பின்பற்றுபவர்கள்

சனி, 13 ஜூன், 2015

"நல்ல திருடன்?"திருடர்கள் ஜாக்கிரதை!!

திருட்டு என்றாலே அது கீழ்த்தரமான சமூக விரோத  செயல் என்பதும் திருடன் என்பவன் இழிவானவன்  தண்டனைக்குறியவன் என்று அறிந்திருக்கும் நமக்கு,
திருடனில் "நல்ல திருடன்" என்னும் சொற்றொடரே கொஞ்சம் கேட்பதற்கு விந்தையாகவும் விநோதமாகவும் உள்ளது.

இப்போதிருக்கும் சமூக சூழலில் யாரையுமே முழுமையாக நம்ப முடியவில்லை என்ற ஆதங்கமும் ஒருவரை ஒருவர் மாறி மாறி அவன் திருடன் என்று அடையாளபடுத்தி மற்றவர்கள் சொல்லுவதை கேட்க்கும்போதும் நமது கண்களையும் செவிகளையும்  நம்மாலே நம்பமுடியவில்லை. 

இங்கே, தெரிந்தவர் ஒருவரோடு,   பேசிகொண்டிருக்கையில், ஊரிலுள்ள தமது நிலத்தை விற்பதற்காக அங்கே இருக்கும் அவருக்கு தெரிந்த ஒருவரை (பசுபதி) தொடர்புகொண்டு, விற்பனைக்கு உதவும்படி கூறி இருந்ததாக சொன்னார்.

அந்த நபரும் சரி அதற்கென்ன, கண்டிப்பாக ஏற்பாடு செய்கின்றேன் என வாக்களித்து, சில நாட்களில் அவர் அணுகிய ஓரிரு ஆட்களை பற்றியும்  அவர்களது மதிப்பீட்டையும் பற்றியும் இவருக்கு தெரிவித்தாராம்.

விலை சாதகமாக இல்லையே, வேண்டுமென்றால் அங்கே இருக்கும் .. திரு.ராஜாராம் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் என கூற, அவரோ " போயும்போயும் யார்கிட்ட சொல்ல சொல்றீங்க பாருங்க" என சொல்லி இருக்கின்றார்.

ஏன் அவரிடம் சொன்னால் என்ன?

"அவன் ஒரு திருடன் அவன்கிட்ட போய் சொல்ல சொல்றீங்களே" என சொல்லியதை கேட்ட நண்பருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்ததாம்.

ஏனென்றால்,  இவரை பொறுத்த வரையில்  இவர் பார்வையில், இவர் அறிந்த வகையில் ராஜாராம் நல்லவராகத்தானே இருந்தார், பின்னே ஏன் அவரை இவர் திருடன் என்று சொல்கின்றார்.

ஒருவேளை காலத்தின் கட்டாயத்தால், நெறி தவறி வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாரோ என நண்பர் நினைத்தாராம்.

இந்த  உரையாடலுக்கு பிறகு இரண்டொரு நாட்களில் ஊரிலுள்ள தமது பால்ய நண்பனை  அழைத்து நில விற்பனையில்  யாருடைய உதவியை  நாடலாம் என யோசனை கேட்டாராம்.

அதற்கு தம் நண்பர்  சொன்ன நபரின் பெயர் ஏற்கனவே திரு பசுபதியால் "திருடன்" என வர்ணிக்க பட்ட திரு.ராஜாராம்.

மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான இவர் தமது நண்பனிடம், திரு.ராஜாராம் அவர்களை குறித்து நல்ல அபிப்பிராயம் ஊரில் இருப்பதாக தெரியவில்லையே எனகூறி தாம் திரு பசுபதி மூலம் அறிந்த விஷயத்தை நண்பரிடம் சொன்னாராம்.

அதற்கு இவரின் நண்பர் சொன்னாராம், "பசுபதியா சொன்னார், அவன் ஒரு திருடனாச்சே",

தலை சுற்றி போன நமது நண்பர் சரி இப்போதைக்கு நிலத்தை விற்கும் முடிவை மாற்றிகொண்டாராம்.  யாரைத்தான் நம்புவது என்று.

இப்படித்தான், பல ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவரோடு நகைக்கடைக்கு சென்றிருந்தேன், அப்போது நான் அணிந்திருந்த நவரத்தின மோதிரத்தை பார்த்த நகைக்கடைக்காரர்," மோதிரம் எங்கே வாங்கினீர்கள்"? என்று கேட்டார்,

நானும் அதே ஊரில் உள்ள  ஒரு பிரபலமான கடையின் பெயரை சொல்லி அங்கே தான் ஆர்டர் செய்து வாங்கினேன் என்றேன்.

உடனே அந்த மோதிரத்தை கொஞ்சம் கழற்றி கொடுங்கள் என கேட்டு கண்ணில் ஒரு சிறப்பு உரு பெருக்கி சாதனம் பொருத்தி கொண்டு உற்று உற்று பார்த்துவிட்டு,

ம்ம்ம்ம்ம்ம்....என்று ஒரு ஈன குரல் எழுப்பி உதட்டில் ஒரு நமட்டு சிரிப்புடன்   இந்தாங்க என்று திருப்பி கொடுத்தார்.


எல்லா நவரத்தினங்களையும் பிரத்தியேகமாக தருவித்து  பொருத்தியதாக சொல்லி பெரும் தொகை பெற்று கொண்டு கொடுத்த இந்த மோதிரத்தில் ஏதோ குறை இருப்பதாக அந்த கடைகாரரின் ஏளன சிரிப்பு எனக்கு அர்த்தம் சொன்னது.

திடுக்கிட்ட நான் , என்ன... ஏன்.... இந்த மோதிரத்தில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா? என கேட்டேன்.

அதற்கு அந்த கடைகாரர்,  "ம்ம்ம்ம்..... இதில் பதிக்கபட்டுள்ள  முத்து, பவளம்,புஷ்பராகம்  தவிர ஏனைய ஆறு  கற்களும் தரமானவை அல்ல என்றும் அதற்கு நான் கொடுத்த விலை மிகவும் அதிகம் என்றும் நம்மகிட்ட வந்திருந்தீர்களானால் எல்லாம் ஒரிஜினலாக இருந்திருக்கும் விலையும் ஞாயமானதாக இருந்திருக்கும் என   கூற எனக்கு பெருத்த ஏமாற்றமாகிபோனது.

சரி இதை வாங்கின கடையிலேயே கொண்டு சென்று திருப்பி கொடுத்துவிடலாம் என்று எண்ணி உடனிருந்த நண்பரிடம் சொல்ல அவரோ, " எதற்கும் வேறொரு கடையில் சென்று தரம் பரிசோதித்துவிட்டு முடிவெடுக்கலாம்" என்று யோசனை சொன்னார்.  

அதுவும் நல்ல யோசனையாக  இருக்கவே நகரிலுள்ள வேறொரு பிரபல கடைக்கு சென்று இந்த மோதிரத்தின்  தரம் பரிசோதித்து தரும்படி கூற , அந்த கடை காரரும், ஒரு சிறப்பு உருபெருக்கி கொண்டு உன்னிப்பாக பார்த்து , எல்லா கற்களும் தரமான ஒரிஜினல் கற்கள்தான் , எனினும் அந்த வைரத்தின் தன்மை மட்டும் இன்னும் கொஞ்சம் தரம் கூடுதலாக இருந்திருக்கலாம் என கூறி நீங்கள் சொல்லும் விலை ஏறக்குறைய ஞாயமான விலைதான் என கூறி மனதில் பாலை வார்த்தார்.

அப்படியானால் இதற்கு முன் வாங்கி பார்த்த கடைகாரர் ஏன் அப்படி சொன்னார்?

ஆர்வ மிகுதியால், இந்த கடைகாரரிடம் , கடைபேர் சொல்லாமல், இதற்கு முன் வேறொருவர் பார்த்து இந்த கற்கள் பழுதானவை என்று சொன்னாரே என கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் உண்மையிலேயே என்னை மிகவும் உலுக்கியது.

அதாவது" சார்.. இந்த உலகத்திலே பெரும்பாலோர் திருடர்களே, இதில் நல்ல திருடன் யார் என்று இனம் கண்டு நமது வாழ்க்கையை தொடரனுமே தவிர யாரையும் முழுக்க முழுக்க நல்லவன் என்று நினைத்து ஏமாற கூடாது" என்று பதிலளித்தார். 

சரிதானா?

மோதிரம் விற்றவர், எல்லாம் தரமானவை என்றார், அடுத்தவர் முக்கால் வாசி பழுது என்றார், மூன்றாமவர், ஒரு கல் மட்டும் கொஞ்சம் தரம் குறைவு என்றார், நல்ல வேளை நான் நான்காம் கடையை நாடாமல்   நடையை கட்டினேன் வீட்டுக்கு.

நண்பர்களே, யாரைத்தான் நம்புவதோ.. கொஞ்சம் நல்ல திருடன் யார் என்று பார்த்து சொல்லுங்கள் என் நண்பரின் நிலத்தை விற்க உதவியாக  இருக்கும்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

பின் குறிப்பு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.


8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தனப்பால்,

   வருகைக்கும் அடையாளபடுத்திகொண்டமைக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 2. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது...இப்பையே போனால் இன்னும் சில வருடங்களில் நாம் மனிதர்களை நம்புவதையே துறந்து ரோபோக்களாகி இல்லை என்றால் நம்பிக்கையின்மை வந்து மன நிலை பாதிப்புக்குள்ளாகிவிடும் நிலமை வந்துவிடுமோ நண்பரே!? ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் போகும் நிலை?
  நல்லதொரு பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை நம்பலாம் என்று திண்டுக்கல் தனப்பாலன் சொல்லி இருப்பது ஆறுதல் அளிக்கின்றது. திண்டுக்கல்லில் எப்போதும் மழை பெய்யுமா?

   வருகைக்கு நன்றி.

   கோ

   நீக்கு
 3. நீங்கள் சொல்லி இருக்கும் நகைக் கடை மட்டுமல்ல இன்னும் பல கடைகளில் வாங்கும் பொருட்களை இப்படித்தான் சொல்லுகின்றார்கள்.

  சரி பொருட்களாவது பரவாயில்லை...ஒரு மருத்துவரின் டயக்னாசிசை மற்றொரு மருத்துவர் ஏற்பதில்லையே! இது இன்னும் மோசம் அல்லவா? உயிரோடு விளையாடுவது அல்லவா? எந்த மருத்துவர் நல்ல மருத்துவர்?!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்கவே திகிலாக இருக்கின்றது.

   வருகைக்கு நன்றி,

   கோ

   நீக்கு
 4. யாரைத்தான் நம்புவதோ ,,,,,,,,,,,,,,
  உண்மைதான் இன்று இப்படி தான் , விளம்பரங்கள் பாதி,
  அருமையான பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 5. ஆகாங்கே ஒரு சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர், உதாரணத்துக்கு , உங்களை (?????)போன்றவர்களும்.

  வருகைக்கு

  நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு