பின்பற்றுபவர்கள்

திங்கள், 9 பிப்ரவரி, 2015

"தமிழ் வந்த கதை -மந்திர காண்டம்"


.அமுதென்று பேர்


தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க தமிழ் வந்த கதை இங்கே சொடுக்கவும்.

பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு பல வருடங்கள் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு, பயிற்சி பட்ட படிப்பு, துறை சார்ந்த கூடுதல் தகுதி படிப்புகள் போன்ற பல படிப்புகளில்  ஈடுபட்டிருந்தாலும் தமிழ் படிப்பதென்பது  பன்னிரெண்டாம் வகுப்போடு முற்று பெற்றது.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை எனக்கு தமிழ் சொல்லிகொடுத்த பல அறிஞர்களை நான் நன்றியோடு நினைத்துபார்க்கின்றவேளையில், நமது எல்லோருக்கும் ஏதேனும் ஒருவகையில் ஓரிரு ஆசிரியர்களே  மிகவும் பிடித்த- மனதை கவர்ந்த ஆசிரியர்களாக இருக்க கூடும். அவ்வகையில்....

ஒரு தமிழாசிரியர் , வகுப்புக்கு உள்ளே நுழைந்தால், அவர் அந்த வகுப்பு முடியும் வரை அனைத்து மாணவர்களையும் தமது பாடம் நடத்தும் யுக்தியால்  மகுடிக்கு மயங்கும் பாம்புகள் போல  மயங்கவைப்பார்.

திருக்குறளை நடத்தினார் என்றால் அவர் வகுப்பு முடியும் போது  அவர் அன்றைக்கு நடத்திய அந்த குறிப்பிட்ட அதிகாரத்தில் உள்ள அத்தனை குறள்களும் வகுப்பிலிருந்த  அத்தனை மாணவர்களுக்கும்  மனப்பாடம் ஆகி இருக்கும்.

அது எப்படி சாத்தியமாயிற்று?

அங்கே தான் அவரின் பாடம் நடத்தும் விதம் மிளிரும்.

திருக்குறள் என்பது ஒரு (வகையில்) மரபு கவிதைதானே.

அதில் எதுகையும் மோனையும் உண்டல்லவா, அவற்றை சொல்லும்போதே அதற்குண்டான ஏற்ற இரகங்களுடனும் எந்தெந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து வாசிக்க வேண்டுமோ அந்தந்த இடங்களில் அதற்குண்டான அழுத்தத்தோடு வாசித்து காண்பிப்பார்.

உதாரணத்துக்கு....  ஏழு வார்த்தைகளை கொண்ட திருக்குறளின் முதல் நான்கு வார்த்தைகளடங்கிய வரியை ஒரு தொனியிலும் அதற்கு அடுத்த வரியில் உள்ள ஐந்தாவது  வார்த்தையை வேறு தொனியிலும் பின்னர் எஞ்சிய இரண்டு வார்த்தைகளை முதல் வரியை உச்சரித்த தொனியிலும் வாசித்துகாட்டுவார்.

அப்படியானால் முதல் வரியின் முதல் வார்த்தையும் இரண்டாம் வரியின் முதல் வார்த்தையும் ஒன்றுக்கொன்று ஓசையில் சம்பந்தபட்டிருப்பதை எளிதாக உணர்த்தி காட்டி திருக்குறளை நடத்துவார்.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்;அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு."

இதில் முதல் வார்த்தை "அன்பி"  ஐந்தாவது வார்த்தை முதல் வார்த்தையினோடு சம்பந்தப்பட்ட ஓசையுடைய "என்பு" எனவே ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு சீர்களும், அந்த அதிகாரத்திலுள்ள பத்து குறள்களும் எல்லா மாணவர்களுக்கும்  அத்துப்படி எனவே தமிழிலில் ஆர்வம் உயர்ந்தது பத்துப்படி.

பிறகு,

"எடும்/ எடும்/ எடுமென /எடுத்ததோர்/ இகலொலி/  கடலொலி/ இகக்கவே
விடும்/ விடும்/ விடுமென /கரிக்குழாம்/  விடுவிடுமெனும்/ ஒலி /மிகைக்கவே.
செறிவரு...." 

இப்படியாக ஜெயங்கொண்டான் எழுதிய கலிங்கத்து பரணியை அவர் நடத்தும் போது, யானை படைகளும், குதிரை படைகளும், காலாட்படைகளும், அம்பும், ஈட்டியும், வேலும், வில்லும், புழுதியும் , சில நேரங்களில் எதிரியின் உடலிலிருந்து வழியும் குருதியின் வாசனையை கூட நாங்கள் உணரும் வகையில் அத்துணை வேகத்தோடும், ஆவேசத்துடனும், உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அதே சமயத்தில் கவிதை  வரிகள் எங்கள் மனதில் வரிவரியாய் தழும்புகளாக தடம் பதியும் வண்ணம் அவர் நடத்தும் அந்த பாங்கை எண்ணி எண்ணி இன்றும் வியக்கின்றேன்.

