பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 மார்ச், 2021

முடியாது!!

படிப்பானா?..படித்தானா?
நண்பர்களே,

யாராவது நம்மிடம்   ஒரு உதவியையோ அல்லது ஒரு ஒத்தாசையையோ, அனுகூலத்தையோ எதிர்பார்த்து   நாடி வருபவரின் முகத்தில் அடித்தாற்போல "முடியாது" என்று சொல்லி மறுக்கும் போது கேட்பவரின் உள்ளம் என்ன பாடு படும். 

அதிலும் ரகசியமாக காதும் காதும் வைத்தாற்போல கேட்கப்படும் உதவியை பலர் அறிய பலர் கேட்க வெளிப்படையாக முடியாது என்று சொல்லி மறுக்கும்போது கேட்பவரின் மனது படும் துயரம்'... அவமானம் ... சொல்லில் அடங்காது. அதே சமயத்தில் பலர் முன்னிலையில் பரிவாரங்களோடு "சுற்றம் சூழ" வந்து கேட்கும்போது அனைவர் முன்னிலையிலும் முடியாது என மறுக்கும்போது எப்படி இருக்கும்?

" முடியாது" என மறுக்கும் ஓசையை கேட்டபிறகே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு விஷயம் தெரிந்து உதவி கேட்பவரை ஒரு மாதிரியாக - பார்க்க நேர்ந்தால் அது இன்னும் அவமானம்.

இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன் +2 வகுப்பில் சேர ஒரு மாணவன் அவனது அம்மாவுடன் பள்ளிக்கூடத்திற்கு வந்து தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியில் காத்திருந்தார். அந்த சமயத்தில் பள்ளி  ஆரம்பித்து ஒரு வாரம் ஆகி இருக்கும்.

தலைமை ஆசிரியர் சற்று நேரம் கழித்து உள்ளே அழைத்தார் , என்ன நடந்தது என தெரியாது.

பிறகு தலைமை ஆசிரியர் வெளியில் வர அவரை பின் தொடர்ந்து வந்த அந்த தாய், சன்னமான குரலில், ஐயா நீங்கள் சொல்வதுபோல் பத்தாம் வகுப்பில் குறைவான மதிபெண்கள்தான்  எடுத்திருக்கின்றான், தயவாக அவனுக்கு அறிவியல் பாடப்பிரிவில் ஒரு இடம் கொடுங்கள், அவன் படித்துக்கொள்வான் மேலும்   ஏற்கனவே இதே பள்ளியில் படித்தவன் என்ற அடிப்படையில் கொஞ்சம் கருணை காட்டுங்கள் என்றார்.

இந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள்   ஆசிரியர்கள் எல்லோரும் அசெம்பிளி கூடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அந்த தலைமை ஆசிரியர், " முடியாது" வேறெங்கேனும் சென்று முயற்சி செய்யுங்கள் இப்போது சேர்க்கை எல்லாம் முடிந்துவிட்டது, என கொஞ்சம் சத்தமாக சொல்லியவாறே அசெம்பிளி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அவர் போட்ட சத்தத்தில் அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் அந்த தாயையும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்திருந்ததால் பெரும்பாண்மையான ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகமாயிருந்த அந்த மாணவனும் கூனி குறுகிபோனதை உணர்ந்த அந்த தலைமை ஆசிரியர், அசெம்பிளிக்கு  போகாமல் , நேராக தன்  அறைக்கு திரும்பியவர், தமது உதவியாளரை அழைத்து அந்த அம்மாவையும் அந்த மாணவனையும் அழைத்து வர சொன்னார்.

அதற்குள் பள்ளி  வளாகத்தை கடந்துவிட்ட அவர்களை தலைமை ஆசிரியர் அழைக்கின்றார் என அறிந்து மீண்டும் அவரது அறைக்கு வெளியில் காத்திருக்க உள்ளே வர அழைப்பு வந்தது.

உள்ளே சென்ற அவர்களை உட்கார சொல்லிவிட்டு, அவன் "படித்து கொள்வான் என்பதல்ல படித்தானா" என்பதே மேல்வகுப்பில் சேர முக்கியமானது.

பலர் முன்னிலையில் உங்களிடம் அப்படி பேசியது என்னுடைய தவறுதான் மன்னித்துகொள்ளுங்கள், பிள்ளைகள் படிக்கவேண்டிய வயதில் பொறுப்புணர்ந்து படிக்காததால் பெற்றோருக்குத்தான் அவமானம் என மாணவனையும் பார்த்து சொன்னவர்.......

சரி நாளை முதல் இவன் அந்த அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்துகொள்ளட்டும். ஒவ்வொரு  மாதமும் நடத்தப்படும் மாதாந்திர தேர்வுகளில் நல்ல பதிப்பெண்கள் எடுத்து காட்டவேண்டும் அப்படி இல்லை என்றால் மூன்று மாதங்களில் இவனை பள்ளியை விட்டு அனுப்பிவிடுவோம் என கூறிவிட்டு பக்கத்து அறையிலிருந்த  பள்ளி  மேலாளரை அழைத்து சேர்க்கைக்கான ஏற்பாடுகள் செய்ய சொல்லிவிட்டு மீண்டும் அசெம்பிளிக்கு சென்றுவிட்டார்.

பிள்ளையின் முகத்தில் மலர்ந்த புன்னகையைவிட அவனது தாயின் உள்ளத்தில் பூத்த புன்னகையின் பரிமாணம் அளப்பரியது.

பின்னர் அந்த மாணவன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமின்றி தலைமை ஆசிரியரின் செல்லப்பிள்ளையாகவும் பள்ளியிலேயே முதன்மை மாணவனாகவும் திகழ்ந்து இரண்டாண்டுகள் கழித்து  சிறந்த மாணவருக்கான விருதுடன் பள்ளியை விட்டு  வெளியேறினான்.  

இதேபோலத்தான் வாக்கு தேடிவரும் வேட்பாளர்கள் யார் என பார்த்து முகத்தில் அடித்தாற்போல ஒரு வாக்காளர், முடியாது" இங்கே வரவேண்டாம், இது செய்வேன் அது செய்வேன் என சொல்வதை விடுத்து இதற்கு முன்னாள் என்ன செய்தீர்கள் என யோசித்துப்பார்த்துவிட்டு வாக்கு கேட்க வாருங்கள் என விரட்டி அடித்ததை காணொளி காட்சியாக பலரும் பார்த்திருப்பீர்கள்.

அந்த தலைமை ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் போல - அவர்  சொன்னதுபோல ஒவ்வொரு மாதமும் எப்படி சேவை செய்கிறார்கள் என பார்த்து சரியில்லை என்றால் வீட்டிற்கு அனுப்ப வசதியாக சட்டங்கள் உருவாக்கப்பட்டால், வெற்றி பெரும் ஒவ்வொரு வேட்பாளரும் மக்களின் மனதிற்கு பிடித்த அபிமான மக்கள் தொண்டர்களே.

செய்வீர்களா....? செய்வீர்களா...?

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.  


8 கருத்துகள்:

 1. வருகைக்கும் தங்கள் பாராட்டிற்கும் நன்றிகள் திரு கரந்தையாரே

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தானபால்.

   நீக்கு
 3. பள்ளி மாணவனுக்கு உரைக்கும். இவர்களுக்கு உரைக்காதே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு ஸ்ரீராம்

   நீக்கு
 4. சிறப்பான சிந்தனை. தேர்தல் வரை மட்டுமே அவர்கள் குழைவார்கள். வெற்றி பெற்றுவிட்டால் அவர்களைப் பிடிக்கவே முடிவதில்லை! மாற்றங்கள் நிறைய வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்போம் .
   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்..

   நீக்கு