பின்பற்றுபவர்கள்

திங்கள், 25 ஜூலை, 2016

விஜயகாந்த் சொல்றதும் சரிதானே.

வருவியா... வரமாட்டீயா ..

நண்பர்களே,

சமீபத்தில் வெளிவந்து மகிழ்ச்சியுடன்(யாருக்கு??) வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒரு பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தினை குறித்து இதுவரை சுமார் 7 கோடி மக்கள்தங்களின் விமர்சனங்களை எழுதி குவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்அதிலிருந்து கொஞ்சம் விலகி எனது மலேசிய நண்பர் சொன்ன ஒரு கருத்தை   உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளும் வாஞ்சையே இந்த பதிவு.

பொதுவாக நம்மையும்  நம் வேலைகளையும் சட்டென்று முடக்கிப்போடும்படியான சில நிகழ்வுகள் நம் வாழ்வில் அடிக்கடி ஏற்படுவதுண்டு.திட்டமிட்டபடி எல்லா வேலைகளையும் செய்யமுடியாதபடிக்கு சில எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம்தான், அவை இயற்கையின் இதயத்தின் முடிவாக இருந்தால் பரவாயில்லை.

நாளை காலை எழுந்ததிலிருந்து இன்னென்ன வேலைகளை செய்யவேண்டும் இவர்களை  பார்க்கவேண்டும், இவர்களிடம் இன்னென்ன விஷயங்களை குறித்து தொலைபேசியிலோ அல்லது மின் அஞ்சல் மூலமோ பேச வேண்டும் , இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு செல்லவேண்டும் போன்று எண்ணற்ற செயல் திட்டங்களை இன்றே தீட்டி வைத்திருப்போம்.

ஆனால் இவற்றை எல்லாம் அறியாத, நமக்கு வேண்டப்பட்டவர்(??), ஒருவர் திடீர் என்று அடுத்த நாள் ஏடாகூடமான நேரத்தில் முன்னறிவிப்பு இன்றி தொலைபேசியில் தொடர்புகொள்வார்.

அவரிடம் தமக்குள்ள அன்றைய பணிகள் பற்றி சொல்லி அவரது அழைப்பை  அலட்சிய படுத்தாமல் அவரிடம் நலம் விசாரித்து அவர் சொல்வதற்கு வார்த்தைக்கு வார்த்தை  மறுமொழி  பேசவில்லை என்றாலும் அவர்கள் பேசுவதை செவி மடுப்போம்  உண்மையாய்  சம்பாஷனையில் இணைந்திருப்போம்.

அதனால் நாம் அந்த நேரத்தில் செய்ய திட்டமிட்டிருந்த வேலை தடைபடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

பேசி கொண்டே இருப்பார், திடீரென்று, அப்படியே ஒரு நிமிஷம் தொடர்பிலேயே இருங்கள் ... என சொல்லிவிட்டு நம்மை தொடர்பில் காக்க வைத்துவிட்டு  அவரது முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதோ, அல்லது அவரை பார்க்க வந்தவர்களிடம் சம்பாஷிப்பதோ அல்லது வேறு தொலைபேசியில் தொடர்பில் வந்தவர்களிடம் பேசுவதோ செய்துகொண்டிருப்பார்.

நாமோ அவரை அவமதிக்க கூடாது என்பதற்காக பொறுமையுடன் தொடர்பில் காத்திருப்போம்.  சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடர்பில் வந்து சற்றுமுன் அவரால் தன்னுடன் தொடர்ந்து பேச முடியாமல் போனதற்கான காரணத்தை சொல்ல ஆரம்பிப்பர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், நமது அவசர தேவை "எதுவாக" இருந்தாலும் அதை செய்ய முடியாமல் போவதும் உண்டு.  லேண்ட் லைனில் அழைத்திருந்தால் இன்னும் சுத்தம், அந்த இடத்தை விட்டு நகரவே முடியாது. 

அதேபோல ஒரு சிலர், பேசிக்கொண்டே இருப்பார்கள், திடீரென்று ஒரு முக்கியமான  செய்தி சொல்லத்தான் உங்களை அழைத்தேன் என சொல்லிவிட்டு அந்த முக்கியமான செய்தியை தொடங்குவதற்கு முன் , இருங்கள் , யாரோ வராங்க போல இருக்கு, அல்லது இங்கே சூழ் நிலை சரி இல்லை இதோ அடுத்த அறைக்கு சென்று அல்லது வெளியில் சென்று இன்னும் ஒரு  நிமிஷத்துல மீண்டும் கூப்பிடுகிறேன் என சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிடுவார்கள்.

நாமும் எதோ நம்மிடம் முக்கியமான செய்தி சொல்வதாக சொன்னாரே, என்று அவரது அழைப்பிற்காக காத்திருப்போம்.  ஆனால்  அவரோ நம்மிடம் சொன்னதுபோல், ஒரு நிமிடத்தில் மீண்டும் தொடர்பில் வராமல் மறந்துபோய் வேறு ஏதேனும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்.

நமது வேலையையும் செய்யமுடியாமல் காத்திருந்து காத்திருந்து காலங்கள் வீணானதுதான் மிச்சம்.

அதேபோல ஒரு சிலர் நம்மை அழைத்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மீண்டும்  அழைப்பதாகவும் அதற்குத்தான் முன்  கூட்டியே உங்களிடம் சொல்கிறேன் என்றும்  காத்திருக்கும்படியாகவும் சொல்லிவிட்டு அந்த குறித்த நேரத்தில் அழைக்காமல் நம்மை அலைக்கழிப்பதும் உண்டு.

இதே போன்று தொடர்ந்து இரண்டுமுறை காக்கவைப்பார்களேயானால், அடுத்த முறை அவர்கள் அழைக்கும்போது  எந்த  வேலைகளும்  இன்றி ஓய்வாக இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நண்பர்களின் அழைப்பை நிராகரிக்கவே  'சூடு பட்ட' நண்பர்கள் விரும்புவார்கள். 

இதை இன்று காலையில்  நண்பர் ஒருவரிடம் விவாதித்து கொண்டிருந்தபோது, அவர் தமது கைபேசியை இயக்கி அதில் அவர் மலேசியாவில் இருக்கும் தனது நண்பர் முக நூல் வழியாக இன்று அதிகாலை 4.00 மணியிலிருந்து தன்னுடன் குறுஞ்செய்திகள்  மூலம் பேசிக்கொண்டிருந்ததாகவும் , இதோ வருகிறேன் அழைப்பை துண்டிக்க வேண்டாம் என சொல்லிவிட்டு இன்னும் தொடர்பில் வராமல் இருப்பதையும் காண்பித்து, அவரது தொடர்பிற்காக வேறுயாரிடமும் தொடர்புகொள்ள முடியாமல் காத்திருப்பதாகவும் இப்போது வரை, அதாவது இங்கே காலை மணி 11.00 வரை எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டதோடு, விஜயகாந்தின் விசிறியான அவர் சொன்ன சொற்றோடர் தான் இந்த பதிவின் தலைப்பு.

"விஜயகாந்த் சொல்றதும் சரிதானே."

ஆமாம் இதற்கும் விஜயகாந்திற்கு என்ன சம்பந்தம் என புரியாமல்  திகைத்த எனக்கு அவர் சொன்னது.

அதாவது , விஜயகாந்த், வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் பாடுவாராமே, "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, பூத்திருந்தது பூத்திருந்தது பூவிழி நோகுதடி". என்று

இனியேனும் இதுபோன்று காக்கவைக்க நினைக்கும் நண்பர்கள் அடுத்தவரின் அவசரம், தேவைகள், பொன்னான நேரம் , காத்திருத்தலை கவனத்தில் கொண்டு , நண்பர்கள் தங்களிடம் பேசுவதற்கு நேரம் இருக்கின்றதா, அல்லது அவர்களுக்கு ஏதேனும் அவசர வேலைகள் இருக்கின்றனவா என்பதை தெரிந்துகொண்டு, காலத்தின் சூழலை உணர்ந்து சொல்லவேண்டியவற்றை (என்னைப்போல) சுருக்கமாக, சொல்லிமுடிப்பதும், ஒருவேளை இதோ வருகிறேன் காத்திருங்கள் என சொன்னால் முடிந்தவரை சீக்கிரத்தில் தொடர்பிற்கு வருவதும் அப்படி முடியாத பட்சத்தில், சரி நாளை தொடர்கிறேன் என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடிப்பதும் நல்லது.

உலகத்தில் எல்லோரும் பிசியாகத்தான் இருக்கின்றார்கள் ஏதோ நாம் மட்டுமே பிசியாக இருப்பதுபோலும் மற்றவர்கள் சும்மா வெட்டி ஆபிசர்கள்தான் என்றும் நினைத்து மற்றவர் நேரத்தை வீணடிப்பது மகா  - மெகா குற்றம். 

மற்றவர்கள் வேலையையும் கெடுத்ததோடல்லாமல் , அனாவசிய காத்திருப்பிற்கும் உள்ளாக்குவது ஏற்புடையது அல்ல என்பதே விஜயகாந்த் அவர்கள் தனது பாட்டின் மூலம் சொல்லும் கருத்து.

என்ன மக்களே! அவர் சொல்றதும் சரிதானே?.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.14 கருத்துகள்:

 1. மலேசிய நண்பர், கருத்து,

  ஹும்... ஹும்... எதையோ எதிர் பார்த்து எதையோ..

  மகா - மெகா குற்றம் அறிவுரை
  யாருக்கோ?:)!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   வருகைக்கு மிக்க நன்றி.

   அறிவுரை எல்லாம் இல்லை , ஏதோ தோணுச்சு.

   கோ

   நீக்கு
 2. வணக்கம்
  சொன்னது சரியதான் யாவரும் உணர்ந்தால் சரிதான்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று வந்து நம் நேரத்தை கொள்ளையடிக்கும் சில கொள்ளயர்களும் இருக்கிறார்கள் அவர்களையும் இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் சிலர் வெறுமனே போன் செய்து நம் நலம் வீட்டில் உள்ள எல்லோர் பெயரையும் உச்சரித்து நலம் விசாரிப்பார்கள் அப்புறம் சும்மாத்தான் கூப்புட்டேன் வச்சிடவா? என்பார்கள். இவர்களையும் பொறுத்துப் போகவேண்டியுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுரேஷ்,

   இது நல்ல இருக்கே, "கொள்ளையர்கள்".

   கோ

   நீக்கு
 4. நீங்க சொல்றதும் சரிதான் நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா,

   நாம (உங்களையும் சேர்த்துதான்) எப்பவும் சரியாதான் சொல்லுவோம்?

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 5. வணக்கம் அரசே,

  விஜியகாந்த் பாட்டிற்கு இது தான் பொருளா???

  இன்று தான் விளங்கிற்று அரசே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியரே,

   விளக்கம் விளங்கியதில் மிக்க கபாலி அதாங்க மகிழ்ச்சி.

   நன்றிகள்.

   கோ

   நீக்கு
  2. ஒஒஒ கபாலி என்பதற்கு மகிழ்ச்சி என்ற பொருளா?,

   நன்றி அரசே

   நீக்கு
  3. பேராசிரியருக்கு,

   அப்படித்தான், அந்த படத்தில் இணைந்தவர்கள் சொல்கின்றனர்.

   கோ

   நீக்கு
 6. உலகத்தில் எல்லோரும் பிசியாகத்தான் இருக்கின்றார்கள் ஏதோ நாம் மட்டுமே பிசியாக இருப்பதுபோலும் மற்றவர்கள் சும்மா வெட்டி ஆபிசர்கள்தான் என்றும் நினைத்து மற்றவர் நேரத்தை வீணடிப்பது மகா - மெகா குற்றம். //மிக மிகச் சரியான வார்த்தைகள்..நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு