஆண்டும் தொடக்கம் போலவே பல நூறு மொட்டுக்கள் , சில நூறு பூக்கள், சில பத்து பிஞ்சுக்கள் , ஒன்று அல்லது இரண்டு காய்கள் இறுதியில் அவையும் முதிராமலே உதிர்வதுமாக ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ஒன்பது ஆண்டுகள்.
பொறுத்துப்பொறுத்து பார்த்தேன் பல வாய்ப்புகள் தந்தேன், உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் செய்தேன். கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல், படைப்பின் நோக்கத்தை உணராமல் பலன் கொடுக்காமல் வெட்டியாய் இருந்த அந்த மரத்தை வெட்டினால் என்ன?
நண்பர்களே, தயவு செய்து கொஞ்சம் யோசனை சொல்லுங்களேன் நாளை.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம் .
கோ.
வருடத்திற்கு சில பழங்கள் மட்டும் கொடுத்த மரம்.
பதிலளிநீக்குஏன் வெட்ட வேண்டும் - இயற்கை எவ்வளவு கொடுத்ததோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்கவே வேண்டும்.
வெங்கட்,
நீக்குதங்களின் பரிதவிப்பும் இயற்கையின்பாலுள்ள அக்கறையும் விளங்குகின்றது.
மனிதனின் குணங்களுள் ஒன்று, எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வதும் மற்றவர்களுடனான ஒப்புமையுமே.
யோசனைக்கு மிக்க நன்றி வெங்கட் , எனினும் தங்களின் யோசனை காலம் கடந்த ஒன்றாகி …..
நண்பரே அடியேனின் பெயர் விசு। நினைவிருக்கிறதா? தோலை பேசி எண் மாறிவிட்டதா? அழைக்க முடியவில்லையே!
பதிலளிநீக்குவிட்டகுறை தொட்டகுறை என்பதுபோல் விட்டுவிடக்கூடிய குறை நட்பல்லவே நம்முடையது..
நீக்குஎழுதும் கலையை எனக்குள் களை எடுத்து பதிவுலகில் என்னை பதியன்போட்டு தலை எடுத்து கிளைக்க செய்த் உம்மை மறப்பது எங்ஙனம் சாத்தியம்.
சாத்தி இருக்கலாம் கதவுகள் ஆனால் தட்டும்போது கண்டிப்பாக திறக்குமல்லவா?
எண்கள் மாறலாம் , எண்ணங்கள் மாறுமோ?
நீண்ட நாட்களுக்கு பின் பதிவில் பதித்த எம் சுவடுகண்டு பின்னூட்டமாக மின்னூட்டம் செய்த தங்கள் நட்பென்னும் மின்சாரம் இன்னும் பல பதிவுகளுக்கான வெளிச்சம் வீசும் விளக்குகளுக்கு தடையின்றி பாயும் என நம்புகிறேன்.
கோ.
இன்னும் கொஞ்சம் பொறுத்துப்பாருங்கள் கோ
பதிலளிநீக்குதுளசிதரன்
ப்ளீஸ் கோ வெட்டிவிடாதீர்கள். கொஞ்சமேனும் பழங்கள் கொடுத்த மரம் அல்லவா? நம் வீட்டில் வயதானவர்களால் பயனில்லை என்றோ அல்லது கொஞ்சம் மாறுபட்ட தன்மையுள்ள மக்கள் இருந்தால் வேண்டாம் என்று ஒதுக்குவதோ தள்ளுவதோ இல்லைதானே அது போலத்தான் மரங்கள் செடிகள், விலங்குகள் அனைத்தும். எல்லாமே. அதனோடு அன்புடன் பேசிப் பாருங்கள் மரத்தினோடு பேசுங்கள். காய்க்கவில்லை என்றாலும் வெட்டிவிடாதீர்கள் ப்ளீஸ். மரம் இருப்பதே மகிழ்வான விஷயம். நம்முடன் நம் அம்மா, அப்பா இருப்பது போலத்தான் இயற்கையும் நம் அன்னைதானே கோ.
கீதா
மரங்களை வெறும் ஜடங்களாகவே பார்க்கும் ஜனங்களின் மத்தியில் அவற்றை, நம்மை பெற்றவர்களோடும் , நாம் பெற்றவர்களோடும் ஒப்புமை செய்து அவற்றுக்கு தாங்கள் காட்டும் அன்பும் பாசமும் , கரிசனையும் , வெட்டப்படக்கூடாது என்ற பரிதவிப்பும் ஆதங்கமும் தங்களின் மென்மையான உள்ளத்தின் தன்மையை காட்டுகிறது.
நீக்குஎனினும் தங்களின் கோரிக்கை காலதாமாமதமாகிவிட்டதோ….