பின்பற்றுபவர்கள்

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

யாழ் இனிது!

இரவும் பகலும்.
நண்பர்களே,

குழலிசையும் யாழிசையும் இனிதுதான் என்றாலும் தொடர்ந்து கேட்கும்போது சில வேளைகளில் சலிப்பை ஏற்படுத்தக்கூடும்; அளவிற்கு மிஞ்சிய  அமிழ்தம்  போல.

ஆனால், மழலை சொற்களை  எத்தனைமுறை   கேட்டாலும் எப்போதெல்லாம் கேட்டாலும் அவை சலிப்பை தராது அதன் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும்கூட. மாறாக மேற்சொன்ன இரண்டு இசையையும் காட்டிலும் மிகவும் இனிமையாகவே  விளங்கும்.

மழலை மொழியை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சரி, ஆனால் குழந்தைகளின் அழுகை சத்தம்?

இந்த அழுகை சத்தம் பெற்றோருக்கே சலிப்பையும் கோபத்தையும் தரும் என்றால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் நிலை?

அதிலும் இரவு வேலை முடித்து பகலிலும் , பகல் வேலை முடித்து  இரவிலும் ஓய்வெடுக்கும்போது? 

கடந்த ஓராண்டுக்கு முன் எங்களின் இடதுபுற வீட்டிற்கு குடிவந்தனர் ஒரு இளம் தம்பதியினர்.

குடித்தனம் வந்த அன்றே  எங்கள் வீட்டிற்கு வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். அப்போதே அந்த மனைவி எட்டு   மாதம் கருவை சுமந்திருப்பதாக சொன்னார்கள். நாங்களும் அவர்களுக்கு எங்களை அறிமுகம் செய்துகொண்டு, எந்த உதவியானாலும் எந்த நேரமானாலும் எங்கள் கதவை தட்டாலம் என எங்கள் நட்பையும் ஆதரவையும் தெரிவித்தோம்.

அடுத்த ஓரிரு மாதங்களில் ஆண் குழந்தை  பிறந்தது. பிறந்த குழந்தைக்கு ஆசிர்வாதத்தையும் பெற்றோருக்கு வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தோம். அடுத்த பத்து நாட்களுக்குள்ளாகவே குழந்தையோடு  எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றனர். அப்போது குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது.

அடுத்த ஒரு ஆண்டின் பெரும்பான்மையான  நாட்களில்  நாங்கள் தூங்கும்நேரம் பார்த்து அந்த குழந்தை அழ ஆரம்பித்துவிடும். அந்த அழுகை நிற்க வெகு நேரமாகும்.

இப்படியாக அழுது எங்கள் தூக்கத்தை சிதைத்தாலும் , குழந்தைமீதோ பெற்றோர் மீதோ எங்களுக்கு எந்த கோபமோ வருத்தமோ ஏற்பட்டது இல்லை.

கடந்த வாரம் அந்த குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தியாகி  தமது முதலாம் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியது.

இது இப்படி இருக்க எங்க வீட்டின் வலது புறம் குடியிருக்கும் ஒரு இளம் தம்பதியினருக்கு இரண்டு மாதங்களுக்கு முன், கொரோனா நேரத்தில்  தங்கள் முதல் குழந்தையாக  ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இப்போது அந்த குழந்தையின் அழுகை சத்தம் அவ்வப்போது நள்ளிரவில் மட்டுமின்றி, லாக் டவ்ன் நேரத்தில் வீட்டிலிருந்து வேலைசெய்யும் பெரும்பான்மையான பகல் நேரத்திலும் துல்லியமாக கேட்கிறது.

இடது பக்கத்து வீட்டு குழந்தைமூலம் பெற்றுக்கொண்ட அனுபவம் இப்போது வலது பக்க குழந்தை அழும்போது அதை தாங்கிக்கொள்ள , சமாளிக்க பெரிதும் உதவுகின்றது.

சமீபத்தில் ஒருநாள் பின் தோட்டத்தில் எட்டி பார்த்தவண்ணம் புதிதாக பிறந்த பெண் குழந்தையின் அப்பா, தயவாக மன்னியுங்கள், எங்கள் குழந்தையின் அழுகை சத்தம்  பகல் இரவு என்று உங்களுக்கும்  தொல்லையாக இருக்கக்கூடும், எங்களால் முயன்ற அளவிற்கு சமாளிக்கின்றோம். உங்களுக்கு தொந்தரவாக இருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள் என அவர் சொன்னார்.

அவர் அப்படி சொல்லும்போது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருந்தது. என்ன இதற்குப்போய் இப்படி சொல்கின்றீர்கள், அதெல்லாம் ஒன்றுமில்லை, குழந்தைகள் என்றால் அழத்தான் செய்வார்கள், அதுதானே அவர்களது தகவல் தொடர்பு மொழி,  வருத்தப்படாதீர்கள், உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் சொல்லுங்கள், என கூறி அவருக்கும் ஆதரவு  தெரிவித்தோம்.

நண்பர்களே, நாமும் ஒருகாலத்தில் நமது குடும்பத்தாருக்கு மட்டுமல்லாது அண்டை வீட்டாருக்கும் தொல்லையாக இருந்திருப்போம் இல்லையா?

ஒருவேளை நாம் அந்த காலத்தில் மற்றவர்களை தூங்கவிடாமல் செய்ததன் பலன்தானோ இப்போது இதுபோன்று இரண்டுபக்கங்களிலுமிருந்து பழி தீர்த்துக்கொள்ளப்படுகிறோம் என்றும் நினைக்க தோன்றியது  வேடிக்கையாக.

பாவம்  அந்த பிஞ்சி குழந்தைகளுக்கு என்ன வேதனையோ, என்ன கஷ்ட்டமோ  அவை தங்கள் தேவைகளை எப்படி வெளிப்படுத்தமுடியும், அழுகையின் மூலம்தான், அதுவும் முன் அனுபவம் இல்லாத அந்த இளம் தம்பதியினர் அந்த குழந்தைகளை எப்படி சமாளிக்கின்றனரோ?

முதல் குழந்தை தன்னுடைய முதல் பிறந்த நாளை கொண்டாட சில நாட்களுக்கு முன் மீண்டும்  எங்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டது, இட்டிலியும் தேங்காய் சட்டினியும், சாம்பாரையும்  ருசித்து சாப்பிட்ட(ஊட்டப்பட்டு)    அந்த  நைஜீரிய குழந்தை மழலை பேச ஆரம்பித்துவிட்டது, இப்போது எங்கள் மனதினில் குழலும் யாழும் இணைந்து இசைத்தது அந்த மழலையோடு சேர்ந்து.

அடுத்த ஆங்கிலோ-மலேசிய பெண் குழந்தை  மழலையாவதற்கு இன்னும் கொஞ்சம் மாதங்கள்  ஆகும் அல்லவா?  பெற்றோரின் மன நிலையில் இருந்து பார்க்கும்போது இந்த சிறு சிறு அசவுகரியங்கள் ஒன்றும்  நம்மை பெரிதாக பாதிப்பதில்லை.

இரண்டு குழந்தைகளும்  ஆரோக்கியத்துடனும் , சுகத்துடனும் , பெலனுடனும் பாதுகாப்புடனும் வளரவேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.

16 கருத்துகள்:

  1. எங்கள் எதிர்வீட்டில் இவ்வாறான குழந்தை உள்ளது. தொடர்ந்து பல மணி நேரங்கள் அதன் சத்தம் கேட்காமல் இருந்தால் எங்களுக்கு என்னவோ போலிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்வீட்டு குழந்தை சத்தம் கேட்டு குதூகலிக்கும் உங்கள் உள்ளத்தின் மகிழ்வை உணர முடிகிறது. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகளும் அநேக நமஸ்காரங்களும் ஐயா.

      நீக்கு
  2. நல்ல மனம் வாழ்க...

    கவனமாக மகிழ்ச்சியாக வாழட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபால்,

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள், நல்ல மனம் வாழ்க.

      நீக்கு
  3. இதைத் தொல்லையாக நினைக்க முடியவில்லை.  பாவம் குழந்தை, பாவம் பெற்றோர் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.  அந்தக் காலத்தில் பெரியவர்கள் கூடவே இருந்தால், குழந்தை மாந்தத்தால் அழுகிறது, வயிற்று வலி போல தெரிகிறது, பசி என்றெல்லாம் இனம் கண்டு உடனே சரி செய்வார்கள்.  சில சமயம் உரம் விழுந்து விட்டது என்று தூளியில் வைத்து உருட்டுவார்கள்.   அனுபவமில்லாத இளம் பெற்றோர்கள் பாடு கஷ்டம்தான். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
      இவர்களும் தங்கள் பெற்றோரை அழைத்திருந்தனர், முதல் குழந்தையின் பாட்டிக்கு விசா பிரச்சனை. இரண்டாவது குழந்தையின் பாட்டிக்கு லாஃடௌன் , விமான சேவை ரத்து பிரச்சனை.
      பெரியவர்கள் இருந்தால் இளம் பெற்றோருக்கு, குழ்நதை வளர்ப்பில் கொஞ்சம் தைரியம் கூடும் என்பது உண்மையே.

      நீக்கு
  4. இனிமையான அணுபவங்கள் ஐய்யா.
    நானும் குழந்தை பருவத்தில் இரவில் தான் அழுவேன் என்றும் தந்தை, பகலில் வேலை செய்த களைப்போடு இரவில் என்னை சுமந்துகொண்டே நடப்பார் என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அரவிந்த்.
      நீங்கள் கொடுத்துவைத்த குழந்தை.

      நீக்கு
  5. குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்

    இதுதான் உடனே நினைவுக்கு வந்தது கோ.

    எத்தனையோ பேர் உலகில் மக்கட்செல்வம் இல்லாதவர் இருக்க அதற்கு ஏங்கியிருக்கும் வேளையில் இப்படி குழந்தை மொழி கேட்பது சந்தோஷமாகத்தான் இருக்கும்

    அட னைஜீரியா குழந்தை இட்லி சட்னி சாம்பார் எல்லாம் சாப்பிட்டதா!!

    இன்னும் சில நாட்களில் உங்களுக்கு இன்னும் பல அனுபவங்கள் கிடைக்கலாம் இருபக்கத்துவீட்டுக் குழந்தைகளுடனும் பதிவுகளும் வரலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த குறலின் அடிப்படையில்தான் இந்த பதிவும், அதன் தலைப்பும்.

      நைஜீரிய குழந்தைக்கு இட்லி கொடுக்கும் முன் அந்த வெள்ளை இட்டிலியை பற்றிய வெள்ளோட்டத்தை பெற்றோருக்கு எடுத்து சொல்லி எங்கள் ஊரில் எல்லா குழந்தைகளும், பெரியவர்களும் சாப்பிடும் ஆரோக்கியமான உணவு இது என்பதையம் கூறி அவர்களுக்கு பரிமாற , சந்தோஷமாக மூவரும் சாப்பிட்டனர்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பினிற்கினிய கீதா அம்மையாரே.

      நீக்கு
  6. உங்கள் பதிவு எனக்குச் சில பழைய நாட்களை நினைவுபடுத்தியது.

    உங்களுக்கு இனிமையான நாட்கள் அக்குழந்தைகளால் என்று தெரிகிறது. குழந்தைகளைப் பார்க்கும் போது மனம் மகிழ்வடையும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவை ஒட்டிய தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்களேன்.

      நீக்கு
  7. குழந்தையின் அழுகை - சில சமயங்களில் தொந்தரவாக இருந்தாலும் அதன் மொழி அது தானே! அதனால் ஒன்றும் செய்வதற்கில்லை! நம் வீட்டில் அழுதாலும் சமாளிக்கத்தானே செய்வோம்! அக்கம்பக்கத்தினருடன் இணக்கமாக இருப்பது நல்ல விஷயம். இப்போதெல்லாம் அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்று கூட தெரிந்து கொள்வதில்லை பலரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      முக்கியமான செய்தியை சொல்லி இருக்கின்றீர்கள். இந்த காலத்தில் நமது அண்டை வீட்ட்டார் யார் என்றே தெறியாத சூழலில் பக்கத்து வீட்டாருடன் இணக்கத்துடன் இருப்பது நல்ல விஷயமே.

      இந்த இரண்டு வீட்டாரும் மெத்த படித்தவர்களாகவும் சிறப்பான வேலையில் இருப்பவர்களாகவும் இருந்தாலும் மிகவும் இனிமையாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவர்கள்.
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள், திரு கரந்தையாரே.

      நீக்கு