பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 ஜூலை, 2016

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ??

மகுடம் சூடு.!!

நண்பர்களே,

மனிதனின் வாழ்வோடு  நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டற  கலந்து மனித வாழ்வியலை வளம்பெற செய்வதில் கால்நடைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

அத்தகைய கால்நடைகளில் மிகவும் இன்றியமையாத சிலவற்றுள், ஆடு , மாடு , கழுதை , குதிரை,  ஒட்டகம், நாய்  போன்றவை மனிதனோடு ஒன்றியும் அவனை சார்ந்தும்  வாழும்படி பழக்கப்படுத்தப்பட்டுள்ளன.  

இத்தகைய கால் நடைகளால், பால், தோல், உரோமம், கடின உழைப்பு,எரு,மாமிசம்,பயணம்,பொதி சுமப்பு, பாதுகாப்பு  , பொருளாதார முன்னேற்றம்...போன்று மனிதன் அனுபவிக்கும் நன்மைகள் ஏராளம்.

கால் நடைகளால் நன்மை அடைவதற்காக, மனிதனின் தேவைக்கேற்ப அவற்றை பக்குவப்படுத்தியும் பழக்கப்படுத்தியும் தொன்றுதொட்டு பராமரித்து வருகின்றோம்.

அப்படி அவற்றை சில வேலைகளுக்கு உட்படுத்த எத்தனிக்கும் ஆரம்ப காலங்களில் அவற்றை பல விதமான  பயிற்சிகளுக்கு ஆட்படுத்துகின்றோம்.

பயிற்சிக்காலத்தில் அவற்றை சில வேளைகளில் சாட்டைகளால் அடித்தும் , மூக்கணாங்கயிறு  கொண்டு அடக்கியும் , நுகம், லாடம், லகான்,கடிவாளம் போன்ற கடினமான வரம்புகளுக்குள் உட்படுத்தியும் பயிற்சி அளிக்கின்றோம்.

அப்படி பழக்கும்போது   சில கால்நடைகள் எஜமானின் நோக்கத்தை புரிந்துகொண்டு (??) அவனுக்கு ஒத்துழைத்து, பயிற்சியிலும் அதன் பிறகு ஈடுபடும் வேலையிலும் கைதேர்ந்த ,  சாரி கால் தேர்ந்து நல்ல பெயர் வாங்கிவிடுகின்றன.

இப்படி நல்ல பேர் வாங்கும் கால்நடைகளுள் குறிப்பாக மாட்டுக்கு " நல்ல மாடு" என்று பெயர்.(அப்படியா?)

கொஞ்சம் முரட்டாட்டம் செய்து  போக்கு காட்டும் மாடுகளுக்கு "கெட்ட மாடுகள்" என்று பெயர் வைக்கவில்லை என்றாலும் அவற்றை எஜமானர்கள் பெரிதும் விரும்பாமல் , தங்கள் நோக்கத்தை அவைகள் புரிந்து தங்கள் ஆணைகளுக்கு அடிபணியாத மாடுகளை அடிப்பதும் , சூடு போடுவதுமான தண்டனைகளுக்கு உட்படுத்துகின்றார்கள்.

அடியாத மாடு படியாது என்று சொல்ல கேட்டிருப்போம் அதனால் முரண்டு பிடிக்கும்  மாடுகளை அடக்கவேண்டும் என்பதற்காக தண்டிக்கும் சில வழிகளில் சூடு போடுவதும் ஒரு வகை என்பது அரசல் புரசலாக கேள்விப்பட்ட ஒன்று.

அடங்காத மாடுகளை , எஜமானின்சொல்பேச்சு கேட்க்காத மாடுகளை அடக்குவதற்கு அவைகளுக்கு தண்டனை என்ற பெயரில் சூடு வைப்பது மிருகவதை என்றாலும் ஒரு பேச்சுக்கு அப்படி சூடுபோடுவதை ஞாயப்படுத்தி பார்க்கலாம்.

ஆனால் சொல்பேச்சை  கேட்டு எஜமானருக்கு கீழ்ப்படிந்து நடக்கும் "நல்ல" மாடுகளுக்கு சூடு போடுவது எந்த வகையில் ஞாயமாகும் என்பது எனக்கு புரியவில்லை.

சொல்ற பேச்சைக்கேட்டு நடக்கும் நல்ல  மாட்டுக்கே  ஒரு சூடு  என்றால், சொல்பேச்சு கேட்க்காமல் லொள்ளு பண்ணிக்கொண்டு திரியும்  மாட்டுக்கு எத்தனை சூடுபோடவேண்டும்?

இது என்னவோ மாடுகளுக்கு மட்டுமே சொன்னதாக தெரியவில்லை.

 நீ நல்ல, மானம், ரோஷம், சூடு(?) சுரணை உள்ளவனா(ளா) இருந்தா உனக்கு ஒருமுறை சொன்னாலே கேட்டு திருந்திடனும், எத்தனை முறை சொன்னாலும் உன் (மர) மண்டையில் உறைக்காதா?   எனும் கருத்தை நிலை நாட்டத்தான் "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்று ஆரம்பிக்கும் சொற்றோடர் வழக்கத்திற்கு வந்திருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மனுஷனுக்கு அறிவுரை சொல்வதற்குக்கூட, மாடுகளை துணைக்கு அழைக்க வேண்டி இருக்கின்றது.

இனியேனும் நம்மில்  யாரேனும் ஏதேனும்  நம்மிடமுள்ள வேண்டத்தகாத , குணங்கள் இருந்தாலோ (நிறைய்ய்ய்ய..... இருக்குமே), அல்லது ,வேண்டாம் இனி செய்யாதே, நல்லதல்ல என சொல்லப்பட்ட வழக்கங்கள் - பழக்கங்கள் குணங்கள்  எதுவாக இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு நல்ல மாடுகளாக--சாரி... நல்ல மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.

அப்படி இல்லை என்றால்... நல்ல மாட்டுக்கே ஒரு சூடு போடும் இந்த சமூகம் நல்லா இல்லாத  - அடங்காத , சொல்பேச்சை கேட்க்காது கண்டதை  மேய்ந்து திரிகின்ற மாட்டுக்கு எத்தனை  சூடுகள், அதுவும்   எங்கெங்கே போடும் என்பதை நினைத்துபாருங்கள் - திருந்த பாருங்கள்  -நல்ல பேர் எனும் மகுடம் சூடுங்கள்  மா(னுடர்)டுகளே.   

பின்குறிப்பு:  உண்மையிலேயே நல்ல மாட்டுக்கு ஏன் சூடு போடவேண்டும் என்பது  எனக்கு  (ஒண்ணுமே) புரியல, புரிஞ்சவங்க   யாரேனும் கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

16 கருத்துகள்:

  1. இது நல்லா புரிஞ்சு படிக்கிறவங்களுக்கு ஒரு பதிவு

    பதிலளிநீக்கு
  2. நண்பா,

    வருகைக்கு மிக்க நன்றி. உங்களுக்கு கண்டிப்பாக புரிஞ்சிபோனதாக எனக்கு புரிஞ்சிபோச்சி , ஏன்னா நீங்கா நல்லா புரிஞ்சி படிக்கிறவரன்றோ?

    கோ

    பதிலளிநீக்கு
  3. கதிரடித்து முடித்த பின்
    சூடடிப்பது என்று ஒன்று உண்டு
    ஆறடி விட்டத்தில் சுற்றிச் சுற்றி
    வரவேண்டும்
    கதிரடிக்குத் தப்பிய நெல்மணிகளை
    எடுப்பதற்காக அது

    அதற்கு தொத்தல் மாடுகள் போதும்
    நல்ல மாடுகளைக் கஸ்டப்படுத்த வேண்டியதில்லை

    எனவே ஒரு சூட்டோடொடு நல்லமாடுகளை
    நிறுத்திக் கொள்வார்கள்

    அதற்காகவும் இருக்கலாமோ

    பதிலளிநீக்கு
  4. ஐயாவிற்கு வணக்கம்.

    வருகைக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி. அது என்ன தொத்தல் மாடுகள்?

    கோ

    பதிலளிநீக்கு
  5. அடடே,
    ஐயா , மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்களின் தொடர் விளக்கத்திற்கு.

    கோ

    பதிலளிநீக்கு
  6. அதாவது நல்ல குணாதிசயங்கள் உள்ளவர்கள் என்றால் ஒரு முறை நல்லது அல்லது அறிவுரை சொன்னால் போதும்.. கேட்டுக் கொண்டுவிடுவார்கள் என்பதுதான் அதுவாக இருக்கும் என்பதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கும் தங்கள் கருத்து பரிவர்த்தனைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  7. வணக்கம் அரசே,

    ஆம் திட்டும் போது, இப்படி சொல்லித் தான் திட்டுவார்கள், ஒரு சூடு ஒரு மாடு,,சரி சரி யாரை இப்படி திட்டினீர்கள்?
    ரமணி ஐயா சொன்னது சரி,, நானும் இது குறித்து இங்கே கேட்டேன். இதன் பொருள் இது தானாம்.
    தஞ்சை நெற்களஞ்சயம் அல்லவா?
    சொற்றொடர்களுக்கு நல்ல விளக்கம் கிடைக்க உங்கள் பதிவுகள் காரணமாகுகின்றன. தொடருங்கள்
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      நெற்களஞ்சியத்திலிருக்கும் சொற்களஞ்சியமாய் திகழும் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நான் யாரையும் திட்டவில்லையே.

      கோ

      நீக்கு
  8. திரு .சன் சம்சுதீன் இப்படி சொல்லி இருக்கிறார் !இப்படியும் இருக்கலாம் :)
    #முன்காலத்தில் உழுவதற்கும் பால்கறப்பதர்க்கும்
    நல்ல மாடு வாங்க சந்தைக்கு செல்வார்கள். சந்தையில் மாடுகள் அசை போட்டு கொண்டோ பராக்கு பார்த்துகொண்டோ இருக்கும். நல்ல மாடு எது என்று தெரிந்துகொள்ள ஒரு சரியான வழியை பின்பற்றினார்கள்.அது?
    மாட்டை முதுகில் தட்டியோ, வாலை முறுக்கி விட்டோ ஓட்டி விடுவார்கள். இச்சோதனையில் சரியில்லாத மாடு சோம்பலாக நிற்கும். அதை வாங்க மாட்டர்கள். சரியான,தரமான மாடு கம்பீரமாக நடந்து செல்லும். தரமான மாடு நடந்து செல்லும் போது அதன் கால் "சுவடு" மணலில் ஆழமாக பதியும். உடனே " நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு " இந்த மாட்டை வாங்கிடலாம் என்பார்கள். சுவடு எனபது சூடு என்பதாக திரிந்துவிட்டது. எனவே நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதை சுவடு என்று திருத்தி வாசிக்கவும்.#

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீ அவர்களுக்கு,

      நல்ல விளக்கத்தோடு உங்கள் வருகை என் பதிவின் பக்கம் சுவடு பதித்தமைக்கு மிக்க நன்றிகள் முதலில்.

      இதுதான் சரியான விளக்கமாக இருக்கும் என்று நினைக்கின்றேன், ஏனென்றால், உழவனுக்கு உற்றதுணையான மாட்டிற்கு சூடு போட்டு துன்புறுத்தி இருக்க வாய்ப்பே இல்லை என நினைக்க தோன்றுவதால்.

      நன்றி.

      கோ

      நீக்கு
  9. சபாஷ்! இந்த மாட்டுப்பொங்கலுக்கு நல்ல மேட்டர் எழுத கிடைச்சிடுச்சு போல :)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. இது 6 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு.

      நீக்கு
  10. மிகவும் அருமையான சிந்தனை என் பார்வையில் சில கருத்துக்களை புரிய வைக்க முன்னோர்கள் பலவிதமான உத்திகளை கையாள்வது வழக்கம் அதில் இது ஒருவகை. நல்லதொரு பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு