பின்பற்றுபவர்கள்

வியாழன், 11 மார்ச், 2021

திருமண அழைப்புடன்....

வந்ததென்ன?


நண்பர்களே,

ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம்(+2) வகுப்புவரை  ஒரே பள்ளியில் படித்தவன் என்பதால் மாற்று பள்ளிகளில் இருந்து ஒன்பதாம் மற்றும் பதினோராம் வகுப்புகளில்  சேரும் புதிய மாணவர்களை  அணுகி அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகையில் ஒத்தாசை செய்வது பழைய மாணவர்களின்  இன்றியமையாத கடமைகளுள் ஒன்று.

அவ்வகையில் பத்தாம் வகுப்புவரை சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திலிருந்த பள்ளியில் படித்துவிட்டு பதினோராம் வகுப்பில் சேர வந்திருந்தார் ஒரு மாணவர்.  நான் சார்ந்த அதே பாடப்பிரிவில்  அவரும் சேர்ந்திருந்தார்.

நலம் விசாரித்து பரஸ்பரம் தகவல் பரிமாற்றம் செய்துகொண்டதில் அவர் இனி இந்த ஊரிலேயே தங்கி இரண்டாண்டு படிப்பை முடிக்கும் பொருட்டு தனது பாட்டியுடன் வந்திருப்பதாகவும் சொன்னார்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அவரது பாட்டியை அறிமுகம் செய்துவைத்தார். பாட்டியை எனக்கும் என்னை பாட்டிக்கும் பிடித்துப்போக தினமும் மாலை நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுவருவதும் அவர் என் வீட்டிலுள்ள அனைவரோடும் சகஜமாக பழகவும் ஆரம்பிக்க எங்கள் நட்பு எங்களையும் தாண்டி இருவரின் குடும்பங்களும் உறவினராகிப்போனோம். 

கோடை விடுமுறையில் அவரது கிராமத்திற்கு என்னை அழைத்து சென்று அவரது சுற்றம் நட்புகளை அறிமுகம் செய்து வைத்து அவரது உடன்பிறப்புகளோடு என்னையும் சேர்த்து குடும்பத்தில் ஒருவராக பாவிக்க ஆரம்பித்தனர்.

ஒவ்வொருமுறை அவர் ஊருக்கு சென்று பெற்றோருடன்  திரும்பும்போதெல்லாம் பிறந்த வீட்டு சீதனம் போல முறுக்கு, அதிரசம், பாலாடை,கரும்பு, வேர்க்கடலை, மொச்சை, காராமணி போன்றவற்றை அந்தந்த சீஸனுக்கேற்றார்ப்போல மூட்டைகளில் கட்டி எங்கள் வீட்டிற்கு கொண்டுவருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர் என் நண்பனின் பெற்றோர்கள். 

இரண்டாண்டு படிப்பு  வெற்றிகரமாக முடிந்தது, நண்பரும் அவரது பாட்டியும் ஊருக்கு செல்ல ஆயத்தமானார்கள். அந்த சமயத்தில் அவர்களுடனிருந்து வீட்டை காலி செய்வதிலிருந்து , தட்டு முட்டு சாமான்களை அட்டை பெட்டிகளில் வைத்து கட்டி ஊரிலிருந்து அவரது அப்பா அனுப்பி வைத்திருந்த வாகனத்தில் ஏற்றி அனுப்புவது வரை உடனிருந்தேன்.

முன்பு சொன்னதுபோல் பல விடுமுறை நாட்களை அவரது கிராமத்தில், அவரது, தாத்தா, பாட்டி, அப்பா , அம்மா, சித்தப்பா, அத்தைகள், சகோதரிகளுடன் கழித்திருந்தாலும் இந்தமுறை என்னை விட்டுவிட்டு செல்ல பாட்டிக்கு மனமில்லை.

எவ்வளவு சொல்லியும் கேட்காததால் நண்பனின்  வேண்டுகோளை தட்டிக்கழிக்க மனமில்லாததாலும் , இனி எப்போது சந்திப்போம் என்ற ஏக்கத்தாலும் , என் பெற்றோரின் அனுமதியுடன் அவர்களோடு செல்ல தயாரானேன்.

சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப்பிறகு வீடு சேர்ந்த எங்களுக்கு காத்திருந்தது, வடை பாயாசத்தோடு வாழை இல்லை விருந்து.

விருந்திற்கு பிறகு நடு ஹாலில் அமர்ந்து அடுத்து என்ன செய்ய போகிறேன்  எந்த கல்லூரியில் சேரப்போகிறேன்  போன்ற விவரங்களை பேசிக்கொண்டிருக்கையில் நண்பனின் அப்பா சொன்னார் சின்ன அக்காவிற்கு வரன் அமைந்திருக்கின்றது வருகின்ற ஜூன் மாதம் இரண்டாம் தேதி திருமணம் என தீர்மானித்திருக்கின்றோம்.

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னமே குடும்பத்துடன் வந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்குபெறவேண்டும் என அன்பு கட்டளை இட்டார்.

பல வாரங்களுக்கு பிறகு திருமண நாளும் வந்தது, இரண்டு நாட்களுக்கு முன்னமே நான் மட்டும் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்து எல்லா விசேஷங்களில் பங்கு பெற்று , மணமகளாகி அக்காவிற்கு எங்கள் குடும்பத்து சார்பாக ஒரு பரிசுப்பொருளை கொடுத்துவிட்டு , இரண்டு நாட்கள் கழித்து ஊர் திரும்பினேன்., சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு. அதன் பிறகு ஒரே ஒருமுறை  அந்த அக்காவுடைய வீட்டிற்கு  சென்று இருந்தேன். 

இந்த நிலையில் கடந்த மாதம் WhatsApp  மூலம் எனக்கொரு செய்தி ,என்ன ஆச்சரியம் , பல பத்து ஆண்டுகள் கழித்து என் நண்பனின் இரண்டாவது அக்காவிடமிருந்துதான் அந்த செய்தி.

அது என்ன செய்தி?

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

அதுவரை...

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி தனபால். ஆவலுடன் காத்திருப்பதில் ஒரு சுகம் உண்டு, சுகம் காணுங்கள் அடுத்த பாகம் வரும் வரை.

   நீக்கு
 2. நட்பு தரும் சுகம் - ஈடு இணையில்லாதது.

  உங்களுக்கு வந்த செய்தி என்ன என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நட்பினை நினைவுகூறுவதிலும் மாபெரும் சுகம் உண்டு.காத்திருங்கள் விரைவில் அடுத்த பாகம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வாருங்கள் திரு ஸ்ரீராம், தொடருங்கள். நம் நட்புகளும் வாழ்க.

   நீக்கு
 4. தங்கள் வருகை மகிழ்வளிக்கின்றது. நலம்தான், நன்றிகள்.

  பதிலளிநீக்கு