உள்ளமெல்லாம்.... நொள்ளைக்கனி !!
நண்பர்களே,
முன்பொரு பதிவில் குறிபிட்டிருந்ததுபோல, நம்ம ஊரில் கிடைக்கும் பெரும்பான்மையான பொருட்களும்,காய்கள், பழங்கள் உணவு பொருட்கள் இங்கேயும் கிடைக்கும். ஒரே வித்தியாசம் விலை பல மடங்கு அதிகம்.
அதற்காக எல்லாமே எல்லா நேரங்களிலும் நம்ம ஊர்போல கிடைக்கும் என்றும் ஒரேயடியாக சொல்லிவிட முடியாது நாங்கள் இருக்கும் பகுதியில்.
குறிப்பாக, பலா பழம், சீதா பழம்,கொய்யா பழம்,பனங்கிழங்கு,மாம்பழம், பப்பாளி அரை மற்றும் முழு நெல்லிக்காய் , எலந்தம்பழம், இந்திய மீன் வகைகள், நல்ல கருவாடு, நல்ல நெய், முருங்கை கீரை, சில நேரங்களில் கறிவேப்பிலை போன்றவற்றையும் சொல்லலாம்.
சில நேரங்களில் மேற்சொன்ன பொருட்களும் இன்னும் சொல்லாத பொருட்களும் அத்தி பூத்தாற்போல் சில இந்திய கடைகளில் தென்படும்.
ஆசைப்பட்டு சரி வாங்கலாம் என்று விலையை பார்த்தால் இந்தியாவிற்கே சென்று வாங்கி வந்துவிடலாம் போல் தோன்றும். எனினும் ஆசை மிகுமையால் சொல்லப்படும் விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்.
சில கடைகளில் புதன் கிழமைகளில்தான் புதிய காய்கறிகள் வரும் , அப்படி ஒரு புதன் கிழமை ஒரு பல்பொருள்கள், மற்றும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றிருந்தேன்.
தேவையான அரிசி , மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்கிக்கொண்டு சமூக இடைவெளி விட்டு பணம் செலுத்த நின்றிருந்தேன்.
எனக்கு முன்னால் இருந்தவர் தாம் வாங்கிய பொருட்களை கடைக்காரரின் மேசை மீது வைக்க கடைக்காரர் அதற்கான எடை மற்றும் விலையினை எந்திரத்தில் தட்டிக்கொண்டிருந்தார்.
அவருடன் வந்திருந்த அவரது சுமார் ஒன்பது வயது மகன் அந்த கடையிலிருந்த குளிர் சாதன பெட்டியில் இருந்து தனக்கு பிடித்த ஒரு குளிர் பாணத்தை எடுத்துக்கொண்டு தன் அப்பாவிடம் வந்து கொடுத்தான் அதற்கும் சேர்த்து பணம் செலுத்த.
அவர் வாங்கிய பொருட்களுள் ஒன்று சுமார் 10 அல்லது 12 முழு நெல்லிக்காய்கள்.
எல்லாவற்றிற்கும் சேர்த்து பணம் இந்திய மதிப்பில் ரூபாய் 4,000.00 செலுத்தியபின் , சிறுவனின் உள்ளங்கையில் இருந்த கடிபட்ட ஒரு நெல்லிக்காயை கடைக்காரர் சுட்டிக்காட்டி எங்கிருந்து எடுத்தது என கேட்க சிறுவன் சொன்னான் கடைக்குள்ளிருந்த காய்கறி பிரிவிலிருந்து என.
உடனே கடைக்காரர் அந்த சிறுவனின் தந்தையிடம் கூடுதலாக 20p (20 ரூபாய்) கொடுங்கள் என்று கேட்டார். அதாவது ஒரு நெல்லிக்காய்க்கு 20 ரூபாய். அதை இலவசமாக கொடுத்திருக்கலாம் , ஆசைப்பட்டு அந்த சிறுவன் எடுத்து(துடைத்துதான்) கடித்த அந்த நெல்லிக்காயிற்கு ரூபாய் இருபது.
நம்ம ஊரில் எனக்கு நினைவு தெரிந்து காய்கறி கடை, பழக்கடைகளில் எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளோடு சேர்த்து இன்னும் கொஞ்சம் எடுத்து கூடுதலாக இலவசமாக(கொசுறு) கொடுப்பார்கள், கத்தரி வெண்டை, பாகற்காய், கொத்தவரங்காய், தக்காளி.. மிளகாய் போன்றவை..,கறிவேப்பிலை எப்போதும் இலவசம்தான்.
சில மளிகை கடைகளில் எனக்கு தெரிந்து தனியாக பொட்டலம் கட்டப்பட்டு கற்கண்டு,பொட்டுக்கடலை போன்றவற்றை இலவசமாக கொடுப்பார்கள், சிலநேரம் குழந்தைகளோடு போகும்போது , இன்னும் கூடுதல் கவனிப்பு இருக்கும், சில கடைக்காரர்கள் குழந்தைகளுக்கு சாக்கலேட் மற்றும் காசும் கொடுப்பார்கள் நானும் பெற்றிருக்கிறேன்.
ஆனால் இங்கே இந்த கடைக்காரரின் கறார் மனநிலையை பார்க்கும்போது கொஞ்சம் அருவெறுப்பாக இருந்தது.
பல வேளைகளில் எத்தனையோ பெட்டி பெட்டியான அழுகிய காய்கறி பழங்களை குப்பையில் கொட்டும் நிலைமையும் ஏற்படுவதுண்டு ஆனால் நல்ல நிலையில் இருக்கும் ஒன்றில் கூட கூடுதலாகவோ இலவசமாகவோ கொடுக்க மனமில்லாத கடைக்காரர்களும் இருப்பது வருத்தமளிக்கிறது.
இந்த சூழலில் அந்த தகப்பன் தான் வாங்கி இருந்த நெல்லிக்காய்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளுமாறு கூற அந்த கடைக்காரரும் அப்படியே செய்தது மனித மாண்பிற்கு உகந்ததாக தெரியவில்லை.
இவற்றை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மன வேதனையை தந்தது, உடனே, நான் வாங்கி இருந்த அரிசி முதலான அனைத்து பொருட்களையும் அப்படியே வைத்துவிட்டு வேறு கடை நோக்கி பயணப்பட்டேன், இனி இந்த கடையில் ஒருபோதும் எதுவும் வாங்கமாட்டேன் என்ற உறுதியான தீர்மானத்துடன்.
அதேபோல ஒரு பதினெட்டு வயது சிறுவன் ஒருவன் தான் உடற்பயிற்சிக்காக தனது மிதிவண்டியில் செல்கையில் வண்டியில் ஏற்பட்ட திடீர் பழுதின் காரணமாக வேகமாக சென்று கொண்டிருந்த தன் மிதி வண்டியில் இருந்து சாலையில் விழுந்து கை கால்கள் முகம், உதடு உள்ளங்கைகள் , முட்டி முழுவதும் சிராய்ப்புகளும் ரத்தமுமாக , அதிர்ச்சியுற்றவனாக தட்டுத்தடுமாறி அருகிலிருந்த கடைக்கு சென்று ஒழுகும் ரத்தத்தை துடைக்க ஒரு tissue பாக்கட்டையும் குடிக்க ஒரு பாட்டில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு பணம் செலுத்த தன் கைபேசி வங்கி கார்டை நீட்டி இருக்கின்றான்..
அந்த சிறுவனின் நிலையை பார்த்தும் அந்த கடைக்காரர் , குறைந்த பட்சம் 5 பவுண்டுகள் செலவு செய்தால்தான் கார்ட் மூலம் பணம் செலுத்தமுடியும் என கூறி அந்த சிறுவன் எடுத்த பொருட்களை கொடுக்க மறுத்துவிட்டாராம்.
அந்த சிறுவன் தனது காயங்களை துடைக்க tissue வேண்டும் , என்னிடம் வேறு காசு இல்லை என்று சொல்லியும் உதவ(?!) தயங்கிய கடைக்காரரின் செயல் அதீத அருவருப்பை கொடுக்கின்றது.
எனினும், கடைக்குள் வந்த மனிதாபிமானமிக்க ஒரு (வெள்ளை) மனிதர் அந்த சிறுவன் வாங்கிய தண்ணீர் பாட்டில் tissue பாக்கட்டோடு சேர்த்து ஒரு anti septic disinfectant திரவமும் வாங்கி கொடுத்ததோடு அந்த சிறுவனின் காயங்களையும் துடைத்து தண்ணீர் பருக செய்து , வீடு எங்கே, பத்திரமாக போ என சொல்லி அனுப்பியது பெரும் ஆறுதலாக அமைந்தது.
இந்த பதிவில் வரும் இந்த இரண்டு கடைக்காரர்களும் மனிதாபிமானத்தையும் சக மனித நேயத்தையும் புறந்தள்ளி லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் போக்கு அவர்களது உள்ளங்களின் கடினத்தன்மையை உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இன்னும் ஒரு கூடுதல் செய்தி சொன்னால் நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய நேரும்.
அது என்ன செய்தி ?
பெரும் வெட்கத்துடன் சொல்றேன் இரண்டு கடைக்காரர்களும் பாரத தாய் தவமிருந்து(??) பெற்றெடுத்த தவப்புதல்வர்கள்.
பாரத மாதாவுக்கு ஜே!!
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
தவப்புதல்வர்கள்... :( வேதனை தான். சின்னச் சின்ன விஷயங்கள் கூட விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் நிலை! ஊரில் எங்கள் வீட்டில் காய்க்கும் காய், கனிகள் பெரும்பாலும் இலவசமாகவே எல்லோருக்கும் கொடுப்பது வழக்கம். இப்போதெல்லாம் கொடுக்கும் பண்பு குறைந்து கொண்டே வருகிறது - அரசாங்கம் மட்டுமே இலவசமாக அனைத்தையும் தரவேண்டும் என்று மட்டும் இவர்கள் கேட்பது வழக்கம் தானே!
பதிலளிநீக்குஇங்கும் அந்தந்த பருவங்களில் காய்க்கும் உபரி பழங்கள் , காய் கறிகளை இலவசமாக எடுத்து செல்ல வசதியாக வீட்டுக்கு வெளியில் வைத்து அதனுடன் please help yourself எனும் செய்தியையும் எழுதிவைத்து வழங்கும் ஆட்களும் இருக்கும் அதே சமயத்தில் பதிவில் வரும் சில பதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். தவ(றிய) புதல்வர்கள்
நீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்.
பாவிகள்...
பதிலளிநீக்குஇன்றைக்கு கறிவேப்பிலை விலை உச்சம்...
என்ன சொல்வது தனபால்.
நீக்குஇங்கு கறிவேப்பிலை சில நேரங்களில் கண்ணில்கூட படுவதில்லை.
மனிதாபிமானமேயில்லாத இந்தச்செயலைச் செய்தவர்கள் நம் மக்களா... சே....
பதிலளிநீக்குஆம் நம் மக்களேதான்.வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்
பதிலளிநீக்குஎன் இளம் வயதில் மளிகைச்சாமான்கள் வாங்கிவரும்போது அதில் சிறிதளவு கல்கண்டு, திராட்சை, முந்திரிப்பருப்பு கொண்ட பொட்டலத்தைப் போட்டு அனுப்புவார்கள்.மளிகை சாமான்கள் வீட்டிற்கு வந்தவுடன் அதனை எடுப்பதற்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். மறக்கமுடியாத அந்நாள்களை நினைவுபடுத்தியது இப்பதிவு.
பதிலளிநீக்குஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.
பதிலளிநீக்குதங்களின் பழைய நினைவுகள் கற்கண்டாய், முந்திரியாய், உலர் திராட்ச்சையாய் உள்ளத்தில் இனிக்கிறது..
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா