பின்பற்றுபவர்கள்

புதன், 31 மார்ச், 2021

புற்றீசல் கடைகளும் வாங்கிவந்த வரங்களும்!!

வெர்ச்சுவல்  சுவை!!.

நண்பர்களே,

இந்த யூ ட்யூப் எனும் வலைதள ஊடகம் நம் மக்களிடையே பரவ ஆரம்பித்த காலகட்டங்களில் பல தரப்பட்ட செய்திகள் தகவல்கள் ஒலி வடிவிலும்  பின்னர் காணொளிகளாகவும் வர தொடங்கி  நம் சமூகத்தின் ஒரு அங்கமாக - கலாச்சாரமாக இன்றைக்கு அதில் முழு நீள -  பல மணி நேர நிகழ்ச்சிகளும் வருமளவிற்கு பிரபலமாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது.

பண்டிகைகள் , விசேஷங்கள், அரசியல் பேச்சுக்கள், மேடை நிகழ்வுகள் , நாடகங்கள், பட்டிமன்றங்கள்,விளையாட்டு நிகழ்ச்சிகள், தெருக்கூத்து, கழைக்கூத்து, கரகாட்டம், குறும்படம் , நெடுந்தொடர் பகுதிகள்... இன்னும்  சொல்லப்போனால் சில அரசு விளம்பரங்கள்கூட இந்த வலைதள ஊடங்கங்கள் வாயிலாக பகிரப்படுவதை நாம் பார்த்திருப்போம்.

இந்த வலைதளத்தின் மூலம் சில சமூக சீர்கேடுகள் ஆங்காங்கே நிகழ்ந்தாலும் பெரும்பாலும் இவற்றால் பலரும் நன்மைகளை அடைந்துவருவது கண்கூடு.

எத்தனையோ இளைஞர்கள், தாங்கள் செய்துவந்த - கை  நிறைய சம்பாதித்துகொண்டிருந்த வேலைகளை விட்டு விட்டு(இழந்து விட்டு) முழு நேர யூ ட்யூப் காணொளிகளை தயாரித்து வெளி இட்டு அதன்மூலம் பல மடங்கு சம்பாத்தியம் ஈட்டும் பணியில் ஈடுபடுவதை பெருகிவரும் காணொளி எண்ணிக்கையை பார்க்கும்போது புரிகிறது.

இதில், ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், தொழில் நுட்பம் அறிந்தவர் , அறியாதவர் நகர வாசி, கிராம வாசி என்ற பேதைமை இன்றி யாரும் , எவரும் இந்த தளத்தில் கால் பதித்து ஊன்றி நிற்க முடிகிறது.

ஆரம்பகாலம் முதல் இந்த தளத்தினை மக்கள் பயன்படுத்தி வந்திருந்தாலும் கடந்த ஓராண்டாக - கொரோனா ஊரடங்கு, வேலை , தொழில்  பாதிப்பு,பொது முடக்கம் போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள எத்தனையோ மாற்று வேலைகளை தேர்ந்தெடுத்து அதில் செழுமைகாணும் செய்திகளும் இந்த யூட்யூப் தளத்தின் வழியாக காண முடிகிறது.

அவ்வகையில் என்னை வெகுவாக கவர்ந்த  பல விடயங்களில் புற்றீசல்கள்போல பெருகிவிட்ட உணவுக்கூடங்கள்  சம்பந்தமான செய்தி காட்சிகள்  முதலிடம் .

எத்தனையோ புதிய புதிய உணவகங்கள், அவை தள்ளு வண்டிகளாகட்டும்,தெருவோர, சாலையோர கடைகளாகட்டும் அல்லது  மாற்றி  வடிவமைக்கப்பட்ட ஆட்டோ ரிக்க்ஷா  கடைகளாகட்டும் அல்லது  நிரந்தர கட்டிடங்களில் அமைந்தவைகளாகட்டும் எதுவானாலும் , அவற்றை காட்சிப்படுத்தி பதிவேற்றப்படும் செய்திகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன.

காலை உணவு மட்டும்,  மத்திய உணவு  மட்டும் அல்லது இரவு உணவு மட்டும் அல்லது இரவெல்லாம் உணவு என்று எந்த வகை உணவகமானாலும் அங்கே விற்கப்படும் உணவு வகைகளை பார்ப்பதிலும் சம்பந்தப்பட்ட யூடியூபர் சாப்பிடுவதை பார்ப்பதிலும் ஏற்படுகின்ற மகிழ்ச்சி ஜொள்ளில் அடங்காது.

இப்படி  பெருகிவரும் உணவு கடைகளில் பிரதானமாக இடம் பிடித்திருப்பது பிரியாணி கடைகள் என்றால் அது மிகை அல்ல.  

சைவ உணவு பழக்கங்கள் கொண்டவருக்கே இதுபோன்ற காட்சிகள் மகிழ்வை அளிக்கும்போது  அசைவ பிரியர்களின் மகிழ்வை என்னவென்பது?

என்னதான் வீட்டில் செய்து சாப்பிட்டாலும்  கடையில் கிடைக்கும் உணவின் சுவையே அலாதிதான் (சுகாதாரத்தை(??) தவிர)

அதிலும் ஊருக்கு ஊர் விதவிதமான பெயர்களில் இந்த பிரியாணிகளும் , பரோட்டா குருமாக்களும், இட்டிலி, தோசை,பூரி பொங்கல், வடை  போண்டா   போன்றவை    செய்யப்படும் விதங்களை  பார்க்கும்போதும் அங்கே ருசித்து சாப்பிடும் மக்களை பார்க்கும் போதும், நம்ம ஊர் போல இங்கே இல்லையே என்ற ஏக்கம் அவ்வப்போது என்  மனதில் நிழலாடுவதுண்டு.

என்ன செய்வது வாங்கி வந்த  வரம் அப்படி என மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும்? யூ ட்யூபிலேயேதான் பார்த்து கற்பனையாய் ருசித்துக்கொள்ளவேண்டி இருக்கின்றது..

உணவு விஷயத்தில் நம்ம ஊரை (நாட்டை)அடித்துக்கொள்ள எவராலும் முடியாது என்பது திண்ணம்.

வாய்ப்புள்ளவர்கள் அனுபவியுங்கள் வாய்ப்பில்லாதவர்களுக்கு   ஆறுதல் இந்த யூ ட்யூப் (வர)பிரசாதம்.

பெருகிவரும் இதுபோன்ற யூ ட்யூப் காட்சிகளை ஏராளமான சிறுவர்கள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் , மாணவ மாணவியர் , தொழிலாளர் என சமூகத்தின் பெரும்பாலானான மக்கள் பார்க்கும்போது இந்த யூ ட்யூபர்கள் , இன்னும் அதிக சமூக பொறுப்புகளையும் உணர்ந்து, சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும் தங்கள் காணொளி தொடர்பாகவே உடனிழைத்து வழங்குவது நல்லது.

சமூக இடைவெளி, முகக்கவசம், சுத்தம், சுகாதாரம், ஹெல்மட், சீட் பெல்ட், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு , குளிர்பான குப்பிகளை பொது இடங்களில்  வீசி எறியாதிருப்பது , பொது இடங்களில் எச்சில் உமிழாதிருத்தல் , வாயை மூடி இருமுவது - தும்புவது, கை  கழுவி விட்டு  சாப்பிடுவது...  உணவு பொருட்களை வீணாக்காமல் தேவைக்கேற்ப வாங்கி சாப்பிடுவது....என்பனவற்றையும் வலியுறுத்தும்படி தங்கள் பதிவுகள்  இருக்கும்படி பார்த்துக்கொள்வது சிறப்பு.

மேலும் போதிய ஆதாரமில்லாமல் இந்த உணவு இந்த நோய்க்கு நல்லது, இது ஆண்களுக்கு நல்லது இது பெண்களுக்கு நல்லது இது குழந்தைகளுக்கு நல்லது.... போன்ற செய்திகளை தவிர்த்து தரமான வீடியோ காட்சிகளை பதிவிடுவது எல்லோருக்கும் நல்லது.. 

நன்றி.

(பெல் பட்டனை அழுத்த மறந்துடாதீங்க)

மீண்டும் ச(சி)ந்திப்போம்,

கோ.

4 கருத்துகள்:

  1. யூடியூப் சிறக்க மெகா தொடர் பார்க்கும் அனுபவம் அவசியம் தேவை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... அப்படி ஆகிவிட்டதா?

      வருகைக்கு மிக்க நன்றி தனபால்.

      நீக்கு
  2. காணொளிகளின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பது உண்மை. எல்லாவற்றிற்கும் காணொளி வந்துவிட்டது! எங்கள் இல்லத்திலிருந்தும் இரண்டு யூ ட்யூபர்கள் உண்டு! :)

    பெல் பட்டனை அழுத்த மறந்துடாதீங்க! முடிக்கும் போது இதைச் சொன்னது நன்று! :)

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் பெல் பட்டனை அழுத்தியதற்கும் மிக்க நன்றி வெங்கட்.

      நீக்கு