பின்பற்றுபவர்கள்

புதன், 27 ஜூலை, 2016

ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல?

 எத்தனை ?
நண்பர்களே,

சில வருடங்களுக்கு முன்னால், மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய தனி நாடான, மால்டா எனும் ஐரோப்பிய  நாட்டிற்கு சென்றிருந்தேன், அதை பற்றி....
எனது பாத்ரூமில் தோலுரித்த பாம்பு எனும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அங்கே தங்கி இருந்த நாட்களில் பலவிதமான இடங்களை பார்த்ததோடல்லாமல் பல வித உணவுவகைகளை ருசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

அவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் விதவிதமான உணவுவகைகளை ருசித்த எனக்கு ஒருநாள் ஒரு வித்தியாசமான உணவு விடுதியில் பரிமாறப்பட்ட ஒரு உணவு முயல் ரோஸ்ட்.

இந்தியாவில் பலரும் சொல்ல கேட்டிருக்கின்றேன் முயல்கறி நன்றாக இருக்கும் என்று ஆனால் சாப்பிட்டது கிடையாது.

சரி இங்கே , நமது வாழ்வின் ஒரு நினைவு சின்னமாக முயல்கறியை சுவைப்பது என முடிவு செய்து , அதன் தயாரிப்பு முன்னணி பின்னணி விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டு, எல்லாம் நமக்கு ஓரளவிற்கு ஏற்புடையதாக தோன்றியதால் நானே சென்று அங்கே தோல் உறிக்கப்பட்டு, மசாலாவில் ஊறவைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அளவிலான முயலை சுட்டிக்காட்டி அதனை சமைத்து கொடுக்கும்படி கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

ஏற்கனவே க்ரில் தவாவில் எனக்கு முன் ஆர்டர் கொடுத்தவர்களுக்கான முயல்கள் வறுபட்டுக்கொண்டிருந்தன.

தயாராகும் வரை டைம் பாஸிங்கிற்காக சில நொறுக்கு தீனிகளான, சிப்ஸ், சாலடுகளும் கொடுக்கப்பட்டன.

முதன் முதலாக முயலை சாப்பிட முயல்கிறோம்  எப்படி  இருக்குமோ, சென்ற சிந்தனையில் சர்வரின் வருகைக்காக காத்திருந்தேன் .

ஒரு 10 அல்லது 12 நிமிடங்கள் கழித்து மூடப்பட்ட ஒரு தட்டோடு என் இருக்கைக்கு சர்வர் வந்தார்.

கொண்டுவந்ததை என் மேசைமீது வைத்துவிட்டு ஒரு புன் சிரிப்போடு என்ஜாய்! என சொல்லிவிட்டு இடம் பெயர்ந்தார்.

ஆவல் மிகுதியால் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தேன்.

ஆஹா.... அருமையாக எனக்கு பிடித்த டார்க் பிரௌனும் இளங்கருப்பு நிறமுமாக காட்ச்சி அளித்த அந்த வறுவல் முயலின் அங்கங்கள் அங்கங்கே தனித்தனித்தனியாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

சாப்பிடுவதற்குமுன், அந்த முயல் வறுவலிலுள்ள உள்ள முயல் பாகங்களை   ஜீவ காருண்ய கொள்கையில் தீவிர பற்றுக்கொண்டிருப்பவன் என்பதால்   முயலுக்கு வலிக்காமல் முள் கரண்டியால் கொஞ்சம் கிளறி பார்த்தேன்.

அவற்றுள் தலை பகுதியும் , தோள் பகுதியும், கழுத்து மற்றும் பின்னகால்களும் , உடல் பகுதியும் தனித்தனியாக இருந்தன.

சரி இதற்குமுன் இப்படி ஒரு முழு முயலையும் நம் தட்டில் வைத்து பார்த்ததில்லை ஆனால் இப்போது சாப்பிடவே போகிறோம்  , ஊருக்கு சென்று நண்பர்களிடம் சொன்னால் நம்புவார்களா?

சொன்னால் நம்புவார்களா தெரியாது ஆனால் போட்டோவை காண்பித்தால் ஒருவேளை நம்புவார்கள் என எண்ணி அந்த தட்டில் இருந்த முயலோடு  ஒரு செல்பி   எடுத்தேன்.

இருந்தாலும் அது "முசல்"  வறுவல் என சொல்லும்படி அத்தனை "அசல்" வடிவத்தில்  இல்லை.

எனவே வெட்டப்பட்டு பரவலாக இருந்த அனைத்து பாகங்களையும் அந்த அகண்ட தட்டில் என் கைகளைக்கொண்டு இணைத்து மீண்டும் போட்டோ எடுக்க  நினைத்து அனைத்து பாகங்களையும் ஒன்றிணைக்க முயன்றேன்.

எனக்கு அருகில் அமர்ந்து இருந்தவர்கள் நான் எதோ முயல் ஆராய்ச்சி செய்ய முயல்வதாக நினைத்து என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என நினைக்கின்றேன், நானோ கர்மமே கண்ணாக இருந்தேன்- முயல்சி  திருவினையாக்கும் என்ற எண்ணத்தில்.

எளிதில் ஒன்றிணைக்கலாம் என எண்ணிய எனக்கு 5 முதல் 7 நிமிடங்கள் வரையில் அவற்றை இணைக்கமுடியாமல் போனது.

தலை , கழுத்து, உடல் , முன்னங்கால்களோடு இணைந்திருந்த தோள்கள் , பின்னங்கால்களோடு  இணைந்திருந்த தொடைகள் எல்லாம் இணைத்துவிட்டேன் இருந்தாலும் மற்றுமொரு பாகத்தை எங்கே இணைப்பது என தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்,

காரணம் என் தட்டில் கூடுதலாக மற்றுமொரு உறுப்பு இருந்தது.

அது  என்ன உறுப்பு என்று  நீங்க கற்பனை செய்றதுக்குள்ள நானே சொல்லிவிடுவது என் பொறுப்பு. 

அது   முன்னங்காலோடு இணைந்திருந்த  ஒரு தோள் பாகம் .  

உடனே சர்வரை அழைத்து, எனது தட்டில் கூடுதலாக ஒரு கால் இருக்கின்றது; ஒருகால் இது வேறெருவர் ஆர்டர் செய்த முயலின் காலாக இருக்கும் இதனை எடுத்துவிடுங்கள் என கூறினேன்.

தவறு நடந்து விட்டது என்று கண்டிப்பாக அறிந்திருந்த அந்த சர்வர், அதனை சமாளிக்க, இல்லை இல்லை இது நீங்கள் ஆர்டர் செய்த முயல்தான் என்றார்.

நானோ இல்லை பாருங்கள் வெட்டிக்கொடுக்கப்பட்ட பாகங்களை இணைத்துப்பார்த்தால் சம்பந்தமில்லாமல் இந்த ஒரு கால் கூடுதலாக இருக்கின்றதே என சொல்லியும், எடுத்த புகைப்பட ஆதாரத்தை காண்பித்தும் 
அவர் தனது முடிவிலிருந்து மாறவில்லை, ஒருகால் தன் தவறுக்கு முதலாளியிடம் திட்டு வாங்கவேண்டுமோ என எண்ணி விஷயத்தை முடிக்க நினைத்திருப்பார் போலும்.

எத்தனைமுறை சொல்லியும் அவர் இல்லை இந்த முயலுக்கு மொத்தம் ஐந்து கால்கள், எனவே உங்கள் தட்டில் இருக்கும் பாகங்கள் ஒரு முழுமையான முயலின் பாகங்கள்தான் என ஒற்றை காலில் நின்றார்.

ஒருவேளை அவர் சொல்வதுபோல் முயலுக்கு ஐந்து கால்களோ என்ற சந்தேகமும் எனக்கும் துளிர்விட்டது.

முயலுக்கு மூணுகால் என்று அடம்பிடிப்பவர்களை குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் , ஆனால் இவரோ முயலுக்கு ஐந்துகால்கள் என சாதிக்கின்றாரே என நினைத்து அப்படியே அந்த ஐந்தாவது காலையும்  ஒரு எக்ஸ்டரா பிட்டிங்காக தட்டில் வைத்து புகைபடமெடுத்து கொண்டு  சாப்பிட மனமின்றி அதை அப்படியே பார்சல் செய்து வாங்கிக்கொண்டு , அதற்குண்டான பணத்தை செலுத்திவிட்டு முயலின் ஐந்து கால்களோடு  வெளியில் வந்தேன்.

அதெப்படி ஒரு முயலுக்கு ஐந்து கால்கள் இருக்கக்கூடும் , ஏன் அந்த சர்வர் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்தார் என்று  நினைத்துக்கொண்டே, முக்கிய கடைவீதிகள் இருக்கும் இடம் வந்தபோது, அங்கே ஒரு மூதாட்டி  தள்ளு வண்டியில் அமர்ந்து  "தயவாக உதவுங்கள் - நன்றி" என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஏந்தி யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரருகில் சென்று  என்னிடம் முயல் வறுவல் இருக்கின்றது வேண்டுமா என கேட்டு  கையில் இருந்த அந்த முயல் வறுவலை   அவரது கையில் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தபோது கவனித்தேன், அந்த மூதாட்டிக்கு இரண்டு கால்களும் இல்லை என்பதை.

மத்திய உணவு அருந்தாததால் பசியாயிருந்த நான்  நேரம் பார்க்க, கைக்கடிகாரம் காட்டியது மாலை ஐந்தேகால் என்று.(அட இதிலுமா??)

நண்பர்களே,  இந்த நிகழ்சியில் வரும் சர்வர்களைப்போல் இந்த உலகத்தில் எத்தனை பேர்களோ?எத்தனை ஐந்துகால் முயல்களோ?

பின் குறிப்பு:

இன்னும் எனக்கு முயல் சாப்பிடும் யோகம் கிட்டவில்லை, சாப்பிட்டவர்கள் சொல்லுங்கள் அதன் ருசி எப்படி இருக்கும் என்பதைவிட  உண்மையில் முயலுக்கு எத்தனை கால்கள் என்று.

உங்கள் callலுக்காக  ஐயம் வெயிட்டிங் .

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திபோம்.

கோ


12 கருத்துகள்:

 1. ஒருக்கால் நீங்கள் வாலையும் சேர்த்து எண்ணியிருந்தால் ஐந்து வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

  முயலுக்கு நாலுகால் நண்பரே அது நொண்டியாக இருந்தால் மூன்று கால்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா,

   வாலுக்கும் காலுக்கும்கூடவா வித்தியாசம் தெரியாது எனக்கு?

   தகவலுக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 2. வெகு வெகு சுவாரஸ்யம்

  சர்வர் தான் கொடுத்த முயலுக்கு
  ஐந்து கால் எனச் சாதிக்க "முய்ல் "வதை
  சொல்ல "முய (ல் )ன்றது கவர்ந்தது

  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யாவின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 3. முயல் கறியா?

  இதுவரைக்கும் சுவைக்கல. நீங்க அடுத்த தடவை சுவைச்சு பார்த்து சொல்லுங்க சார்.

  விவரணம் அருமை.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அரசே,
  ,,,,,,முயலுக்கு மூணுகால் என்று அடம்பிடிப்பவர்களை குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் , ஆனால் இவரோ முயலுக்கு ஐந்துகால்கள் என சாதிக்கின்றாரே ,,,,,

  நினைத்தேன் முயலுக்கு மூனு கால்,,, க்கு தான் இப்படியொரு பதிவு என்று,,

  முயலுக்கு கால் இல்லையே,,

  நன்றி,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியருக்கு,

   தங்கள் வருகைக்கும் கருதிற்கும்மிக்க நன்றி.

   முயலுக்கு கால் இல்லை என்ற தகவலை உலககுக்கு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 5. மகேஷ்,

  இனி முயல் கறி சாப்பிட முயல மாட்டேன் என நினைக்கின்றேன், அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் ருசி குறித்து உங்களுக்கு தகவல் அனுப்ப முயல்கிறேன்.

  முயல் பிடித்ததற்கு -- அதாவது முயல் கறி குறித்த பதிவு உங்களுக்கும் பிடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  வருகைக்கு நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் அரசே,

  எங்கே என் பின்னூட்டம்.. ஒஒ மறந்தேன் போலும். முயலுக்கு கால் இருக்கா?, ஹாஹா
  முயல் என்ற சொல்லில்,,,
  நல்ல பகிர்வு தான். இதைப் படித்து திருந்தினால் சரி.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியருக்கு,

   தங்கள் மீள் வருகைக்கும் கருதிற்கும்மிக்க நன்றி.

   உங்கள் பின்னூட்டம் முயல் வேகத்தில் வந்திருந்தால் கிடைத்திருக்கும் ஒரு வேளை ஆமை வேகத்தில் வருகிறதோ என்னமோ?

   முயல் என்ற சொல்லுக்கு கால் இல்லைதான் , ஆனால் உண்மையான முயலுக்கு உங்க ஊரில் எத்தனை கால்கள் ? கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள்.

   யாரை திருந்த சொல்கின்றீர்கள், இதை பார்த்து திருந்த அந்த சர்வருக்கு தமிழ் தெரியாதே?

   கோ

   நீக்கு
 7. முயலுக்கு மூன்று கால் என்று சொல்லமாட்டொம் ஹஹஹ்..5 வது கால் ஒரு வேளை ஒரு சிலருக்கு 6 விரல்கள் வருவது போல் அந்த முயலுக்கும் கூடுதலாக ஒரு கால் அமைந்து விட்டதோ...என்றாலும் இனி நான் பிடிச்ச முயலுக்கு 5 கால்னும் சொல்லிப் பிடிவாதம் ப்டிக்கலாம்னு சொல்லுங்க...அதான் 3 கால்னு சொல்ல மாட்டோனும் சொன்னது...ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   நீங்கள் எது சொன்னாலும் அதில் ஒரு(??) அர்த்தம் இருக்கும் என்பது உலகோர் அறிந்த உண்மை.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு