பின்பற்றுபவர்கள்

சனி, 20 ஜூன், 2015

"கிளிமாஞ்சோறோ"

உயர பறந்தது உலையில் கொதித்தது !!

நண்பர்களே,

ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மிக மிக உயரமான அதே சமயத்தில்   எந்த ஒரு மலையின் தொடர்ச்சியாக இல்லாமல், தனிப்பெரும் மலையாகவும் அதன் உச்சியில் மூன்று மாபெரும் எரிமலை முகடுகளை தன் தலையில் சுமந்திருக்கும்  டான்சானியா நாட்டில் கம்பீரமாக  இருக்கும் மலையின் பெயர் தான் "கிளிமாஞ்சாரோ" என்பது நம்மில் அநேகருக்கு தெரியும்.


சில வருடங்களுக்கு முன்னால் வெளி வந்த எந்திரன் திரைப்படத்தில் கூட அந்த  அந்த மலையின் பெயரில் தொடங்கும் ஒரு அழகான பாடலையும் அந்த பாடல் காட்ச்சியையும்  நாம் கேட்டிருப்போம், பார்த்திருப்போம்.

ஒரு வேளை அங்கே நான் சென்று நேரடியாக கண்டு களித்த அந்த ரம்மிய மான பயண குறிப்புகளைத்தான் இந்த பதிவில் சொல்லபோகிறேன் என்று நீங்கள் நினைத்தால், ........ஐயோ,.....ஐயோ....

பதிவை படிப்பதற்கு முன் தலைப்பை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு தொடருங்கள்.

பல வருடங்களுக்கு முன் பள்ளிகூட வயது இருக்கும் சமயத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியும் அதனை உள்ளடக்கிய மிகப்பெரிய வளாகமும், அந்த வளாகத்தில் இரண்டு பெரிய பங்களாக்களும், அதே வளாகத்தில் நான் படித்த ஆரம்ப பாட பள்ளியும், 

இரண்டு பெரிய, மாணவர் தங்கும் விடுதிகளும், விளையாட்டு மைதானமும், மாணவர்களுக்கான பிரார்த்தனை கூடமும் மற்றும் அந்த வளாகம் நிறைந்த புளியன் மரங்களும், புங்கை மரங்களும், புன்னை மரங்களும்,தூங்கு மூஞ்சி மரங்களும், மந்தார மரங்களும், வேப்பமரங்களும் , இரண்டுபெரிய கிணறுகளும், அதனை சுற்றி சோளம், நிலக்கடலை மற்றும் சில தாவரங்களை பயிர் செய்ய தேவையான் விளை நிலங்களும் , அந்த கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பிரின்சிபால்,மற்றும் ஊழியர்களின் குடி இருப்புகளும் , திறந்தவெளி நாடக மேடையும் , மற்றும் பல கண்ணுக்கு நிறைவான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருந்த பெரியதோர், கல்வி வளாகம் அது.

எங்கள் வீடும் ஏறக்குறைய அந்த வளாகத்திற்கு உள்ளேயே  இருப்பதுபோன்று நில அமைப்புகொண்டது.

பிரதான போக்கு வரத்து சாலையின் ஓரத்திலேயே அந்த வளாகத்தின் நுழைவு வாசல் அமைத்திருக்கும். 

அந்த நுழைவு வாசலில் இருந்து சுமார் ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில் தான் பிரதான கல்வி கூட கட்டிடங்கள் அமைந்திருக்கும், அந்த கட்டிடங்களை அடைய முகப்பு வாசலில் இருந்து நடந்து செல்லும் பாதை சுமார் முப்பது அடி அகலம் கொண்ட வழி எங்கும் இரு மருங்கிலும்  புளிய மரங்கள், இடையிடையே, பூ மரங்களும் வேப்பம் மரங்களும், புங்கை மரங்களும் செழித்து ஓங்கி படர்ந்து வளர்ந்திருப்பதை பார்க்கவும், அதனூடாய்  நடந்து செல்வதும் மனதுக்கும், உடலுக்கும், மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும்.

பறவைகளும் , அணில், கீறி பிள்ளைகள் போன்ற சிறிய விலங்குகளும் வாழ்ந்து வந்தன என சொல்லவும் வேண்டுமோ.

எங்கள் தாத்தா முதற்கொண்டு, என் அப்பா , இன்றளவும் என்  வரை அந்த பள்ளியும் அதன் வளாகமும் எங்களின் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட ஒரு அம்சம் என்றால் அது மிகை அல்ல.

வீட்டில் இரவு  தஞ்சம் அடையும் நேரம் தவிர எந்த நேரமும் அந்த வளாகத்திலேயே என்னுடைய பொழுது கழியும் , அதிலும் கோடை விடுமுறை நாட்களில் தூரத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு போய் ("பலா பழமும் பளா(ர்)ன மேட்டரும்") இருக்கும் சமயம் தவிர மற்ற நாட்களில் அக்கம் பக்கம் இருக்கும் சக வயது நண்பர்களுடன் காலை முதல் மாலை வரை அந்த வளாகத்தை சுற்றி சுற்றியே எந்தன் காலம் சுழன்று கொண்டிருக்கும்.

கிணற்றில் இறங்குவது, மரத்தில் ஏறுவது, கில்லி, பம்பரம் , கால்பந்து விளையாடுவது என்று கொண்டாட்டமான நாட்கள் அவை. 

இப்படிப்பட்ட ரம்மியமான வளாகத்தின் மரத்தடிகளில் கோடை காலத்தில், வருடத்திற்கு ஒருமுறை, நாடோடி இனத்தை சார்ந்த நரிகுறவர்கள் வந்து பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன்  ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் முகாமிடுவார்கள். 

அந்த பத்து நாட்களும் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியும் உற்ச்சாகமும் பிறக்கும்.

ஏனென்றால், அந்த நரி குறவ சகோதரர்கள் உண்டிவில் மற்றும் நாட்டு துப்பாக்கிகளோடு, வேட்டைக்கு செல்லும்போது (வளாகத்திற்கு உள்ளேயே) அவர்களோடு நானும் செல்வதுண்டு. அதேபோல  அந்த சகோதரிகள் கோர்க்கும்  அழகழகான பாசி மணி மாலைகளை  பார்க்கவும்  மிகவும் இன்பமாக இருக்கும்.

Image result for pictures of narikuravar

அவர்களது, கவலை அற்ற வாழ்வும், நாளைய தினத்தை பற்றிய அச்சம் இல்லாத சந்தோஷமான வாழ்க்கை முறைமையும், உழைத்து வாழும் மேலான குணமும் மாலை நேரங்களில் ஆட்டமும் பாட்டமுமான அந்த மக்களின் அன்றாட வாழ்வு  பார்க்க  மிகவும் இன்பமாக இருக்கும்.

இப்படி ஒருமுறை அந்த கூட்டத்தில் இருந்த நான்கு பெண்கள் ஒன்றாக கூடி கற்களை கொண்டு அமைக்கப்பட்ட அடுப்பை மூட்டி, அதில் ஒரு சட்டியை வைத்து அதில் நீருடன் சில தானியங்களை போட்டு கூடவே அவர்கள் வைத்திருந்த சில மசாலாக்களை போட்டு கொதிக்க வைத்துகொண்டிருன்தனர்.

அதில் ஒரு பெண் அருகிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் சமையலுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு போன்றவற்றை கேட்ட்க என் அம்மாவும் அவர்களிடம் என்ன சமையல் என வினவ அந்த பெண் சொன்ன உணவின் பெயரைகேட்டு நாங்கள் எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தோம்.

அப்படி என்ன பெயர் ?

"கிளி பிரியாணி"

கிளி பிரியாணியா?  எப்படி செய்வீர்கள்?

அதற்க்கு அந்த பெண் சொன்ன பதில், அவரின் வீட்டுக்காரர் கிளி வேட்டைக்கு உண்டிவில்லுடன் சென்றிருப்பதாகவும் அவர் வந்த உடன் தானியங்களுடன் கொதிக்கும் அந்த தண்ணீரில் கிளியை தோலுரித்து  வெட்டி வேகவைத்து, ஏற்க்கனவே கைவசம் இருக்கும் மாங்காயையும் நசுக்கிபோட்டு கொஞ்சம் நேரம் வேகவைத்து உப்புபோட்டு  இறக்கினால் கிளி பிரியாணி தயார், இதை அப்படியே சாப்பிடலாம் என்று சாதாரணமாக ஒரு கைதேர்ந்த சமையல் நிபுணர் போல்  சொல்ல எங்கள் வீடு மட்டுமல்லாது எங்கள் பெரியப்பா, எங்கள் அத்தை மற்றும் அண்டை வீட்டினர் எல்லோரும் அந்த திறந்தவெளி சமையல் அறையில் கூடி விட்டோம்.  

இப்படி தமது இனத்து மக்களை தவிர வேறு யாரோவெல்லாம் கூடி நிற்பதை பார்த்த மற்ற கூட்டத்தினரும் இப்போது அந்த அடுப்பை சுற்றி கூடி விட்டனர்.

அந்த நேரம் பார்த்து, இரண்டு உயிரற்ற கிளிகளுடன் வந்து சேர்ந்த அந்த பெண்மணியின் வீட்டுக்காரர், மடமட வென்று, அந்த கிளிகளின் தோலை கண்ணிமைக்கும் நேரத்தில் உரித்து, அவற்றை தான் வைத்திருந்த ஒரு சிறிய கத்தியால் துண்டுகளாக வெட்டி தன் மனைவியிடம் கொடுக்க கொஞ்சம் நேரத்திற்கு முன் கொஞ்சி பறந்துகொண்டிருந்த அந்த சிகப்பு மூக்கு பச்சை கிளிகள் இப்போது கொதிக்கும் மசாலா கலவைக்குள் கலந்து வேக ஆரம்பித்தன.

ஆவலுடன் நாங்கள் அனைவரும் பார்த்துகொண்டிருக்க அந்த பெண் மணி அவரது கணவனிடம் ஏதொ சொல்ல விருட்டென எழுந்த அந்த கணவன் தன் உண்டிவில்லெடுத்து அதில் அருகிலிருந்த ஒரு சிறு கல்லை வைத்து , எந்த புளியமரத்தடியில் சமையல் நடந்து கொண்டிருந்ததோ, அதே புளியமர கிளையை குறிபார்த்து  விசையோடு அடித்ததும் கொத்தாக விழுந்தது சில பிஞ்சு புளியங்காய்கள்.

அவற்றை மனைவியிடம்  கொடுக்க அங்கே சிதறி கிடந்த கொஞ்சம் பெரிய அளவிலான இரண்டு கற்களின்  துணையுடன் அந்த புளியங்காய்களை நசுக்கி கொதிக்கும் பாத்திரத்தில் போட்டு கலக்கி , அடுப்பை விட்டு எடுத்து தன் கணவனுக்கும் மூன்று பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக்கொண்டே கூடியிருந்த எங்களுக்கும் சுவைக்காக ஒரு மந்தார இலையில் வைத்து கொடுத்தார் - அதில் ஒரு கிளியின் தலை அலகுடன்(!!)

அந்த பெருந்தன்மையை பாராட்டிவிட்டு, பரவாயில்லை வேண்டாம் என சொல்லி விட்டு அவரவர் வீட்டுக்கு திரும்பினோம், எனினும் இரவெல்லாம் அந்த கிளி பிரியாணியின் கதைதான் எங்கள் எல்லோர் வாய்களும் மென்றுகொண்டிருந்தன..

இப்படி அந்த நரிகுறவர்கள் தங்கி இருந்த அந்த பத்து நாட்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்த நாட்களாக இருந்ததை இன்றும் அவ்வப்போது நினைத்து நெஞ்சில் அசைபோடுவேன்.

அவர்கள் அன்று செய்த கிளி பிரியாணியின் சமையலுக்கு பயன்படுத்திய - "தேவையான பொருட்களை" இன்று நினைத்துபார்த்தால் அந்த உணவிற்கு பெயர் இப்படியாக இருந்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

அப்படி என்ன பொருத்தமான பெயர்?

கிளி+மாங்காய்+சோறு= கிளிமாஞ்சோறு  

புளியங்காய்கூட  போட்டதா சொன்னீர்களே , சரி அப்போ "கிளிபுளிமாஞ்சோறு"

அடுத்தடுத்த வருடங்களில் வேறு வேறு கூட்டத்தினர் வந்ததும் அவர்களோடு நிகழ்ந்த வேறு வேறு விஷயங்களும் பின்னாளில் சந்தர்ப்பம் வாய்த்தால் சொல்கிறேன். 

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

19 கருத்துகள்:

  1. "குறத்தி வாடி என் குப்பி .. இந்த கூடத்தில் நீ பிறந்தாய் தப்பி" என்ற பாடலை கேட்க்கும் போதெல்லாம் அவள் இங்கே சரியாக தான் பிறந்து இருகின்றாள், தவறாக இல்லை என்று நான் நினைத்தது உண்டு. இந்த சம்மூகத்தினரிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் அநேகம் உண்டது. நாளையை பற்றி கவலைபடாமல் நாட்களை கழிக்க கூடியவர்கள்.
    நல்ல பதிவு, நண்பரே... "கிளிமாஞ்சோரு படு ஜோரு "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா,

      அவர்களின் வாழ்க்கை முறையில் உள்ள பல மேன்மையான பண்புகளும் நடைமுறையும் கட்டாயம் போற்றப்பட வேண்டியவைதான்.

      கோ

      நீக்கு
  2. ஐயோ... சாமி...! மக்கள் எதையும் விடுவதாக இல்லை போல... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  3. "கிளிமாஞ்சோறோ" "கிளி பிரியாணி" சமைப்பது
    நாங்கலும் உங்கலோடு சேற்ந்து பார்த்த அனுபவம்.
    தங்கலது எழுத்து கொடுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

      திருப்பதியில் கிளி பிரியாணி கிடைக்குமா?

      கோ

      நீக்கு
  4. Enthiran has been shot in Machu Pichu, Peru not is Kilimanjaro, Africa. The song starts as Kilimanjaro only.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for letting me know about the incorrectly pronounced fact, which has now been corrected.

      Please revisit the article and post your valuable comments.

      Once again thanks ever so much for your time taken to write to me.

      Ko

      நீக்கு
  5. வணக்கம், பசு தோல் போர்த்தாத அரசனே,
    எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, சாப்பிட்ட கிளி பிரியாணி எப்படி என்று சொல்லவில்லையே, கோ, கிளிபிரியாணி தான் தங்களை இப்படி எல்லாம் எழுத சொல்கிறதா? நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி.

      அழகோடு காட்ச்சிதந்த கிளி பிரியாணியில் அலகோடு காட்சிதந்த கிளியின் தலையை கண்டதும் தலை தெறிக்க ஓடி வந்ததினால் ருசிபார்க்கும் வாய்ப்பை இழந்தேன். ஒருவேளை சாப்பிட்டு இருந்தால் கொஞ்சம் சுமாராக எழுத பேச கற்று கொண்டிருந்திருப்பேன் , உங்கள் போன்றோரோடு மல்லு கட்ட.

      அடுத்தமுறை கிளிபிரியாணி கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன், கிளிபோல பறந்து வாருங்கள், எந்த வேடனிடமும் சிக்காமல்.

      கோ

      நீக்கு
  6. தனப்பால்

    வருகைக்கு மிக்க நன்றி.

    வீட்டுப்பக்கம் ஏதேனும் கிளிகள் உள்ளனவா? ஜாக்கிரதை.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி சார் கிளி இருந்தால் சொல்லுங்கள், அவர் நல்லா சமைப்பார்.

      நீக்கு
    2. ஆமாம் DD யை ஏன் கிளி பார்க்க சொல்றீங்க, உங்க ஊர்ல இருந்ததெல்லாம் ஏற்கெனவே பிரியாணி பண்ணிட்டீங்களா?
      நான் நல்லா சமைப்பேன் என்று உங்க ஊர் புளியமரத்தடி கிளி ஜோசியர் சொன்னாரா?

      கோ

      நீக்கு
  7. சுவை எப்படி?

    உங்கள் தனிமரத்திலும் கிளிகள் இருக்குமே?

    கோ

    பதிலளிநீக்கு
  8. மிகவும் ரசித்தது - ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகம் உள்ளடக்கியவைகளின் வருணனை - மரங்கள், கிணறுகள் நிலங்கள்.. ஆஹா அருமை. ஏன்னென்றால் நானும் அதற்கொத்த வளாகத்தில் நண்பர்களுடன் வுலாவிய விளையாடிய நேரங்களை நினைவுபடுத்தியது.

    அது ஒரு அழகிய நிலாக்காலம்! ஆம் சூரியனின் வெப்பம் நிலவைவிட குளிர்ச்சியாய் உணர்ந்த அப்பருவத்தில்...


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவு உங்கள் கடந்த கால நினைவுகளை ஞாபக படுத்தியதை கவிதைபோல் அழகாக சொல்லிய விதம் மிக அருமை.

      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு