பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 12 ஜூலை, 2016

பதிவும் - பதிலும்

கைமேல்  பலன்!!.

நண்பர்களே,

பதிவர்களும் பதிவரல்லாத பெரும்பான்மையானவர்களும், பெரும்பான்மையான நேரங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி, "பதிவுகளால் என்ன பயன்?" என்பதே.

நானும் சில மாதங்களுக்கு முன்புவரை அப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தேன் இருந்தாலும் அவ்வப்போது சில பதிவுகளை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஊரில் இருந்த   சமயத்தில் என்னை பார்க்க ஒரு சிலர் வந்திருந்தனர்.

அவர்களுள் பலரும் பலவிதமான செய்திகளோடும் ஆவலோடும்  அன்போடும் என்னை பார்க்க வந்திருந்தனர்.

அவ்வாறான ஒரு சுப முகூர்த்த சுபதினத்தில் என்னை பார்க்க மாலை சுமார் 7 மணியளவில், ஒரு 75 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் அவரோடு சுமார் 60 வயது மதிக்கத்தக்க   ஒரு பெண்மணியும் அவரோடு ஒரு 13 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியும் கூடவே ஒரு 55 வயது நிரம்பிய ஒரு ஆணும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

வந்தவர்களை ஹாலில் அமர செய்துவிட்டு அவர்களுக்கு குடிக்க தேநீர் தயாரிக்க உள்ளே வந்த என் சகோதரி, தம்பி, நம்ம ராமஜெயம் அக்கா வீட்டிலிருந்து வந்திருக்கின்றார்கள், போய் பேசிக்கொண்டு இரு இதோ தேநீர் தயாரித்து கொண்டுவருகிறேன் என சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றுவிட்டார்.

வேறு அறையில் இருந்த நான்   எந்த ராமஜெயம் அக்கா?   என யோசித்துக்கொண்டே, ஹாலுக்கு வந்தேன்.

அமர்ந்திருந்த அவர்கள் எல்லோரையும் கண்டு  அடையாளம் தெரியாமல் விழித்ததை விழிப்புடன் கவனித்த அந்த 75 வயது பெண்மணி எழுந்து வந்து என்னை கட்டி பிடித்து கன்னங்களில் முத்தமிட்டு பிறகு அவர்கள் கண்கள்   சிந்திய அந்த ஆனந்த கண்ணீரை துடைத்தவண்ணம் தம்பி  எப்படி இருக்கின்றாய்?  உன்னை பார்த்துதான் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன?

நீ பள்ளிக்கூடம் சென்ற சின்ன வயதில்தினமும் பார்ப்பேன்  அதற்கப்புறம் நீ கல்லூரி படிக்கும்போது சில சமயங்களில் பார்த்திருக்கின்றேன் அதோடு இப்போதுதான் பார்க்கின்றேன் , நீ ஊருக்கு வரும்போதெல்லாம்  எனக்கு தெரிவதில்லை அதிலும் இப்போது நான் அதிகம் வெளியில் நடமாடுவதில்லை.

இப்போ நீ வந்திருப்பதாக ஊரில் பேசிக்கொண்டார்கள் அதனால் உன்னை இந்தமுறை எப்படியும் பார்க்கவேண்டும் என்று நினைத்து அக்காவிடம் போன் செய்து விசாரித்ததில் 7 மணிக்குமேல் நீ வீட்டில் இருப்பாய் என்று சொன்னார்கள் அதனால்தான் இப்போது வந்தேன் என அவர்கள் சொல்ல சொல்ல எனக்கு அந்த பெண்மணியை   குறித்த ஞாபகங்கள் வந்து என் மனத்திரையை முழுமையாக நிறைத்திருந்தது.

ஆம், அது ராமஜெயம் அக்காவும் அவர்களது மகள் மகாவும் மகன் கதிரும் (கூட அவர்கள் பேத்தியாக இருந்திருக்கும், மகாவும்  கதிரும் என்னைவிட மூத்தவர்கள்)

பின்னர் அவர்களின் தளர்ந்த பிடியிலிருந்து விடுபட்டவுடன் அவர்களை  அமர சொன்னேன்.

எனக்கு மிக அருகில் அமர்ந்துகொண்டு என் கைகளை பற்றிக்கொண்டிருந்த அந்த பெண்மணி தான் கொண்டு வந்திருந்த ஒரு சில்வர் பாத்திரத்தை என்னிடம் கொடுத்து " இது உனக்காக நானே செய்து கொண்டுவந்திருக்கின்றேன் சாப்பிடு" என்று சொன்னார்.

என்னது எனக்காக நீங்கள் செய்ததா? அப்படி என்ன அது என ஆவல் மிகுதியால் பாத்திரத்தின் மூடியை திறந்து பார்த்தேன்.

ஆஹா... ஆவி பறக்க சிறு சிறு உருண்டைகளாக  பணியாரங்கள்?

என்ன விசேஷம்?  என்றேன்.

அதற்கு அந்த பெண்மணி,  சில மாதங்களுக்கு முன்னால் அம்மாவை பார்க்க வந்திருந்தேன், அப்போது உன்னை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது என்னை பற்றி நீ ஏதோ புத்தகத்தில் எழுதி இருந்ததையும் அதில் நான் செய்து உனக்கு கொடுத்த ஒரு தின்பண்டத்தை பற்றியும் எழுதி இருந்ததை அம்மா சொன்னார்கள்.

அன்றிலிருந்து உன்னை நேரில் பார்த்து மீண்டும் உனக்கு அந்த தின் பண்டத்தை கொடுக்கணும்னு நினைத்திருந்தேன் அதான் இன்றைக்கு கொண்டுவந்தேன் என சொல்லி, அவர்களே எனக்கு அதை எடுத்து ஊட்டியும்விட்டார்கள்.

ஆனந்த கண்ணீரும் ராம ஜெயம் அக்காவின் பாச அரவணைப்பும் நேச நினைவுகளும் தொண்டையை அடைத்திருந்தாலும் அவர்களது கரம் கொண்டு ஊட்டப்பட்ட அந்த தின்பண்டத்தினை  சுவைத்த தருணங்கள் அவர்களோடு சில மணிநேரம் கலந்துரையாடியவையும் இன்னும் என்  நெஞ்சிலும் நாவிலும் நிழலாடுகின்றன.

என்னது அது ?  அதை தெரிந்துகொள்ள ஆப்பம் - ஆசை - தோசை , குழி(பறித்த)பணியாரம்   என்ற எனது பதிவுகளை  வாசியுங்கள்.

நான்  பதிவுகள் எழுதும் விஷயத்தை மிக மிக நெருங்கிய ஓரிரு நண்பர்களை தவிர இன்றுவரை யாரிடமும் சொன்னது கிடையாது, என் வீட்டில் இருப்பவர்களையும் சேர்த்து.(ஒரே ஒருமுறை கடந்த ஆண்டு விடுமுறையில் சென்றபோது அம்மாவிடம் மேலோட்டமாக ராமஜெயம் அக்கா சம்பந்தப்பட்டிருந்த  ஒரே ஒரு பதிவின் சாராம்சத்தை மட்டும் சொல்லி இருந்தேன்.)

இப்போது புரிகிறதா பதிவுகளினால் என்ன பலன் என்று?

நண்பர்களே,  தொடர்ந்து எழுதுங்கள் என்றாவது ஒரு நாள் கைமேல் பலன் நிச்சயம் எந்த ரூபத்திலாவது(??!!) நம்மை (நன்மை) வந்தடையும் நம்புங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

12 கருத்துகள்:

  1. நெகிழ்ச்சியான விடயம்தான் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே, உண்மையில் நெகிழவைத்த தருணம்தான் அது.

      வருகைக்கு மிக்க நன்றிகள்

      கோ

      நீக்கு
  2. "பதிவுகளால் என்ன பயன்?"/// ஆரம்பிச்சாச்ச-யோசிக்க:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      யோசிக்கவேண்டிய விஷயம்தான் என்றாலும் ஆத்ம திருப்த்தியும் இதுபோன்ற நன்மைகளும் இருப்பதால் தொடருவோம்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. //அதற்கு அந்த பெண்மணி, சில மாதங்களுக்கு முன்னாள் அம்மாவை பார்க்க வந்திருந்தேன்//

    ஐயா எழுத்துப் பிழையை சரி செய்யவும். முன்னாள் அம்மா வேறு இன்றைய அம்மா வேறு என்று அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayakumar

      எழுத்துப்பிழையை "கொட்டி" காட்டியமைக்கு நன்றி, பிழைத்திருத்தம் செய்துவிட்டேன்.

      கோ

      நீக்கு
  4. இவ்வாறான நட்புக்கும், அன்புக்கும் அளவேயில்லை. இதில் கிடைக்கும் மன நிம்மதியும் அவ்வாறே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அவர்களுக்கு வணக்கம்.

      ஆம் உண்மைதான். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. நெகிழ்ச்சியான சந்திப்பு.

    பதிவுகள் நமது ஆத்ம திருப்திக்காகத்தானே தவிரவும் அதன் மூலம் எத்தனை அன்புமிக்க நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் இல்லையா இந்தப் பதிவுலகின் வழியாக. முகம் தெரியாவிட்டாலும் கூட. ஏன் நீங்களும் நாங்களும் கூட..இல்லையா கோ. நம் எழுத்து பலரை முகம் தெரியா வாசகர்கள் வரை சென்றடைகிறது என்பதுதான் உலகம் முழுவதும்..

    சரி சரி...//மகாவும் கதிரும் என்னைவிட மூத்தவர்கள்)// அப்படியே உங்கள் வயதை சைக்கிள் கேப்பில் சொல்லிவிட்டீர்களே...நல்ல காலம் /"அந்த 13 வயது சிறுமி என்னைவிட மூத்தவர்" என்று சொல்லவில்லையே.. ...ஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கும் தங்கள் கருத்து பரிவர்த்தனைக்கு மிக்க நன்றிகள்.

      ஆம் து உண்மைதான், முகமறியா பலரை அகம் அறிய செய்யும் இந்த பதிவுகள் நம்மில் பலரது நட்பிற்கும் பாலம் அமைத்திருப்பது மறுக்க முடியாத உண்மைதான்.

      வயது சம்பந்தமான உண்மையை சொன்னா ஒரு சிலருக்கு ... ஏன் இந்த புகைச்சல், I mean நகைச்சல்.

      கோ

      நீக்கு
  6. வணக்கம் அரசே,,

    ஒரு கிழிபணியாரம் பதிவாகிட்டது. இல்லை இல்லை அவர்களின் அந்த அன்பின் வெளிப்பாடு,,,
    ம்ம் தாங்கள் அவர் குறித்து எழுதிய பதிவு வாசித்தது நினைவில் இருக்கு,,

    அன்பின் நினைவலைகள்,, நெகிழ்ச்சியான நிமிடங்கள்,,

    நல்லது,,, தொடர்ந்து எழுதுங்கள்

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு

      ஆமாம் அது நெகிழ்சசியான தருணம்தான்.

      கோ

      நீக்கு