பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ஆக(ஸ்)ட்டும் பார்க்கலாம்.

இன்னும் எத்தனை காலம்தான்..?
நண்பர்களே,


இன்னும் முடிவிற்கு வராத பல விடயங்கள் இந்த உலகில் இருக்கின்றன.
அவற்றுள், பஞ்சம், பசி, பிணி வறுமை, வேலையில்லா திண்டாட்டங்கள்,லஞ்சம் , ஊழல் போன்றவை அடங்கும்.
அவற்றோடு சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் உலக மக்கள் அனைவரின் இயல்பு வாழ்க்கையை புரட்டி  போட்டதுமல்லாமல், பல கோடி மக்களை உயிர் பலியாக்கிக்கொண்டு, இன்னும் எஞ்சி இருக்கும் உலக மக்களை பீதிக்குள்ளாக்கி  ஒருவித அச்சத்துடன்பதுங்கி வாழ செய்துகொண்டிருக்கும் இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸும் ஒன்று.

இதோ போய்விடும் அதோ போய்விடும் என்று ஒவ்வொரு மாதமாக எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோவது தான் மிச்சம்.

மார்ச் போனது, ஏப்ரல் , மேவும் போய்  ஜூன் ஜூலையும்  போய் இதோ இப்போது ஆகஸ்டும் போகப்போகிறது ஆனால் இந்த நோய்  கிருமியும் அதனால் ஏற்படும் பாதிப்பும் அச்சமும் போனபாடில்லை.

இதற்குள் நம் நெருங்கின  உறவுகள் சொந்தங்கள் நட்புகள் நம் மக்கள் நம் நாட்டினர் வெளி நாட்டினர் என்று எத்தனையோ பேர்களை நாம் இழந்தாயிற்று.

இனியும்  நேர்மறை நம்பிக்கை துளிர் விடுகிறமாதிரி தெரியவில்லை. இல்லை.

சரி நடப்பது நடக்கட்டும்,  ஆகட்டும் பார்க்கலாம் என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டனரோ என எண்ணவும் தோன்றுகின்றது, இன்னும் அசட்டையாக அல்லது அசட்டு தைரியத்துடன் வெளியில் பாதுகாப்பும் தனிமனித இடைவெளியும் இல்லாமல் சுற்றி திரியும் மனிதர்களையும் பிறந்த நாள், திருமணம் அரசியல் நிகழ்வுகள் என கூட்டம் கூடும் மக்களையும் நினைக்கும்போது.

வெளி நாடுகளின் இதன் தாக்கம் படிப்படியாக குறைந்துக்கொண்டு வரும் நிலையில் நம் நாட்டில் இது வேகம் எடுத்துவருவது மிகுந்த கவலையும் வேதனையும் அளிக்கின்றது.

நம் கையில் ஒன்றுமில்லை என்று நினைப்பது சரிதான் எனினும் இந்த போக்கு காட்டும் கிருமியை போக்கும்மட்டும் அல்லது அதுவே தானாக போகும் மட்டும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதும் முக கவசம் அணிவதும் , தனி மனித இடைவெளி போன்ற ஆலோசனைகளை புறம் தள்ளாமல்  கூடுதல் கவனத்துடன் இருப்பதும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதும் எத்தனை அவசியம் என்பதை உணர்ந்து நாமும் நம்மை சார்ந்தவர்களையும் காத்துக்கொள்வது இன்றியமையாத கட்டாயம்.

Image result for image of face mask

ஆக(ஸ்)ட் டும் பார்க்கலாம் இன்னும் எத்தனை நாட்களுக்கென்று.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 
கோ 


16 கருத்துகள்:

  1. பசியற்ற, நோயற்ற, வறுமையற்ற, பகையற்ற நிலையை உலகின் எந்தப் பகுதியின் மனித இனமும், எந்தவொரு நாடும் இன்று வரை முழுமையாக அடையவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்வை மறந்துபோனதே பெரும்பான்மையான வாழ்வியல் தொல்லைகளுக்கெல்லாம் காரணம் உண்மைதான்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

      நீக்கு
  2. இந்த சூழலால், இப்போது அனைவருக்குமே விடையில்லாதபயணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகமே இதற்கொரு விடைதேடும் பயணத்தில்தான் இருக்கின்றது அந்த விடை எத்தனை தொலைவு என்பதுதான் இன்னும் எவருக்கும் தெரியவில்லை.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தனபால்.

      நீக்கு
  3. வேதனையான சூழல் தான். இன்னும் எத்தனை நாளைக்கோ என்று நினைக்காத நாளில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏமாந்துபோகும் விஷயங்களில் தலையான விஷயம் இந்த கேள்விக்கான விடைதான். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.

      நீக்கு
  4. மக்களுக்கு பயம் ரொம்ப நாட்கள் நிலைப்பதில்லை.
    அரசியல்வாதிகளே மக்களின் முன்னோடிகளாய் பெரிய விழாக்களை நடத்தும்போது மக்களுக்கு எப்படி பயமும் எச்சரிக்கை உணர்ர்வும் நீடிக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயம் விட்டுப்போச்சு...மக்கள் பிரதிநிதிகள் அல்லவா முன் மாதிரியாக இருக்கவேண்டும்?, சரிதான். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அரவிந்த்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஆமாம் ஐயா, பல அசௌகரியங்கள் இருந்தாலும் அதனூடே மிகுந்த எச்சரிக்கையாக இருந்துதான் ஆகவேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகளும் அநேக நமஸ்காரங்களும்.

      நீக்கு
  6. ஆம்! தொற்றின் வேகம் இங்கு கூடிக் கொண்டுதான் வருகிறது. நமக்குத் தெரிந்தவர்கள், அண்டை அயலார் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் இத்தொற்றினால் மரணமடையும் போது மனது வேதனை அடையத்தான் செய்கிறது.

    எப்போது இதற்கு முடிவு வருமோ. மருந்து விரைவில் வர வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. உறவுகள் நண்பர்களின் பிரிவு மிகுந்த மன வேதனை தருகிறது. பிரார்த்தனை செய்வோம்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே.

      நீக்கு
  7. சரி நடப்பது நடக்கட்டும், ஆகட்டும் பார்க்கலாம் என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டனரோ என எண்ணவும் தோன்றுகின்றது, இன்னும் அசட்டையாக அல்லது அசட்டு தைரியத்துடன் வெளியில் பாதுகாப்பும் தனிமனித இடைவெளியும் இல்லாமல் சுற்றி திரியும் மனிதர்களையும் பிறந்த நாள், திருமணம் அரசியல் நிகழ்வுகள் என கூட்டம் கூடும் மக்களையும் நினைக்கும்போது.//

    ஆம் கோ இந்த நிலைமைக்கு வந்துவிட்டார்கள்தான்.

    கடைசிப் பத்தியை அப்படியே வழி மொழிகிறோம் கோ.

    எப்போது இது அழிந்து நாம் எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இயலும் என்று தோன்றத் தொடங்கிவிட்டது. விரைவில் தடுப்பு மருந்து வெளி வர வேண்டும். கண்டுபிடித்துவிட்டோம் இத்தனாவது ஸ்டேஜில் இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் அது சந்தைக்கு வந்து நமக்குப் போடப்பட்டு அது பாதுகாப்பானது என்று வெற்றியடையும் வரை இப்படியேதான் போகும் போல எனவே நாம்தான் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது ஆனால் இந்த மாற்றம் எதிர்மறையான மாற்றமே.

      நீங்கள் சொல்வதுபோல் மாற்று மருந்து கண்டுபிடித்து அது வெற்றிகரமாக செயலாற்றும்வரை நாம்தான் கவனமாக இருக்கவேண்டும். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய கீதா அம்மையாரே .

      நீக்கு
  8. யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை...    போனாலும் வந்தாலும் அதுதான்....

    பதிலளிநீக்கு
  9. விதி என்பதை ஆண்டவன் கட்டளை என்று எடுத்துக்கொள்ளலாம் எனினும் , முள் என்று தெரிந்தே அதில் காலை வைக்க நினைப்பது ஆண்டவன் கட்டளையாக இருக்காது என்பதை உணர்ந்து மக்கள் பாதுகாப்புடன் இருந்துகொள்வது தற்கால தற்காப்பு என நினைக்கின்றேன். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு