English version
நண்பர்களே,
சின்ன வயதில் அம்மாவுடன் காய்கறி அங்காடிக்கு சென்றபோது என் காதுகளில் ஒலித்த வாக்கியம்தான் இன்றைய பதிவின் தலைப்பு.
அது என்ன அப்படி ஒரு கூப்பாடு?
அதன் அர்த்தம் என்ன?
எடை போட்டு விற்பனை செய்யும் காய்கறிகளுக்கு மத்தியில் அன்றைய அதிக வரவாகவும் , அன்றைக்குள்ளாக விற்றுவிடவேண்டியதாகவும் இருக்கும் காய்களை சிறு சிறு கூறுகளாக வைத்து அவற்றை கொஞ்சம் விலை குறைவாக வைத்து விற்றுவிடுவார்கள்.
அப்படி தங்கள் கடைகளில் கூறு கட்டப்பட்டு என்னென்ன காய்கறிகள் உள்ளனவோ அவற்றை அறிவிக்கும்பொருட்டு சத்தமாக குரலெழுப்பி வாடிக்கையாளர்களை அழைப்பார்கள்.
நான் சென்ற அன்று கூறுகட்டப்பட்டு விற்பனைக்கு இருந்த பொருள் தக்காளி.
வாரிக்கொள்ளுங்கள் பத்து பைசாதான், ஒரு கூறு பத்துபைசாதான், தக்காளி பத்துபைசாதான் என்பதே இந்த "வாரு பத்து கூறு பத்து தக்காளி பத்து"
இப்படி விற்பதால் பெரும்பான்மையான காய்கறிகள் அன்றைக்கே விற்று தீர்ந்துவிடும், வியாபாரியின் பொருளாதாரமும் பண புழக்கமும் தொய்வின்றி சீராக அமைந்துவிடும்.
கொரோனாவின் கோரப்பிடியில் உலகே சிக்கித்திணறும் இன்றைய சூழ்நிலையில் மனித பயன்பாட்டுக்குரிய அனைத்து பொருட்களும் மிகவும் விலை அதிகமாகவும் அதே சமயத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து வியாபாரங்களும் சுணக்கம் கண்டிருப்பதால் தனிமனித, வியாபாரிகளுடைய, நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது உலகறிந்த உண்மை.
இதனை சரி கட்டி சமாளிக்க உலக நாடுகள் அத்தனையும் ஊரடங்கு விஷயத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தளர்வுகளை அறிவித்து அதன்மூலம் மக்கள் கடைகளுக்கு செல்லவும் பொருட்களை வாங்கவும் அனுமதித்திருக்கின்றன.
அவ்வகையில் அனுமதிக்கப்பட்ட வியாபார ஸ்தலங்களில் உழவர் சந்தைகள், மளிகை கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள், உள்ளமர்ந்து உண்ணும் சிற்றுண்டி சாலைகள் அடங்கும்.
அதேபோல இங்கிலாந்தும் தனது பங்கிற்கு சில வியாபார ஸ்தலங்களை அனுமதித்து இருக்கின்றது. அதிலும் சில உணவு பொருட்களுக்கான வரியை - (VAT) 20% லிருந்து 5% ஆக குறைத்ததுமன்றி, சில உணவகங்களில் அனைத்து உணவுகளும் இந்த மாதம் முழுவதும் வாரத்தின் முதல் மூன்று நாட்கள் (திங்கள் முதல் புதன் வரை) பாதி விலைக்கு விற்கவும் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் இத்தனை நாட்களாக அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டவர்கள் இப்போது அதே உணவுப்பொருட்களை பாதி விலை கொடுத்து வாங்கி உண்டு மகிழ்கின்றனர்.
ஒரு சில அதிக விலை கடைகளில் தற்போது நீண்ட வரிசையில் மணிக்கணக்காக நின்று மக்கள் தங்கள் இஷ்ட உணவுகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர்.
சில உணவு கூடத்தில் விற்கப்பட்ட உணவுப்பொருள்களின் விலையை முன்னிட்டு அந்த பக்கம்கூட திரும்பாதவரெல்லாம் இப்போது குடும்பத்துடன் சென்று தலைக்கு ஆயிரம் ரூபாய்வரை தள்ளுபடி பெற்று உண்டு மகிழும் காட்சி கண்கொள்ளா காட்சி.
இதற்கு, அரசு கொடுத்திருக்கும் பெயர்," Eat out to Help out".
இதுவும் ஒருவகையில் "வாரு பத்து கூறுபத்து தக்காளிபத்து"தான்
இத்தகு சிறப்பு திட்டத்தை முன் மொழிந்து அமுல்படுத்தி வருபவர் கீழே காட்டப்பட்டிருக்கும் பாராட்டுக்குரிய - நம் பெருமைக்குரிய இந்திய வம்சாவளியைச்சார்ந்த இங்கிலாந்தின் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு ரிஷி சுனக்.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
என் அணியின் தலைவரே..
பதிலளிநீக்குஇந்த
கூற்று..
விற்பனை திறனா ? அல்ல விளம்பரமா ?
எதில் அடங்கும் என்று நடுவருக்கு வில்லாகவும். ப்ளீஸ் !
என் அணியின் தலைவரே..
பதிலளிநீக்குஇந்த ""வாரு பத்து கூறு பத்து தக்காளி பத்து"என்ற கூற்று..
விற்பனை திறனா ? அல்ல விளம்பரமா ?
எதில் அடங்கும் என்று நடுவருக்கு விளக்கவும் . ப்ளீஸ் !
சூழலுக்கேற்ப நல்லதொரு சேவை...
பதிலளிநீக்குசில உணவு கூடத்தில் விற்கப்பட்ட உணவுப்பொருள்களின் விலையை முன்னிட்டு அந்த பக்கம்கூட திரும்பாதவரெல்லாம் இப்போது குடும்பத்துடன் சென்று தலைக்கு ஆயிரம் ரூபாய்வரை தள்ளுபடி பெற்று உண்டு மகிழும் காட்சி கண்கொள்ளா காட்சி.
பதிலளிநீக்குகொரோனா தந்த வாய்ப்பு
ிந்தியாவும் தளர்வுகளை ஆரம்பித்து இப்போது இன்னும் ஒரு மாதத்தில் திறையரங்குகளும் திறக்கப்பட்டுவிடும் நிலை வந்துள்ளது ஐய்யா.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்.
பதிலளிநீக்குதிருச்சி பக்கங்களில் இப்படி கூறு கட்டி விற்பது இன்றைக்கும் உண்டு. கொஞ்சமாக தேவைப்படும் போது இந்த மாதிரி வாங்கிக் கொள்வது நல்ல வசதி.