பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2016

புகைப்படம்!!

கொஞ்சம் சிரி(க்காதே) 


புகைப்படங்கள் எடுப்பதும் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதும் அதிலும் சுப நிகழ்ச்சிகளின் போது எடுத்த புகைப்படங்களை பார்த்து மகிழ்வதும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். 

இதுபோன்று எடுக்கப்படும் புகைப்படங்களில் நம் நண்பர்கள், உறவினர்களின் பழைய காலத்து புகைப்படங்கள் இருக்குமானால், ஒருவித கேலி கிண்டலுடனும் அந்த புகைப்படங்களை பார்த்து ரசித்து மகிழ்வோம்.

அதே சமயத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களில் நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள், மறைந்துபோனவர்களின் படங்களை பார்க்கும்போது அவர்களை குறித்த நினைவுகள் நம் மனதில் மெளனமாக தோன்றி மறையும்.

சிலருடைய புகைப்படங்களை பெரிதாக்கி, கண்ணாடி சட்டங்களுக்குள் வைத்து வீட்டின் வரவேற்பறையில் அலங்காரமாக கூட வைத்து பார்த்து மகிழ்வோம்.

சிலருடைய புகைப்படங்களை கடமைக்காக வைத்திருப்போம் ஆனால் அவற்றை ஒருமுறைகூட பார்க்க மனம் வராது, ஏனென்றால், அவர்களை ஆரம்பத்தில் இருந்தே ஏதேதோ காரணங்களுக்காக வெறுத்திருப்போம்.  அதே சமயத்தில் ஒருசிலருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள மனம் துடிக்கும். ஒருசிலருடைய புகைப்படம் கிடைக்காதா என ஏக்கத்துடன் கூட இருப்போம்.

ஒரு காலத்தில் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால், புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு போய்தான் எடுக்க முடியும், ஒரு சிலர், புகைப்பட கலைஞர்களை அழைத்துவந்து எடுக்க சொல்லுவார்கள், ஒரு சிலர், தங்களது சொந்த புகைப்பட கருவிகளை கொண்டு எடுப்பார்கள்.

முன்பொரு காலத்தில்  புகைப்படம் எடுக்க பிரத்தியேகமான புகைப்பட கருவி இருக்கவேண்டியது அவசியம் அதற்கு போதிய சூரிய ஒளியோ உள்ளரங்க ஒளியோ தேவைப்பட்டது. 

ஆனால் இப்போது அப்படி இல்லை கைபேசியிலேயே அந்த வசதி வந்துவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும், யாருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அதை உடனுக்குடன் பார்த்தும் அனுப்பியும் மகிழலாம். அப்படி எடுப்பவர்களுக்கு பிரத்தியேக பயிற்சி எல்லாம் தேவை இல்லை.

இந்த நேரத்தில்  பல வருடங்களுக்கு முன் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன், பிராந்திய மொழி - தமிழ் அறியாதவராய் கல்கத்தாவிலிருந்து தமிழகம் வந்து என்னோடு  பணிபுரிந்த   நண்பர் ஒருவர் நினைவிற்கு வருகிறார். 

முதன்முதலில் அவரை பார்த்தபோது  ஸ்டைலாக சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தார்.

இங்கே அலுவலக கட்டிடத்திற்குள் சிகரெட் பிடிக்க அனுமதி இல்லை என்னும் சட்டதிட்டங்கள் அறிந்துகொண்ட அவர், அடிக்கடி அலுவலக கட்டிடம் விட்டு வெளியில் சென்று புகைக்க ஆரம்பித்தார்

ஒருநாள் தாம் வைத்திருந்த   புகைப்பட கருவி மூலம் எங்கள் பலரையும் எங்கள் அலுவலக கட்டிடம் மேலும் அவரது வீடு போன்றவற்றை புகைப்படம் எடுத்து, அவற்றை பிறகு   பிரிண்ட் போட்டு எங்களிடம்   காட்டிவிட்டு அவரது உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார்.

ஆண்டுகள் பல சென்றாலும் நாங்கள் ஆளாளுக்கு ஒரு பக்கமாக சென்றிருந்தாலும் அவ்வப்போது யார் மூலமேனும் ஒருவரை பற்றி ஒருவர் கேட்டு தெரிந்துகொள்வோம்.

சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது, அதில் இந்த கல்கத்தா நண்பர்  அறுவை சிகிச்சை செய்யவேண்டிய  நிலையில் சுகவீனமாக மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருக்கின்றார் என்ற செய்தியோடு; செய்தி அனுப்பி  இருந்தவர் அவரின் மகள்.

அந்த மாதம் நான் ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததால் அவரை நேரில் சென்று பார்க்க முடிவுசெய்தேன்.

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியிருந்த அவரை சென்று நலம் விசாரித்துவிட்டு வந்தேன்.  அப்போது எங்களோடு எடுத்த பழைய புகைப்படங்களை காட்டி மகிழ்ந்தார். அவற்றுள் ஒரு புகைப்படம் அவர் சிகரெட்டோடு ஸ்டையிலாக இரு சக்கர வாகனம் மீது சாய்ந்துகொண்டிருந்த புகைப்படம்.

அந்த புகைப்படம் எடுத்த நினைவு எனக்கு பசுமரத்தாணிபோல் இருந்தது, ஏனென்றால் அந்த புகைப்படத்தை எடுத்தது நான்தான்.

அவரது சுகவீனத்தின் காரணத்தை அறியும்பொருட்டு விசாரித்ததில் அவருக்கு தொண்டை பகுதியில் உபரி  தசை வளர்ச்சி   என்றும் அதற்கு முக்கிய காரணம் அவரது புகை பழக்கம் என்றும் சொல்லப்பட்டது.

அவரது சங்கிலித்தொடர் புகை பழக்கம் அவரை அறிந்த அனைவரும் அறிந்ததே.

எனக்கு தெரிந்தவகையில் சில அறிவுரைகளை கூறிவிட்டு ஊருக்கு திரும்பி வரும்வரையில் இரண்டு மூன்று முறை சென்று அவருடன் பேசிவிட்டு  வந்தேன்.

விடுமுறை முடிந்து திரும்பியிருந்த எனக்கு சில மாதங்கள் கழித்து அவரது மகளிடமிருந்து மீண்டும் ஒரு அஞ்சல் வந்தது.

அதில் தனது தகப்பனார் இறந்து விட்டார் என்றும், தொண்டையில் அவருக்கு புற்றுநோய் பரவி இருந்ததும் அவரது நீண்ட கால புகை பழக்கமே அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டதோடு , , அவரது சிரித்தமுகத்தோடு  ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

சென்றமுறை அவரோடு சேர்ந்து, பழைய புகைப்படங்களை பார்த்தபோது மனதில் உண்டான மகிழ்ச்சி இப்போது மௌனமாகிப்போனது.

அவரது புகைப்படத்தைப்பார்த்த எனக்கு அது உண்மையிலேயே "புகை"படமாக காட்சி அளித்தது.

புகை பழக்கம் அவரை இளமையிலேயே புகைப்படத்தில் பதித்து சட்டங்களுக்குள் சிறைபிடித்து  மாலை சூடிக்கொண்டது.

சில நேரங்களில்  சில(ர்) புகைப்படங்களை பார்க்க நான் விரும்புவதில்லை அதில் இதுவும் ஒன்று. 

இனியேனும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் யோசிப்பார்கள் என்ற எண்ணத்தில் இந்தப்பதிவு.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


10 கருத்துகள்:

 1. எமனுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோ
  என்று கூடச் சொல்லலாம்

  வட்டமிட்ட விமானம் சட்டென
  கீழிறங்குதல் போல் துவங்கிச்
  சொல்லிச் சென்றவிதமும்
  முடித்த விதமும் மனம் கவர்ந்தது

  மரணம் எப்படியும் உண்டு
  அதை நாமாக
  வரவழைக்கவேண்டியதில்லை
  என உணர்த்தும் பகிர்வு அருமை

  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கும் பதிவினை பாங்குற ரசித்து இட்ட பின்னூட்டத்திற்கும் நன்றியும் வணக்கங்களும்.

   கோ

   நீக்கு
 2. புகைப்படங்கள் - பல நினைவுகளை மீட்டெடுக்க உதவியாக இருப்பவை....

  புகை நமக்குப் பகை - புகைப்பவர்கள் தெரிந்து கொண்டால் நல்லது....

  நல்லதோர் பதிவு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. புகைபிடிப்போர் திருந்த ஓர் அருமையான அனுபவப்பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யாவின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி

   கோ

   நீக்கு
 4. புகைப்படங்கள்...ஆம் பல நினைவுகளை நமக்கு அசை போட வைக்கும். அதில் மகிழ்வும் இருக்கும் துக்கமும் இருக்கும் தான். இப்போதெல்லாம் இது சர்வசகஜமாகி விட்டது. கையில் ஸ்மார்ட் ஃபோன் இருப்பதால்..

  புகைப்பிடிப்பவர் வெகு சீக்கிரமே புகைப்படமாகிப் போகாமல் இருக்க வேண்டும் இது அவர்களே உணர்ந்தால்தான் உண்டு...செல்ஃபி எடுக்கும் போதாவது நினைத்துக் கொள்ளமாட்டார்களோ? புகை பழக்கத்தால் புகையாகிப் பதிவோம் நாமே நம் படத்தைப் பார்த்து ரசிக்க முடியதாகிவிடும் என்று...நல்ல பகிர்வு கோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   தங்கள் வருகைக்கும் வளமான பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

   புகைப்பிடிப்பவர் வெகு சீக்கிரமே புகைப்படமாகிப் போகாமல் இருக்க வேண்டும்.

   கோ

   நீக்கு