விதி வசத்தால், அரசனான கணவனை பிரிந்து, அரண்மனை வாழ்வை இழந்து, தும்மல் வந்தாலும் துடித்துபோய் சேவை செய்த ஏவலாளிகளின் பராமரிப்பு இழந்து, பால் வேண்டாம், பழம் வேண்டாம், தேன் வேண்டாம், என சலித்துக்கொண்டாலும் வற்புறுத்தி கிட்டத்தட்ட வாயிலேயே ஊட்டி விட்டு, சாமரம் வீசி துயில செய்த பணிப்பெண்களின் பராமரிப்பை இழந்து, தவமாய் தவமிருந்து, தான் பெற்ற , அரசிளங்  குமரனை, அவனின் பிறப்பின் அந்தஸ்த்தை அவனுக்கு எடுத்துகூற ஒரு முகாந்தரமும் அற்ற நிலையில், ஒரு வேளை  உணவிற்காக தன்னையும் தனது பச்சிளம் பாலகனையும் அடிமைகளாக அமர்த்தி வேலைவாங்கும் அந்தணனின் வீட்டிலே , வெட்க்கி, தலைகுனிந்து வேதனையில் வாழ்ந்துவரும் அவளின் தனயனை தர்பை புல் அறுத்துவர காட்டுக்கு அனுப்புகின்றான் விலைக்கு வாங்கிய அந்த அந்தணன்.


எவ்வளோ சொல்லி தடுக்க பார்த்த அவளின் கூக்குரல் அம்பலம் ஏறகூடுமோ?

காலையில் காட்டுக்கு சென்றவன், மாலையாகியும் வீடு திரும்பவில்லை பகலவனும் வீடு திரும்பிவிட்டான் தன் பாலகன் மட்டும் திரும்பவில்லையே,  அந்தணனிடம் அனுமதி பெற்று காட்டை நோக்கி ஓட்டம் எடுத்தாள்  அவள்.

காலை தன் மகனோடு காட்டுக்கு சென்ற மற்ற சிறுவர்கள் எதிரில் வருவதை கண்டு அந்த கூட்டத்தில் தன் மகனை தேடும் அவளுக்கு அந்த "கருப்பு" செய்தி காதில் பாய்ந்தது காய்ச்சிய இரும்பென. 

 தர்பை புல்லறுக்க சென்றவன்  அரவம் தீண்டி மரித்தனன் என கேட்டு தன் கர்ப்பப்பையில் யாரோ கடபாரையில் குத்துவதை உணர்ந்தவள், காலை முதல் இப்போதுவரை அன்னம் , ஜலம் அருந்தாமல்  பசியோடு அருந்தவ புதல்வனின் வருகைக்காய் காத்திருந்ததால் உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளம் சோர்ந்த நிலையிலும் கண்கள் நீர்சொரிய அந்த கானகத்தை நோக்கி அவள் ஓட்டமும் நடையுமாக போகின்ற வேளையிலே, அவளின் ஒவ்வொரு அடியும் அந்த கானக சதுப்பு மண்ணில் ஒவ்வொரு குழியாக வடிவம் பெற அவளின் கண்ணீர் அந்த குழிகளில் நிரம்பி வழிவதாக அமைந்த அந்த காட்சியின் மீட்சிதான்  .....

" ஆறெலாம் அடிகள் வைத்த அடி எல்லாம் விழிநீர்......." எனும் சந்திரமதி புலம்பல் பகுதியி வரும் வரிகள்.

பாடம் நடத்தும்போது, நாங்கள் எல்லோருமே, சந்திரமதிபோலும், நாங்கள் எல்லோரும் லோகிதாசனை போலும் நாங்கள் எல்லோருமே அந்த கானகத்திற்கு பயணம் மேற்கொள்வதுபோலும் உணரத்தக்க வகையிலே அந்த பாடலுக்கு, அந்த சூழலுக்கு ஏற்றார்போல ஒரு மெட்டமைத்து , ஏற்ற இறக்கங்களோடு, குரல் தழுதழுக்க பாடி நடத்தி முடிக்க மாணவர்கள் எல்லோரின் கண்களிலும் சந்திரமதியின் கண்ணீர் அளவுக்கு நிகராக கோர்த்திருக்கும் கண்ணீரோடு  , இடைவேளை நேரத்திற்கான மணி அடித்ததும் மீண்டும் வகுப்புக்கு வர அடித்த மணியின் ஓசையும் கூட எங்கள் காதுகளில் விழ தவறிவிடும் வகையில் அந்த ஆசிரியர் எங்களுக்கு  பாடம் நடத்திய பாங்கை எண்ணி இன்றும் உள்ளம் சிலிர்க்கின்றேன்.

அதே போல சிவ பக்த்தனான வேடவர் குல திண்ணப்பன் , இறைவனின் மேலிருந்த அளப்பரிய பக்தியின் மிகுதியால், அன்றலர்ந்த மலர்களால் சிவ லிங்கத்தை அலங்கரித்து, அன்று வேட்டையாடப்பட்ட விலங்குகளின் எந்த மாமிசம் ருசி மிகுந்திருக்கின்றது என அறிய அதை  தான் கடித்து தெரிந்துகொண்டு அந்த கடிபட்ட மாமிசத்தை கடவுளுக்கு படைத்து மகிழ,


இந்த பக்த்தனின் பக்த்தியை சோதிக்கும் பொருட்டு தமது ஒவ்வொரு கண்ணாக இறைவன் இழப்பதாக காட்டி அதற்கு பக்த்தனின் மறு செயல் (reaction) என்னவாயிருக்கும் என சோதிக்க முற்பட்ட இறைவனுக்கே வியப்பளிக்கும் வண்ணம் தமது கண்களை ஒவ்வொன்றாக பிடுங்கி இறைவனுக்கே  "கண் தானம்" செய்த திண்ணப்பன், கண்ணப்பனாக மாறிய கதையை பாடமாக நடத்தும்போது, வகுப்பறையில், அன்றலர்ந்த மலர்களின் வாசம் வீசும், மாமிசத்தின் வாடை வீசும், எங்கள் கண்களை நாங்கள் பிடுங்கி இறைவனுக்கு செலுத்துவதாக உணர்வோம், அப்படி இருக்கும் அவர் பாடம் நடத்து முறைமை.

இன்னும் தொடராதா இவரின் வகுப்பு என நினைக்கும்போது மணி அடிக்கும்,மனம் துடிக்கும்,

 மீண்டும் அடுத்த நாள் எப்போது வருமென காக்கவைத்த "மந்திர நாட்கள்" அவை.

அடுத்த நாள் வரை நாமும் தான் காத்திருப்போமே.

தொடர்ச்சியை பிறகு பார்க்கலாமே...

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


"தமிழ் வந்த கதை".

தமிழ் வெல்க!!

நண்பர்களே,

எம்மை இழுத்துவந்து, அறிமுகபடுத்தி  முகப்பை திறந்துவிட்ட- இந்த விசாலமான வலைதலத்தினூடாக  கடந்த ஐந்து மாதங்களாக சுமார் 56 பதிவுகள் எழுதி அதை பண்பட்ட - அறிவார்ந்த சக பதிவாளர்கள் மற்றும் வாசகநண்பர்களின் சமூகவானில் நிலாவென  உலாவர செய்த

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

" தமிழன் அன்றும் இன்றும்".

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எழுதப்பட்ட வரிகளில் சில இங்கே.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கமர்கட்டு - செம மார்கட்டு

 ஞானஸ்நானம்!!!

நண்பர்களே,

இங்கே  அலுவலக சக ஊழியர்கள், தங்களது விடுமுறையில் எங்கேனும் வெளி ஊர்களுக்கோ அல்லது வெளி நாடுகளுக்கோ   சென்று மீண்டும் வேலைக்கு திரும்பும் அன்று

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வைதேகி காத்திருப்பாள் -பாகம் - 3

காலம் கனிந்தது!!!!!

தொடர்கிறது....

முதலில் இருந்து படிக்க  இங்கே சொடுக்கவும். வைதேகி காத்திருப்பாள்.

 "இன்னொருமுறை..."

திங்கள், 2 பிப்ரவரி, 2015

வைதேகி காத்திருப்பாள் - பாகம் 2

மனம் திறந்தது மலர் தூவியது.

தொடர்கிறது....முதலில் இருந்து படிக்க  இங்கே சொடுக்கவும். வைதேகி பாகம் 1

"சார்... பிளீஸ் .. நான் சொல்லவந்தது......, எப்படி சொல்றதுன்னு ... தெறி...."

"மிஸ் ரமணன் ..சொல்லுங்க தயங்காம."

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

வைதேகி காத்திருப்பாள்!!

                                                                         உயர் உள்ளல் 

சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

சென்னை பேசின்  பிரிட்ஜில்   உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்று, அதே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணணி அறிவியலில் பட்டம் பெற்று,