பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 ஜூலை, 2016

நேர் "கொன்ற" பார்வை.

"கை (துசெய்யும்) தொலைபேசிகள்"  
நண்பர்களே,

பேருந்தில் பயணித்துக்கொண்டே, அக்கம் பக்கம் என்ன நடக்கின்றது என்று கொஞ்சம் கண்களை அகல விரித்து ஆழ்ந்து கவனித்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்த எனக்கு பல விஷயங்கள் பார்வையில்பட்டு மறைந்தாலும் ஒரே ஒரு காட்சி மட்டும்  மனதில் புகுந்து கொஞ்சம் சிந்திக்க தூண்டியதின் விளைவே இந்த பதிவு.

அந்த கால பெண்கள், நம்ம ஊரில் மட்டுமல்லாது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் வெளியரங்கமாய்  தங்களை அடையாள படுத்திக்கொள்ளாமல், வீட்டிலேயே முடங்கி இருந்தனரென்றும்  , வீட்டில் உள்ள ஆண்கள் மத்தியில் தங்களின் முகங்களை நேருக்கு நேர் காட்டாமல், கீழே குனிந்துகொண்டோ அல்லது திரை சீலைகளுக்கு பின்னால் அல்லது தங்கள் சேலை  முந்தானையால் மறைத்துக்கொண்டோதான் பேசுவார்களாம்.

இது ஒருவகை அடிமைத்தனம் என்று சொல்ல முடியாது ஆனால் பெண்களுக்கே உரிய அச்சம் நாணம் ... போன்ற குணங்களின் விழுமிய விழுக்காட்டுகளின் உச்சத்தின் மிச்சமாகவே கருதப்பட்டது.

இந்த பெண்மையின் தன்மையை நாளடைவில் அவர்களுக்கான கட்டாய குணங்களாக இருக்கும்படி சில சமூகம் கருதியதன் விளைவாகத்தான், சமூக சீர்திருத்தவாதிகள் , ராஜா ராம் மோகன்ராய் போன்றோரும் , நம்ம ஊர் பாரதியாரும் கூட பெண்களின் விழிப்புணர்வினை பெரிதும் உற்சாகப்படுத்தி களம் இறங்கினர்.

அவ்வாறு பிறந்த ஒரு உற்சாக கூக்குரல்தான், " நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்" என முழங்கும்  பாரதியின் பாசுரம்.

சரி, உங்கள் பதிவின் தலைப்பு கொஞ்சம் கோணலாக இருக்கின்றதே, ஏதேனும் எழுத்துப்பிழையா?

ஆமாம், எனது தலைப்பு கொஞ்சம் கோணலாகித்தான் போய்விட்டது  இன்றைய காட்சிகளின் பாதிப்பால்.

அப்படி என்ன காட்சி?

வேறு ஒன்றுமில்லை, தினமும் நிகழும் காட்சிதான் என்றாலும் இன்று  ஒரு சிந்தனையை விளைவித்துச்சென்ற அந்த  காட்சி:

பேருந்தில் ஏறிய  பலரும் தங்கள் இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்த உடனே தங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருந்த கை தொலை பேசிகளை இயக்கிய வண்ணம், குனிந்த தலை  நிமிராமல் , தாங்கள் சென்றடைய வேண்டிய இடம் வரும்வரை மட்டுமல்லாது இறங்கிய பிறகும் தலை நிமிராமல் முழு ஆர்வத்துடனும் தங்கள் முழு கவனமும் தொலைபேசியை இயக்குவதில் அதில் தங்களை முழுமையாக உட்பகுத்திக்கொண்டிருப்பதிலுமே குறியாக இருந்தனர்.

இத்தகைய மெய் மறந்து, தம்மை சுற்றிலும் என்ன நிகழ்கின்றது , யார் யார் எல்லாம் நம் இருக்கைக்கு பக்கத்தில் அல்லது தமக்கு பக்கத்தில் அமர்ந்தனர், அவர்கள் எப்படி இருந்தனர், அவர்களின் தோற்றம் ஆடை, நிறம் வயது அவர்கள் கையில் வைத்திருந்த பொருட்கள் , அல்லது பைகளின் அடையாளங்கள், எங்கே ஏறி எங்கே இறங்கினர் போன்ற எந்த குறிப்புகளையும் கண்டுகொள்ளாமல் உணராமலும் ஒரு தவ நிலையில் இருந்ததே அந்த அருங்காட்சி.

இப்படி பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் மட்டுமின்றி, பொது  இடங்களில் நடக்கும்போதும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் விமான நிலையங்களில்  காத்திருக்கும்போதும், குறிப்பாக ஆள் நடமாட்டம் குறைந்த இடங்களிலும் போதிய பகல் வெளிச்சமோ அல்லது மின் விளக்கு வெளிச்சமோ இல்லாத இடங்களிலும்  நம்மை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும் நம்மை நெருங்கும் அல்லது கடந்து போகும் சக மனிதர்களை குறித்த ஒரு பார்வையும் உணர்வும் இல்லாமல் எப்போதும் தங்கள் கைபேசிகளையே இயக்கிக்கொண்டும் அவற்றில் லயித்தும் இருப்பதால் எத்தகைய எதிர்விளைவுகள் நம்மை நாடி வருகின்றன என்பதற்கு சமீபத்தில் நடந்தேறிய சில விரும்பத்தகாத பேரிழப்புகள் நமக்கு நல்ல பாடத்தை சொல்லி சென்றிருக்கின்றன.

இதிலே பெரும்பான்மையானவர்கள் ஒலிபெருக்கியை காதில் மாட்டிக்கொண்டு இசையையோ, அல்லது காணொளியையோ ரசித்தவண்ணம் இருப்பதால் அருகில் ஏற்படும் சத்தங்களை / சமிக்ஞயை/எச்சரிக்கைகளை    கேட்கமுடியாமல் சங்கடங்களை சந்திக்கவும் நேரிடுகின்றது.

தொழில் நுட்ப வளர்ச்சியை நாம்  கையகப்படுத்துவதற்கு பதிலாக அவை நம்மை கையகப்படுத்தும் அளவிற்கோ நம்மை முழுமையாக கைதுசெய்தும் அளவிற்கோ  விட்டுவிடக்கூடாது.

எனவே, இனியேனும் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும், குறிப்பாக மாணவ இளைஞர்களும் இளைஞிகளும் தேவைக்கதிமாக தொலைபேசிகளில் மூழ்கிவிடாமல் சுற்றுப்புற நிகழ்வுகளிலும் சற்று கவனமாக, நிமிரா (நன் )நடையும் நேர் கொன்ற  பார்வையையும்  புறம்தள்ளி விட்டு , "நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்டு விழிப்புடன் இருப்பதே நம் பாதுகாப்பிற்கும் நம் குடும்ப  நலனுக்கும் பெரிதும் உதவும் எனும் இந்த எளிய   சிந்தனை பகிர்வுடன்  இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

பின் குறிப்பு:

இப்படி யோசித்துக்கொண்டே இருந்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கும்போதுதான் பார்த்தேன், என்னுடைய இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்து தொலைபேசியில்மூழ்கியவண்ணம் அவ்வப்போது முக அலங்காரமும் செய்துகொண்ட ஒரு இளம் வயது(??!!) பெண்மணி  தனது லிப் பாமை(lip balm)  மறந்து விட்டு சென்றிருந்ததை.

யோசித்து பாருங்கள் அதுவே வேற  Bomb ஆக  இருந்திருந்தால்........என்ன நடந்திருக்கும் என்று.

என்ன நடந்திருக்கும்?... இந்த பதிவு உங்களுக்கு கிடைக்காமல் போய் இருக்கும் அவ்வளவுதான்.  .

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

12 கருத்துகள்:

  1. தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் கையகப்படுத்துவதற்கு பதிலாக அவை நம்மை கையகப்படுத்தும் அளவிற்கோ நம்மை முழுமையாக கைதுசெய்தும் அளவிற்கோ விட்டுவிடக்கூடாது.//
    மிகச் சரி கூடாதுதான்
    ஆனால்...கூடிவிட்டதே
    பயனுள்ள அருமையானபதிவு

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி ஐயாவிற்கு வணக்கம்.

      தங்கள் வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. அறிவியல் வளர்ச்சி நம்மை பலரை அறிவிலிகளாக்கிவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயாவிற்கு வணக்கம்.

      தங்கள் வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. அலைபேசிகளில் மூழ்கி விடுவதே பலருக்கும் வழக்கமாகி இருக்கிறது. பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தான் பலரும் இருக்கிறார்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் வெங்கட்.
      பள்ளிக்கூடத்து பிள்ளைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்வரை குனிந்த தலை நிமிராமல் தொலைபேசியில் மூர்க்கத்தனமாக மூழ்கி இருப்பது பல இன்னல்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு சமமாகும்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. காலமாற்றம் ஏமாற்றங்களையும் ஏற்படுத்திவிடுகின்றது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரேஷ், ஆமாம் அதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. ஹஹஹ் உண்மைதான் கோ. மட்டுமல்ல அருகில் இருக்கும் தோழியுடன் கூட நேரில் பேசாமல் வாட்சப் இல்லை ஃபேஸ் புக் மூலம் உரையாடும் நிலைமை வந்தாச்சு தெரியுமா...அதை விடுங்கள் கணவன் மனைவி கூட இப்படிப் பேசுவதாகவும், கழிவறைக்குள் செல்லும் போது கூட tab உடன் செல்வதாக ஒரு கட்டுரை ஹிண்டுவில் வந்திருந்தது இரு வருடங்களுக்கு முன்...இது எப்படி...ஒரு வேளை ஸ்மார்ட் ஃபோன் பார்த்தால்தான் கழிவும் வருமோ??!!! ஐயையோ அப்படியே வந்துவிடுவார்களோ சுத்தம் கூட செய்யாமல் (தங்களையே கூட) ஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      தொழில் நுட்பம் எத்தனை இன்றியமையாததாகிவிட்டது பார்த்தீர்களா?

      கழிவறையில் மட்டுமல்ல இனி கல்லறையில் கூட தேவைப்படுமா என்னமோ?

      ஆமாம், ஒரு new APP வந்திருக்கின்றது தெரியுமா?

      கழிவறையில் கஷ்ட்டப்படாமல் இலகுவாக்க... Mukksfree download.

      முடிந்தால் ட்ரை பண்ணிட்டு எப்படினு இந்த உலகத்துக்கு எடுத்து சொல்லுங்கள்.

      கோ

      நீக்கு
  6. வணக்கம் அரசே,

    நல்ல பகிர்வு தான். கைப்பேசியில் மூழ்கிவிடுவது பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் தான்.

    ஹாஹாஹா லிப் பாம் நல்ல வேளை,, வேற பாம் இல்ல,,

    அவர்களிடம் சொல்லவில்லையா?

    "நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்"

    தலைப்பு?????????????


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே கைபேசியில் மூழ்குவதாக சொல்வது ஏற்புடையதாக இல்லை. ஒருவேளை தற்காலிகமான தப்பித்தலுக்கு வேண்டுமானால் இருக்கலாம் அதனால் வரும் நிரந்தர பிரச்சனைகளை ஒருமுறை எண்ணி பார்க்க வேண்டுமே?.
      தலைப்பில் ஏனிந்த மலைப்பு?

      கோ

      நீக்கு