பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 நவம்பர், 2023

கருப்பு - சாம்பல் - வெளுப்பு !

எல்லாமே  சிறப்பு  !!

நண்பர்களே,

அடடா... இது என்ன முன்னந்தலையில்  ஒரு ஏழு எட்டு  முடிகள் வெளிறிய சாம்பல் நிறத்தில், யாராவது பார்த்தல் என்ன நினைப்பார்கள்?

கண்ணாடியில் இன்றுகாலை முகம் பார்த்து தலைசீவிய போதுகூட தெரியவில்லையே.

இப்போது  செல்பேசியில் எடுத்த செல்பி படத்தை விரித்துப்பார்க்கும்போது இப்படி தெரிகிறதே.

ஒருவேளை அழுக்காக இருக்குமோ?

அப்படி இருக்க வாய்ப்பில்லையே.

இன்று காலையில்கூட,  சுத்தமான செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணையில் சிறிது நேரம் தலைமுடியை ஊரவைத்து பின்னர் கிராமத்தில் இருந்து நண்பர் அனுப்பிவைத்த சீகைக்காய் தூள் தேய்த்து நன்றாக கழுவி சுத்தப்படுத்தி குளித்தேனே,  நோ.. நோ... நோ.... அழுக்காக இருப்பதற்கு அறவே வாய்ப்பில்லை.

 ஒருவேளை வயதாகிவிட்டதென்பதை விவரிக்கும் விலாச பிரதிபலிப்போ?

இருக்காது, நமக்கு அப்படி என்ன  வயதாகிவிட்டிருக்கும்?

இப்போதுதான் பால்குடி மறந்து, பள்ளி முடித்து, கல்லூரி முடித்து, வேலையில் சேர்ந்து, திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களுக்கும்  திருமணங்கள் செய்துவைத்து அவர்களது வயிற்று பேரப்பிள்ளைகள் இருவரின்  பட்டமளிப்பு நிகழ்ச்சிகளில்   கலந்துகொண்டு  அவர்களோடு சேர்ந்து  சினிமா, ஓட்டல், பீச், பார்க்  என ஒய்யாரமாய் வலம் வரும்    எனக்கு எப்படி வயதாகிவிட்டிருக்கும்  இந்த வெள்ளை முடிகள்  விவரம் சொல்ல?

ஒருவேளை, ஊட்டச்சத்து குறைபாடாக இருக்குமோ?

அதற்கும் வாய்ப்பில்லையென்றே நினைக்கின்றேன்.

நான்  தான் தினமும் பால் தயிர்  மோர் பருப்பு பச்சை காய்கறிகள்  அரிசி சோறு , கம்பஞ்சோறு , கேழ்வரகு போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேனே?

கடிப்பதற்கு முடியாததால் எல்லாவற்றையும் குழைய குழைய வேகவைத்தும் சில நேரங்களில் மத்துப்போட்டு கடைந்தும்  அல்லவா சாப்பிடுகிறேன்; எனவே ஊட்டச்சத்து குறைவானதால் இந்த நரை திரைவிலக்கி காட்டுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை.

ஒருவேளை உடல்கூறு சாஸ்திரம் கூறும்  வளர் சிதை  மாற்றத்தினால் ஏற்படும் மாற்றமாக இருக்குமோ? இன்னும் வளரவே இல்லை அதற்குள் சிதைவு எங்கனம் சாத்தியம்?

அல்லது இப்படி இருக்குமோ?

இப்போதெல்லாம் நானே ராஜா நானே மந்திரி என்று என் மந்திரி மனைவி மறைந்து பல காலமானபோதும் இன்னமும் என் படுக்கை அரை மேசையில் புன்னகை மாறாமல் என்னை கவனித்துக்கொண்டிருக்கும் அவள் நினைவு அவ்வப்போது தலை தூக்கும்போதெல்லாம் கலங்கும் என் கண்களின் சோகக்  கீற்று  கரை தாண்டி தலைக்கேறி என் முடியில் முடி சூட்டிக்கொண்டதோ? 

அப்படியும் இருக்காது சோகத்திற்கேது இடம் என்னிடம்? (please அந்த கைக்குட்டையை கொஞ்சம் எடுத்து கொடுங்கள்.)

அவள் மகிழ் நினைவு என்னோடு ஐக்கியபட்டுபோனதால் என் முடி பட்டுப்போகவும் வெள்ளை நிறம் அதை தொட்டுப்போகவும் கண்டிப்பாக வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பில்லை.

அப்படி இருக்க இப்போது தென்படும் அந்த சில சாம்பல் கலந்த  வெள்ளை நிற முடிகளின் தோற்றம் எதனால்.?

நினைவுகளின் பயணத்தை யாரோ வெளியிலிருந்து  கதவு தட்டும் சத்தம் இடை நிறுத்த , யார் என்று பார்த்தேன்.

ஓ... வாங்க,  வாங்க ... ஆமாம் பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளை அடிக்கணும்னு நான்தான் சொல்லி இருந்தேன், கொஞ்சம் சீக்கிரம் முடித்துக்கொடுங்கள்.  சரி போய் ஏற்பாடு செய்யுங்கள்.

மீண்டும் வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து வீட்டிற்கு வெள்ளை அடிப்பதை பற்றி யோசிக்கையில்தான் நினைவிற்கு வந்தது:

 நேற்று என் பேரனிடம் சொல்லி என் தலைக்கு கருப்பு டை அடிக்க சொன்னதும் , அவன் கவனக்குறைவினாலும் தொலைக்காட்சிப்பெட்டியில் நேரலையில்  ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்த இந்தியா பாக்கிஸ்தான்  கிரிக்கட் ஆட்டத்தின்  ஒளிபரப்பில் கவனம் செலுத்தியதாலும்    என் தலையின் முன் பகுதியில் இருக்கும் இந்த சில முடிகளின்மேல் சரியாக "கரி"பூசாமல் விட்டதும்.

மற்றபடி எனக்கு ஒன்றும் வயசாகவில்லை, சரிதானே.

என்று அவரை சந்திக்க சென்ற என்முன் அவரது முன் தலைமுடியின் முற்றுப்பெறாத  முகப்பூச்சுப்பற்றி முணுமுணுப்பாய்  சொல்லியவர் என் முன்னாள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஸ்ரீனிவாசனார்.

ஆமாம், பலதரப்பட்ட ரசாயன கலவைகள்  சேர்த்து தயாரிக்கப்படும் கருப்பு  பூச்சுக்கள் முடி நலனுக்கும் உடல் நலத்திற்கும் நல்லதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  , உங்கள் ஆலோசனைகள் யாருக்காவது உதவியாக அமையலாம்.  

பி.கு: வாழ்க்கை சுழற்சியில் கருப்பென்ன , வெளுப்பென்ன, மாயமென்ன காயமென்ன, இதயத்தில் இளமை உணர்வு குடியிருக்கும்வரை எந்த நிறம் நம் தலைமுடியில் குடியிருந்தாலும் எல்லாம் சிறப்பே -   எல்லோரும் இளைஞரே இளஞ்சியே எங்கள் பேராசிரியரைப்போல.

நன்றி,

வணக்கம்.

மீண்டும் ச (சி )ந்திப்போம்.

கோ.


6 கருத்துகள்:

 1. பேராசிரியரின் உள்ளம் என்றும் வாழ்க.ஒரு முடிக்கு இவ்வளவு அக்கபோரா............. ஆனாலும் அழகுதான் .அவரின் பெயர்கூட நினைவில் அருமை இப்பவெல்லாம் யார் சீயக்காய் தேய்த்து அலசுவது.எல்லாம் கெமிக்கல் தான். அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் பேராசிரியர். அவரவர் கவலை அவரவர்களுக்கு. ஆம் நீங்கள் சொல்வதுபோல் இப்பொதெல்லாம் கெமிக்கல் தான் எல்லாவற்றிலும்.

   நீக்கு
 2. தலைக்கு சாயம்! :) தலைநகர் வந்ததும் எனக்கு இளநரை ஆரம்பித்து விட்டது - அதுவும் இருபது வயதிற்குள்! இப்போது சால்ட் அண்ட் பெப்பர் தலை! அதிலும் மகள் சொல்கிறார் - பெப்பரை விட சால்ட் அதிகம் என!

  தலைக்கான சாயம் - இது ஒரு தேவையில்லாத ஆணி என்பது எனது எண்ணம்...

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட். தலை நகர் தங்கள் தலைக்கு குறிவைத்தது வருத்தமே. பெப்பரை விட சால்ட் அதிகமாவது உணவில்தான் கூடாது, தலை முடியில் பரவாயில்லை. தேவை இல்லாத ஆணிகளை அடித்துக்கொள்பவர்களுக்கு உங்கள் பின்னூட்டம் சொல்லும் கருத்து தலையில் ஏறுமா?

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. நன்றி தனப்பால் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

   நீக்கு