பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 14 நவம்பர், 2023

பதில் சொல்வார் யாரோ?

 மறை  பொருள்!!

நண்பர்களே,

இரண்டு தினங்களுக்கு  முன்  நண்பர் ஒருவரின் அழைப்பின்பேரில் அவரது தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்பொருட்டு அவர் வீட்டிற்கு சென்றேன்.

இந்தியாவில் அவர்கள் இருந்தவரை தீபாவளி பொங்கல் மற்றும் ஏனைய நமது பண்டிகைகளை எப்படி அனுசரிப்பார்கள் என்பதை குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

தமது வீட்டில் உள்ளவர்கள் ஏறெடுக்கும் சடங்கு சம்பிரதாயங்களை சொல்லிக்கொண்டு வந்தவர், இவற்றில் எல்லாம் அவருக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு இருந்ததில்லை என்றும் பெற்றோரின் வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு, அரை மனதுடன் கூட இல்லாமல் மனமே இல்லாமல்தான் பங்குபெறுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

ஏன் எதற்காக ஈடுபாடு இல்லாமல் இருந்தீர்கள் என கேட்டதற்கு, எந்த பண்டிகை என்றாலும் அவரது வீட்டில் இறை நம்பிக்கையின் அடிப்படையில் , பூசை, புணஷ்காரங்கள்,வழிபாடுகள் , சாங்கியம், சம்பிரதாயங்கள், நோன்பு போன்றவை நடக்கும் என்றும் வீட்டினர் செய்யும் இந்தவிதமான எந்த  செயலிலும் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்றார்.

இப்போது எப்படி என்ற என் கேள்விக்கு, பண்டிகைகள் என்பது  இறைவழிபாடு, மத நம்பிக்கையிலான சடங்கு செயலாக கருதாமல், எல்லோரும் சந்தோஷமாக கூடி , சிரித்துப்பேசி, அன்பை பகிர்ந்துகொண்டு, இருக்கும் உணவு பலகாரம் பதார்த்தங்களை கூடி சேர்ந்து பங்கிட்டு உண்பதும்    அந்த நாளில் எந்த காழ்புணர்ச்சிக்கும் விரோத சிந்தைக்கும் இடம் கொடுக்காமல் கூடுமானவரை மனதில் அமைதியை கடைபிடிப்பிடித்து, குடும்பத்தினர் , உறவினர் நண்பர்களோடு பிடித்த செயலில் ஈடுபடுவதுமாகத் தான் இருக்கிறேன் என்றார்.

அப்படியானால், கடவுள் பக்தி - நம்பிக்கை என்பதில்....

இல்லை  நான் ஒரு நாத்திகன் என்றாலும் இதுபோன்ற விழா காலங்களில் நண்பர்களோடு இணைந்து அவர்களது மகிழ்ச்சியில் பங்குபெறவும் தவறுவதில்லை என்றார்.

விருந்தினராக சென்றிருக்கும் இடத்தில் தேவை இல்லாத மேலும் பல கேள்விகளை கேட்க்காமல், பேச்சை வேறு திசைக்கு பயணித்து அவரது அன்பின் உபசரிப்பை முழுமையாய் அனுபவித்து பின்னர் வீடு திரும்பினேன்.

அப்படி வீடு வந்தபிறகு என் கல்லூரி நாட்களின் நினைவு என்னை பின்னோக்கி இழுத்து சென்றது.

சமீபத்து ஆண்டுகள் ஒன்றில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த நான் என் நண்பர் ஒருவரின் கடைக்கு சென்றிருந்தேன் அவரை பார்ப்பதற்கு.

ஆனால் அவர் அங்கு இல்லை அதே சமயத்தில் அவரது கடையின் வரவேற்பறை இருக்கைகளில் சிலர் அமர்ந்திருந்தனர்.

அவர்களுள் ஒருவர் என்னையே உற்று உற்று பார்ப்பதாக உணர்ந்தேன், நாம் நேரடியாக பார்க்கவில்லை என்றாலும் யாரோ நம்மை உற்று கவனிப்பதை என் உள்ளுணர்வு உணர்த்தியது.

கடையில் இருந்து  வெளியில் வந்து அங்கு என்னோடு வந்திருந்தவரிடத்தில் அடுத்து எங்கே போகப்போகிறோம் என்பதுகுறித்து கடை வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது என்னை உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்த நபரும் வெளியில் வந்து, நான் படித்த கல்லூரியின் பெயரை சொல்லி நீங்கள அங்குதானே படித்தீர்கள், உங்கள் பெயர் இதுதானே.... என்னை தெரியவில்லையா என் கேட்டுக்கொண்டிருந்தபோதே, அவர் யார் என்பதை ஓரளவிற்கு யூகித்துக்கொண்டு, உங்கள் பெயர் R.சேகரா? என கேட்க அவரும் ஆமாம் நானேதான் பரவாயில்லையே என் பெயரை இனிஷியலோடு  இன்னும் நினைவில்கொண்டு இருக்கின்றீர்களே  என்றார்.

உங்களை பார்த்தவுடனே நீங்கள் கோயில் பிள்ளையாகத்தான்  இருக்கும் என்று யூகித்தேன் , எனினும் பல ஆண்டுகள் ஆனதினாலும் உருவ மாறுபாடுகள் உள்ளதாலும்  உறுதியாக சொல்ல முடியாமல் இருந்தேன், ஆனால் நீங்கள் அந்த கடை சிப்பந்தியிடம் பேசிய விதத்தையும்   , உங்கள் நடை உடை பாவனைகளை வைத்தும்  99% நீங்களாகத்தான் இருப்பீர்கள் என முடிவுசெய்தேன் என்றார்.

அவரிடம் நலன் விசாரித்துவிட்டு, அவரிடம் அவரின் நினைவு என்னில்  இருப்பதை அவரிடம் ஊர்ஜிதம் செய்துகொள்ள, பிரத்தியேகமாக  நான் கேட்ட ஒரு விஷயம், இப்போது உங்கள் கடவுள் நம்பிக்கை -  பக்த்தி எப்படி  என்பதுதான்.

அவருக்கு இன்னும் ஆச்சரியம், எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும் என்னைப்பற்றிய நினைவு உங்களிடம் இருப்பது என்னை உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றது என்றார்.

கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டு படிப்பிற்கு பிறகு பல பத்து  ஆண்டுகள் கழித்து   அவரை அன்று தான் பார்க்கிறேன். 

நான் கேட்ட கேள்விக்கு அவரின் பதில் , "மாற்றங்களால் ஏற்படும் மாற்றங்களால்கூட என் நம்பிக்கையை  மாற்றமுடியாது என்பதுதான்." 

சரி சந்தர்ப்பம் வாய்த்தால் மீண்டும் சந்திப்போம்   என கூறி  குடும்பம் பிள்ளைகள் குறித்து பரஸ்பரம் விசாரித்துவிட்டு விடைபெற்றோம்.

அன்று சந்தித்த அந்த நண்பரின் நினைவு நேற்று மீண்டும் என் நினைவு கருவூலத்தில் இருந்து கண்களை சிமிட்டி எட்டிப்பார்த்தது.

முதலாமாண்டு சேர்ந்து சில தினங்களில் நண்பர்களானோம். என்னோடு இன்னும் பலரும் இவரின் நண்பர்களாக ஒரு குழுவாக இணைந்திருந்தோம்.

இவ்வாறான ஒரு நாளில் தங்களது பெற்றோர், சகோதர சகோதரிகளை குறித்த செய்தி பரிமாற்றலின்போது, இந்த நண்பர் சொன்ன செய்தி எங்கள் எல்லோருக்கும் பெரும் சோகத்தை உண்டுபண்ணியது.

அவருக்கு பெற்றோர் இருவரும் இல்லை என்றும் தமது 7 வது  வயதில்  அப்பா ஒரு விபத்தில் இறந்துபோனதாகவும் தமது 13ஆம் வயதில் அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாகவும் சொன்னதும் எங்கள் அனைவருக்கும் அவர்மீது மிகுந்த இரக்கமும் பரிதாபமும் ஏற்பட்டது.

அதில் ஒரு நண்பர், கவலைப்படாதே சேகர் , கடவுள்  நம் எல்லோருக்கும் தந்தையாக  தாயாக இருந்து நம்மை அரவணைத்து காப்பாற்றுவார்  என்றார்.

அப்போது அவர் சொன்ன மற்றுமொரு தகவல் எங்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்படி கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அப்பா அம்மாவை எடுத்துக்கொண்டு அவர்களின் இடத்தில்  இருந்து ஏன் நம்மை காப்பாற்றவேண்டும், அப்பா அம்மாவையே கொடுத்து காப்பாற்றலாமே?

இடை மறிக்காமல் தொடரும் அவரின்  பேச்சை கேட்டுக்கொண்டிருந்தோம்.

அப்பா இறந்தபோது எனக்கு அவ்வளவாக விவரம் தெரியாது ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும் எனக்கு அம்மாவை குறித்த அனைத்தும் நினைவில் இருந்தது.

கடும் வியாதிக்குளாகியிருந்தவரை காப்பாற்ற எங்கள் மாமா, தாத்தா குடும்பத்தினர் எவ்வளவோ பணம் செலவுசெய்து மருத்துவம் பார்த்தனர். எப்படியும் பிழைத்துக்கொள்வார் என்று நாங்கள் எல்லோரும் மருத்துவரையும் மருந்து மாத்திரைகளையும் நம்பி இருந்தோம், ஆனால் மருத்துவரோ எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம் கடவுள் காப்பாறுவார் என்றார்.

எட்டாம் வகுப்பு படிக்கும் எனக்கு நோய்  என்றால், வியாதி என்றால் மருத்துவரும் மருந்துகளும்தானே, ஆனால் இப்போது மருத்துவரே கடவுள் காப்பாற்றுவார் என்கிறாரே.

அப்படியானால் நேரடியாக கடவுளிடம் கேட்கலாம் என்று நினைத்து அன்றுவரை எங்கள் வீட்டில் வழக்கமாக வணங்கப்படும் கடவுள்களின் புகைப்படங்கள் நிரம்பி இருந்த ஒரு சிறிய பூசை அறையில் காலை மாலை இரவு என்று எல்லா வேலைகளிலும் மனமுருகி வேண்டிக்கொண்டேன்.

பள்ளிக்கு செல்லும்போது வழியில் தென்படும் அனைத்து சாமி கோயில்கள்,  முன் நின்று அம்மாவிற்காக வேண்டிக்கொள்வேன். கடவுள், தெய்வம் என்று யாரெல்லாம் எந்தெந்த பெயர்கள் சொல்கிறார்களோ அந்தந்த தெய்வங்களை அவர்களின் உருவம்  என்னவென்றுகூட தெரியாத அந்த சிறு பிராயத்தில் வேண்டிக்கொண்டேன்.

இதில் எந்த மதங்களும் விதிவிலக்கல்ல, எந்த மதம் எந்த  சாமி என்று பாராமல், கோடானு கோடி தெய்வங்களை வணங்கினேன் , வேண்டிக்கொண்டேன். 

உபவாசம் இருப்பது ஒருபொழுது இருப்பது, நோன்பு இருப்பது, கற்பூரம் ஏற்றுவது, ஊதுபத்தி ஏற்றுவது, மெழுகுவர்த்தி  ஏற்றுவது, இன்னும் யாரெல்லாம் என்னவெல்லாம் சொன்னார்களோ அவை அனைத்தையும் செய்து மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தேன். அம்மாவை இந்த தெய்வங்கள் கண்டிப்பாக காப்பாற்றிவிடும் , சுகத்துடன் அம்மா வீடு வந்துவிடுவார்கள் என்ற அசைக்கமுடியாத முழு நம்பிக்கையில்.

ஆஸ்பத்திரியில் இருக்கும் அம்மாவை பார்த்து அவர்களிடத்தில் வழியிலிருந்த கோவிலிலிருந்து கொண்டு சென்ற விபூதியை அவர் பக்கத்தில் வைத்துவிட்டு, பள்ளிக்கூடம் சென்ற என்னை சுமார் காலை  பதினோரு மணிக்கு என் மாமா வந்து  அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

ஏன் இப்போது, இன்னும் மத்திய உணவுவேளைகூட வரவில்லையே? பரவாயில்லை, வா வீட்டுக்குபோகலாம்.

அம்மாவை  சாயந்திரம் பார்க்கவேண்டும் என்றேன். சரி பார்க்கலாம் வா என அழைத்து செல்ல  எங்கள் தெருவெங்கும் ஒரே  பரபரப்பு, ஆள் நமாட்டம் கூடி இருந்தது, வீடு நெருங்க நெருங்க ஆட்களின் வருகை எங்கள் வீட்டை நோக்கி இருப்பதை கவனித்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை, ஏறெடுத்து என் மாமாவை பார்க்க கண் கலங்கி இருந்த அவர் என் தலையை தடவி, அம்மா நம்மை எல்லாம் விட்டுட்டு போய்ட்டாங்க என்றதைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

என்ன சொல்கிறார்?

வேகமாக ஓடி வீட்டிற்குள் நுழைந்த எனக்கு அம்மாவை ஏன் இங்கே வெளியில் பெஞ்ச் மீது கிடத்தி இருக்கின்றார்கள்? 

அருகில் சென்று பார்க்க, அசைவின்றி படுத்திருந்த அம்மாவின் நெற்றியில் நான் காலையில் கொண்டு சென்று அவரின் படுக்கை அருகில் வைத்துவிட்டுப்போன திரு நீறு மட்டும் மற்றபடி கண் மூடிய நிலையில் அம்மா.

உற்றார் உறவினர் என்னை கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

அழுகை சத்தத்திற்கிடையில் இந்த சின்ன வயதிலேயே அப்பா அம்மா இல்லாத அனாதையாகிவிட்டாயே....   அந்த கடவுளுக்கு கண் இல்லையா?

 சடங்குகள், வீடு, தெரு, சுடுகாடு.......எல்லாம் முடிந்தது. 

வீட்டிற்கு அழைத்துவரப்பட்டேன், நடு வீட்டில் எரிந்துகொண்டிருந்த விளக்கு அதனருகில் அம்மாவின் போட்டோ. 

என் தாத்தா என்னிடம் , அம்மாவின் போட்டோவை வணங்கி விட்டு பூசை அறையில் இருந்த கடவுளர்களின் போட்டோக்களுக்கு  சாம்பிராணி தூபம் காட்டி வணங்க சொன்னார். 

பெருக்கெடுத்த துக்கம் பிரவாகம்  எடுக்க, அடக்கி வைத்திருந்த சோகம் பிரளயமாக மாற, விரக்கத்தியின் உச்சம் விளிம்பை தாண்ட, அங்கிருந்த எல்லோர் முன்னிலையிலும் சத்தமாக, "முடியாது" என்று கூறியதோடல்லாமல், அங்கிருந்த அனைத்து சாமிகளின் புகைப்படங்களையும் தாறுமாறாக பிடுங்கி எடுத்து தரையில்போட்டு உடைத்தேன்.

தடுக்க வந்தவர்களிடமும் மூர்க்கமாக நடந்துகொண்டேன்.

சாமி படங்களை அப்படியெல்லாம் செய்யக்கூடாது.

எது சாமி, எல்லா சாமிகளிடமும் எல்லா தெய்வங்களிடமும் முழுமனதுடன் வேண்டினேன் என் அம்மாவிற்கு உடம்பு சரியாகி  நல்லபடியாக வீடு திரும்பவேண்டும் என்று நான் வேண்டியது  எந்த சாமிக்கும்  கேட்கவில்லை, அப்படியென்றால்  என் வேண்டுதலை  கேட்பதற்கு சாமிகள் என்ற பேரில் யாருமே இல்லை. 

தெய்வங்கள் சாமிகள் எல்லாம் பொய். என கூறி வெளியில் சென்று அம்மாவின் படம் அருகே அமர்ந்துகொண்டேன் கண்ணீருடன்.

அன்றுமுதல் இன்றுவரை தெய்வங்கள் சாமிகள் யாரும் இல்லை என்று நான் திடமாக நம்புகிறேன். 

நம்புபவர்களை நான் ஒன்றும் சொல்லவில்லை இது என் நம்பிக்கை என்று சொன்னார்.

அவரது பிரதான  வாதம், "தெய்வங்கள் என்று யாரேனும் இருந்திருந்தால், அவர்களுக்கு காதுகள்  இருந்திருந்தால் எனது வேண்டுதளுக்கு செவி சாய்த்து என் வேண்டுதலை நிறைவேற்றி இருக்கவேண்டுமே. அப்படி நடக்காத பட்சத்தில் என் குரலை யாரும் கேட்கவில்லை என்றால்  என் குரலை கேட்க யாரும் இல்லை எனவே சாமி தெய்வம் என்று சொல்லப்படும் யாரும் இந்த உலகில் இல்லை" என்பதே.

அவரது உணர்வுபூர்வமான இந்த பேச்சுகளின்போது எங்களில் யாரும் எதுவும் பேசவில்லை; ஏனென்றால் எதையும் கேட்க்கும் நிலையில் அவர் இல்லை, ஆண்டு முழுவதும் எங்கள் எல்லோர் மனதிலும் இனம் புரியாத சோக  இழை.

மனமும் சிந்தனையும் பக்குவமடையாத  பதிமூன்று வயதில் பல விடயங்களை புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கும் எனவே அவரது பேச்சு ஞாயமானதாக இருந்திருக்கலாம்.

ஆனால் இன்றளவும் அவரது இறைமறுப்பு கொள்கையில்  உறுதிப்பிடிப்புடன் இருப்பது  அவரது ஆழ்மனதில் பதிந்துவிட்ட அம்மாவின் அன்பும் பாசம் ஒருபுறம் , முழுமனதுடன் நம்பியவர்கள்  அம்மாவை கைவிட்டுவிட்டனர் எனும் அவர்களின்  நம்பகமற்ற செயலும் அதனால் ஏற்பட்ட ஆதங்கமும் , பெருத்த ஏமாற்றம் ஒருபுறம்  என அவர் உறுதியாக இருக்கிறார்.

நண்பர்களே, இது ஒரு சர்ச்சைக்குரியதும்  அதே சமயத்தில் உணர்வு பூர்வமானதும் தனி மனித  நம்பிக்கை சார்ந்ததுமாக இருந்தாலும் என் நண்பரின் இந்த கேள்விக்கு யாரால் பதில் கூற முடியும்? 

பி.கு: இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்லது எவர் நம்பிக்கையையும் எவரது கொள்கை கோட்பாடுகளையும் புடம்போடும் நோக்கத்திலும்  அல்லது இவர்கள் இப்படித்தான் என அவர்களது தனிமனித நம்பிக்கையை  வடம்பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து வீதிஉலா செய்விப்பதுமான நோக்கத்திலும்   அல்ல என்பதை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,

 வணக்கம்,

 மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ. 


9 கருத்துகள்:

  1. நமது அனுபவங்களே நமது நம்பிக்கைகளைத் தீர்மானிக்கின்றன என்பதற்கு அருமையான உதாரணங்கள் . ரணங்கள் . உண்மை. நாம் வாழும் முறையே நமது அனுபவங்களால்தானே .

    பதிலளிநீக்கு
  2. அனுபவங்கள்தான் நமது நம்பிக்கையை தீர்மானிக்கின்றன எனும் தங்களின் அனுபவத்தின் அடிப்படியில் பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றிகள். பார்க்கலாம் மற்றவர்களின் கருத்துக்கள் - பதில்கள் என்னவென்று.

    உதாரணங்கள் - ரணங்கள் - அருமையான - வார்த்தை தேர்வு.

    எப்படி இருக்கின்றீர்கள்?

    வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே.

    பதிலளிநீக்கு
  3. கோ! ஒவ்வொருவரது அனுபவங்களைச் சார்ந்துதான் நம்பிக்கைகள் வலுப்பெற்றும், கரைந்தும் போகின்றன. ஒரு சிலர் என்ன அனுபவம் வந்தாலும் கசப்பான அனுபவங்கள் வந்தாலும் நம்பிக்கையை மட்டும் தளரவிடாமல் இருப்பார்கள்.

    என்னைப் பொருத்தவரை நாம் சிறு வயதிலேயே எல்லாவற்றுக்கும் இறைவனை துணை நிறுத்திக் கொண்டு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். நலல்து செய்தால் காப்பாற்றும், தப்பு செய்தால் கண்ணைக் குத்தும் தண்டை தரும் என்று இறைவனை முன்னிருத்துகிறோம். இது சரியல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. இப்படிச் சொல்லும் போது தனிப்பட்ட சிந்தனைகள் வளரும் பருவம் எய்தும் போது கேள்விகள் பிறக்கின்றன. அப்போது இப்படியான அனுபவங்கள் அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்கின்றன. எனவே இப்படிச் சொல்லி வளர்ப்பதைவிட...அதனால்தான் பல இளைஞர்கள் இறை மறுப்புக்கு உட்படுகிறார்கள். மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று... அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதற்கு இறைவனையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்று தோன்றும். ஏழை பணக்காரர் ஏன் என்று பல கேள்விகள் எழும் இறைவன் ஏன் சிலரை ஏழைகளாகவே வைத்திருக்கிறான் என்றான கேள்விகள்.

    இறைவன் என்பது மாபெரும் சக்தி அந்த சக்திக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த சக்தியை நாம் நம்முள் வாங்கி மனதில் இருக்கும் எதிர்மறையை தீய சிந்தனைகளைப் போக்க பல வழிகள் உள்ளன அதை போதிக்கலாம். பிரார்த்தனை என்பது டிமான்ட்ஸ் எல்லை. அந்த மாபெரும் சக்தியோடு ஒன்றி ஆழ்ந்து நம் மனதில் நிறைத்துப் பிரார்த்திப்பதுஇதுவும் என் தனிப்பட்டக் கருத்து.

    இதைப் பற்றிப் பேசினால் பதிவு அளவுக்கு நீண்டுவிடும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் ஆழமான கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மையீர்.

      பிறப்பு இறப்பு எல்லாமே அவன் செயல் என்றுதான் ஆன்மீக வாதிகள் என நாம் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டவர்களே சொல்லும் கருத்து.

      என்ன இருந்தாலும் ஒரு 13 வயது சிறுவனின் இறை நம்பிக்கையில் இடி விழுந்தபோது அந்த பேரதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத அந்த பிஞ்சி இதயம் என்னமாய் ஒரு ஏமாற்று நிலைக்கு போய் இருக்கும் என்பதை உணர முடிகிறது.

      அதேபோல தகப்பனை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்துவந்த அவரது வாழ்வில் முற்றிலும் வெற்றிடமானதும் இனி யார் நமது அழைப்பை , கூக்குரலை கேட்பார்கள் என்ற விரக்தியின் விளிம்பில் பக்குவப்படாத அந்த வயதில் படபடப்பான சூழ்நிலையில் எடுத்த முடிவு இன்னமும் , உலகை உற்று பார்த்தும், இதுபோன்ற நிகழ்வுகள் உலகியல் உயிர்களின் வாழ்க்கை சுழற்சியில் தவிர்க்கமுடியாதது என்று அறிந்தும் அவரது முடிவில் மாற்றமின்றி மாறாமல் இருப்பது கொஞ்சம் கூடுதல் வருத்தத்தை தருகிறது.
      என்றாலும் அவரவர் எண்ணங்கள், சிந்தனைகள், அனுபவங்கள், முடிவுகள் எல்லாமே அவரவர்களுக்கே.

      என்னதான் எல்லாவற்றையும் குறித்ததான பொதுவான தத்துவங்கள் புழக்கத்தில் இருந்தாலும் அவரவர் வலி அவரவர்களுக்கே புரியும்.

      " உனக்கும் கீழே உள்ளவர்கோடி " எனும் பாடல் வரியும் இங்கே நினைவிற்கு வராமல் இல்லை.

      கண்ணைக்குத்தும் காதை திருகும், தண்டிக்கும் என்று பயமுறுத்தி வளர்ப்பதுவும் கூடாது எனும் தங்கள் கருத்தை ஏற்கிறேன்.

      நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

      வருகைக்கு மீண்டும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
    2. ஆமாம் அவ்ர்களின் துயரம் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படியான துயரங்கள் வரும் போது மனம் ஒடிந்து தான் போகும். அவர்களது அனுபவங்கள் புரிகிறது.

      அது புரியாமல் இல்லை. நான் பொதுவாக நம் சமூகம் எப்படி என்பதைச் சொன்னேன் கோ

      கீதா

      நீக்கு
    3. அம்மையீர், தங்களின் எண்ணங்கள், இறை நம்பிக்கையில் இடறல் ஏற்பட்டு வரும் தலைமுறை பாதை மாறக்கூடாது எனும் தங்களின் உயர்வான எண்ணமும் அக்கறையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

      தங்களின் நீண்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ள மீண்டும் வந்ததற்கு மிக்க நன்றிகள். மனித வாழ்வின் சுழற்சிக்கு அச்சாணியாக இருப்பது நம்பிக்கையே அதிலும் இறை நம்பிக்கை எவ்வளவு பங்காற்றுகிறது என்பது நிதர்சனமானதாக இருந்தாலும் சிலர் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயங்குகின்றனர்/ மறுக்கின்றனர் என்பதும் நிதர்சனமே.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள் தனப்பால், பேதைமை கூடாது என்பதை அவரும் சொல்கிறார், வேறுவிதமாக. எப்படியும் தற்போதைய சூழலில் அவரவர் நம்பிக்கை அவரவர் உணர்வுகள் அவரவர் எண்ணங்களை தெளிவுகளை எவராலும் மாற்றமுடியுமா? என்னை பொறுத்தவரையில் எல்லாம் வல்ல பரம்பொருள் இருப்பதாக உள்ளுணர்வு உறுதிப்படுத்துகிறது.

      நீக்கு
  5. உண்மை தான் சில சமயங்கள் தோன்றும் உள்ளாரா இல்லையா என்று,,, நம்பிக்கை உள்ளவர்களையும் சில சமயம் அசைத்து பார்க்கும் சம்பவம் நடக்கும் போது அவநம்பிக்கை ஏற்படுவது,,,,,,,,, மனித மனம் தானே.

    பதிலளிநீக்கு