பின்பற்றுபவர்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

அப்படி என்னத்த கேட்டுபுட்டேன்??

முழிப்பு!- சிரிப்பு!!.

பத்தாம் வகுப்பு தாண்டும்வரை அரைக்கால் சட்டைதான் எனக்கு.
பள்ளி கூடத்தில்கூட பத்தாம் வகுப்புவரையிலுள்ள மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைதான் சீருடை.

ஆனால் எனக்கு எட்டாம் வகுப்பு படிக்கும்போதே முழு கால் சட்டை அணியவேண்டும் என்ற ஆசை.  பண்டிகை சமயத்தில்கூட எனக்கு அரைக்கால் சட்டைதான் கிடைத்தது.

முழுக்கால் சட்டைமீது தீராத மோகம். அந்த நேரம் பார்த்து பெல் பாட்டம் நாடெங்கும் அறிமுகம்.

அரை பாட்டம் மட்டுமே எனக்கென்று எழுதிவைத்த ஆண்டவனிடம் பெல் பாட்டம் கேட்டால் கிடைக்குமா, இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.

பத்தாம் வகுப்பு தேறியாயிற்று.

பதினோராம் வகுப்பு போவதற்குமுன் வாங்க வேண்டிய புத்தகங்கள், பேனா, நோட்டு புத்தகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, படித்த பள்ளியிலேயே மீண்டும் சேரப்போகின்றோம்  என்ற எண்ணத்தில் அந்த பள்ளிக்கூடத்து சீருடையான  சாம்பல் நிற முழு கால் சட்டையையும், வெள்ளை நிற முழுக்கை சட்டையையும் வாங்கித்தரும்படி அப்பாவிடம் கேட்க்க  இன்னும் நேரம் இருக்கின்றது பிறகு பார்க்கலாம் என்றார்.

இல்லை இல்லை இப்போதே எடுத்து தைத்தால்தான் பள்ளிக்கூடம் போகும்போது அவசரமில்லாமல் இருக்கும் என சொல்லி அப்பாவை அழைத்து சென்று பாம்பே டையிங் கடையில் 60/40 டெரிகாட்டன் (அப்பா சொன்னதுதான்) துணிகளை வாங்கிக்கொண்டு நேராக வழக்கமாக அரை கால்சட்டை தைத்துக்கொடுத்த தையல் காரரை விடுத்து நகரத்தின் மத்தியில் ஜவான் மார்க்கெட்டில் இருந்த புகழ் வாய்ந்த தையல்  கடைக்கு சென்று அளவு கொடுத்தேன்.

தையல் கடைக்காரர் எடுத்த அளவைவிட கொஞ்சம் நீளமாக அளவெடுக்க சொன்னார்  என் அப்பா. அதாவது வளர்ர பையன் கொஞ்சம் நீளமாக இருக்கட்டும்.

சரி என்னிடம் பாக்கட் எப்படி வேண்டும் ?

முன் பக்கம் இரண்டு  பாக்கட்டுகள் பக்கவாட்டில் இருந்து கை   விடும்படியும் பின் பக்கம் இரண்டு பாக்கட்டுகள் அவற்றிற்கு  பட்டன் வைத்து மூடிக்கொள்ளும்படியாகவும் , பெல்ட்டு கட்ட லூப்புகள் வைக்கும்படியும் சொல்லிவிட்டு, எப்போது கிடைக்கும்?

இன்னும் ஒருவாரத்தில் கொடுக்கின்றேன் என சொன்னதை கேட்டுக்கொண்டு கடையை விட்டு வெளியில் வந்தோம்.

திடீரென்று நினைவு வந்தவனாய், அப்பாவிடம்  இதோ வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு வேகமாக மீண்டும் தையல் கடைக்கு சென்றேன், அங்கே அவர் வேறொருவருக்கு அளவெடுத்துக்கொண்டிருந்தார்.

என்னை பார்த்ததும் , என்ன ?

பேண்ட்ல ஜிப் வைத்துதானே தைப்பீர்கள்?(அதற்கு முன்னாள் வரை அரை கால் சட்டையில் பட்டன் கள்தான்)

ஆமாம்.

பெல்பாட்டம்தானே?

ஆமாம்.

பேண்டுக்கு கீழே ஜிப் வைத்துத்தருவீர்களா?

கீழே  என்றால்?

அதாவது பெல்பாட்டம் பின்பக்கம் தரையில் உரசும்போது துணிக்கு பதிலாக அந்த ஜிப் உரசும்படி நான் பார்த்திருக்கின்றேன் அதுபோல ….

ஓ... சரி சரி.

இப்படியாக ஒருவாரம் கழித்து முதன் முதலாக அணியப்போகும் அந்த பள்ளிக்கூட சீருடை முழுக்கால் சட்டையை ட்ரையல் பார்க்க மூன்று நாட்கள் கழித்து கடைக்கு சென்று பார்த்தேன்.

மிகவும் பிடித்திருந்தது, அந்த கடையின் ட்ரையல் ரூமில் முன்னும் பின்னுமாக இருந்த  முழு நீள  கண்ணாடிகளில்  என்னை பார்த்து எனக்கே மிகவும் பூரிப்பாயிருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து இஸ்திரி போட்டு பிரவுன் கவரில் மடித்து அதை ஸ்டேப்ளர் பின் கொண்டு மூடி பிளாஸ்டிக்  பையில் வைத்து  கொடுக்க பணம் செலுத்திவிட்டு வீட்டிற்கு கொண்டு வந்தேன்.

வந்ததும் வராததுமாக கவரில் இருந்து பிரித்து போட்டு அதை வீட்டில் உள்ள அனைவருக்கும் காட்டி மிகவும் சந்தோஷப்பட்டேன்.

இப்போது சேரப்போகும் பழைய பள்ளிக்கூடத்தில் செய்திருந்த விண்ணப்பத்திற்கு எந்த பதிலும் இல்லை.

இன்று வரும் நாளை வரும் என வராத உத்தரவுக்காக காத்திருந்தேன்.

பள்ளிக்கூடமும் திறந்தாயிற்று. எல்லோரும் சேர்ந்துவிட்டனர், நான் மட்டும் சோர்ந்துவிட்டேன். 

வேறு பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் இதே பள்ளியில் படி என்று அம்மா சொன்னதால் இப்போது எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காமல் நாட்கள் சென்றுகொண்டிருக்க, பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்ற வருத்தத்தைவிட சீருடை முழு கால் சட்டையை அணிய முடியாதுபோனது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.

அம்மா என்னை  அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியாரை  சந்தித்து பேசியபோது, அவர் சொன்னது …… அறிவியல் துறையில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில்  மட்டுமே மாணவர்களை சேர்க்கின்றோம், யாரவது விடுபட்டால் உங்கள் மகனுக்கு கொடுக்க திட்டமிட்டு காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளோம், இன்னும் ஒருவாரம்  கழித்துவந்து பாருங்கள்.

இன்னும் ஒருவாரம் எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது எனக்கு உடனடியாக சேரவேண்டும் என அம்மாவிடம் சொன்னதை ஆசிரியர் கேட்டுவிட்டு அப்படியானால், கணிதம் மற்றும் கணக்கு பதிவில் துறையில் சேர்த்துக்கொள்கிறோம் என்றார்.

(ஒருவேளை ஒருவாரம் கழித்து போய்  இருந்தால்….. அறிவியல் துறையில் சேர்ந்திருந்தால்…... ம்ம்ம்… இந்த உலகம் ஒரு அறிவியல் விஞ்ஞானியை இழந்துவிட்டது) 

என்னை பொறுத்தவரையில் எந்த துறையானால் என்ன முழுக்கால் சட்டையுடன் இதே பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பதுதான் என் நோக்கம்.

அதன்படி அடுத்த நாளே அந்த பள்ளிக்கூடத்திற்கு, முழுகால்சட்டை பெல் பாட்டம் முன்னால் இரண்டு பாக்கட்டுகள் பக்கவாட்டில் இருந்து கை விடும்படியும் இரண்டு பின் பாக்கட்டுகள் பட்டன் வைத்து மூடும்படியாகவும் முன்னால் ஜிப்பும் பேண்டின்  பின்னால் துணி தேயாதபடி  ஜிப்பும் பெல்ட்  லூப்பில் பெல்ட்டும் அணிந்து பள்ளிக்கு சென்ற நாளை எப்படி மறப்பேன்.

நான் கேட்ட பாக்கட்டுகளோடு வயிற்றுபகுதியில் உள்புறமாக ஒரு சீக்ரெட் பாக்கெட்டும் வைத்து தைத்திருந்தார் அந்த ஜாவான் மார்க்கெட் தையல்காரர்.

அப்போதிலிருந்து யார் என்ன பேண்ட் அணிந்திருந்தாலும் அதனை ஒரு நோட்டம் விடுவதும் அது அழகாக தைக்கப்பட்டிருந்தால் அதனை பாராட்டுவதும் அது எங்கே தைக்கபட்டது என கேட்டு தெரிந்துகொள்வதும் என் வழக்கமாயிருந்தது.

பல வருடங்களாக முழுகால்  சட்டையை பேண்ட் என்று சொல்லிக்கொண்டிருந்த எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே  உள்ளாடையைத்தான் பேண்ட்(under)pant(s) என்றும் முழுக்கால் சட்டையை ட்ரவுசர் (Trousers) என்றும்தான் அழைக்கவேண்டும் என்று புரியவைத்தனர் வெள்ளை  நாட்டினர்.

இது தெரியாமல் இங்கே வந்த புதிதில் பலரிடம்  என்  பேண்ட் எப்படி இருக்கின்றது?  உங்கள் பேண்ட்  அழகாக இருக்கின்றது எங்கு தைத்தீர்கள், எங்கு வாங்கினீர்கள் , நல்ல கலர், இந்த கலர் உங்களுக்கு எடுப்பாக இருக்கின்றது...  என்று ஆண்  பெண் வித்தியாசமின்றி கேட்டதையும் சொன்னதையும் அவர்கள் என்னை ஒருமாதிரியாக பார்த்ததையும் இவர்களிடத்தில் அப்படி என்னத்த கேட்டுபுட்டேன் இப்படி நாணி கோணி என்னை ஒருமாதிரியாக பார்க்கிறார்களே என விவரம் புரியாம விழித்ததையும் அவ்வப்போது நினைத்து எனக்குள்ளேயே சிரித்துக்கொள்வேன்.

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம் 
கோ    
 

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி கவிஞரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

   நீக்கு
 2. 32" பெல்பாட்டம் + ஜிப்

  அந்தக் கால அலப்பறையே வேறு...

  இப்போதும் விஞ்'ஞானி' தான்...!

  மிகவும் ரசனையான பதிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் 32" பெல்பாட்டம் … அது ஒரு காலம். வருகைக்கும் பட்டம் கொடுத்ததற்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள் தனப்பால்.

   நீக்கு
 3. கடைசி பாரா படித்துச் சிரித்து விட்டேன்.   ஆனால் இந்த விஷயத்தை நான் இப்போதுதான் கற்றுக்கொள்கிறேன்.  என்றாலும் இந்தியாவில் நான் சொல்வதுதான் சரி!  இல்லையா?!!  நானும் இதே போல ஒன்று எழுதி ஷெட்யூல் செய்து வைத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசிவரியை கவனத்துடன் வாசித்து ரசித்ததை/ சிரித்ததை எண்ணி மிக்க நன்றிகள் ஸ்ரீராம். இந்தியாவில் நாம் சொல்வதுதான் சரி என்று நினைக்கின்றேன். ஷெட்யூல் பண்ணி வைத்திருக்கும் பதிவை சீக்கிரம் வெளி இடுங்கள், வாசிக்க காத்திருக்கின்றேன்.

   நீக்கு
 4. இந்த உலகம் ஒரு அறிவியல் விஞ்ஞானியை இழந்துவிட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு புரிகிறது…. வருகைக்கு மிக்க நன்றிகள் கரந்தையாரே.

   நீக்கு
 5. இது தெரியாமல் இங்கே வந்த புதிதில் பலரிடம் என் பேண்ட் எப்படி இருக்கின்றது? உங்கள் பேண்ட் அழகாக இருக்கின்றது எங்கு தைத்தீர்கள், எங்கு வாங்கினீர்கள்//

  ஹா ஹா ஹா ஹா கோ செமையா சிரித்துவிட்டேன். நல்லகாலம் அவங்கல்லாம் காஷுவலாக ஷார்ட்ஸ், ஹாஃப் ட்ரவுசர் தானே போட்டுட்டு போவாங்க ஹாஃப் பேன்ட் நு கேக்கல ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஃப் பேண்ட் ….. கேட்க வாய்ப்பில்லாதுபோனது நல்லதுதான். வருகைக்கு மிக்க நன்றிகள் அன்பிற்கினிய அம்மையாரே.

   நீக்கு
 6. நமக்கு இங்கு பேன்ட்ஸ் என்று சொல்லிப் பழகிவிட்டதுதானே. அப்புறம் அவர்கள் புரிந்து கொண்டார்களா?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களிடம் சொல்லவில்லை நம்மஊர் விஷயத்தை.

   நீக்கு
 7. நான் முதன்முதலாக பேண்டிற்கு மாறியது நினைவிற்கு வந்தது. ஒரு புறம் கூச்சம். மறு புறம் பந்தா. கல்லூரிக்காலம் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் அனுபம் கொடுத்த கூச்சத்தையம், பந்தாவையும் நினைவு கூர்ந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றிகளும் அநேக நமஸ்காரங்களும் ஐயா.

   நீக்கு
 8. பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு