பின்பற்றுபவர்கள்

வியாழன், 11 ஜூன், 2020

ஆதியும் அந்தமும் ...

சரணம்!..சரணம்!!...சரணம்!!!….

நண்பர்களே,

தொடக்கம் என்ற ஒன்று இருக்கும் அனைத்திற்கும் முடிவு என்று ஒன்று உண்டு. உலக வாழ்வியல் நியதியும் தத்துவமும் அதுதான்.


தொடக்கத்திற்கு ஆதி என்றும் முடிவிற்கு அந்தம் என்றும் நாம் சொல்வது வழக்கம்.

தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கும் மா சக்தியை பரம்பொருள் - இறைவன் அல்லது இயற்கை என்று அர்த்தம் சொல்கின்றனர்.

எனவே இறைவனுக்கு தொடக்கமில்லை அந்த சக்திக்கு முடிவுமில்லை.

இதை தவிர்த்து உலகில் மட்டுமல்லாது ஆகாய அண்டவெளிகளில் படைக்கப்பட்டிருக்கும் எதுவானாலும் அவற்றிற்கு முடிவு என்பது நிச்சயமே.

அது சூரியனாக இருந்தாலும் சந்திரனாக இருந்தாலும் நட்சத்திரம் மற்றும் கோள்களுக்கும் இந்த கோட்பாடு பொருந்தும்.

ஆனால் தொடக்கம் கொண்ட பெரும்பாலான எவற்றின்  முடிவு எப்போது  என்பதுதான் புதைந்திருக்கும் புரியாத புதிர்.

சிலவற்றின் தொடக்கமும் அவற்றின் முடிவுகளும்  பல காலங்களாக ஒரே காலகட்டத்தில் (நேரத்தில் ) அமைந்திருக்கலாம் ஆனால் இந்த அமைப்பு அப்படியே எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

 நாம் அறிந்த வண்ணம், பள்ளிகள், கல்லூரிகள்  ஜுனில் தொடங்கி மார்ச்சில் முடிந்து தேர்வுகள் மார்ச் இடையில்  தொடங்கி ஏப்ரல் இறுதியில்  முடிந்து, மே இரண்டாம் வாரம் முடிவுகள் அறிவிக்கப்பட்டு , மீண்டும்  ஜுனில் வகுப்புகளின் தொடக்கம்  எனும் அமைப்பு  இருந்தது... கடந்த கல்வி ஆண்டுவரை.

ஆனால் இந்த அமைப்பு இப்போது மாறிபோனதே.

 வகுப்புகள் இல்லை  பரீட்சைகள் இல்லை, தேர்வுகள் இல்லை , சொல்லப்போனால் மீண்டும் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள்  எப்போது துவங்கும் என்ற தகவலும் இல்லை.

இதற்கொரு முடிவு எப்போது?

காலை அலுவலகம் மாலை வீடு என்றிருந்த நிலைமைகள்கூட இப்போது மாறிப்போய்விட்டன, காலை மாலை இரவு , நள்ளிரவு  கூட வீடே அலுவலகமானதே .

இதற்கொரு முடிவு எப்போது வரும் ?

ஊர்கூட்டி மேளம் முழங்க அம்மி மிதித்து அருந்ததி பார்த்து….. என்ற தொடக்கம் கொண்ட சுப முகூர்த்த கொண்டாட்டங்களின் நிலை இப்போது முற்றிலும் மாறிப்போனது, இன்றைய இந்த சூழ்நிலையின்  முடிவு எப்போது வரும் ?

பூகோள அடிப்படையில் எத்தனை தூரம் தமது குடும்பத்தாரை பிரிந்து வாழ்ந்தாலும் அவர்களை நேரில் சென்று பார்க்கவேண்டுமாயின்,எத்தனையோ விதமான வாகன சேவைகளை பயன்படுத்தி விரைவாக சென்று மகிழ்சியை பகிர்ந்து கொண்டிருந்த நிலைமை மாறி, வாகன முடக்கம், கட்டுப்பாடுகளால், கால் நடையாகவே ஆயிரமாயிரம் மைல் தூரத்தை கடக்கும்படியான கண்ணீர் சூழ்நிலைகள் உருவாகிவிட்டதே.

இந்த சூழ்நிலைக்கு  முடிவு எப்போது வரும்?

நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி, கூலிவேலை செய்து, மண் சுமந்து, வாகனம் ஓட்டி காய்கறி விற்று, மீன்பிடித்து, குயவு வேலை செய்து..….. பாடுபட்டு உழைத்துதான் சாப்பிடவேண்டும் என்றபோதிலும் கலங்காத உள்ளம் இன்று வேலைக்குபோகக்கூட முடியாது, ஒருவேளை சோற்றுக்குக்கூட வழியின்றி வாடும் மக்களின் நிலை இதயத்தில் ரணங்களை தழும்புகளாக்கிவிட்டன.

இந்த இழி சூழ்நிலைக்கு முடிவு எப்போது வரும்?

மேல் சொன்னவை சில உதாரணங்களே, சொல்லப்படாத அலங்கோல தொடக்கங்கள் ஏராளம்.

இத்தனை அவல  தொடக்கங்களுக்கும் முடிவுதான் என்ன - எப்போது ?

ஒரே முடிவுதான்….

ஆம் , கொரோனாவின் முடிவுதான் இத்தனை அவலங்களுக்கும் முடிவு.

ஆமாம்…. அந்த கொரோனாவின் முடிவு எப்போது?

தற்போது இந்த கேள்விதான் உலகில்  எவருக்கும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

விசாரித்த வகையில், அந்த கொரோனாவிடமே இதற்கான பதில் இல்லையாம்??!!

அப்படியானால் யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வது.


"ஆதியுமாய்  , அந்தமுமாய் 
அனைத்து உயிருக்கும் தந்தையுமாய்  
ஜோதியுமாய்  நீதியுமாய் 
அகில லோக அதிபனுமாய்  
விண்ணிலே வீற்றிருந்தும்  
விளங்காத விந்தையென 
மண்ணிலும் எ(ன்)ம்மிலும் 
மாட்சியுடன்  ஆட்சிசெய்யும் 
மறைபோற்றும்  மாமணியாம் 
மாசில்லா திருச்சுடராம் 
பவித்திர பரம்பொருள்  
அவனிடமன்றி வேராரிடம்?"

 இறுமாப்பு, வஞ்சனை பொறாமை,மேட்டிமை சிந்தனைகள், ஆணவம் அகம்பாவம் எனும் கழிவுகளை நம் மனதிலிருந்து அகற்றிவிட்டு நம்பிக்கையுடன் இறைவனிடம் சாஷ்டாங்கமாய் சரணடைவோம்.

அவனியில்  முடிவு தெரியாத எதுவானாலும்  விரைவில் முடித்துவைக்கப்படும் வல்லமை அவனிடமே .


தொடங்கப்படும் எல்லாவற்றிற்கும் முடிவு ஒன்று உண்டு  ஆனால் அது எப்போது என்பதுதான் கேள்வி.  

ஆனால் ஒன்றின் முடிவு மட்டும் எனக்கு நன்றாக தெரியும் அது? எது எப்போது?

வேறென்ன? இந்த பதிவின்  முடிவு தான், இதோ இப்போதே.

நன்றி. 
மீண்டும் ச(சி)ந்திப்போம் 
கோ.







12 கருத்துகள்:

  1. ஆனால் ஒன்றின் முடிவு மட்டும் எனக்கு நன்றாக தெரியும் அது? எது எப்போது?
    வேறென்ன? இந்த பதிவின் முடிவு தான், இதோ இப்போதே.///

    அதிசயம்! அதிசயம்! இப்படி சொன்னாலும் சொல்லுவீங்கனு இந்த
    பதிவை வாசிச்சிட்டு வரும்போதே இந்த மர மண்டை
    முன் கூட்டியே யூகிச்சிடுச்சு...


    காலையில் எழுந்ததில் துவங்கிய இந்த நாள்
    பகல் முழுவதும் எதோ ஒரு வேலை செய்து
    எனக்கு தூக்கம் வருவதால்
    இதோ தூங்க போரது எனக்கு தெரியும்.
    மத்த படி
    கோவிட் 19 முடிவுக்கு எப்போ வரும்னு யாருக்குமே தெரியாது...



    சீக்கிரம் இதர்க்கு ஒரு தீர்வு கிடைத்தால் போதும்...

    பதிவு கவிதை நயத்தோடு இருப்பதை ரசித்தேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ் ,

      பின்னால் என்ன நடக்கபோகுது என்று முன்கூட்டியே அறிந்த உங்கள்(மர) மண்டையை பாராட்டியே ஆக வேண்டும்.

      பதிவினையும் உடனிழைத்திருந்த கவிதையையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. எனக்கு என்னமோ இது ஒரு புதிய ஆரம்பமாக தான் தெரியுது. கொரோனா நம் வாழ்க்கை முறையையே ஒரு புதிய விதமாக ஆரம்பித்து வைத்து இருக்கின்றது. ஆரம்பம்பே அதிருது. முடிவு என்ன என்பதை நினைத்தாலே பதறுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா,

      சரியாக சொன்னீர்கள். புதிய வாழ்க்கை முறையின் ஆரம்பமாகவே இதை கருதவேண்டும், இதுவும் கடந்துபோகும் பிறகு எதுவும் கடந்து வரவும் கூடும். இந்த பயிற்சி கைகொடுக்கும்.

      நீக்கு
  3. கொரோனாவின் முடிவு எப்போது - அவனே அறிவான்....

    நல்ல பதிவு. நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      வருகைக்கு நன்றிகள், நலமே விளைய வேண்டிக்கொள்வோம்.

      நீக்கு
  4. விரைவில் முடிவு வரட்டும். நம்மவர்கள்தான் ஒத்துழைக்க மறுக்கின்றார்களே என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      தண்ணீர் குடிப்பது குதிரையின் முடிவுதான். முரண்டு பிடிக்கும் குதிரைகளை என்ன செய்வது, குளம் அருகிலிருந்தும்?

      முடிவு விரைவில் வரும் என நம்புவோம்.
      தங்கள் வருகைக்கு மீண்டும் நன்றிகள்.


      நீக்கு
  5. நிதர்சனமான நிஜங்கலையு்ம், அர்த்தமுள்ள கேள்விகளையும் உள்ளடக்கிய உன்னதப் பதிவு. " இறுமாப்பு, வஞ்சனை பொறாமை,மேட்டிமை சிந்தனைகள், ஆணவம் அகம்பாவம் எனும் கழிவுகளை நம் மனதிலிருந்து அகற்றிவிட்டு நம்பிக்கையுடன் இறைவனிடம் சாஷ்டாங்கமாய் சரணடைவோம்.

    அவனியில்  முடிவு தெரியாத எதுவானாலும்  விரைவில் முடித்துவைக்கப்படும் வல்லமை அவனிடமே ."
    Very Very True Sir!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபெர்ணாண்டோ,

      அவனின்றி யார் இந்த உலகினை அழிவிலிருந்துமீட்கமுடியும்?

      பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  6. யாரறிவர்? ஆனால் வாழ்வியலை மாற்றிப் போட்டது மட்டும் தெரிகிறது அடுத்து என்ன என்பது அவனுக்கே வெளிச்சம்.

    துளசிதரன்

    இல்லை அவனுக்கே வெளிச்சம் என்பதை நான் ஆமோதிக்கவில்லை அந்த தொற்றிற்கே வெளிச்சம்!!!

    ஹா ஹா ஹா ஹா கோ யாரைப் பார்த்து இந்தக் கேள்வி!! கண்ணுக்கே தெரியாத இறையிடம் கூட புலம்பித் தள்ளலாம் ஆனால் இந்தத் தொற்றிடம் அது கூட முடியலை. ஆனா பாருங்க நிறையப் பேர் அதை விரட்ட பாட்டெல்லாம் பாடுகிறார்கள்.

    ஆமாம்…. அந்த கொரோனாவின் முடிவு எப்போது?

    தற்போது இந்த கேள்விதான் உலகில் எவருக்கும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.//

    அதே அதே யாரிடமும் பதில் இல்லை.

    ஆனால் பாருங்க கோ நாம் பல ஆன்றோர்கள் சொல்லும் "இந்த நிமிடத்திய வாழக் கற்றுக் கொள் இறந்தகாலத்தை மற எதிர்காலத்தை எண்ணாதே " என்று சொல்லியதை நம்மால் பின்பற்ற முடியாமல் தவித்த வேளையில் இந்தத் தொற்று யதார்த்தமாகக் கற்றுக் கொடுத்துவிட்டதில்லையா?!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      ஐயா துளசி "அவனுக்கே" என்று சொன்னது - அந்த தொற்றைத்தான், என்வே இருவரின் கருத்தும் சரியே, சண்டைவேண்டாம்.

      பாட்டுக்கு மயங்கும் ஜந்துவாக தெரியவில்லை, அதுபாட்டுக்கு இருந்துவிட்டுதான் போகுமோ என தோன்றுகின்றது.

      தொற்று நமக்கு கற்று கொடுக்கும் பாடம் ,"இந்த நிமிடத்தியவாழ்வை வாழக் கற்றுக் கொள் இறந்தகாலத்தை மற எதிர்காலத்தை எண்ணாதே "

      அருமையான தத்துவத்தை நினைவுபடுத்தியமைக்கும் உங்களிருவரின் வருகைக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு